நியூயார்க் மேயர் தேர்தல் வெற்றி; எங்கே செல்லும்? – சைலஸ் அருள்ராஜ்
சோவியத் சோசலிச குடியரசு பனிப்போர் காலகட்டத்தில் பின்னடைவுக்கு உள்ளானபோது, வரலாறு முடிந்துவிட்டது (End of History) என்று ஒட்டுமொத்த முதலாளித்துவ முகாமும் ஆர்ப்பரித்திருந்தன. ஆனால் இன்றைக்கு 33 வருடங்களுக்கு பிறகு அதே முதலாளித்துவ முகாமில் முடிந்துபோன வரலாறு மீண்டெழுந்திருக்கின்றது. ஆம்! சோசலிசம் எனும் பூதம் அமெரிக்காவின் முக்கிய நகரமான நியூயார்க் கோபுரத்தில் அரியணை ஏறியிருக்கின்றது.
ஜனநாயக சோசலிஸ்ட்வாதியாக தன்னை அறிவித்துக்கொண்ட 34 வயதே ஆன ஷோரன் மம்தானி நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றிப்பெற்றிருக்கிறார். மம்தானி வென்றது எதிர்க்கட்சி வேட்பாளர்களான ஆண்ட்ரூ குவுமோவையோ, குர்தீஷ் சில்வாவையோ அல்ல. காலம்காலமாக அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு நிதியளித்து தங்களது மூலதனத்தையும், லாப வேட்டையையும் பெருக்கிக்கொள்ளும் Doordash, Airbnb, Mike Bloomberg, Wallmart heiress, Alice Walton, Bill Ackman போன்ற பெரும் கார்ப்பரேட் பில்லியனர் கூட்டத்தினை எதிர்த்து வெற்றி பெற்றிருக்கிறார்.
யார் இந்த ஜோரன் மம்தானி?
உகாண்டாவில் பிறந்த இந்தியா வம்சாவழியினை சார்ந்தவர் ஷோரன் மம்தானி. இவரின் தாய் மீரா நாயர் பஞ்சாபை சேர்ந்த புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர், தந்தை மக்மூத் மம்தானி குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட மானுடவியல் பேராசிரியர் ஆவர். ஜோரனுக்கு 7 வயது இருக்கும்போது நியூயார்க்கில் குடியேறி அமெரிக்க குடியுரிமை பெற்றிருக்கிறார்கள். ராப் பாடகராக வலம் வந்த மம்தானிக்கு அரசியல் பிரவேசம் தான் வாழ்ந்த பகுதிகளில் இருந்தும், படிக்கின்ற கல்லூரி காலத்திலும்தான் தொடங்கியிருக்கின்றது.
ஜனநாயக கட்சியில் இணைந்து நியூயார்க் நகர மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்த மம்தானி, 2020-ம் ஆண்டு நியூயார்க் சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் ஜனநாயக கட்சியில் பெர்னி சாண்டர்ஸ், அலெக்சாண்ட்ரியா கார்டெஸ் போன்ற சோசலிஸ்ட் தலைவர்களின் வழியிலேயே ஷோரன் மம்தானியும் உழைக்கும் மக்களுக்கான தனது அரசியல் பயணத்தை வகுத்திருக்கிறார். அதனாலேயே இரு சோசலிஸ்ட் தலைவர்களும் நியூயார்க் மேயர் தேர்தலில் மம்தானிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டிருந்தார்கள்.
ஜனநாயக கட்சியிலுள்ள மற்ற தலைவர்கள் யாரும் மம்தானியை வெளிப்படையாக ஆதரிக்கவோ, அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவோ இல்லை. மேயர் தேர்தலின் வெற்றிக்குப் பிறகு உலகம் முழுவதுமிருந்து மம்தானியை பலரும் வாழ்த்தி வரும் நிலையில் டெமாக்ரட்டிக் கட்சியின் அதிபர்களான ஒபாமா, ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் யாரும் மம்தானியின் பெயரை கூட உச்சரிக்கவில்லை.
நியூயார்க் மேயராக ஒரு கம்யூனிச ஆதரவாளரை வெற்றி பெறச்செய்தால் பெடரல் நிதியை நிறுத்திவிடுவேன் என்று டொனால்ட் ட்ரம்ப் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட போதும்கூட டெமாக்ரடிக் தலைவர்கள் யாரும் அதுகுறித்து வாய் திறக்கவில்லை.
அமெரிக்காவில் சோசலிசத்துக்கான புதிய பாதை?
நியுயார்க் நகர சட்டசபைக்கு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்தே பிரபலமான அரசியல்வாதியாக மம்தானி அறியப்பட்டிருந்தார். அதற்கு காரணம் உழைக்கும் மக்களுடனான நெருக்கமும், தொழிற்சங்கங்களின் ஆதரவும்தான். இதை திரட்டுவதில் மம்தானிக்கு பக்கப்பலமாக சோசலிஸ்ட் ஆதரவாளரான பெர்னி சாண்டர்ஸ் இருந்திருக்கின்றார்.
சமீபத்தில் சோசலிச கொள்கைகள் குறித்து அமெரிக்காவில் ஒரு ஆய்வு மேற்கொண்டபோது 60% அமெரிக்க மக்கள் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இரு கட்சி அரசியல் முறையை கொண்ட அமெரிக்க அரசியல் கட்டமைப்பில் மாற்று கொள்கைகளுக்கு இடம் என்பதே இல்லாத சூழலிலும், பெர்னி சாண்டர்ஸ் போன்றோர் அடித்தட்டு உழைக்கும் மக்களுக்கான கொள்கைகளை ஜனநாயக கட்சியின் வாயிலாக அமெரிக்க அரசியலில் பேசுபொருளாக்கினர்.
தற்போது மம்தானியின் வெற்றியும் விளிம்பு நிலை மக்களுக்கான சோசலிச பாணி கொள்கைகளை முன்னெடுப்பதற்கான் புதிய பாதைகளை திறந்து விட்டிருக்கிறது.
மம்தானியின் மக்கள் நலத்திட்டங்கள்:
’அனைவருக்குமான நியூயார்க்’ என்பதே ஷோரன் மம்தானியின் முக்கிய அரசியல் பிரச்சாரமாக இந்த மேயர் தேர்தலில் அமைந்திருந்தது. அவற்றில் பிரதான பிரச்சனைகளாக வீட்டு வாடகை, குழந்தைகள் பராமரிப்பு, பொதுக்கல்வியை வலுப்படுத்துதல், குறைந்தபட்ச சம்பள நிர்ணயம் மற்றும் டெலிவரி ஊழியர்களுக்கான பணி பாதுகாப்பு என வகைப்படுத்தியிருந்தனர்.
உலகின் பிரபல நகரமான நியூயார்க்கில் வாடகை வீட்டில் இருப்பதே பெருங்கனவாக மாறிக்கொண்டிருப்பதும், அதனை சமாளிக்க முடியாமல் நகரத்திலிருந்து பலர் வெளியேறி கொண்டும் இருந்தனர். முக்கிய பிரச்சனையான வீட்டு வாடகை தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த மாற்று நடவடிக்கைகளை எடுப்பதோடு, புதிதாக அடுக்குமாடி குடியிருப்புகளை அரசின் சார்பிலே கட்டிக்கொடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.
நகரத்தின் மற்றொரு பிரதான பிரச்சனை குழந்தை பராமரிப்பும், அதற்காக நியூயார்க் நகரவாசிகள் செலவழிக்கும் நிதியும்தான். ஏறத்தாழ ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் அளவில் குழந்தை பராமரிப்புக்காக நியூயார்க் நகர மக்கள் செலவிடுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இத்தகைய செலவை குறைப்பதற்காக அரசின் சார்பில் 6 வாரத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை பராமரிப்பதற்கான மையங்களை கூடுதலாக ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என மம்தானி உறுதியளித்திருந்தார்.
அதுபோக, நியூயார் நகரத்தில் ஒரு மணி நேரத்திற்கான குறைந்தபட்ச சம்பளம் 30 டாலராக நிர்ணயிப்பு, டெலிவரி ஊழியர்களின் பணி உரிமைகளுக்காக தனி ஆணையம், அவர்களுக்கான பணிநேர வரையறை மற்றும் கிக் பெரு நிறுவனங்களின் வேலைநீக்கத்தில் இருந்து ஊழியர்களை பாதுகாப்பதற்கான சட்ட விதிகளை நிறைவேற்றுவேன் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். ஏனெனில் 24 மணி நேர சேவையாற்றும் பணிகளில் உணவு, மளிகை பொருட்கள் மற்றும் மருந்து உள்ளிடவைகளை டெலிவரி செய்யும் வேலையும் ஒன்று.
டெலிவரி பார்டனர்ஸ் என்ற பெயரில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உரிமைகளை மறுத்து, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் சுரண்டலுக்கு முடிவு கட்டுவேன் என்று மம்தானி செய்த பிரச்சாரம் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
செல்வந்தர்களுக்கு வரிவிதிப்பு:
தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி செல்வம் கொழிக்கும் பெருநிறுவன கார்பரேட்டுகள் நியூயார்க் நகரத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு மைய காரணமாக இருக்கின்றனர். வாடகை குறைவான வீடுகள், இலவச பேருந்து வசதி, அரசின் சார்பில் மளிகை பொருட்கள் கடை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் போன்றவற்றிற்கான செலவுகளை ஈடுகட்ட நியூயார்க் நகரத்தில் உள்ள பெரும் கார்ப்பரேட்டுகளுக்கான செல்வ வரியை (11.5%) என்ற அளவில், 1 மில்லியன் டாலருக்கு மேல் வருமானம் ஈட்டும் நிறுவனங்களுக்கான வரியை (2%) அளவில் உயர்த்தப்போவதாக மம்தானி அறிவித்திருக்கின்றார்.
இதன் மூலம் நியூயார்க் அரசாங்கம் 10 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெற முடியும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கல்வி, சுகாதாரம், ஓய்வூதியம் போன்றவற்றிற்கான நிதி ஒதுக்கீட்டை வெட்டி சுருக்கியதோடு, அடுத்த 10 ஆண்டுகளில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் 4 டிரில்லியன் டாலர் மதிப்பிலான வரிவிதிப்பினை தள்ளுபடி செய்திருக்கின்றார்.
இந்த சூழலில்தான் மம்தானியின் பெரும் நிறுவனங்களுக்கு வரிவிதிப்பு என்ற மாற்று வழியிலான நடவடிக்கைகள் அமெரிக்காவில் வரவேற்பை பெற்றன.
சோசலிச திருப்பு முனை ஏற்படுமா?
பாலஸ்தீன இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்த மம்தானி, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு நியூயார்க் நகரத்துக்கு வந்தால் அவரை கைது செய்வேன் என அறிவித்திருந்தார். மேலும், குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களின் படுகொலைக்கு காரணமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், நேதன்யாகு போன்ற போர் குற்றவாளிக்கு ஒப்பானவரென்று பேசியிருந்தார்.
மற்றொரு புறம் மம்தான வெனிசூவேலா, கியூபா போன்ற நாடுகளை அராஜகவாதிகள் என்றே குறிப்பிட்டு அமெரிக்க பாணியிலான தாராளவாத அரசியலின் கருத்துக்களையே மம்தானி பிரதிபலித்திருக்கின்றார்.
ஆனால் ஏகாதிபத்திய முகாமிற்குள்ளேயே அடித்தட்டு மக்களை மையப்படுத்தும் அரசியலை முன்னெடுத்திருப்பதோடு, தன்னை ஜனநாயக சோசலிஸ்ட் என்று அறிவித்து மாற்று மக்கள் நல திட்டங்களை, கொள்கைகளை மம்தானி முன்னிறுத்துவது என்பது காலாவதியான முதலாளித்துவம் தீவிர நெருக்கடி நிலையில் இருப்பதையே பிரதிபலிக்கின்றது.
இந்த மாற்றம் முழுமையான ஜனநாயகத்தை வலியுறுத்தும் சோசலிச சித்தாந்தத்திற்கு அமெரிக்காவை திருப்புமா? அல்ல பழைய மரபிலான கீனீசியன் பொருளாதாரத்திற்கே இட்டு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கட்டுரையாளர்: தே.சைலஸ் அருள்ராஜ், இந்திய மாணவர் சங்கம் நெல்லை மாவட்ட செயலாளர்