அகதிகள் முகாமிற்குள் நுழைந்து 210 பாலஸ்தீனர்களை கொடூரமாக சுட்டுக்கொன்ற இஸ்ரேல்
இரண்டு நாட்களுக்கு முன் காசா பகுதியில் உள்ள நுசிரத் அகதிகள் முகாமிற்குள் துணிகள் சமையல் பாத்திரங்களுடன் ஒரு ட்ரக் நுழைந்தது. ரஃபா எல்லையில் இருந்து ஐ.நா நிவாரண பொருட்களை ஏற்றி வரும் வாகனம் என நினைத்து அங்கிருந்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக செல்கின்றனர்.
திடீரென அந்த வாகனத்தில் இருந்து ஆயுதங்களுடன் 10 பேர் இறங்கி முகாமில் இருந்த பாலஸ்தீனர்கள் மீது காட்டுத்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியும் மக்கள் மீதும் குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி குழந்தைகள் பெண்கள் என கிட்டத்தட்ட 210 க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.
தாக்குதலில் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன ஒருவர் இவ்வாறு இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.
திரைப்படத்தில் வருவதை போன்று இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை நடத்தி பெண்கள் குழந்தைகள் என 210 க்கும் அதிகமான அப்பாவி பாலஸ்தீன மக்களைத்தான் கொலை செய்துள்ளது.
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திவரும் இனப்படுகொலை போரில் ஒரு நேரத்தில் இவ்வளவு நபர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
போர் தீவிரமாகியுள்ள சூழலில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு போரை நிறுத்த அமைதி பேச்சுவார்த்தைக்கு ஐநா சபை மற்றும் பல நாடுகள் அழைப்பு விடுத்து வருகின்றன.
ஹமாஸ் அமைப்பும் அமைதி பேச்சுவார்த்தைக்கும் போர் நிறுத்திற்கும் தாயார் எனவும் இஸ்ரேல் காசாவில் நடத்தி வரும் அனைத்து போர் நடவடிக்கைகளையும் நிறுத்தினால் முழு உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் நிறுத்தத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
4 பேரை மீட்க 210 பேர் கொலை
ஹமாஸ் வசம் உள்ள இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்கிறோம் என கூறி இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காசா பகுதிகளில் உள்ள மருத்துவமணைகள், ஐ.நா நிவாரண முகாம்கள்,பள்ளிக் கூடங்கள் ஆகியவற்றின் மீது சர்வதேச போர் விதிமுறைகளை மீறி தொடர்ந்து மிக கொடூரமான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும் தான் செய்து வரும் இனப்படுகொலையை நியாயப்படுத்துவதற்காக அப்பகுதிகளில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கம் உள்ளது,பணயக்கைதிகள் அங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என கூறி வருகிறது.
இந்நிலையில் நுசிரத் அகதிகள் முகாமில் இரண்டாவது முறையாக தாக்குதல் நடத்தி குழந்தைகள் பெண்கள் என சுமார் 210 பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது.
இந்த தாக்குதலும் கூட 4 இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்க நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீட்கப்பட்ட 4 பணயக்கைதிகளின் புகைப்படத்தை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
சாப்பிடும் போது கொல்லப்பட்ட குழந்தைகள்
ஜூன் 8 அன்று இரவு இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த குழந்தைகள் பலரும் கொடூரமான முறையில் படுகொலையாகியுள்ள. இந்த தாக்குதலை தொடர்ந்து சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி தளங்களில் உணவை வையில் வைத்திருந்த நிலையில் கொலையான குழந்தைகளின் காணொளிகள் வெளியாகி உலகையே உலுக்கியுள்ளது.
மேலும் கைகளும் கால்களையும் இழந்த நிலையில் குழந்தைகளும் சிறுவர்களும் துடிக்கின்ற காணொளிகளும் வெளியாகி பார்ப்பவர் மனதை உருக்குலைய செய்துள்ளது.
முந்தைய தாக்குதல்கள்
இஸ்ரேல் காசா பகுதியில் போரை துவங்கியதில் இருந்து 36 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்களை படுகொலை செய்துள்ளது.
இதில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
நுசிரத் அகதிகள் முகாம் தாக்குதலுக்கு முன்பாகவே மிக மோசமான முறையில் மக்கள் மீது சில நேரடி தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ளது.
2024 பிப்ரவரி மாதம் ரஃபா எல்லையில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது துக்கப்பாக்கிச்சூடு நடத்தியும் பீரங்கி குண்டுகளை வீசியும் 100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை படுகொலை செய்தது.
மே 28 அன்று ரஃபா எல்லையில் கூடாரங்களில் தங்கியிருந்த பாலஸ்தீனர்கள் மீது குண்டு வீசி 14 குழந்தைகள் உட்பட 40 பேரை கொலை செய்தது.
அல் ஷிபா உள்ளிட்ட மருத்துவமைகளுக்குள் சென்று கொடூரமான தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஐ.நா கருப்பு பட்டியலில் இஸ்ரேல்
குழந்தைகள் மீதான வன்முறை,கொலை ஆகியவற்றை ஏவுவதன் அடைப்படையில் இஸ்ரேலை ஐநா அவை கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக ஐநா தூதர் கிலாட் எர்டானின் தெரிவித்துள்ளார்.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இஸ்ரேலில் போராட்டம்
கடந்த வார இறுதியில் நுசிரத் முகாமின் ஐ.நா பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்திய பிறகு ஐநா இந்த அறிவிப்பை வெளியிட்டது. ஐ.நா அவையின் இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் மீண்டும் நுசிரத் முகாமில் தாக்குதல் நடத்தி 210 பாலஸ்தீனர்களை கொலை செய்துள்ளது இஸ்ரேல்.
இந்த தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுவதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் போர் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தியும் மக்கள் போராட்டங்களை துவங்கியுள்ளனர். இங்கிலாந்து, ஸ்பெயின், சுவீடன்,ஜோர்டான்,ஏமன், உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் பகுதியில் ஆயிரக்கணக்கான அதிகமான மக்கள் ஒன்று கூடி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டும் எனவும்,பணயக்கைதிகளை மீட்டு வரவேண்டும் எனவும், நேதன்யாகு தலைமையிலான அமைச்சரவை பதவி விலக வேண்டும் எனவும் போராடி வருகின்றனர்.
அமைதியான முறையில் போராடும் மக்களின் மீது தண்ணீர் பீரங்கிகள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடையடி நடத்தியும் இஸ்ரேல் பாதுகாப்பது படை விரட்டியுள்ளது.
அதே போல பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஒலிம்பிக் தலைமையகம் முன்பு கூடிய மக்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இருந்து இஸ்ரேல் நாட்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர்.