அரசியல் அழுத்தங்கள் அதிகரிக்கும் நிலையில் போர் நிறுத்தமா ?
இஸ்ரேல் ஹிஸ்புல்லா இருவருக்கும் இடையே 60 நாட்கள் போர் நிறுத்தம் அமலாகி உள்ளது. இது நிரந்தர போர் நிறுத்தமாக இருக்கும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தத்தை இஸ்ரேல்- லெபனான் பொது மக்கள் வரவேற்றுள்ளனர்.எனினும் போர் நிறுத்தம் அமலாக்கத்திற்கு பிறகும் இஸ்ரேல் ராணுவம் லெபனானுக்குள் 6 முறை தாக்குதல் நடத்தியுள்ளது
போர் நிறுத்தத்தை தொடர்ந்து இஸ்ரேல்-லெபனான் எல்லையில் உள்ள ஹிஸ்புல்லா ராணுவத்தை நீக்கி விட்டு அங்கு 5000 க்கும் அதிகமான லெபனான் ராணுவ வீரர்களை நிலை நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு லெபனான் ராணுவ மற்றும் ஹிஸ்புல்லா ராணுவத் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு உட்பட வேண்டும் அது குறித்து எந்த அறிவிப்பும் அமெரிக்காவின் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் போர் நிறுத்தம் அமலான பிறகும் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் ராணுவத்திற்கு இடையே சண்டை நடந்துள்ளது. இந்த சூழ்நிலை இஸ்ரேலை முழுமையாக போரில் இருந்து வெளியேற்றுமா என்ற சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
எனினும் ஹமாஸ் உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு பல மாதங்களாக உடன் படாமல் இருந்து வரும் இஸ்ரேல் ஏன் உடனடியாக ஹிஸ்புல்லா அமைப்புடன் போர் நிறுத்தத்திற்கு வந்தது என்ற சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.
இதற்கு போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதையும் இஸ்ரேலில் நடக்கும் உள்நாட்டு அரசியலையும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டவை
- இஸ்ரேல்-லெபனான் எல்லைப் பகுதிக்கு லெபனான் ராணுவத்தை அனுப்புவது. இஸ்ரேல் ராணுவத்தை திரும்பப் பெறுவது.
கோலன் குன்றுகள் மற்றும் லிட்டானி நதி ஆகியவை அடங்கிய நீலக்கோடு எல்லை என்று அழைக்கப்படும் பகுதியில் ஹிஸ்புல்லா ராணுவம் உள்ளது. இப்பகுதியில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லாவுக்கு போர் நடந்தது. இப்பகுதியில் தான் ஹிஸ்புல்லாவை வெளியேற்றி விட்டு லெபனான் ராணுவத்தை நிலை நிறுத்த கூறியுள்ளது அமெரிக்கா.
- லெபனானில் உள்ள ஐநா பாதுகாப்பு படைகள் மூலம் போர் நிறுத்தத்தை சர்வதேச கண்காணிப்புக்கு உட்படுத்துவது.
- லெபனானின் ராணுவத்திற்கான ஆயுதங்கள் மற்றும் பொருளாதாரத்திற்கு அமெரிக்காவும் பிரான்சும் உதவி செய்வது.
- லெபனானின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு தருவது.
- போர் காரணமாக தெற்கு லெபனானில் இருந்து வெளியேற்றப்பட்ட 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மற்றும் இஸ்ரேல் எல்லையில் இருந்து வெளியேறிய 60 ஆயிரம் இஸ்ரேல் மக்களை மீண்டும் தாங்கள் வசித்த பகுதிக்கே பாதுகாப்பாக திரும்புவதற்கு வசதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஏன் போர் நிறுத்தத்தை ஏற்றது ?
- இஸ்ரேலின் ராணுவம் ஹிஸ்புல்லாவுடனான தரை வழித்தாக்குதலில் ஆரம்பம் முதலே அதிக இழப்புகளை சந்தித்து வந்தது.
- லெபனானின் வடக்கு எல்லையில் சில பகுதிகளை கைப்பற்றி ஹிஸ்புல்லாவின் ஏவுகணை தளங்களை அழிக்கப்போவதாக இஸ்ரேல் தரைவழித்தாக்குதலை துவங்கியது. ஆனால் அவர்களால் லெபனான் பகுதிகளை கைப்பற்ற முடியவில்லை. அதே போல ஹிஸ்புல்லாவின் தளங்களை முற்றிலுமாக அளிக்க முடியவில்லை. இது இஸ்ரேலின் தோல்வியாகவே பார்க்கப்பட்டது.
- வான்வழித் தாக்குதலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினாலும் இஸ்ரேல் ராணுவத்தால் ஹிஸ்புல்லா அமைப்புடன் தாரைவழித் தாக்குதலில் வெற்றி பெற முடியவில்லை என முதலாளித்துவ ஊடகங்களே பதிவு செய்கின்றன. தரைவழித் தாக்குதலில் இஸ்ரேலின் ராணுவ வீரர்கள் தொடர்ச்சியாக கொல்லப்பட்டதுடன், ராணுவ டாங்கிகள் பலத்த சேதத்தை சந்தித்தன. இது அதிக பொருளாதார இழப்புகளை இஸ்ரேலுக்கு கொடுத்தது.
- மத்திய கிழக்கில் சவூதி உடன் இணக்கமாகி வந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. மேலும் இராக் துருக்கி உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேல் உடனான உறவுகளை மறு பரிசீலனை செய்யத் துவங்கின. இவ்வாறான சர்வதேச தனிமைப்படுத்தல்.
- நேதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் கேலன்ட் ஆகியோர் மீது உறுதி செய்யப்பட்ட போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதி மன்றம் பிறப்பித்த கைது உத்தரவு. ஐரோப்பி ஒன்றியம் உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் கைது செய்வோம் என கருத்து தெரிவித்தது இஸ்ரேல் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதை காட்டியது.
- 2023 போர் துவங்கிய போது 50 நாட்களில் ஹமாஸ் அமைப்பை அழித்து விடுவேன். இஸ்ரேல் பணையக்கைதிகளை முழுமையாக மீட்பேன் என்ற வாக்குறுதிகளை நேதன்யாகு நிறைவேற்றவில்லை.
- பணையக்கைதிகளை விடுவிக்க முயற்சிக்காமல் நேதன்யாகு இனப்படுக்கொலையை மட்டுமே பிரதான நோக்கமாக கொண்டு போர் நடத்துகிறார் என்று இஸ்ரேலில் மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தி.
- பணையக்கைதிகளின் குடும்பங்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் உள்நாட்டு அரசியலில் அழுத்தங்களை உருவாகியது.
- இஸ்ரேலின் எதிர் கட்சித்தலைவர் தலைவர் பென்னி காண்ட்ஸ் மற்றும் இடாமர் பென்-க்விர், நஃப்தலி பென்னட் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் நேதன்யாகுவின் போர் திருப்தி தரவில்லை எனவும் நிலைமையைக் கையாண்ட விதம் செயல்பாடுகள் மோசமானவை எனவும் தொடர் விமர்சனங்கள் செய்து நேதன்யாகுவிற்கு எதிராக அரசியல் அழுத்தத்தை உருவாக்கி வந்தனர். (மேற்கூறப்பட்ட இரு அரசியல் தலைவர்களும் நேதன்யாகுவை விட மிக மிக தீவிரமான யூதஇனவாத அரசியல் தலைவர்கள் ஆவர். போரின் தீவிரத்தை அதுக்படுத்த வேண்டும் ஆனால் நேதன்யாகு மறுக்கிறார் என்பதே இவர்களின் விமர்சனங்கள்.)
- போர் நிறுத்த அறிவிப்புக்கு 4 நாட்களுக்கு முன் “சேனல் 12” வெளியிட்ட ஆய்வில் 64 சதவீத இஸ்ரேல் மக்கள் நேதன்யாகுவின் ஆட்சி மீது நம்பிக்கை இன்றி உள்ளனர் என்ற உண்மை வெளிவந்தது.
- லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தி இஸ்ரேல் அமைதியை நோக்கி செல்ல வேண்டும் என்று 54 சதவீத இஸ்ரேல் மக்கள் தெரிவித்துள்ளனர்.
- மேலும் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் உடன் நேதன்யாகுவை ஒப்பிடுகையில் 29 சதவீத மக்கள் நேதன்யாகு பிரதமராக இருக்க தகுதியற்றவர் என கருத்து தெரிவித்துள்ளனர்.
- முன்னாள் பிரதமர் நஃப்தலி பென்னட்டுடன் ஒப்பிடுகையில் 34 சதவீத இஸ்ரேல் நேதன்யாகு பிரதமராக இருக்க தகுதியற்றவர் என தெரிவித்துள்ளனர்.
பொருளாதார பாதிப்பு:
- இஸ்ரேலில் பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது.
- பெரிய தரமதிப்பீட்டு நிறுவனங்கள் இஸ்ரேலின் கடன் மதிப்பீட்டைக் குறைத்துள்ளன.
- காசா மட்டுமின்றி, லெபனான், சிரியா, ஏமனின் ஹவுதி என இஸ்ரேல் அதிகரித்து வந்த பரந்த அளவிலான போர்கள் அந்நாட்டின் பொருளாதார உறுதித்தன்மை மற்றும் நீண்ட காலக் கண்ணோட்டம் பற்றிய கவலைகளை எழுப்பியது. இதன் காரணமாக இஸ்ரேலின் கடன் மதிப்பீடு முக்கிய மதிப்பீட்டு நிறுவனங்களால் குறைக்கப்பட்டது.
- குறிப்பாக, 2024 இல் மட்டும் மூடிஸ் நிறுவனம் இஸ்ரேலின் கடன் மதிப்பீட்டை இரண்டு முறை குறைத்துள்ளது. எஸ்&பி என்ற (S&P) குளோபல் ரேட்டிங்ஸ் நிறுவனமும் போர்களை காரணம் காட்டி இஸ்ரேலின் கடன் மதிப்பீட்டை குறைத்துள்ளது.
- லெபனானுக்கு $8.5 பில்லியனுக்கும் அதிகமாக பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் இத்தகைய அரசியல் அழுத்தங்கள் மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார சிக்கல்கள் தான் நேதன்யாகுவை போர் நிறுத்த முடிவை ஏற்கும் இடத்திற்கு தள்ளி இருக்கலாம் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கருத்துக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுரையாளர் : சேது சிவன்