Tamil Marx

தமிழ் நாடு

கிக் தொழிலாளிகளாக மாற்றப்படும் தமிழ் நாட்டு மருத்துவ மாணவர்கள்

கிக் தொழிலாளிகளாக மாற்றப்படும் தமிழ் நாட்டு மருத்துவ மாணவர்கள்
  • PublishedNovember 20, 2025

குறிப்பிட்ட அளவு வலுவான பொது சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் சிறந்த மருத்துவ அறிவு கொண்ட மாநிலமாகவும் பெயர் பெற்ற தமிழ்நாட்டில் இப்போது இளம் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல், ஓலா,உபேர்,ஜோமாடோ0 போன்ற வேலைகளுக்கு சென்று பணம் ஈட்ட வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள்.

தனியார்மயம் (#Corporatisation), சம்பள உயர்வு இல்லாத நிலை, மற்றும் வேலை வாய்ப்புகள் குறைந்து போனது போன்ற காரணங்களால், பல மருத்துவர்கள் தங்கள் ஸ்டெதஸ்கோப்களை (Stethoscope) ஒதுக்கி வைத்துவிட்டு, இது போன்ற #GigPlatforms வேலையை நோக்கி செல்கிறார்கள்.

“ஐந்தரை ஆண்டுகள் MBBS படிப்பை முடித்து, பயிற்சியும் (Internship) முடித்த பிறகு, பல பட்டதாரிகளுக்கு மாதம் வெறும் ரூ.15,000 முதல் ரூ.30,000 வரை தான் ஆரம்பச் சம்பளம் கிடைக்கிறது. அவர்களுக்கு 30 வயதாகும் போதுகூட, அவர்களின் சம்பளம் ரூ.30,000-ஐத் தொடுவது அரிது. உயிர்களைக் காப்பாற்றுவதற்காக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் படித்த ஒருவருக்கு இது மிகுந்த வேதனை அளிக்கிறது,” என்று இந்த சூழல் குறித்தஒரு மூத்த மருத்துவர் டிடி நெக்ஸ்ட் நாளிதழிடம் கூறியுள்ளார்.

கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. ஒரு காலத்தில் போற்றப்பட்ட மருத்துவத் துறையானது, இப்போது சோர்வுடனும், விரக்தியுடனும் காணப்படும் இடமாக மாறி வருகிறது. தகுதியுள்ள மருத்துவர்கள், முதுகலைப் பட்டதாரிகள், ஏன் சிறப்பு மருத்துவர்கள் கூட வேலை இல்லாமலும், மிகக் குறைந்த சம்பளத்துடனும் இருக்கிறார்கள், அல்லது இந்தத் தொழிலை முழுவதுமாக விட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் அந்த பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கு அரசு போதிய பணியிடங்களை முறையாக உருவாக்காத அல்லது ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பாமல் விடும் போது அவர்கள் தனியாக கிளினிக் துவங்கலாமே என இயல்பாக கூறலாம்.
ஆனால் தனியாக ஒரு கிளினிக் நடத்த முடியாத நிலையில் உள்ள பிற்படுத்தப்பட்ட அல்லது சாதி பண சமூக ஆதரவு இல்லாத குடும்பத்தை சேர்ந்த மருத்துவ பட்டதாரிகள் உணவு டெலிவரி, டாக்ஸி ஓட்டுவது அல்லது கூரியர் சேவை போன்ற சிறு வேலைகளை நாடிச் செல்கிறார்கள்.

மூன்று தசாப்தங்களாக (முப்பது ஆண்டுகளுக்கு மேல்) அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய மூத்த அறுவை சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜெய்சன் பிலிப், ஒரு மோசமான நிலையை பற்றி கூறுகிறார். “நான் இளைஞனாக இருந்தபோது, சில குடும்ப மருத்துவர்கள் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் தூண்களாக இருந்தனர். அவர்கள் ஒரு MBBS பட்டம் மட்டுமே வைத்துக்கொண்டு மக்களுக்கு சிகிச்சை அளித்து, அவர்களைக் கவனித்துக் கொண்டார்கள். மக்கள் அவர்களை நம்பினார்கள். ஆனால் இன்று, மருத்துவத்துறை என்பது லாபமே முதன்மையானதாகக் கருதப்படும் ஒரு தொழில்துறையாக (Industry) மாறிவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமனை நிர்வாகக் குழுக்களிலும் (Hospital Boards) பணியாற்றிய அந்த டாக்டர் பிலிப், நிர்வாகக் குழு விவாதங்களின் போது நோயாளிகளை ‘குணப்படுத்துவது’ (Recovery) பற்றி இல்லாமல், ‘வருமானம்’ (Revenue) பற்றியே அதிகம் பேசப்படுகிறது .
“பணக்கார நோயாளிகளைக் கண்டறிவது, அதிக சோதனைகள் (Tests) அல்லது நடைமுறைகள் மூலம் லாபத்தை அதிகரிப்பது பற்றித்தான் அவர்கள் பேசுகிறார்கள். இரக்கம் என்பது மறைந்துவிட்டது,” என்றும் அவர் கூறியுள்ளளார்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆயிரம் பேருக்கு 1 மருத்துவர் (1:1,000) என்ற விகிதத்தை பரிந்துரைக்கிறது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் தான் ஒரு மருத்துவர் என்று நினைத்தால், இந்த விகிதம் 1:250 ஆக இருக்கும். ஆனால், சூப்பர் ஸ்பெஷலிஸ்டுகளுக்கே (Superspecialists) வேலை கிடைக்கவில்லை என்பதுதான் வேடிக்கை. MBBS பட்டதாரிகள் ‘ஸ்விக்கி’ (Swiggy) டெலிவரி பையன்களாக வேலை பார்க்கிறார்கள். சிறப்புக் கல்வி படித்த மருத்துவர்கள் (Specialists) ரூ.60,000, மிகச் சிறப்புக் கல்வி படித்தவர்கள் (Superspecialists) வேலை கிடைத்தால் ரூ.90,000 மட்டுமே சம்பாதிக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டார். கிட்டத்தட்ட 30 வருட சேவை மற்றும் 275 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளுக்குப் பிறகு, அவருடைய மொத்த சம்பளம் ரூ.1.6 லட்சம். கையில் கிடைப்பது ரூ.1.3 லட்சம். உண்மையில் தனது பணிக்கு சம்பளம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், ஆனால் அலுவலக அமைப்புகளில் உள்ள ஊழல் இதைத் தடுத்து நிறுத்துகிறது. நான் லஞ்சம் கொடுப்பதில்லை, அதனால் கஷ்டப்படுகிறேன்” என்று அவர் மருத்துவ துறையின் ஊழலையும் பகிரங்கமாக பேசியுள்ளார்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தியின் கூற்றுப்படி, இந்த நிலைமை “வீழ்ச்சியின் உச்சத்தை” அடைந்துள்ளது. “ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் உட்கட்டமைப்பை அதிகப்படுத்தியுள்ளனர், ஆனால் வேலைகளின் எண்ணிக்கை உயரவில்லை” என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இருபது ஆண்டுகளுக்கு முன் 19,000 அரசு மருத்துவப் பணியிடங்கள் இருந்தன. இன்றுவரை அந்த எண்ணிக்கை அப்படியே உள்ளது. ஆனால், ஒவ்வொரு வருடமும் 5,000 புதிய மருத்துவர்கள் பட்டம் பெறுகிறார்கள். “அவர்கள் எங்கே போவார்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பூர்வமான தடைகள் (Regulatory roadblocks) நிலைமையை மேலும் மோசமாக்குவதாகவும் அவர் கூறினார். ” தமிழ்நாடு தனியார் மருத்துவ நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2018 மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 ஆகியவை சிறிய கிளினிக்குகள் பிழைப்பதை மிகவும் கடினமாக்கியுள்ளன. காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைவதற்கும், நவீன நோயறிதல் கருவிகளைப் பெறுவதற்கும் வழி இல்லாததால், இளம் மருத்துவர்களால் கார்ப்பரேட் மருத்துவமனைகளுடன் போட்டியிட முடிவதில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நகரத்தில் உணவு டெலிவரி ஏஜெண்டாக பணிபுரியும் 28 வயதுடைய ஓர் MBBS பட்டதாரி, தன் வேதனையைப் பகிர்ந்து கொண்டார். “நான் மேனேஜ்மென்ட் கோட்டாவில் படித்தேன். என் பெற்றோர் பெரிய அளவில் கடன் வாங்கினார்கள். பட்டம் பெற்ற பிறகு வேலை இல்லை, கிளினிக் வைக்கவும் பணமில்லை. அதனால், நான் உணவு டெலிவரி செய்யவும், பைக் டாக்ஸி ஓட்டவும் ஆரம்பித்தேன். என் பெற்றோர்கள் நான் ஜூனியர் டாக்டர் என்று நினைக்கிறார்கள். நான் செய்து வருகின்ற வேலை பற்றிய உண்மையைச் சொன்னால் அவர்களின் இதயம் உடைந்துவிடும், அதனால் சொல்லவில்லை” என்று அவர் கூறியுள்ளார். மூன்று ஆண்டுகள் இப்படியே ஓடிவிட்டதாகவும் அவர் வருந்தியுள்ளார். எனினும் அவர் உயர்கல்வி பயிலும் தயாரிப்பிலும் உள்ளார்.

இன்று, கார்ப்பரேட் முறையிலான மருத்துவமனைகளும், காப்பீட்டு வலையமைப்புகளும் தனிப்பட்ட மருத்துவப் பயிற்சியை அழித்துவிட்டன. தற்போது பல மூத்த மருத்துவர்களே ஆலோசகர்களாக (Consultants) வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

source DT Next news

https://www.dtnext.in/news/tamilnadu/med-profession-not-a-paymaster-doctors-turn-gig-workers-in-tn-853056#:~:text=In%20Tamil%20Nadu%2C%20it%20is,re%20lucky%20to%20get%20placed.%22

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *