தோல்வியின் விளிம்பில் டிரம்ப்: ராணுவத் தளங்களை அப்புறப்படுத்த ஈரான் நிபந்தனை
ஈரான் உடனான போரில் டிரம்ப் தோல்வியின் விளிம்பில் உள்ளார். இந்நிலையில் போரை முடிக்க திரைமறைவு நாடகம் நடத்தி வருகிறார். போர் நிறுத்தத்திற்காக டிரம்ப் 15 அம்ச கொள்கை ஒன்றை வழங்கியுள்ளார். இந்நிலையில் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ளது.
அணுசக்தி பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென ஈரான் மீது அமெரிக்கா தொடுத்த போர் தற்போது 26-வது நாளை எட்டியுள்ளது.
ஆரம்பத்தில் ஆக்ரோஷமாகத் தாக்குதலைத் தொடங்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தற்போது போரினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் ஈரானின் கடுமையான எதிர்வினைகளால் பெரும் அரசியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். போரை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ள டிரம்ப் நிர்வாகம், தற்போது ‘கௌரவமாக’ பின்வாங்க வழிதேடி வருகிறது.
போரினால் அமெரிக்காவுக்கும் உலகிற்கும் ஏற்பட்ட முட்டுக்கட்டை
பிப்ரவரி 28 அன்று தாக்குதலைத் தொடங்கிய டிரம்ப் நிர்வாகத்திற்கு, அதன் பின்விளைவுகள் தற்போதுதான் புரியத் தொடங்கியுள்ளன. ஈரான் உட னடியாக உலகிலேயே மிக முக்கியமான கடல் வணிகப் பாதையான ‘ஹோர்முஸ் ஜலசந்தியை’ மூடியது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 விழுக்காடு இந்த வழியாகத் தான் செல்கிறது. எண்ணெய் விலை உயர்வு: இதன் விளைவாக, போருக்கு முன்பு பேரல் ஒன்றுக்கு 65 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது 100 டாலரைத் தாண்டியுள்ளது.
கப்பல்கள் முடக்கம்:
சுமார் 20,000 மாலுமிகளைக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர் கப்பல்கள் நடுக்கடலில் சிக்கித் தவிக்கின்றன. இயற்கை எரிவாயு மற்றும் உர விநியோகமும் முடங்கியுள்ளது.
ஐரோப்பாவின் அழுத்தம்:
2022-ஆம் ஆண்டின் எரிசக்தி நெருக்கடியை விட மோசமான நிலையை எதிர்கொள்ளும் ஐரோப்பிய நாடுகள், போரை உடனே நிறுத்தும்படி டிரம்ப்பிற்குப் பெரும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. நீண்டகாலப் போர் தங்களின் பொருளாதாரத்தைச் சீரழித்துவிடும் என ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் உள்ளிட்டோர் எச்சரித்துள்ளனர்.
இந்தக் காரணங்களால், போரைத் தொடங்கிய டிரம்ப் தற்போது கௌரவமாகப் பின்வாங்க வழிதேடி அலைகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
டிரம்ப் போடும் இரட்டை வேடம்
தற்போதைய சூழலில் டிரம்ப் நிர்வாகம் உலக நாடுகளின் முன்னிலை யிலும், உள்நாட்டிலும் இரண்டு விதமான முரண்பட்ட நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.
1. வாயளவில் சமாதானம் பேசும் டிரம்ப்
வெளியில் செய்தியாளர்களிடம் பேசும்போது டிரம்ப் மிகவும் மென்மை யாகப் பேசுகிறார். ஈரானுடன் பேச்சு வார்த்தைகள் “மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும்” நடப்பதாகக் கூறுகிறார். ஈரான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்த “மிகவும் விரும்புவதாகவும்” கூறுகிறார்.
ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் வழங்கிய ஒரு வாய்ப்பை “மிகவும் குறிப்பிடத்தக்கப் பரிசு” என்றும் அவர் வர்ணிக்கிறார். ஆனால், இதற்குப் பதிலளித்த ஈரானின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்கா யாருடனும் பேசவில்லை, “தன்னுடன் தானே பேசிக்கொள்கிறது” என டிரம்ப்பின் வாய்ச் சவடால்களை அம்பலப்படுத்தியுள்ளது.
2. திரைமறைவில் முட்டுக்கொடுக்கும் பாகிஸ்தான்
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் நேரடிப் பேச்சுவார்த்தை இல்லாததால், டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானைத் தூதராகப் பயன்படுத்தி வருகிறது. அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்தத் திட்டத்தைப் பாகிஸ்தான், ஈரானிடம் ரகசியமாகக் கொண்டு சேர்த்துள்ளது. இந்தத் திட்டத்தில், ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும், யுரேனிய இருப்பை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும், ஏவுகணைச் சோதனைகளை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா கோருகிறது. இதற்கு ஈடாகப் பொருளாதாரத் தடையைத் தளர்த்துவதாகக் கூறுகிறது.
ஈரானின் 5 அதிரடி நிபந்தனைகள்
அமெரிக்காவின் நம்பகத்தன்மையற்ற இந்த சமாதான தூதை ஈரான் முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு எதிராக, மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தையே வேரறுக்கும் 5 கடுமையான எதிர்-நிபந்தனைகளை ஈரான் விதித்துள்ளது:
அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும்:
பஹ்ரைன், கத்தார், குவைத், ஜோர்டான், சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலிருந்தும் அமெரிக்க ராணுவத் தளங்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.
நிரந்தரப் போர் நிறுத்தம்:
தற்காலிக “போர் நிறுத்தம்” என்ற வார்த்தையை ஈரான் ஏற்கவில்லை. அமெரிக்கா மீண்டும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டு தாக்கவே இந்த இடைவெளி பயன்படும் என்பதால், போர் நிரந்தர மாக முடிவுக்கு வர வேண்டும். இனி ஒருபோதும் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது எனச் சட்டப்பூர்வ மாக உறுதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளது.
இழப்பீடு வழங்க வேண்டும்:
பிப்ரவரி 28 முதல் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் அழிந்த உள்கட்டமைப்புகள் மற்றும் உயிரிழப்புகளுக்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும்.
ஏவுகணைத் திட்டம் எங்களது உரிமை:
ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டம் தற்காப்புக் கானது; அதனைப் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தவே முடியாது – என ஈரான் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
தோல்வி பயத்தில் அமெரிக்கா குவிக்கும் கூடுதல் படைகள்
ஈரான் தனது நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதாலும், டிரம்ப் தரப்பு பின்வாங்கல் ‘சமாதான’ முயற்சி தோல்வியடைந்து வருவதாலும், தோல்வி பயத்தில் உள்ள அமெரிக்கா தனது ராணுவப் பலத்தைக் கூட்டி மீண்டும் மிரட்டப் பார்க்கிறது.
வட கரோலினாவின் போர்ட் பிராக்கில் உள்ள அமெரிக்க ராணு வத்தின் அதிவேகப் படைப்பிரிவான 82-வது ஏர்போர்ன் பிரிவைச் சேர்ந்த 2,000 முதல் 3,000 பாராசூட் வீரர்களை ஈரானுக்கு அனுப்ப தயாராகி வருகிறது.
நன்றி தீக்கதிர்