Tamil Marx

சர்வதேச அமைப்புகள்

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதில் உலகளவில் தேக்கம்

குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதில் உலகளவில் தேக்கம்
  • PublishedJuly 15, 2024

கொரோனா தொற்றுக்கு பிறகு உலகளவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடுவதில் மிகப்பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தட்டம்மை உள்ளிட்ட நோய்கள் அதிகளவில் பரவும் அபாயம் உருவாகியுள்ளது என ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.

2023 ஆம் ஆண்டு 84 சதவீத குழந்தைகள், அதாவது 10.8 கோடி குழந்தைகளுக்கு டிப்தீரியா, டெட்டனஸ் மற்றும் பெர்டுசிஸ் (டிடிபி)  தடுப்பூசி  மூன்று முறை செலுத்தப்பட்டுள்ளது. இது 2022 உடன் ஒப்பிடும் போது எந்த முன்னேற்றமும் இன்றி ஒரே அளவாக உள்ளது.
இந்த தேக்கம் மோசமானது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியில் உலகளவில் பாதிப்புகளை உருவாக்க கூடும் என பல சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன.

பல்வேறு நாடுகளில் நோய் தொற்றின் காரணமாக தொடர்ந்து பல குழந்தைகள் பலியாகியுள்ளன. அவற்றை ஒப்பிட்டு பார்க்கும் போது தடுப்பூசி போடுவதில் ஏற்பட்டுள்ள தேக்கத்தால் உருவாகியுள்ள ஆபத்து வெளிப்படுகிறது என ஐ.நா குழந்தைகள் நிதிய தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் 2019 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுக்கு முந்தைய புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 27 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படவில்லை அல்லது மூன்று முறைக்கும் குறைவாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடுவதில் தேக்கம் மட்டுமல்லாமல் ஒரு டோஸ் தடுப்பூசிக் கூட போடப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 1.45 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2022 இல் 1.39 கோடியாகவும், 2019 இல் 1.28 கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகளவில் 65 லட்சம் குழந்தைகளுக்கு  டிடிபி தடுப்பூசியின் மூன்றாவது டோஸ்  போடவில்லை.


தடுப்பூசி கிடைக்காத அல்லது போடப்படாத குழந்தைகள் பட்டியலில் உள்ள 50 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகள் வன்முறை மற்றும் போர்களால் சிதைந்து கொண்டிருக்கும் 31 நாடுகளை சேர்ந்தவர்கள்.

அந்த குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு, வறுமை, போர், வன்முறை, மறுக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு ஏற்கனவே உள்ள நிலையில் தடுப்பூசி தேக்கம் அவர்களின் வாழ்க்கையை மிக மோசமான ஆபத்தில் தள்ளியுள்ளது. 

தடுப்பூசி போடுவதன் மூலம் எளிதாக தடுக்க கூடிய நோய்களைக்கூட தவிர்க்க முடியாமல் இக்குழந்தைகள் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர் என பல சர்வதேச அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *