இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பும் இந்தியா
கப்பலை நிறுத்த அனுமதி மறுத்த ஸ்பெயின்
இந்தியாவில் இருந்து இஸ்ரேலுக்கு 26.8 டன் ஆயுதங்களை டென்மார்க் கொடியுடன் கொண்டு சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்திற்குள் நுழைய ஸ்பெயின் அரசு அனுமதி மறுத்துள்ளது.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் மே 21 அன்று இந்தியாவில் இருந்து ஆயுதங்களுடன் இஸ்ரேல் நோக்கி சென்று கொண்டிருக்கும் மரியன்னே டானிகா என்ற சரக்கு கப்பலை ஸ்பெயின் நாட்டின் கார்டஜீனா துறைமுகத்தில் நிறுத்த அனுமதி கோரிய நிலையில் அனுமதி மறுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது. இவ்வாறு நாங்கள் அனுமதி மறுப்பதும், ஸ்பெயின் துறைமுகத்திற்கு இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பலை கண்டறிவதும் இதுவே முதல் முறை என்றார். அதனை தொடர்ந்து மத்திய கிழக்கிற்கு ஆயுதங்கள் தேவையில்லை, அதிக அமைதி தான் தேவை” என்றார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் காசா மீதான இஸ்ரேலின் போரை மிக கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் பாலஸ்தீனத்திற்கு ஐ.நா சபையின் முழு உறுப்பினர் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு ஆதரவாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்துதான் இந்த கப்பல் சென்றதை என்ற கேள்வி எழுந்த நிலையில் கப்பல்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் கடல் கண்காணிப்பு இணையதள நிறுவனமான வெசல் பைஃண்டர் (Vessel Finder) கொடுத்த தகவலின் படி ஆயுதங்களை ஏற்றி செல்லும் மரியன்னே டானிகா கப்பல் ஏப்ரல் 8 அன்று சென்னையில் இருந்து புறப்பட்டது என்றும் செங்கடலில் ஹவுதிகளின் தாக்குதலை தவிர்ப்பதற்காக ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றி மேற்கு ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே துறைமுகத்தை மே 13 அன்று சென்றடைந்தது என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது மொராக்கோ கடற்கரையில் இருந்து மே 21 அன்று ஸ்பெயின் நாட்டின் கார்டஜீனா துறைமுகத்தில் நுழைய காத்திருக்கிறது என தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஆயுதங்களையும்,விமானத்திற்கான பொருட்களையும் கடல்வழி பரிமாற்றம் செய்து வரும் சென்னையை சேர்ந்த சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் கோ என்ற நிறுவனம் மூலம் அனுப்பபட்டுள்ள 28.6 டன் ஆயுதங்களை இஸ்ரேலில் உள்ள கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பெற உள்ளது.
ஸ்பெயின் அரசின் அறிவிப்பை தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கை வைத்துள்ள இந்தியா ஏன் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்புகிறது என்று இந்தியாவின் இரட்டை தன்மை குறித்து கேள்விகள் எழுந்து வருகின்றது.
ஆயுதங்களுடன் செல்லும் கப்பகள் காசாவில் இருந்து 30 கீ.மீ தொலைவில் உள்ள அஷ்டோத் அல்லது இஸ்ரேலின் ஹபிபா துறைமுகத்திற்கு செல்லும் என கூறப்படுகிறது.
இந்திய அரசாங்கத்தின் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் இஸ்ரேலுக்கு வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன.
2024 ஏப்ரல் 18 அன்று அதே நிறுவனம் மீண்டும் இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்ய விண்ணப்பித்திருந்தது.
பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் (PEL) என்ற தனியார் நிறுவனம், கடந்த ஆண்டு காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து 2023 நவம்பர் 20 மற்றும் 2024 ஜனவரி 01 என இரண்டு முறை ஆயுதங்களுக்கான பாகங்கள் மற்றும் வெடி மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.