Tamil Marx

தமிழ் நாடு

சமூக நீதி என்ற கோஷத்திற்கு பின்னால் அழிக்கப்படும் சென்னை மக்களின் வாழ்க்கை

சமூக நீதி என்ற கோஷத்திற்கு பின்னால் அழிக்கப்படும் சென்னை மக்களின் வாழ்க்கை
  • PublishedAugust 22, 2024

திமுக அரசு சமூக நீதி என்ற கோசத்தை முன்வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களை காப்பற்றுவதாக கூறிக்கொண்டே அவர்களது வாழ்வாதாரத்தை அழித்து வருகிறது.

குறிப்பாக நகரமயமாதல் பெயரில் சென்னை மாநகராட்சி முழுவதை தனியார் மயப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது.இதற்காக சென்னை பூர்வ குடி தொழிலாளர் வர்க்கத்தை அவர்கள் வாழும் இடத்தை விட்டுத் துரத்தி வருவதுடன், தற்போது மாநகராட்சி பள்ளிகளை மூடத் துவங்கியுள்ளது.மாநகராட்சி பள்ளிகளை திமுக அரசு மூடுவது தொடர்பாக  சேகரித்த தகவல்கள்.

சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 200 துவக்கப் பள்ளி ,139 நடுநிலைப் பள்ளி , 35 மேல் நிலைப் பள்ளி , 46 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 420 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி பள்ளிகளை மூடும் நடவடிக்கையில் மாநகராட்சி கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது.

முதல் கட்டமாக பெரம்பூர் ரங்கசாயி தெருவில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை அப்பாசாமி லேனில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி, அயனாவரம் வசந்தா கார்டனில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி, பெரம்பூர் ஸ்கூல் சாலையில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி, முகப்பேர் மேற்கு செக்டார் 5, இல் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி, அண்ணாநகர் மேற்கில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி, முகப்பேர் மேற்கு செக்டார் 7 இல் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளி ஆகிய 7 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாய நிர்வாக மாறுதல் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மே மாதம் உதவிக் கல்வி அலுவலர்களை வைத்து கூட்டம் நடத்தி, வரும் கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர். அந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த கூட்டத்திற்கு செல்லாத பெற்றோர்கள் ஜூன் மாதம் பள்ளி தொடங்கியதும் குழந்தைகளை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பினர். தினசரி பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பிய பெற்றோர்கள் அங்கு ஆசிரியர் இல்லாமல் எந்த கற்றல் கற்பித்தல் பணியும் நடைபெறாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அயனாவரம் வசந்தா கார்டன் நடுநிலைப் பள்ளியில் மட்டும் மாறுதல் சான்றிதழ் வழங்க ஓரு ஆசிரியர் மட்டும் இருக்கிறார்.

தரமணியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் 900 மாணவர்கள் பயில்கின்றனர். திடீரென நிர்வாகக் காரணம் எனக் கூறி தலைமை யாசிரியரை இடமாற்றம் செய்துள்ளனர். திருவல்லிக்கேணி பங்காரு தெருவில் உள்ள நடுநிலைப் பள்ளியில் 50 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு ஒரு தலைமையாசிரியர், ஒரு ஆசிரியர் பணி புரிகின்றனர். அண்மையில் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தபோது அதற்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குறைவாக வழங்கப்படும் காலை உணவு

மணலியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் 430 மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு காலை உணவு குறைத்து வழங்கப்படுவதாக ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அந்த ஆசிரியரை எர்ணாவூர் தாழங்குப்பத்தில் உள்ள பள்ளிக்கு இடமாற்றம் செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த ஆசிரியருக்கு ஊதியத்தை நிறுத்தி வைத்து காலதாமதமாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ஒரு ஆசிரியர் கல்வியாண்டு தொடங்கிய பின் ஓய்வு பெறும் வயதை எட்டினால், அவருக்கு அந்த கல்வியாண்டு முடியும் வரை பணி நீட்டிப்பு செய்யப்படும் என அரசாணை உள்ளது. ஆனால் சமீபகாலமாக பணி நீட்டிப்பு மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அருகாமைப் பள்ளி அவசியம் என கல்வியாளர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இருக்கும் பள்ளிகளை மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி மூடுவது  மாணவர்களின் கற்றல் திறனை பாதிக்கும். சாதாரண ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் மாநகராட்சி பள்ளியை நம்பி உள்ளனர். மேலும் மாணவர்களுக்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் சத்தமில்லாமல் பள்ளிகள் மூடுவதற்கு, திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது என்பது தான் அர்த்தம் .

2011 முதல் 2016 வரை சைதை துரைசாமி மேயராக இருந்த போது இதே போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கம்யூனிஸ்ட்கள் மற்றும் SFI உள்ளிட்ட இடதுசாரி மாணவர் அமைப்புகள் மாநகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து மாநகராட்சி பள்ளிகள் மூடும் நடவடிக்கையை கைவிட்டனர்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *