Tamil Marx

சர்வதேசம்

ஏஐ அல்ல ஏகாதிபத்தியமே ஆபத்து- சேது சிவன்

ஏஐ அல்ல ஏகாதிபத்தியமே ஆபத்து- சேது சிவன்
  • PublishedOctober 7, 2026

ஏஜென்டிக் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மனிதனின் கட்டுப்பாட்டை மீறிச் செல்கின்றன என்றும், இப்படியே தொடர்ந்தால் செயற்கை நுண்ணறிவு (AI) மனிதகுலத்தையே அழித்துவிடும் என்றும் சமீப காலமாகப் பல எச்சரிக்கைக் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இத்துறை வல்லுநர்கள் தொடங்கிப் போப் லியோ வரை இதுகுறித்து எச்சரித்துவிட்டனர்.

ஆனால் உண்மையில் ஏஐ தொழில்நுட்பம் அல்ல பிரச்சனை. இத்தொழில்நுட்பத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலாளித்துவ நாடுகளும் அவற்றின் ஏகாதிபத்தியக் கொள்கைகளும் தான் மனிதகுலத்துக்கு ஆபத்தானவை. மனிதகுலத்தையும் உலகையும் மேம்படுத்தும் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பத்தை, அவை அழிவுகரமான வேலைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றன.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், உலகம் முழுவதும் பிற நாடுகளையும் மக்களையும் அடிமைப்படுத்திச் சுரண்டிச் சீரழித்த ஆதிக்கவாதிகளும் கோடீஸ்வரர்களும்தான், இன்று இந்த ஏஐ தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு மீண்டும் அதே கொடூரங்களைச் செய்ய முனைகிறார்கள் என்பதைக் காணமுடியும். மனிதகுலம் அழியப்போகிறது என்றால் அது ஒரே ஒரு வழியில்தான் நிகழும்: அதிகார வெறிபிடித்த ஆளும் வர்க்கமும் அதன் அடிவருடிகளான அரசியல்வாதிகளும் இந்தத் தொழில்நுட்பங்களை போர் எந்திரங்களில் பொருத்துவதன் மூலம் மனிதர்களைக் கொன்றுகுவிக்கும்.

சில நொடிகளில் அமெரிக்கா–சீனா போரை உருவாக்கிய ஏஐ

இன்று வளர்ந்த நாடுகள் அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வருகின்றன. கோடிக்கணக்கான ரூபாயை இத்துறையில் நாடுகள் கொட்டிக்கொண்டிருக்கின்றன. குறிப்பாகச் சீனா, அமெரிக்காவின் மிகப்பெரும் போட்டியாளராக உருவாகியுள்ளது.

ஆனால் இந்தத் தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கலானவை; அவற்றின் செயல்பாடுகளை மனிதர்களால் எளிதில் கணிக்க முடியவில்லை. அவை கட்டுப்பாட்டை மீறுகின்றன என்ற செய்திகளை நாம் அன்றாடம் காண முடிகிறது. சோதனையின்போது, தன் கட்டுப்பாட்டை மீறி மூன்று நிறுவனங்களின் இணையத்தைத் தன் செயற்கை நுண்ணறிவு ஹேக் செய்ததாகக் கூகுள் நிறுவனமே மிகத் தாமதமாக ஒப்புக்கொண்டது அதிர்ச்சியைத் தந்தது.

இந்நிலையில், சிஎன்என் நிறுவனம் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது. சீனக் கப்பல் ஒன்று அணு ஆயுதப் பாகங்களை ஈரானுக்குக் கடத்துவதாக அமெரிக்க ராணுவத்தின் செயற்கை நுண்ணறிவு தவறாகக் கணித்து (Hallucination) தெரிவித்துள்ளது. இந்தத் தகவலைப் பெற்ற அமெரிக்க ராணுவ விமானங்கள் அந்தச் சீனக் கப்பலைத் தாக்கப் புறப்பட்டுவிட்டன. கடைசி நேரத்தில் உளவுத்துறை அதிகாரிகள் அந்தத் தகவலைச் சரிபார்த்தபோதுதான் அது தவறானது என்று கண்டறியப்பட்டு, தாக்குதல் தடுக்கப்பட்டது. இல்லையெனில் அமெரிக்கா-சீனா நேரடிப் போருக்கு இட்டுச் சென்றிருக்கும். அப்படி ஒன்று நடந்திருந்தால் அந்தப் போர் எப்படிப்பட்ட மனித, பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்று நினைக்கும்போதே கதி கலங்குகிறது.

உலகில் ஏற்கெனவே பல போர்களும் பதற்றங்களும் நிலவும் சூழலில், இந்தத் தொழில்நுட்பம் மேலும் குழப்பத்தையும் ஆபத்தையும் சேர்த்துள்ளது.

குழந்தைகள் மீது வீசப்படும் குண்டுகள்

இந்த ஆண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியபோது, ஒரு பள்ளிக் கட்டடம் மீது குண்டுவீசி 120 குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு முக்கியக் காரணம், ‘பாலன்டிர்’ (Palantir) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு  அமைப்பு தான். இதனை அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகனே தன் அறிக்கையில் ஒப்புக்கொண்டுள்ளது.

காசாவில் பாலஸ்தீன ஆதரவு ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் போர்க்களத்தில் தனியாக இருக்கும்போது தாக்காமல், அவர்கள் வீடு திரும்பிக் குடும்பத்தினருடன் இருக்கும் நேரத்தில் குண்டுவீசுவதற்காக இஸ்ரேல் ராணுவம் (IDF) “வேர் இஸ் டாடி?” (அப்பா எங்கே?) என்று பெயரிட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் உள்ளன. அதாவது, ஆயுதக் குழு உறுப்பினரை மட்டுமல்ல, பெண்கள், கைக்குழந்தைகள் என அவர்களின் ஒட்டுமொத்தக் குடும்பத்தையுமே படுகொலை செய்ய ஏஐ பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறது. அதே நேரத்தில், அதானி நிறுவனம் அந்தப் பாலஸ்தீனர்களை இனப்படுகொலை செய்ய இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்புகிறது. உலகம் முழுவதும் பெருநிறுவனங்கள் இப்படித்தான் லாபத்துக்காகப் போருக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன.

மரணத்தால் லாபம்: வோல்ஸ்வேகன் உதாரணம்

இன்று உலகெங்கும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களும், அவற்றைச் சார்ந்த போர் வியாபாரிகளும், தொழில்நுட்ப நிறுவனங்களும் சொத்துக்களைக் குவித்துவருகின்றன. முதலாளிகளின் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்கும் முதலாளித்துவ, ஏகாதிபத்தியக் கொள்கை கொண்ட நாடுகள் இப்படித்தான் இயங்கும். “மரணத்தால் லாபம் கிடைக்குமானால், முதலாளிகள் தூக்குக் கயிற்றையும் உற்பத்தி செய்வார்கள்” என்பது போல சொல்வார்கள், அதுதான் இன்று நடக்கிறது.

உதாரணமாக, வோல்ஸ்வேகன் வாகன உற்பத்தி நிறுவனம் தன் ஒரு உற்பத்தி நிலையத்தை விற்றுவிட்டு, போருக்குத் தேவையான உபகரணங்களை உற்பத்தி செய்யத் தயாராகிவிட்டது.

கண்காணிப்பும், தொழில்நுட்பப் போட்டியும்

அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்துள்ள இந்நிலையில், பேரழிவு ஆயுதங்களில் ஏஐ இணைக்கப்படுவதே மனிதகுலம் கூண்டோடு அழியும் அபாயத்தை உருவாக்குகிறது. ஆட்சியாளர்கள் இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்கள் மீது முழுமையான கண்காணிப்பைச் செலுத்துவார்கள். தங்களுக்கு எதிராக எழும் எந்தக் குரலையும் இயக்கத்தையும் தொடக்கத்திலேயே நசுக்கிவிடுவார்கள்.

இன்று அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கடுமையான தொழில்நுட்பப் போட்டி நடந்துவருகிறது. பொருளாதார வளர்ச்சி, ஏஐ தொழில்நுட்பம் என அனைத்திலும் வளரும் நாடுகளை ஒருங்கிணைத்துச் செயல்பட சீனா முயல்கிறது. இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், வளரும் நாடுகளிடையே ஏஐ துறை சார்ந்த ஒத்துழைப்பையும் வளர்ச்சியையும் ஊக்குவிப்பதில் சீனா முன்னிலை வகிக்கும் என ஜி ஜின்பிங் தெரிவித்தார்.

ஏஐ தொழில்நுட்பத்தால் எழும் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க அமெரிக்காவுடன் இணைந்து ஒரு தளத்தையும் சீனா உருவாக்கியுள்ளது. இத்தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மக்கள் நலன் சார்ந்தே இருக்க வேண்டும் என்றும், “இணைந்தே முன்னேறலாம், இணைந்தே தவறுகளைச் சரிசெய்யலாம்” என்றும் அமெரிக்காவுக்கு ஒற்றுமை அழைப்பையும் சீனா விடுத்துள்ளது.

ஆனால், “ஏஐ தொழில்நுட்பத்தைக் கட்டுப்படுத்துபவர்களே உலகைக் கட்டுப்படுத்துவார்கள்; வளர்ச்சியில் சீனாவுடன் இணைந்து செயல்பட மாட்டோம்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் கங்கணம் கட்டிக்கொண்டுள்ளார். இத்தொழில்நுட்ப வேகத்தைக் குறைக்க வேண்டும் என உலகெங்கும் குரல்கள் எழும் நிலையில், “இதில் ஆபத்து இல்லை, போட்டியின் வேகத்தைக் குறைக்கக் கூடாது” என்று டிரம்ப் தன் நாட்டு நிறுவனங்களுக்கு உத்தரவிடுகிறார்.

மாற்று சோஷலிசமே

உலக அமைதியும் ஒத்துழைப்புமே நாடுகளின் உண்மையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், நாடுகளுக்கிடையே போர்வெறியைத் தூண்டுவதிலும், ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வைப்பதிலும்தான் ஈடுபட்டுள்ளன. இது மனிதகுலத்துக்கு எதிரான நடவடிக்கையே.

இந்தத் தொழில்நுட்பப் போட்டியில் சீனாவின் செயல்பாடுகளுக்கும் அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடு, சோஷலிசமே கொள்கையை அமல்படுத்தும் நாட்டுக்கும் ஏகாதிபத்தியக் கொள்கையை அமல்படுத்தும் நாட்டுக்கும் இடையேயான வேறுபாடுகள் தான். எந்தத் தொழில்நுட்பமும் சோஷலிசக் கொள்கையைப் பின்பற்றுவோரின் கையில் இருக்கும்போது, அது மனிதகுலத்தின் எதிர்காலத்தை மேலும் மேம்படுத்தும். அதே தொழில்நுட்பம் முதலாளித்துவ, ஏகாதிபத்திய நாடுகளின் கையில் இருக்கும்போது, அது அழிவுகளையே உருவாக்கும்

இந்த முதலாளித்துவ, ஏகாதிபத்திய நரகத்திலிருந்து தப்பிக்க இருக்கும் ஒரே மாற்றுக் கொள்கை கம்யூனிசம் தான்.

 

– சேது சிவன்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *