Tamil Marx

இந்திய பொருளாதாரம் சர்வதேச பொருளாதாரம்

சமகால முதலாளித்துவத்தின் உண்மை முகம் – டி.கே.ரங்கராஜன் M.P.

சமகால முதலாளித்துவத்தின் உண்மை முகம் – டி.கே.ரங்கராஜன் M.P.
  • PublishedOctober 15, 2024

இன்று உலகம் முழுவதும் நடைபெறும் தொழிலாளர்களின் போராட்டங்களையும், அத்தகைய போராட்டங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளின் நியாயங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமானால் 21ஆம் நூற்றாண்டின் மூலதனத்தின் போக்கையும், பெருமளவில் மாறியுள்ள அதன் செயல்பாட்டையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. சமூக முரண்பாடுகளில் மூலதனத்திற்கும், உழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு நாளுக்கு நாள் மிகவும் கூர்மையடைந்து வருகிறது.

அதிகரிக்கும் சுரண்டலும் முற்றும் நெருக்கடியும்

நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு பொருளாதார அறிஞர் தாமஸ் பிக்கட்டி எழுதிய 21ஆம் நூற்றாண்டில் மூலதனம் எனும் புத்தகத்தில் இப்பிரச்சனையை முன்னிறுத்துகிறார். ‘Profit Maximisation’ அதாவது லாபக்குவிப்பு, மேலும் மேலும் லாபக்குவிப்பு என்பதே சமகால மூலதனத்தின் உள்ளார்ந்த தன்மையாக மாறியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கமென்பது புதிய வடிவத்திலான சுரண்டலுக்கான வாய்ப்பை எவ்வாறு உருவாக்குகிறது என என்பதை அவர் அந்நூலில் விவரிக்கிறார் அவர். முதலாளித்துவ பொருளாதார அறிஞரான தாமஸ் பிக்கட்டி போன்றவர்களே கூட சமகால முதலாளித்துவத்தின் தன்மையை விமர்சிப்பதை நாம் கவனிக்க வேண்டும்.

2017 ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு நிறை வேற்றியுள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பின்வரும் அம்சம் மிக முக்கியமானதாகும். “சர்வதேச அளவில், உலக முதலாளித்துவம் சந்தித்து வரும் நெருக்கடியானது. நவீன தாராளமயம் தோல்வியடைந்துள்ளதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. நவதாராளவாதம் என்பது தீவிர முதலாளித்துவ சுரண்டலை நியாயப்படுத்தும் சொற்பொழிவேயன்றி வேறல்ல”. மேலும் அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. “உலகளாவிய முதலாளித்துவம் தனது லாபக்குவிப்பை பாதுகாத்துக் கொள்வ தற்காக, மனிதர்கள் மற்றும் இயற்கையின் மீதான இரக்கமற்ற சுரண்டலை பிரயோகிப்பதோடு, மிருகத்தனமான ஆரம்ப மூல தனக்குவிப்பு போன்ற செயல்முறையையும் தீவிரப்படுத்துகிறது.”

தொழிலாளர் நலன் புறக்கணிப்பு

அண்மையில் உலக வங்கி B–Ready (Business Ready) எனும் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறது.

1. ஒழுங்காற்று கட்டமைப்பு,

2. பொதுச் சேவைகள்

3. செயல்பாட்டுத் திறன்  ஆகிய மூன்று அளவீடுகளை கொண்டு நிறுவனங்களையும் அதன் செயல்பாடுகளையும் மதிப்பிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டு அறிக்கையில் ”பின்பற்ற வேண்டிய தொழிலாளர்கள் தரநிலை” குறித்து எந்தவொரு அம்சமும் இல்லை. மூலதனத்தின் விருப்பங்களையும் தேவைகளையும் உள்ளடக்கமாக கொண்டு வெளியிடப்பட்டிருக்கும் உலக வங்கியின் அந்த அறிக்கையில் தொழிலாளர்களின் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ஐடியுசி (ITUC) எனும் சர்வதேச தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பு கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது.

ஐடியுசி பொதுசெயலாளரின் அறிக்கையில், “தொழிலாளர் சந்தை நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கான ஜனநாயகப்பூர்வமான ஆலோசனை நடைபெறுவதையோ, அது குறித்த சமூக உரையாடல் நிகழ்வதையோ இன்றைய மூலதனம் விரும்பவில்லை’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. சமகால முதலாளித்துவத்தின் செயல்பாடுகளால் உழைப்புச் சுரண்டல் எவ்வாறு அதிகரித்துக் கொண்டே செல்கிறது என்பதையும் அதனால் உலகில் முற்றுகிற நெருக்கடிகளையும் மேற்குறிப்பிட்டுள்ள அம்சங்கள் மூலமாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

உழைப்பில்லாமல் வெறும் மூலதனத்தால் என்ன பயன்

அந்நினய மூலதனம் எல்லா நாடுகளுக்கும் தங்கு தடையில்லாமல் வரும் சூழலை நவதாராளவாதக் கொள்கைகள் உருவாக்கியுள்ளன. மூலதனத்திற்கான சலுகைகளையும், பாதுகாப்பையும் அளிக்கும் அரசுகள் தொழிலாளர்கள் நலன் குறித்தோ, சட்ட நடைமுறைகளை பின்பற்றுவது குறித்தோ பெரும்பாலும் கவலை கொள்வதில்லை. எல்லைகளை கடந்து மூலதனம் ஆறாகப் பாய்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் தான் வேலையின்மை என்பதும் பெருமளவு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வெளிநாட்டு மூலதனத்தை ஈர்க்கும் போட்டியினால் அரசுகள் பன்னாட்டு நிறுவனங்களோடு பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

ஆனால் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உள்ளடக்கம் குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கப்படுவதில்லை. தமிழக அரசின் முயற்சியால் 46 முதலீடுகளும், அதனால் 1,39,725 புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகியிருக்கிறது என அண்மையில் தமிழக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கக் கூடியதாகும். ஆனால் அதே சமயத்தில் தொழிலாளர்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் தமிழக அரசு உறுதியோடு நிற்க வேண்டுமென்பதே அனைவரது கோரிக்கையாகும். அதில் சமரசத்திற்கு அரசு இடம் தரக்கூடாது.

குறிப்பாக, 1948 இல் நிறைவேற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டம் என்பது வேலை நேரம், பணியிடச்சூழல் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பல வழிகாட்டுதல்களை உள்ளடக்கமாகக் கொண்டிருக்கிறது. அச்சட்டத்தின் வழி காட்டுதல்களையும், நடைமுறைகளையும் பல பன்னாட்டு நிறுவனங்கள் அப்பட்டமாக மீறுகின்றன. அவ்வப்போது ஆலைகளை கண்காணித்து சட்டப்படியான நடைமுறை களை உத்தரவாதம் செய்ய வேண்டிய தொழிற்சாலை ஆய்வாளர் (Factory Inspector) கண்காணிப்பிற்கே செல்லாத நிலைமைகளையும் கூட காணமுடிகிறது. மேற்குறிப்பிட்டுள்ள சட்டத்தின்படி இருந்த எட்டுமணி நேர வேலை என்பது பனிரெண்டு மணி நேர வேலையாக பல மாநிலங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதையும் நாம் கணக்கில் கொள்ளவேண்டும். 1926 இல் நிறைவேற்றப்பட்டுள்ள தொழிற்சங்க சட்டம், தொழிலாளர்களுக்கு சங்கம் அமைத்துக் கொள்வதற்கான உரிமையையும், அரசியல் சாசனத்தின் பிரிவு 19 (1) (C) தொழிலாளர்களுக்கான கூட்டு பேர உரிமையையும் அளிக்கிறது. ஆனால் சட்டத்தாலும், அரசியல் சாசனத்தாலும் பாதுகாக்கப்பட்டுள்ள உரிமைகளையும் கூட பன்னாட்டு நிறுவனங்கள் மதிப்பதில்லை. நிறுவனங்களின் இத்தகைய சட்ட மீறல்கள் அனுமதிக்கப்படக் கூடாது. மூலதனத்தின் நலன்களை பாதுகாக்கும் அரசுகள் உழைப்பின் மகத்துவத்தை முற்றாக புறக்கணிக்கலாமா..? உழைப்பில்லாமல் வெறும் மூல தனத்தால் மட்டும் எந்த பலனும் இல்லை எனும் உண்மையை அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.

‘சாம்சங்’ நிறுவனம் ஒரு ‘சாம்பிள்’ மட்டுமே

தமிழ்நாட்டில் உள்ள சாம்சங் ஆலையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தொழிலாளர்களின் போராட்டம் நீடிக்கிறது. No Union Policy எனும் அராஜகமான கொள்கையோடு இயங்கும் சாம்சங் ஆலை யில் உழைப்புச் சுரண்டல் என்பது மிக மோசமாக உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் 88 நாடுகளில் சாம்சங் நிறுவனத்தின் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. பல்வேறு நாடுகளிலும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. சென்ற ஆண்டு தென்கொரியாவில் எழுச்சியான போராட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்கென்று ஒரு சங்கத்தை அமைத்துக் கொண்டதோடு, கோரிக்கைகளிலும் வெற்றி பெற்றார்கள்.

சாம்சங் உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை மேலும் மேலும் அதிகரித்துக் கொள்வதற்காக தொழிலாளர்களின் ஊதியத்தையும் சலுகைகளையும் பெருமளவு வெட்டுகிறார்கள். தென் கிழக்கும் ஆசிய நாடுகளிலும், ஆஸ்திரேலியாவிலும் சாம்சங் நிறுவனம் தனது லாபத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக பெருமளவு ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. தமிழக ஆலையிலும் தனது லாபத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், சுரண்டலை தீவிரப்படுத்துவதற்காகவும் தான் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க மறுக்கிறது. தொழிற்சங்கத்தின் பெயரில் சாம்சங் எனும் பெயர் வரக்கூடாது என்று சொல்வதெல்லாம் ஒரு சொத்தையான வாதமே ஆகும்.

மூலதனத்தின் குரூரம்

இதே சாம்சங் நிறுவனம் அண்மையில் ஒரு அறிவிப்பின் வாயிலாக பகிரங்கமான மன்னிப்பை கோரியிருக்கிறது. ஏன் தெரியுமா..? 2024 ஆம் ஆண்டில் முதல் காலாண்டில் ரூ.62,000 கோடி லாபம் வரும் என எதிர்பார்த்த நிலையில், ரூ. 57,000/- கோடி மட்டுமே லாபம் கிடைத்திருக்கிறது என முதலீட்டாளர்களிடம் மன்னிப்பைக் கோரியுள்ளதோடு, தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனவும் கேட்டிருக்கிறது. லாபம் குறைகிறதே என்று முதலீட்டாளர்களின் காலில் விழக்கூட தயாராக இருக்கும் சாம்சங் நிறுவனம் தொழிலாளர்களோடு பேசக்கூட மறுக்கிறது. இதுதான் மூலதனத்தின் குரூரத் தன்மையாகும்.

சமூகநீதியை மறுக்கும் அந்நிய முதலீடுகள்

பொதுவாக இத்தகைய போராட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் போராட்டங்களை வலுவிழக்கச் செய்யும் வாதங்களை முன் வைப்பது வாடிக்கையானதே. முதலீடு வெளியேறி விடும் என்பதும் கூட அத்தகைய வாதங்களில் ஒன்று தான். அரசு தரும் ஏராளமான சலுகைகளையும், பிற நாடுகளோடு ஒப்பிடும்போது இங்குள்ள “திறன் மிக்க” தொழிலாளர்களால் கிடைக்கும் மிக மலிவான உழைப்பையும் நாடியே முதலீடுகள் வருகின்றன. ஆகவே போராட்டங்களின் காரணத்தால் முதலீடுகளோ, நிறுவனங்களோ வெளியேறும் என்பதில் உண்மையில்லை.

வேண்டுமானால் வரி ஏய்ப்பு மற்றும் சந்தையில் உருவாகும் நெருக்கடி, புதிய தொழில்நுட்பத்துடன் போட்டியிட முடியாத நிலை ஆகிய காரணங்களாலேயே அவர்கள் வெளியேறுகிறார்கள். ஃபோர்டு, ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், பின்னி, வோடஃ போன் ஆகிய நிறுவனங்கள் வெளியே றியதும் கூட இத்தகைய காரணங்களால் தானே தவிர போராட்டங்களால் இல்லை எனும் உண்மையை நாம் மறந்து விடக்கூடாது. நம் நாட்டிலுள்ள இயற்கை வளங்கள் மற்றும் மனித வளத்தைப் பயன்படுத்தி பெருமளவு லாபத்தை கொண்டு செல்லும் பன்னாட்டு நிறுவனங்கள் நமது சட்டங்களை மீறுவதோடு, போராடிப் பெற்ற சமூகநீதிக் கொள்கைகளையும் குழிதோண்டி புதைக்க முயல்கின்றன. எனவே பன்னாட்டு நிறுவனங்களில் நடைபெறும் போராட்டங்கள் என்பதும், ஏதோ தொழிலாளர்களின் உரிமைகளுக்கானது மட்டுமன்று நமது தேசத்தின் மாண்புகளையும் பாதுகாக்கும் போராட்டங்கள் ஆகும் எனும் புரிதலோடு அப்போராட்டங்களை ஆதரிப்போம், ஆதரவு இயக்கங்களில் பங்கேற்போம்.

 

டி .கே ரங்கராஜன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர், சிபிஎம்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *