Tamil Marx

ஆப்பிரிக்கா சர்வதேசம்

கேப்டன் இப்ராஹிம் தரோரின் புரட்சிகர உரை

கேப்டன் இப்ராஹிம் தரோரின் புரட்சிகர உரை
  • PublishedJune 5, 2025

தோழர்! நாட்டின் தலைவர்களே!

தோழர் ஜனாதிபதி விளாதிமிர் புடின்! அவர்களே, ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களே! தோழர்களே, பிரதிநிதிகள் குழுத் தலைவர்களே! அனைவருக்கு காலை வணக்கம்!

இன்று காலை வேளையில் இங்கு பேசுவது எனக்கு பெருமையாக உள்ளது.  என் நாட்டு மக்களின் சார்பாக சகோதரத்துவ வாழ்த்துகளை உங்களுக்கு தெரிவிப்பதை கௌரவமாக கருதுகிறேன்.

இந்த இடத்தில் முதலாவதாக, சர்வசக்தி வாய்ந்த கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் நம்மை இன்று காலையில் நல்ல உடல்நலத்துடன் இங்கு நம்மை கூட வைத்தார். நம் மக்களின் எதிர்காலத்தையும் நலன்களையும் பற்றி பேச அனுமதித்தார்.

பேசுவது புண்படுத்தினால் மன்னிக்கவும்

நான் பேசப்போகும் கருத்துகள் சிலரை புண்படுத்தலாம், அதற்காக நான் முன் கூட்டியே மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஆனால் ஆப்பிரிக்க கலாச்சாரத்தில் பிறப்பால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது.

ஒரு தலைமுறையின் கேள்விகள்

தோழர்களே, என் தலைமுறையிடமிருந்து சில கேள்விகள் உள்ளன. ஒன்று இரண்டல்ல ஆயிரத்தொரு கேள்விகள். ஆனால் அதற்கு எங்களிடம் பதில் இல்லை.

இங்கே நம் குடும்ப பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியும், ஏனெனில் நாம் குடும்பம் போல் உணர்கிறோம். ரஷ்யாவும் ஆப்பிரிக்காவிற்கு குடும்பம் தான் ஏனென்றால் நமக்கு ஒரே வரலாறு உள்ளது.

ரஷ்யா ஆப்பிரிக்கா-பகிரப்பட்ட வரலாறு

ரஷ்யா இரண்டாம் உலகப் போரின்போது நாசிசத்திடம் இருந்து உலகை காப்பாற்ற மகத்தான தியாகங்களை செய்தது. ஐரோப்பிய நாடுகளை நாசிசத்திலிருந்து காப்பாற்ற ஆப்பிரிக்க மக்களும், நம் முன்னோர்களும், வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாசிசத்தை வீழ்த்தியதில் நாம் பகிரப்பட்ட வரலாற்றைப் கொண்டுள்ளோம். நாங்கள் இவ்உலகில் மறக்கப்பட்ட மக்கள். வரலாற்று புத்தகங்கள், ஆவணப்படங்கள், திரைப்படங்களில் மறக்கப்பட்டவர்கள். நாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவும் ஆப்பிரிக்காவும் ஆற்றிய முக்கிய பாத்திரத்தை குறைத்து மதிப்பிடுகிறார்கள்.

நாம் இங்கு ஒன்றாகக் கூடியிருப்பது, நமது மக்களின் எதிர்காலம் பற்றி, நாளை என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி, நாம் விரும்பும் இந்த சுதந்திர உலகம் பற்றி நமது உள்நாட்டு விவகாரங்களில் எந்த தலையீடும் இல்லாத இந்த உலகம் பற்றி பேசுவதற்காக.

நமக்கு ஒரே நோக்கும் எண்ணமும் உள்ளது. இந்த உச்சி மாநாடு, நமது மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக மிகச் சிறந்த உறவுகளை வளர்க்கும் ஒரு வாய்ப்பாக அமையும் என நான் நம்புகிறேன்.

ஆப்பிரிக்கா ஏன் ஏழ்மையில் உள்ளது?

என் தலைமுறை மக்கள் கேட்கும் கேள்விகள் சுருக்கமாக சொல்கிறேன்

ஆப்பிரிக்காவில் இவ்வளவு செல்வம் இருக்கும்போது, கொடை நிறைந்த இயற்கை, நீர், சூரிய ஒளி ஏராளமாக இருக்கும்போதும் எப்படி ஆப்பிரிக்கா இன்றும் மிக ஏழ்மையான கண்டமாக இருக்கிறது? ஆப்பிரிக்கா வறுமையில் இருக்கும் கண்டம். இவ்வளவு செல்வங்கள் இருந்தும் ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்கள் ஏன் உலகம் முழுவதும் உள்ள நாட்டின் தலைவர்களிடம் சென்று பிச்சை எடுக்கிறார்கள்?

இக்கேள்விகளுக்கு இதுவரை எங்களிடம் பதில் இல்லை.

 புலம்பெயரும் இளைஞர்கள்

இந்த ஏழ்மை காரணமாக, என் தலைமுறை இளைஞர்கள் ஆபத்தான முறையில் கடலைக் கடந்து புலம்பெயர்ந்து ஐரோப்பாவிற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த ஆபத்தான பயணத்தில் அவர்கள் கடலில் மூழ்கி  சாகிறார்கள்.

ஆனால் இனி அவர்கள் கடலைக் கடக்க வேண்டியதில்லை என்ற சூழல் விரைவாக உருவாகும். ஏனெனில் அவர்கள் தங்கள் அன்றாட உணவைத் தேட நம் அரண்மனைகளுக்கு வருவார்கள்.

புர்க்கினா பாசோவின் போராட்டம்

புர்க்கினா பாசோவைப் பொறுத்தவரை, எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக நாம் மிக மோசமான காட்டுமிராண்டித்தனமான, அதிக வன்முறை கொண்ட ஏகாதிபத்திய புதிய காலனித்துவத்தை எதிர்கொண்டு வருகிறோம். அடிமைத்தனம் தொடர்ந்து நம்மீது திணிக்கப்படுகிறது.

நம் முன்னோர்கள் எங்களுக்கு ஒன்றைக் கற்றுக்கொடுத்தார்கள்: தன் சொந்த கிளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத அடிமை இரக்கத்திற்கு தகுதியற்றவன். நாங்கள் எங்களுக்காக வருந்தவில்லை, யாரையும் எங்களுக்காக வருந்த கேட்கவில்லை.

புர்க்கினா பாசோ மக்கள் போராட முடிவு செய்துள்ளனர் . பயங்கரவாதத்திற்கு எதிராகவும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தி மீண்டும் துவங்குவதற்காக போராடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

மக்களின் வீரமிக்க போராட்டம்

இந்தப் போராட்டத்தில், 20 சமூகங்களிலிருந்து வீரமிக்க மக்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஆயுதம் தாங்கி போராட உறுதி அளித்துள்ளனர். மக்களின் இந்த தன்னெழுச்சியான முன்னெடுப்பை தன்னார்வம் என்று அழைக்கிறோம்.

ஆனால் ஏகாதிபத்தியவாதிகள் இந்த VDPகளை கிளர்ச்சி குழுக்கள் (militants ) என்றும் இன்னும் பலவித பெயர்களை வைத்தும் அழைப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். இது ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில் ஐரோப்பாவில், மக்கள் தங்கள் தாய்நாட்டைப் பாதுகாக்க ஆயுதம் எடுக்கும்போது, அவர்கள் தேசபக்தர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.

நம் முன்னோர்கள் ஐரோப்பாவைக் நாசிசத்தில் இருந்து காப்பாற்ற அழைத்து செல்லப்பட்டனர். நம் முன்னோர்களின் சம்மதத்துடன் அல்ல, அவர்களது விருப்பத்திற்கு எதிராக வலுக்ட்டாயமாக அழைத்து செல்லப்பட்டனர். போர் முடிந்து திரும்பி வந்ததும் அவர்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைக் கேட்ட போது தியாரோயில் (செனகலில் உள்ள நகரம்) வைத்து கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் எங்கள் மக்கள் எங்களை பாதுகாக்க முடிவு செய்யும்போது, எங்களை அவர்கள் கிளர்ச்சி குழு என்று அழைக்கிறார்கள்.

ஆப்பிரிக்க தலைவர்களுக்கு எச்சரிக்கை

ஆனால் அது பிரச்சினை அல்ல. பிரச்சினை என்னவென்றால், போராடும் இந்த மக்களுக்கு எந்த பங்களிப்பும் செய்யாத ஆப்பிரிக்க நாடுகளின் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட அரசுத் தலைவர்கள் ஏகாதிபத்தியவாதிகளின் அதே வார்த்தைகளை வால் பிடித்து பாடி எங்களை கிளர்ச்சி குழுக்கள் என்றும், மனித உரிமைகளை மதிக்காத மனிதர்கள் என்றும் கூறுகிறார்கள்.

எந்த மனித உரிமைகளைப் பற்றி பேசுகிறோம்?

இதைக் கேட்கும் போது எங்களுக்கு கோபம் கொப்பளிக்கின்றது. இது வெட்கக்கேடானது. ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் ஏகாதிபத்தியவாதிகள் கயிற்றை இழுத்து ஆட்டுவிக்கும் ஒவ்வொரு முறையும் நடனமாடும் கைப்பாவைகளைப் போல் நடந்துகொள்வதை நிறுத்த வேண்டும்.

ரஷ்யாவின் உணவு தானிய உதவி

நேற்று, ஜனாதிபதி விளாதிமிர் புட்டின் ஆப்பிரிக்காவிற்கு உணவு தானியங்களை அனுப்புவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஆனால் இது நம் ஆப்பிரிக்க அரசுத்தலைவர்களுக்கும் ஒரு செய்தி.

அடுத்த உச்சி மாநாட்டில், போர் என்பது என்னவென்று தெரியாதவர்களுக்காக, நம்முடைய மக்கள் உணவில் சுயேச்சையாக இருக்க வேண்டும். அதை உறுதி செய்யாமல் நாம் இங்கு வர முடியாது.

ஆப்பிரிக்காவில் ஏற்கனவே இதை சாதித்தவர்களின் அனுபவத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நல்ல உறவுகளை கட்டமைக்க வேண்டும், ரஷ்ய கூட்டாட்சியுடன் சிறந்த உறவுகளை கட்டமைத்து நம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

2023 ஜூலை மாதம் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற இரண்டாம் ரஷ்யா-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டில் புர்கினா பாசோ வின் இளம் தலைவர் கேப்டன் இப்ராஹிம் தரோர், 49 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள், 17 நாடுகளின் அரசுத்தலைவர்கள் முன் நிகழ்த்திய புரட்சிகரமான உரை.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *