Tamil Marx

ஆப்பிரிக்கா

சாகேல் நாடுகளின் பேரழிவும் வர்க்கப் போராட்டமும்

சாகேல் நாடுகளின் பேரழிவும் வர்க்கப் போராட்டமும்
  • PublishedApril 28, 2026

ஆப்பிரிக்க கண்டத்தின் சாகேல் (Sahel) பகுதியில் வளர்ந்து வரும் மோதல்கள் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை, ஏகாதிபத்திய சுரண்டலால் உருவாக்கப்பட்டவை, இவை காலநிலை மாற்றம் மற்றும் பருவநிலை பேரழிவால் தீவிரமடைந்துள்ளது.

சாகேல் என்பது ஆப்பிரிக்கக் கண்டத்தின் குறுக்கே அமைந்துள்ள ஒரு பரந்த புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் மண்டலம். அரபு மொழியில் ‘சாஹில்’ (Sāḥil) என்றால் “கரை” அல்லது “எல்லை” என்று பொருள். சஹாரா பாலைவனத்தின் தெற்கு எல்லையாக (கரை போல) இது அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது.

இது வடக்கே உள்ள முற்றிலும் வறண்ட சஹாரா (Sahara) பாலைவனத்திற்கும், தெற்கே உள்ள ஈரப்பதமான சவன்னா (Savanna) காடுகளுக்கும் இடையிலான இடைநிலை மண்டலமாக (Transitional zone) அமைந்துள்ளது. இது மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கி, கிழக்கே செங்கடல் வரை சுமார் 5,900 கிலோமீட்டர் நீளத்திற்குப் பரவியுள்ளது. செனகல், மொரிட்டானியா, மாலி, புர்கினா பாசோ, நைஜர், நைஜீரியா, சாட், சூடான் மற்றும் எரித்திரியா ஆகிய நாடுகள் இந்த சாகேல் நிலப்பரப்பில் அமைந்துள்ளன.

உலகிலேயே அதிக நெருக்கடிகளை சந்திக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். தற்போது இப்பகுதி பாலைவனமாதல் மற்றும் வறட்சி போன்ற கடுமையான காலநிலை மாற்றம், வறுமை, இன மோதல்கள், அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் பல்வேறு ஆயுதக் குழுக்களின் வன்முறை என பெரும் நெருக்கடிகளின் மையமாக உள்ளது.

காலனித்துவ காலத்திலிருந்தே, ஆப்பிரிக்காவில் பழங்குடியின மக்களுக்கு இடையிலான விரோதம், இன வெறுப்பு, தீவிரவாதம், அரசியல் நிலையற்ற தன்மை, மக்கள் தொகை நெருக்கடி, வளங்களின் பற்றாக்குறை, வளக்கொள்ளை ஆகிய ஒவ்வொன்றும் விளக்கப்பட்டுள்ளன. ஆனால் இவைகள் அனைத்திற்கும் அடிப்படையான விஷயமான வர்க்கப் பிரச்சனை மட்டும் விளக்கப்படவில்லை.

இது ஆப்பிரிக்காவின் முரண்பாடுகளை சந்தேகத்திற்கு இடமின்றி உருவாக்குகின்றன. என்றாலும், உற்பத்தி உறவுகளை மதிப்பிடாமல் அவற்றை விளக்க முடியாது. ஆப்பிரிக்காவின் பிந்தைய காலனித்துவ வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் புதிய விளக்கங்களை உருவாக்கியுள்ளன. அவ்விளக்கங்களில் பலவும் ஏகாதிபத்திய சுரண்டல் மற்றும் வர்க்கச் சுரண்டல் ஆகியவை எவ்வாறு வன்முறையை கட்டமைக்கின்றன மற்றும் நிலையற்ற அரசியல் தன்மையை உருவாக்குகின்றன என்பதை திட்டமிட்டு மறைக்கின்றன.

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் மக்களை வர்க்கங்களாகப் பிரித்து, மற்ற சமூக உறவுகளை (இன, உறவுமுறை, வகுப்புவாத) மறுவடிவமைப்பு செய்துள்ளன. எனவே, ஆப்பிரிக்காவின் எதார்த்தத்தைப் புரிந்துக் கொள்ள ‘வர்க்கப் பகுப்பாய்வு’ அவசியமாகும்.

காலநிலை மாற்றம் அப்பகுதி நாடுகளில் உள்ள மக்களுக்கு மறுக்க முடியாத அளவுக்கு பாதிப்பை உருவாக்கி வருகிறது என்றாலும், மேலாதிக்க ‘காலநிலை மோதல்’ (climate conflict) கட்டமைப்பானது, சாகேல் நாடுகளில் உள்ள வன்முறை மற்றும் உறுதியற்ற தன்மைக்கு காலநிலை சார்ந்த வளப் பற்றாக்குறையே காரணம் என்று வழக்கமாகவும் – தவறாகவும் – கூறுகிறது.

இந்தக் கட்டுரை, சாகேல் நாடுகளில் அதிகரித்து வரும் மோதல்களை ஏகாதிபத்திய சுரண்டலின் அரசியல் பொருளாதாரத்திற்குள் செயல்படும் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்கிறது.

காலநிலை பேரழிவு என்பது ஏற்கனவே சமூகத்தில் இருக்கின்ற முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தும் காரணியே தவிர, அதுவே வன்முறைகளுக்கான அடிப்படை காரணம் அல்ல.

பகுதி I: சாகேல் பகுதியின் வறட்சி மற்றும் அரசியல் தாக்கம்

பருவநிலை பேரழிவு:

அரபு வார்த்தையான சஹாரா (Sahara) என்பதற்கு ‘பாலைவனம்’, அதாவது குறைந்த மழையளவு கொண்ட வறண்ட இடம் என்று பொருள். இருப்பினும், இது ஒரு தவறான சொல்லாகும். சுமார் 14,800 முதல் 5,500 ஆண்டுகளுக்கு முன்பு, சஹாராவிலும் சாகேலின் தெற்கு எல்லைகளிலும் ஏரிகள், ஆறுகள், புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தாவரங்கள் இருந்தன.

சமீபத்திய ஆய்வுகள், கடந்த சில பத்தாண்டுகளாக உலகளாவிய சராசரியை விட சாகேல் பகுதி தான் 1.5 மடங்கு வேகமாக வெப்பமடைந்துள்ளது என்பதைக் காட்டுகின்றன. உலகளாவிய பசுமை வாயு உமிழ்வுகளில் 1%க்கும் குறைவான அளவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வெளியேறி இருந்தாலும், அந்த நாடுகள் தான் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்த காலநிலை மாற்றங்கள் மேலைநாடுகளின் தொழில்துறை உமிழ்வுகளால்தான் (industrial emissions) பெருமளவில் ஏற்படுகின்றன. மழைப்பொழிவு இப்போது மிகவும் தீவிரமாக உள்ளது, ஆனால் விட்டுவிட்டு பெய்கிறது, இதன் விளைவாக வெள்ளம் மற்றும் வறட்சி ஆகிய இரண்டு தீவிர வானிலை அதிகளவில் ஏற்படுகின்றன.

சமூக மற்றும் பொருளாதார பேரழிவு:

சாகேலில் வெப்பநிலை உலக சராசரியை விட வேகமாக உயர்ந்து வருவதால், விவசாயம் மற்றும் மேய்ச்சல் தொழில்கள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. வெப்பமயமாதல் மற்றும் மழை குறைவின் காரணமாக சாகேலில் உள்ள மேய்ப்பர்கள் மேய்ச்சல் நிலம் குறைந்து வரும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக, அவர்கள் நீண்ட தூரம், பெரும்பாலும் அறிமுகமில்லாத மேய்ச்சல் பகுதிகளுக்கு இடம்பெயர வேண்டியுள்ளது. காலனித்துவ மற்றும் பிந்தைய காலனித்துவ நில உடைமை முறைகள் பாரம்பரிய மேய்ச்சல் பாதைகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பை அழித்துவிட்டன. இந்த இடப்பெயர்வு ஏழை மேய்ப்பர்களை வன்முறைக்கு ஆளாக்குகிறது. இது ஒரு சூழலியல் அழுத்தத்தை வர்க்க அடிப்படையிலான நெருக்கடியாக மாற்றுகிறது.

பருவநிலை மாறுபாடுகளினால் ஏற்படும் பயிர் மற்றும் கால்நடை இழப்புகளால், ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகள் வளர்ச்சி குன்றிய நிலை போன்ற நீண்டகால சுகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டமைப்பு சரிசெய்தல் திட்டங்கள் (SAPs), உள்ளூர் உணவுப் பாதுகாப்பை விட ஐரோப்பிய சந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஏற்றுமதி விவசாயத்தை கட்டாயப்படுத்தியதே இந்த வறுமைக்கும் நெருக்கடிக்கும் முக்கியக் காரணமாகும்.

அரசியல் பேரழிவு மற்றும் ஏகாதிபத்திய தலையீடு:

வளங்கள் குறைவினால் ஏற்பட்ட வன்முறை என்பதை விட, இது ஒரு வர்க்க மோதலாகும். இளைஞர்கள், ஒருங்கிணைந்த சூழலியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக விவசாயம் அல்லது மேய்ச்சல் வாழ்வாதாரங்களில் இருந்து வெளியேறும் போது , அவர்கள் ஆயுதக்குழுக்களிடம் செல்லும் சூழல் உருவாகிறது. அதாவது சாஹேல் நாடுகளில் உள்ள இளைஞர்களின் உழைப்பு வன்முறைகுழுக்கள் மற்றும் பயங்கரவாதத்தால் (armed fighters) பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச நாடுகள் இந்த நெருக்கடியைத் தீர்ப்பவர்களாக இல்லாமல், அதைச் சுரண்டும் அமைப்பின் ஒருங்கிணைந்த கூறுகளாகவே செயல்படுகின்றன: சூடானின் தங்க வளங்களை அணுகுவதற்காக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா RSF போன்ற கிளர்ச்சிக் குழுக்களுக்கு நிதியளிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் தனது எல்லைக் கட்டுப்பாட்டிற்காக நிதியளிப்பதன் மூலம், காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களை ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதி இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துகிறது. மேற்கத்திய நிதி நிறுவனங்கள் (Western financial institutions), கடன் மற்றும் SAP-கள் மூலம் அரசை வீழ்ச்சியடையச் செய்து சமூகங்களை பாதிக்கப்படக்கூடியவையாக மாற்றுகின்றன.

மாலி, சூடான் போன்ற நாடுகளில் நடக்கும் மோதல்கள் வெறும் இன அல்லது வளப் பிரச்சனைகள் அல்ல. அமைதி, ஜனநாயகம் மற்றும் சூழலியல் மீட்சிக்கான எந்தவொரு முற்போக்கான திட்டமும், போர் பொருளாதாரத்தை (war economy) தகர்த்தெறிவதையும், நிலம் மற்றும் கனிம வளங்கள் மீதான கட்டுப்பாட்டை தேசியமயமாக்குவதையும், ஜனநாயகப்படுத்துவதையும் கோருகிறது. இது உள்ளூர் இராணுவ உயரடுக்கினர் மற்றும் அவர்களின் சர்வதேச ஏகாதிபத்திய ஆதரவாளர்களின் நலன்களை நேரடியாக எதிர்க்கும் வர்க்கப் போராட்டமேயாகும்.

 

மொழியாக்கம் மற்றும் சுருக்கம்: சுதிர்

 

குறிப்பு: இது ட்ரைகான்டினென்டல் (Tricontinental) இணையத்தில் வெளியான ஆய்வுக்கட்டுரையின் சுருக்கம். மூலக் கட்டுரையை படிக்க இந்த லிங்க்கை தொடவும் .

https://thetricontinental.org/dossier-class-struggle-climate-sahel/#top

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *