Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

வகைப்படுத்தப்பட்ட இனக் கொள்கைகளின் அமலாக்கம்-அ.பாக்கியம்

வகைப்படுத்தப்பட்ட இனக் கொள்கைகளின் அமலாக்கம்-அ.பாக்கியம்
  • PublishedOctober 7, 2026

சீன கம்யூனிஸ்ட் கட்சி இனக் கொள்கை தொடர்பாக செம்படையின் நீண்ட பயணத்தின் போது “குறிப்பிட்ட நிலைமைகளின் குறிப்பிட்ட பகுப்பாய்வில்” தொடர்ந்து ஈடுபட வேண்டியிருந்தது. இந்த ஆய்வுகளின் அடிப்படையில் இனச் சிறுபான்மை மக்கள் வாழ்ந்த வேறுபட்ட சூழல்களை கணக்கில் எடுத்துக் கொண்டு அந்தந்த பகுதிக்கு ஏற்ற முறையில் ஆய்வுகளை செய்து இனக் கொள்கைகளை மேம்படுத்தியும், ஸ்துலப்படுத்தியும் அமலாக்கினார்கள். அது எவ்வாறு செய்தார்கள் என்பதை இந்தப் பகுதியில் நடைமுறை அனுபவங்களிலிருந்து அறிந்து கொள்ள முடியும். தமிழ் வாசகர்களுக்கு பெயர்கள் உச்சரிப்பு சற்று அன்னியப் பட்டதாக இருந்தாலும் கருத்துக்களை புரிந்து கொள்வதற்காக அதனுடன் இணைத்து இங்கு வழங்கப்படுகிறது.

இரத்த உறுதிமொழி ஒப்பந்தம் 

செம்படையின் நீண்ட அணி வகுப்பு காலத்தில், அதன் இனக் கொள்கைகளின் இதயமாக இனச் சமத்துவமும் இன ஒற்றுமை அடிப்படை அம்சமாக இருந்தது. இந்தப் பொதுவான நோக்கங்கள் நீண்ட அணிவகுப்பு காலத்தில் கடந்து செல்லும் பிரதேசங்களுக்கு ஏற்ப மேலும் குறிப்பான விஷயங்களாக மாற்றப்பட்டது.

1)அரசியல் கலாச்சாரம் பொருளாதாரம் மற்றும் பிற துறைகளில் அனைத்து இன மக்களுக்கும் முழுமையான சம உரிமைகளை இருக்கச் செய்வது.

2) பெரும் ஹான் இன மேலாதிக்கத்தை (great han chauvinism) எதிர்ப்பதுடன் குறுகிய தேசியவாதத்தையும் எதிர்ப்பது.

3) இன ஒடுக்குமுறை மற்றும் இன பாகுபாட்டிற்கான மூல காரணங்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு, கோமிங்டாங் தலைமையிலான பிற்போக்கு சக்திகளின் ஆட்சி, நிலப்பிரபுத்துவ நில உரிமையாளர்களின் சுரண்டல் ஆகியவை தான் என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது.

4.) சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலும், அதன் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே இன ஒடுக்கு முறைகளையும் அதன் சுரண்டலின் வேர்களையும் முழுமையாக ஒழித்து இன சமத்துவம், இன ஒற்றுமை, அனைத்து இனங்களின் செழிப்பான வளர்ச்சி ஆகியவற்றை அடைய முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க வேண்டும் என்று வரையறை செய்தார்கள்.

இந்த  வரையறைகளை அமலாக்கக் கூடிய முறையில் செம்படை அணிவகுப்பு இன சிறுபான்மை பகுதிக்குள் நுழைகின்ற பொழுதெல்லாம் அது இன ஒடுக்கு முறையின் வர்க்க வேர்களை உள்ளூர் மக்களிடம் எளிய முறையில் பிரச்சாரம் செய்து புரிந்து கொள்ள வைத்தது. அனைத்து இனக்குழுக்களின் மக்களையும் அடிமைத்தனத்திலிருந்தும், ஒடுக்குமுறை அமைப்புகளில் இருந்தும் உண்மையாகவே விடுவிப்பதுதான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கமும் செம்படை ராணுவத்தின் புரட்சிகர பணி என்பதையும் மக்களிடம் பகிரங்கமாக அறிவித்தார்கள்.

செம்படை அனைத்து இனக்குழுக்களுக்கும் சம உரிமை என்ற முறையில் நடந்து கொண்டது மட்டுமல்ல, தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் இன சிறுபான்மையின் மீது விதிக்கப்பட்ட அதிகப்படியான வரிகள் மற்றும் தீர்வைகள் அத்துடன் இதர விதிமுறைகளையும் அமைப்புகளையும் ஒழிப்பதாக அறிவித்தது. குய்ஷோவின் பகுதி லிப்பிங்கில் உள்ள மியாவோ மற்றும் டோங் பகுதிகளில், செம்படைத் தளபதிகளும் வீரர்களும் உள்ளூர் மக்களுக்குத் தனிப்பட்ட தங்களது பொருட்களை பரிசாக அளித்தனர்.

அது மட்டுமல்ல பறிமுதல் செய்யப்பட்ட தானியங்களையும் பொருட்களையும் இனச் சிறுபான்மை மக்களுக்கு விநியோகித்தனர். அதே நேரத்தில் செம்படை இன சிறுபான்மையினருக்கு ஆயுதமேந்திய தற்காப்பு பிரிவுகளை அமைத்திட உதவி செய்தது. அவ்வாறு அமைக்கப்பட்ட தற்காப்பு பிரிவுகளுக்கு துப்பாக்கிகளை வழங்கினர். சிச்சுவானில் உள்ள யுயெக்சி மற்றும் மியானிங் மாவட்டங்களின் யி மக்கள் வசிக்கும் பகுதிகளில், செம்படை “பிணைக்கைதிகள் பரிமாற்றம்” முறையை ஒழித்தது. குவோமிண்டாங்கால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யி இன குலத்தின் தலைவர்களையும், யி மற்றும் ஹான் பொதுமக்களையும் விடுவித்தது. செம்படையினர் மாவட்ட அரசாங்கத்தின் முறையற்ற நிலப்பதிவேடுகளை அழித்தார்கள். பொது மக்களை கொடுமைக்கு உள்ளாக்கிய உள்ளூர் நிலப்பரப்புகளையும் கொடுங்கோளர்களையும் தூக்கிலிட்டனர்.

லியு போசெங்கிற்கும் குஜி குலத்தின் தலைவரான சியாவோ யேடனுக்கும் இடையில் உருவான இரத்த உறுதிமொழி கூட்டணி, யி மற்றும் ஹான் மக்களுக்கு இடையிலான ஆழமான சகோதரத்துவப் பிணைப்பின் புகழ்பெற்ற கதையாக விளங்குகிறது.1935 ஆம் ஆண்டு, செம்படையானது குவோமின்டாங் (Kuomintang) படைகளின் பின்தொடர்தலில் இருந்து தப்பிக்க, தென்மேற்கு சிச்சுவானில் உள்ள யி இன மக்களின் பகுதி வழியாக செல்ல வேண்டியிருந்தது. அக்காலத்தில், யி மக்களுக்கும் ஹான் மக்களுக்கும் இடையே நீண்டகால புரிந்துணர்வின்மையும், பகையும், மோதலும் இருந்ததால், செம்படைக்கு இப்பகுதியில் செல்வது மிகவும் சவாலானதாக இருந்தது. இந்த சூழ்நிலையில், செம்படையின் தளபதி லியு போசெங், யி இனத் தலைவர் சியாவோ யேடனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். செம்படையின் கொள்கைகள் குறித்து விளக்கிய பின்னர், சியாவோ யேடன் லியு போசெங்குடன் யி இனத்தின் பாரம்பரிய வழக்கப்படி இரத்த உறுதிமொழி எடுக்க முன்வந்தார்.

மே 22, 1935 அன்று, யிஹாய் ஏரிக்கரையில், ஒரு கோழியை வெட்டி அதன் இரத்தத்தை தண்ணீரில் கலந்து, இருவரும் சகோதரர்களாக உறுதிமொழி எடுத்தனர். இந்த உறுதிமொழியைத் தொடர்ந்து, சியாவோ யேடன் மற்றும் அவரது இன மக்கள் செம்படைக்கு வழிகாட்டிகளாக செயல்பட்டனர். இதன் மூலம் செம்படையானது யி இனப் பகுதி வழியாக எந்த எதிர்ப்பும் இன்றி பாதுகாப்பாக பயணிக்க உதவியது. இந்த கூட்டணியின் நினைவாக, லியு போசெங் சியாவோ யேடனுக்கு “சீன மக்கள் செம்படை – குஜி பிரிவு” என்று எழுதப்பட்ட ஒரு கொடியை வழங்கினார்.

இது அவர்களது படையணியின் அதிகாரப்பூர்வ அங்கீகாரமாகும். இந்த கொடி தற்போதும் பெய்ஜிங்கில் உள்ள இராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கும், சமத்துவக் கொள்கைக்கும் எடுத்துக்காட்டாக போற்றப்படுகிறது. இது செம்படையின் நீண்ட அணிவகுப்பின் போது ஏற்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகவும், யி இன மக்கள் சீனப் புரட்சிக்கு ஆற்றிய பங்களிப்பின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இந்தக் கூட்டணி வெறும் இராணுவ உத்தி மட்டுமல்ல, பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த ஒரு வரலாற்றுச் சம்பவமாகும். இது இன்றும் இன ஒற்றுமைக்கான எடுத்துக்காட்டாக பேசப்படுகிறது.

மத உரிமைகளை உத்திரவாதம் 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி செம்படையின் நீண்ட அணி வகுப்பின் போது மத உரிமைகளுக்கான உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்திருந்தது. இனச் சிறுபான்மை மக்களிடம் செல்வதற்கு முன்பு அந்தந்த சூழலுக்கு ஏற்ற வகையில் இவை மேலும் குறிப்பான முறையில் வரையறுக்கப்பட்டது. சிறுபான்மை இன மக்களின் மத நம்பிக்கை சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். இயல்பான மத நடவடிக்கைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வேண்டும். மதம் மற்றும் அரசு பிரித்தல், மதசலுகைகளை ஒழித்தல், ஆகியவற்றை செயல்படுத்துதல், ஆகிய கொள்கைளை அமலாக்குகின்ற அதே நேரத்தில்  மத வழக்கங்களுக்கு முழு மரியாதையை அளித்திட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் அவர்களின் மத நம்பிக்கை எதுவாக இருந்தாலும் சட்டத்தின் முன் சமமானவர்களாக இருப்பதையும், செம்படை கைப்பற்றிய பகுதிகளின் தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும், அரசு நிர்வாக நடவடிக்கைகள் பங்கேற்பதற்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பல குறிப்பான அம்சங்கள் முன்வைக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக கட்சியின் மதக் கொள்கையை முறையாக உள்ளடக்கிய ஒரு ஆவணத்தை 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாவோஃபு (Daofu) மாவட்டத்தில் நடைபெற்ற போபா (Boba) உள்ளுர் அரசாங்கத்தின் முதல் மாநாட்டில் வெளியிடப்பட்டது. இது குறிப்பாக லாமாக்கள் மற்றும் லாமாக்களின் மடாலயங்கள் தொடர்பான தற்காலிக விதிமுறைகளை உள்ளடக்கியதாக இருந்தது. ஒரு இனக்குழு சார்ந்த பிராந்தியத்திற்காக சீன கம்யூனிஸ்ட் கட்சியால் வெளியிடப்பட்ட முதலாவது சிறப்பு மத ஒழுங்குமுறை ஆவணமாக இது அமைந்தது. இந்த ஆவணம் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத கொள்கையில் அது வரையிலான ஆவணங்களை விட ஒப்பீட்டு அளவில் ஒரு விரிவான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்த ஆவணத்தின் பின்புலத்தில்தான் திபெத்திய பகுதிகளுக்குள் செம்படை சென்ற பொழுது நடைமுறைப்படுத்தியது.

திபெத்தியப் பகுதிகளுக்குள் நுழைந்ததும், செம்படை இயல்பான மத நடவடிக்கைகளைத் தொடர்ந்ததுடன், மடாலயங்களையும் மத கலைப்பொருட்களையும் பாதுகாத்தது. அவர்கள் “புனித மலைகள், நீர்நிலைகள் மற்றும் காடுகள்” மீது எந்த இடத்திலும் அத்துமீறாமல் நடந்துகொண்டனர். மேலும் திபெத்திய மக்களின் “புனித தாயத்துக்களையும்” பிரார்த்தனைக் கொடிகளையும் தொந்தரவு செய்யாமல் அதற்குரிய மதிப்பளித்தனர். எதிரிப் படைகள் செம்படை மீது திடீர் தாக்குதல்களைத் தொடுக்கப் பயன்படுத்தியதால் சேதமடைந்த சில மடாலயங்களைத் தவிர, பெரும்பாலான மடாலயங்களும் மத வசதிகளும் அப்படியே இருந்தன. மேலும் மக்களின் மத நம்பிக்கைகளும் லாமாக்களின் செயல்பாடுகளும் பாதுகாக்கப்பட்டன.

கான்சு மாகாணத்தின் டோங்வே நகருக்கு செம்படை வந்தடைந்த பிறகு, மாவோ சேதுங் போன்ற தலைவர்கள் தெருக்களிலும் சந்துகளிலும் உள்ளூர் முஸ்லிம் சமூகத்தினருடன் கலந்துரையாடினர். அவர்கள் *அஹோங்*களுடன் (இமாம்களுடன்) சுமூகமான உரையாடல்களில் ஈடுபட்டனர். செம்படையினர் மசூதிகளில் தங்கவில்லை. ஹுய் மக்களின் வீடுகளில் தங்குவதற்கு அனுமதி கிடைத்தபோதும், விருந்தளிப்பவர்களின் உணவுப் பாத்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கத் தங்கள் உணவை வெளியிலேயே சமைத்துக்கொண்டனர். மாவோ சேதுங் உள்ளிட்ட செம்படைத் தலைவர்கள் ஷான்ஜியாஜியை அடைந்ததும், முதலில் பள்ளிவாசலுக்குச் சென்று வயதான அஹோங்கை (இமாம்) சந்தித்து மரியாதை செலுத்தினர்.

செம்படை சீன இனக் குழுக்களின் பழக்கவழக்கங்களை மதிப்பது, பள்ளிவாசல்களைப் பாதுகாப்பது, இனச் சமத்துவத்தை ஆதரிப்பது என்பன குறித்து மாவோ அஹோங்கிடம் விளக்கினார். இரு தரப்பினரிடையேயும் இனிமையான, நெருக்கமான உரையாடல் நடந்தது. அஹோங்கும் உள்ளூர் முஸ்லிம்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் செம்படைக்கு வீடுகளை ஒதுக்கிக் கொடுத்தனர், நியாயமான விலைக்கு உணவு தானியங்களை விற்றனர். மேலும் தெருக்களில் மேடை அமைத்து விழாக் கோலத்துடன் செம்படையை வரவேற்றனர்.

அஹோங்கும் மாவோ, சௌ என் லாய் போன்ற தலைவர்களும் தெருவில் நின்று இனிமையாக உரையாடினர். செம்படையினர் உள்ளூர் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தனர். (எ.கா., வெளியில் சமைத்தல், ஆட்டை அறுக்கும் போது அஹோங்கை அழைத்துப் பிரார்த்தனை செய்வித்தல்). இது முஸ்லிம் மக்களின் உண்மையான நம்பிக்கையையும் ஆதரவையும் பெற்றுத் தந்தது. செம்படை அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் போது, உள்ளூர் மக்கள் இரு பக்கமும் நின்று பரிவுடன் வழியனுப்பி வைத்தனர்.

மேலும், ஹுய் சமூகத்தினருடனான உரையாடல்களின்போது “பன்றி” போன்ற மதரீதியாகத் தடைசெய்யப்பட்ட சொற்களைக் குறிப்பிடுவதை செம்படையினர் தவிர்த்தனர். மாவோ கவுண்டி (Mao County) பகுதிக்குச் செம்படை வந்தடைந்த பிறகு, செம்படையில் இருந்த ஹுய் இனத்தைச் சேர்ந்த ஊழியரும் அஹோங் குமான சியாவோ ஃபுஜென் (Xiao Fuzhen), உள்ளூர் மசூதியில் மத நடவடிக்கைகளை வழிநடத்தினார். ஹுய் மக்களின் புரட்சிகரப் போராட்ட வரலாறு குறித்த சொற்பொழிவுகள் மூலம், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையைக் ஆதரிப்பதன் மூலமே ஹுய் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்ற கருத்தை அவர் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். “இஸ்லாமிய வழக்கங்கள் மற்றும் மரபுகளைத் துல்லியமாக மதிக்கும் செம்படையின் கொள்கையானது, மிகுந்த சந்தேகத்துடனிருந்த விவசாயிகள் மற்றும் *அஹோங்*களி டையேயும் ஒரு நல்ல சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியது” .

அ.பாக்கியம்

அடுத்த தொடர் அக்.14 புதனன்று வெளியாகும்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *