உயிரைக்குடிக்கும் விலைவாசி உயர்வு
உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், தற்போது அது கடந்த 6 மாதங்களில் இல்லாத உயர்வைத் தொட்டுள்ளது. 8.7 சதவிகிதமாக இருந்த உணவுப் பொருள் பணவீக்க விகிதம், இப்போது 9.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இது கடந்த ஆறு மாதங்களில் மிக அதிகம் என்றும் செய்திகள் கூறுகின்றன.
காய்கறிகளின் விலைகள் 29.3 சதவிகிதமும், பயறு வகைகளின் விலைகள் 16.1 சதவிகித மும், உணவு தானியங்களின் விலைகள் 8.8 சதவிகிதமும் உயர்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக துவரம் பருப்பு 24 சதவிகிதம், உருளைக் கிழங்கு 56 சதவிகிதம், வெங்காயம் 67 சதவிகிதம் என விலை உயர்ந்துள்ளன.
காலநிலை மாற்றம்
ஜூன் மாத மழைப்பொழிவு 50 ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில் 11 சதவிகிதம் குறைவு. ஜூலை 15 வரை 2 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. பருவம் தவறிப் பெய்த மழை, சமமற்ற பொழிவு ஆகியவையும் விளைச்சலை பாதிக்கின்றன.
மேலும் ஜூலை மாதம் 31 சதவிகித இடங்களில் குறைவாகவும், 14 சதவிகித இடங்களில் அதிகமாகவும் மழை பொழிந்திருக்கிறது. இவையும் விளைச்சலைப் பாதித்துள்ளது.
பெருமளவில் குறைந்த பயிரிடுதல்
கரீஃப் பருவத்தில் விதைக்கப்பட்டிருக்க வேண்டிய 11 கோடி ஹெக்டேருக்கு பதிலாக, இதுவரை வெறும் 5.8 கோடி ஹெக்டேர் நிலங்களில்தான் விதைப்பு நடந்துள்ளதாக வேளாண் அமைச்சகத்தின் தரவுகள் கூறுகின்றன. மழைக் குறைவு, வெப்பக் காற்று வீச்சு போன்றவை விளைச்சலில் ஏற்படுத்திய சரிவு விலைவாசியை மேலும் உயரச் செய்யும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
உணவுப் பண வீக்கம்
2019-2022 காலகட்டத்தில் உள்நாட்டு உணவு தானிய உற்பத்தி 30-இலிருந்து 31 கோடி டன்கள் வரை என்ற தேவைக்கு அதிகமான அளவிலேயே இருந்தது., 2022-23இல் இது 33 கோடி டன்கள் என்று உயர்ந்தபோதும், உணவுப்பொருள் பணவீக்கம் என்பது அதிகமாகவே இருந்துள்ளது.
ஜூலை 2023-இன் உணவுப்பொருள் பணவீக்கம் 11.51 சதவீதமாக இருந்தது.
மோடி 2014-இல் ஆட்சிக்கு வந்தபோது கூறியதென்ன?
மோடி ஆட்சிக்கு வந்த அடுத்த மாதத்திலேயே காய்கறிகளில் விலைகள் 1.3 சதவிகிதம் குறைந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான கணக்கீட்டில் தக்காளியின் விலை குறைவாக எடுத்துக்கொள்ளப்பட்டிருப்பதாக ‘மிண்ட்’ இதழ் அப்போதே சுட்டிக்காட்டி, உண்மையில் காய்கறிகளின் விலைகள் 16.88 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று அம்பலப்படுத்தியது.
ஆனாலும், விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருப்பதாகக் காட்டிக்கொள்கிற வேலையையே இப்போது வரை மோடி அரசு செய்து வருகிறது. பணவீக்கத்தை 4-இல் இருந்து 6 சதவிகிதத்திற்குள் இருக்குமாறு நிதிக் கொள்கைளைப் பராமரிப்பது ரிசர்வ் வங்கியின் வேலை என்று 2016 மார்ச்சில் சட்டத்திருத்தமே கொண்டு வந்து, அதனை ரிசர்வ் வங்கியின் பணியாக்கியது.
மக்களுக்கு உணவு கிடைப்பது பற்றி கவலைப்பட்டதில்லை!
மக்களுக்கு உணவு கிடைப்பதையோ, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதையோ பற்றிக் கவலைப்படாமல், பணவீக்கத்தைக் குறைவாக வைத்திருப்பதாகக் காட்டிக்கொள்வது மட்டுமே மோடி அரசின் நோக்கமாக இருந்தது.
ஆனாலும் கூட, எரிபொருட்களின் மீது விதிக்கப்பட்ட மிக அதிக வரிகள் தொடங்கி, பல்வேறு தவறான நடவடிக்கைகள் விலைவாசியை உயரச் செய்து, அதன் பலன்கள் விவசாயிகளுக்கும் கிடைக்காமல் அவர்களும் சிரமப்படும் நிலையையே உருவாக்கியது. பணவீக்கம் உயராமல் இந்திய அரசு பராமரிப்பதற்கு இந்தியாவின் விவசாயிகள் இழப்பைச் சந்திக்கின்றனர் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி குற்றம் சாட்டுகிறார்.
ஒருபுறம் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதாக மோடி அரசு காட்டிக்கொள்ள எடுக்கிற முயற்சிகளை மீறி பணவீக்க உயர்வு வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், மறுபுறம் விலைவாசி உயர்வு இந்திய மக்களின் ஏழ்மையை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
ஓராண்டில் கிலோவுக்கு ரூ. 65 உயர்ந்த துவரம் பருப்பு
அது எப்படி என்று புரிவதற்கு, 9.4 சத விகிதம் என்று சொல்லப்படுகிற விலை வாசி உயர்வின் உண்மையான பொருளை உணர வேண்டும்.
உதாரணமாக ஜூலை 2022-இல் ரூ. 103 ஆக இருந்த துவரம் பருப்பின் விலை இப்போது ரூ. 168 ஆக இருக்கிறது என்றால், அன்றைக்கு கூலியில் எத்தனை சதவிகிதம் உணவிற்குச் செலவானதோ, அதைவிட அதிகமான சதவிகிதம் இன்று செலவாகிறது என்று பொருள்.
ஒன்று உணவிற்குப் போக மீதியுள்ள தொகையில்தான் பிற செலவுகள் செய்ய வேண்டும் என்பதால், பிற செலவுகள் குறைத்துக்கொள்ளப் படுவதுடன், அது நாட்டின் பொருளா தார வளர்ச்சியையும் பாதிக்கிறது. பிற செலவுகள் என்பதில் கல்வி, மருத்துவம் போன்றவையும் அடக்கம் என்பதால், அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் குறைக்கிறது. அடுத்து, போதிய ஊட்டச் சத்துள்ள உணவு களை வாங்குவதையும் குறைத்துக் கொள்ள நேர்கிறது.
விலைவாசி உயர்வு ஆனால் சம்பளம் உயரவில்லை
உலக வங்கியின் தரவுகளின்படி இந்திய மக்களில் 60 சதவிகிதம் பேர் ஒரு நாளைக்கு ரூ. 250-க்குள்ளும், 21 சத விகிதம் பேர் ரூ. 166-க்குள்ளும் வாழ்க்கை நடத்துகின்றனர் எனும் போது, இந்த விலைவாசி உயர்வு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படு த்தும் என்பது அச்சத்துக்குரியதாக இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 200-க்கு வாங்கிய அதே பொருட்களை இன்று வாங்குவதற்கு ரூ. 500 செலவாகிறது, ஆனால், கூலி மட்டும் உயரவில்லை என்று ஒரு நிலமற்ற விவசாயி சொன்னதை ஆர்ட்டிக்கிள்-14 தளம் சுட்டிக்காட்டுகிறது. மோடி ஆட்சி யின் இந்த 10 ஆண்டுகளில், விவ சாயத் தொழிலாளர்களின் பணவீக்கத் துக்குப் பிந்தைய உண்மையான கூலி ஆண்டுக்கு 1.3 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
அதாவது விலைவாசி உயர்வை விட கூலி உயர்வு அதிகமாக இருந்தால் தான் அதே வாழ்க்கைத் தரத்தை தொடர முடியும், இல்லையென்றால், செலவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். பிற தொழிலா ளர்களின் உண்மையான கூலியும் இந்தப் பத்தாண்டுகளில் உயரவே இல்லை. ஆனால், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில், சராசரியாக ஆண்டுக்கு 6.8 சதவிகிதம் என்ற அளவில் உண்மையான கூலி வளர்ச்சியடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, திட்டமிடல் இன்று அறிவிக்கப்பட்ட லாக் டவுன் என்று மோடி அரசின் பல நடவடிக்கைகளும் தொழில்களைப் பாதித்து வேலையின்மையை அதி கரித்தது ஒருபுறம் வருவாய்க் குறை வுக்கும் வழிவகுத்தன. மறுபுறம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் (100 நாள் வேலை) உட்பட ஐமுகூ அர சின் முக்கியத் திட்டங்கள் அனைத்திற்கும் ஒதுக்கீட்டைக் குறைத்தது போன்ற நடவடிக்கைகள் மக்களை மேலும் பாதித்தன. இவற்றால் தான், பணவீக்கம் – விலைவாசி உயர்வு என்பது மேலும் மறைக்க முடியாதபடி வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.
74.1 சதவிகித இந்தியர்க்கு சத்தான உணவு இல்லை
உலக சுகாதார அமைப்பு, யுனி செஃப் உட்பட 5 முக்கிய அமைப்புகள் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை, இந்திய மக்களில் 74.1 சதவிகிதம் பேர் சத்துள்ள உணவுப் பொருட்களை வாங்க முடியாதவர் களாக இருக்கிறார்கள் என்று கூறு கிறது. இது உலகச் சராசரியான 42.1 சதவிகிதத்தை விட மிக அதிகம் என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. அப்படியான நிலையில், இந்த விலைவாசி உயர்வு என்பது அதனை மேலும் தீவிரப்படுத்தும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. புள்ளி விபரங்களைச் சொல்லி, எல்லாம் கட்டுக்குள் இருப்பதாக ‘மோடி வித்தை’ காட்டுவதை விட, விலைவாசி உயர்வைக் குறைப்ப தற்கும், அதே நேரத்தில் விவசாயி களுக்கு உரிய விலையும், விளைச்சல் பாதித்தால் உரிய இழப்பீடும் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதும்தான் இப்போது செய்ய வேண்டியவை.
– அ.அறிவுக்கடல்