Tamil Marx

அரசியல் விமர்சனம் இந்தியா

மோடியின் புதிய கோட்பாடு: ஒரு முடிவில்லாப் போர் – பிரகாஷ் காரத்

மோடியின் புதிய கோட்பாடு: ஒரு முடிவில்லாப் போர் – பிரகாஷ் காரத்
  • PublishedJune 21, 2025

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமர் மோடி மே 12 அன்று ஆற்றிய பொதுக்கூட்ட உரையில், மூன்று வழி காட்டுதல்களைக் கொண்ட ஒரு புதிய கோட்பாட்டை அறிவித்தார். இந்த கோட்பாட்டை நுட்பமாக ஆய்வு செய்து புரிந்துகொள்ள வேண்டும், ஏனெனில் அவை நாட்டின் பாதுகாப்பு மற்றும் வியூகம் சார்ந்த கொள்கைகளில் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. மேலும், இவை தெற்காசியப் பிராந்தியத்தின் அமைதி  மற்றும் உறுதித்தன்மைக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

மோடி சொன்னது என்ன?

மூன்று அம்சக்கோட்பாட்டை கீழ்க்கண்டவாறு அவர் அறிவித்தார்.

முதலாவதாக, ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கிருந்து உருவாகிறதோ அந்த இடங்கள் எல்லாவற்றிலும் பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இரண்டாவதாக, இந்தியா எந்த அணு ஆயுத மிரட்டலையும் பொறுத்துக்கொள்ளாது. அணு ஆயுத மிரட்டலின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு உருவாகி வளர்ந்து வரும் பயங்கரவாதிகளின் மறை விடங்களை இந்தியா துல்லியமாகவும் தீர்க்கமாகவும் தாக்கும்.

மூன்றாவதாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசுக்கும், பயங்கரவாதத்தின் மூளையாகச் செயல்படும் நபர்களுக்கும் இடையே இந்தியா எந்த வேறுபாட்டையும் பார்க்காது.

இந்த புதிய கோட்பாடு அறிவிப்புக்கு முன்னுரையாக பிரதமர் தனது உரையில், “மே 10 மதியத்திற்குள் நாங்கள் பயங்கரவாத உள்கட்டமைப்பை பெரிய அளவில் அழித்துவிட்டோம். பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். பாகிஸ்தானின் இதயமான பகுதியில் நிறுவப்பட்ட பயங்கரவாத முகாம்களை நாங்கள்  அழித்துள்ளோம். எனவே, இனி எந்தவித பயங்கரவாத செயல்களிலோ அல்லது ராணுவ சாகசத்திலோ ஈடுபட மாட்டோம் என்று பாகிஸ்தான் முன்வந்து கூறியபோது, இந்தியா அதை பரிசீலித்தது” என்று கூறினார். மேலும் “நாங்கள் பாகிஸ்தானின் பயங்கரவாத மற்றும் ராணுவ முகாம்களுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்” என்றார்.

இறுக்கமான கட்டுப்பாட்டிற்குள் தள்ளப்படும் ராணுவ வியூகம்

ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்தியா ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் என்ற அறிவிப்பு, பல்வேறு வகையான வாய்ப்புகளை தேர்வு செய்யும் இந்தியாவின் திறனைக் கட்டுப்படுத்துவதாக மாறிவிடும். இது வியூகம் வகுக்கும் முன்முயற்சியை ஒரு சில பயங்கரவாதிகளின் கைகளில் ஒப்படைத்து விடும். எந்தவொரு பயங்கரவாதக் குழுவும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தி ராணுவத்தின் பதிலடியை தூண்டலாம், இதன் மூலம் பாகிஸ்தானுடன் ஆயுத மோதல் உருவாகலாம்.

நன்கு மதிக்கப்படும் பாதுகாப்பு நிபுணர் அஜய் சஹானி கூறியபடி: “இந்திய மண்ணில் எதிர்காலத்தில் ஏற்படும் எந்தவொரு பயங்கரவாதத் தாக்குதலும் போரின் செயலாகவே கருதப்படும் என்றும், ஆபரேசன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகள் தான் ‘புதிய இயல்பு நிலை’ என்றும் அறிவிப்பது, வரையறை இல்லாமல் பயங்கரவாதம் தீவிரமடையவும், அதற்கு எதிர்வினை என்ற முறையில் தீவிரமடையும் ராணுவ பதிலடி என்ற சூழலில் நாட்டை சிக்க வைக்கிறது.” (ஃபிரன்ட்லைன், மே 25, 2025) பின்னர் பாஜகவின் அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு , ஆபரேசன் சிந்தூர் முடியவில்லை – அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று மீண்டும்  மீண்டும் பிரதமர்  வலியுறுத்தினார்.

இங்கே ஒரு பொருத்தமான கேள்வி எழுகிறது: பிரதமர் தனது உரையில் கூறியது போல, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றால் (பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இதே கூற்றை எதிரொலித்துள்ளார்), ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் என்ற நிலைப்பாட்டை ஏன் எடுக்க வேண்டும்? இந்த புதிய கோட்பாடு முடிவில்லாப் போருக்கான அழைப்பாக உள்ளது; மேலும் இந்தியாவின் ராணுவம் சார்ந்த உத்திகளை  (திட்டங்களை) வகுக்கும் கொள்கையை ஒரு இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் தள்ளுகிறது.

மோடி ஆட்சியைப் பொறுத்தவரை, உண்மைக்கு மாறாக வெளித்தோற்றமே மேலும் மேலும் முக்கியமானதாக தோன்றுகிறது. பயங்கரவாத உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பெருமை பேசுவது உள்நாட்டு அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே என்று தோன்றுகிறது. பல பாதுகாப்பு நிபுணர்கள் ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாலகோட் தாக்குதலை விட மிகப் பெரிய ராணுவ பதிலடி கொடுக்கப்படும் என்று அரசாங்கத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் கூறினார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். இலக்கு வைக்கப்பட்ட ஒன்பது இடங்களிலும் பயங்கரவாதிகள், தாங்கள் ராணுவ ரீதியாக தாக்கி அழிக்கப்படும் வரை காத்திருந்தார்கள் என்று கருதுவது நம்பகத்தன்மை இல்லாதது. அதிகபட்சமாக, இந்த நடவடிக்கை பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள இலக்குகளைத் தாக்க இந்திய  அரசு தயங்காது என்ற உறுதியை மட்டுமே வெளிப் படுத்தியது.

அணு ஆயுத உண்மை நிலை

மோடி முன்வைத்துள்ள இரண்டாவது வழிகாட்டுதல் – இந்தியா அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணியாது, எந்த அணு ஆயுத அச்சுறுத்தல் இருந்தாலும்  பயங்கரவாத மையங்கள் மீது ராணுவத் தாக்குதல்களைத் தொடரும் என்பது. இதுவும் பொறுப்பற்ற பேச்சு . அணு ஆயுதம் கொண்ட இரண்டு நாடுகள்  தவிர்க்க முடியாத தீவிரமடையும் என்ற ஆபத்துடன் ராணுவ மோதலில் ஈடுபடும்போது, அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுமோ என்ற அச்சுறுத்தல் குறித்து உலகம் முழுவதும் கவலையடைகிறது.  இந்திய பாதுகாப்பு அமைப்புத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் சிங்கப்பூரில் அளித்த  நேர்காணலில், அணு ஆயுத வரம்புக்குக் கீழே வழக்கமான போருக்கு போதுமான இடம் இருப்பதாகக் கூறினாலும், ஒருமுறை  தொடர்ச்சியான தீவிரமடையும் சுழல் தொடங்கி விட்டால், சில மணிநேரங்களில் விஷயங்கள் கட்டுப் பாட்டை மீறிப் போகலாம் என்ற உண்மை உள்ளது என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.

அணு ஆயுத மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று மோடி பேசுவது, இரு தரப்பினரும் பின்வாங்க வேண்டும் என்று அமெரிக்கா தலையீடு செய்யும் எனக் கருதப்பட்டதால் தான் என்றே தோன்றுகிறது. ஜனாதிபதி டிரம்ப் மிகைப்படுத்தப்பட்ட அறிக்கைகளுக்கு பெயர் பெற்றவர் என்றாலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அமெரிக்கத் தரப்பு மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் அமெரிக்க ஆதாரங்களின் விளக்கங்களை கவனமாக அலசினால், அணு ஆயுதப் பதிலடி அச்சுறுத்தலே விரைவான அமெரிக்கத் தலையீட்டுக்கு வழிவகுத்தது என்பது தெரிகிறது. இது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முழுமையாக ராணுவத் தீர்வையே நம்பியிருக்கும் குறைபாடுள்ள உத்தியின் ஆபத்தை எடுத்துக்காட்டுகிறது.

வெளி தலையீட்டுக்கான  வழியையே திறக்கும்

மோடி முன்வைத்துள்ள மூன்றாவது அம்சம் – பயங்கரவாதத்தை ஆதரிக்கும் அரசுக்கும் பயங்கரவாதத்தின் மூளையாகச் செயல்படுபவர்களையும் இந்தியா வேறுபடுத்திப் பார்க்காது என்பது. இது ராணுவ நடவடிக்கையை (மோதலின் மீதான ) விருப்பத்தின் காரணமாக எடுக்கப்படும் ஒற்றைச் சார்புடைய சிந்னையை மட்டுமே வலுப்படுத்துகிறது. பாகிஸ்தான் அரசு தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத சித்தாந்தங்களால் தூண்டப்பட்ட பயங்கரவாதக் குழுக்களுக்கு  ஆதரவளித்து உதவுகிறது என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும், பாகிஸ்தான் அரசுக்கும் தீவிரவாத-பயங்கரவாதக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை  புரிந்து கொள்ள மறுப்பது  பெரிய தவறு.

பாகிஸ்தான் அரசை “பயங்கரவாதத்தின் மூளையாகச் செயல்படுபவர்கள்” என்று சமன்படுத்துவது பாகிஸ்தான் அரசுடனான எதிர்கால பேச்சுவார்த்தைகளுக்கான கதவுகளை அடைத்துவிடுகிறது. பாகிஸ்தானுடனான பிரச்சனைகள் இருதரப்பு உறவுகளின் மூலமாக கையாளப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு நம்பகத்தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கு எதிராக பலவந்த நடவடிக்கையை முன்வைக்கும் கொள்கை, அந்த நிலைப்பாட்டையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இது ‘வெளிநாடுகளின்  தலையீட்டுக்கான’ வழியை மட்டுமே திறக்கிறது.

காஷ்மீர் மக்கள் முக்கியம்

எல்லை கடந்த பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய அம்சம், பயங்கரவாத வன்முறைக்கு எதிராக ஜம்மு – காஷ்மீர் மக்கள் எவ்வாறு அணிதிரட்டப்படுகிறார்கள் என்பதுதான். பஹல்காம் மூர்க்கத்தனத்துக்கு எதிராக எளிய மக்களிடையே பரவலான எதிர்ப்பும் போராட்டங்களும் நடந்தன. 370 வது பிரிவை ரத்து செய்தது மற்றும் மாநிலத்தை கலைத்தது போன்ற மோடி அரசாங்கத்தின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் அரசாங்கத்திடம் இருந்து  அந்நியப்படுவதும்  அதன் மீது  கோபத்துடன் இருந்தபோதிலும்   இது நடந்தது.  மக்களின் பங்கேற்பும் ஈடுபாடும் இல்லாமல், ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் பணியை முன்னெடுக்க முடியாது. மாநில அந்தஸ்தை மீட்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக இது ஒரு வாய்ப்பை உருவாக்கியது.

ஆனால் ஒன்றிய அரசு அதற்கு நேர் எதிராகச் செயல்பட்டது. பஹல்காம் படுகொலைக்குப் பிறகு மேலும் அடக்குமுறை நடவடிக்கைகளில் இறங்கியது. பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டனர்; பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்டவர்களின் வீடுகள்,  அங்கு வசிக்கும் குடும்பங்கள் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் அழிக்கப்பட்டன. இங்கே மீண்டும்,  மோடியின் “புதிய கோட்பாடு” ஜம்மு-காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு மிகவும் அவசியமான அரசியல் நடவடிக்கைகளைப் பேசாமல், பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் முக்கியக் கருவியாக தற்போதைய அரசின் அடக்குமுறை ஆட்சியை மட்டுமே வலுப்படுத்தும்.

எனவே, ஜம்மு – காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை வெல்வதே இப்போது மிக அவசியமாகத் தேவைப்படும் ஒன்றாகும்.   இதுவே எல்லை கடந்த பயங்கரவாதத்தை எதிர் கொள்வதற்கான சரியான வழியை நமக்குக் காட்டுகிறது. நிலைமைக்கு ஏற்ப அரசியல், இராஜதந்திர, பொருளாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களின் வரம்பையும் சேர்க்கையையும் அரசு கடைப்பிடிக்க வேண்டும். உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். பஹல்காமில் நடந்த கடுமையான பாதுகாப்புக் குறைபாட்டிலிருந்து பாடங்கள் கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படவில்லை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, சில வார நிகழ்வுகளின் பின்னணியில், சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் தனிமைப்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிவிட்டது. பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நிதியான மற்றொரு தவணையைப் பெற்றது மட்டுமல்லாமல், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி நிதிகளையும் பெற்றுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் பயங்கரவாதம் தொடர்பான பல்வேறு குழுக்கள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புக் குழுக்களில் பணியாற்ற பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அப்பட்டமான உண்மை என்னவென்றால், தெற்காசிய அண்டை நாடுகள் எதுவும் இந்தியா நடத்திய ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. நேபாளம் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை கடுமையா கக் கண்டித்தாலும், நான்கு நாள் இந்திய-பாகிஸ்தான் மோதலின் போது நடுநிலைமையைக் கடைப்பிடித்தன. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்த இந்தியாவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கை  இலங்கையின் அதிகாரப்பூர்வ மற்றும் அரசியல் வட்டாரங்களில் அச்சத்தை எழுப்பியுள்ளது. எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் இந்தியாவுடன் ஒப்பந்தங்களில் நுழைவது பயனுள்ளதா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்தநிலையில், புதிய கோட்பாடு, இந்தியாவின் அண்டை நாடுகளிடையே மேலும் அச்சங்களை மட்டுமே உருவாக்கும்.

குறுகிய அரசியல் ஆதாயங்கள்

ஆபரேசன் சிந்தூர், பாஜகவின் கட்சிசார் அரசியல் நோக்கங்களுக்காக எவ்விதம் பயன்படுத்தப்படுகிறது என்பதும், பாதுகாப்புப் படைகளால் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையை பிரதமர் எவ்விதம் இழிவான முறையில் பயன்படுத்துகிறார் என்பதும், பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டம் போர்வெறி தேசியவாதத்தை தூண்டுவதற்கும், மதவாத அணிதிரட்டலுக்கும் மதவாத ஒருங்கிணைப்பு என்ற அரசியல் இலக்கை நிறைவேற்றுவதற்கும் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற சந்தேகத்தை மட்டுமே வலுப்படுத்தியுள்ளது. புதிய கோட்பாடு, உள்நாட்டில் குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெறுவதற்காக  மட்டுமே வடிவ மைக்கப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. ஆனால் அது எப்போதாவது நடைமுறைக்கு வந்தால், அது இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கும் அதன் சர்வதேச நிலைப்பாட்டுக்கும் சுய தீங்கு விளைவிப்பதாக அமையும்.

தமிழில் சேது சிவன் 

இக்கட்டுரை முதலில் தீக்கதிர் நாளிதழில் 21 ஜூன் 2025 அன்று வெளியானது. சில வார்த்தைகள் எடிட் செய்யப்பட்டுள்ளன.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *