Tamil Marx

கட்டுரைகள்

பங்காரு அடிகளார் மீதான இந்த திடீர் திராவிட பாசம் ஏன்?

பங்காரு அடிகளார் மீதான இந்த திடீர் திராவிட பாசம் ஏன்?
  • PublishedOctober 21, 2023

கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்!!!

– தந்தை பெரியார்.

தமிழ்நாட்டில் பல்வேறு பதவிகளை சுகம் கண்டு வந்த ‘புரட்சி’ தற்போது புதியதொரு பரிணாமத்தையும் பெற்றிருக்கிறது. கடவுள் அனுப்பியவர், கடவுள் அவதாரம், கடவுள் இறங்கியிருக்கிறார் என பன்முக ஆனமீகவாதிகளை கண்ட இந்த மண் புதியதொரு, கடவுளையே புரண்டு படுக்க செய்த ஒருவரையும் கண்டது. அவர்தான் இன்றைய “ஆன்மீக புரட்சியாளர்” பங்காரு அடிகளார். ‘புரட்சி என்பதற்கான அர்த்தம் சமூகத்தில் திடீரென நடக்கும் மாற்றம்தான். அந்த வகையில் சாட்சார்த்த அந்த ஆதிபராசக்தி நான்தான்! அகில உலகத்து அதிபதி அம்மா! நான்தான் என தன்னை உருமாற்றி கொண்டதற்காக பத்மஸ்ரீ போன்ற விருதுகளை போல புரட்சி பட்டத்தையும் வழங்கியிருக்கிறார்கள்.

யார் இந்த “ஆன்மீக புரட்சியாளர் அம்மா”?

கடவுள், மதம் எனும் சரக்கை தன் வித்தையால் சந்தையாக மாற்றினார் பங்காரு அடிகளார். அதுவும் வீட்டு தலைவிகளின் ஆதர்ச கடவுளாக உயருமளவுக்கு செல்வாக்கை பெருக்கியவர். ஆசிரியராக இருந்தது முதல் ஆன்மீக குருவாக மாறியதுவரை எல்லோரும் அறிந்தததுதான். இடைக்காலத்தில் கோவில்கள் எப்படி நிதி நிர்வாக அமைப்பாக, சமூகத்தில் அதிகாரம் கொண்டதாக இருந்தததோ அதே பாணியை மேல்மருவத்தூர் பகுதியில் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கினார் பங்காரு அடிகளார். அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பது, பாத வியாபாரிகளிடம் கட்டாய வரிவசூல் பெறுவது என தொடங்கி, அந்த பகுதியில் எவர் நிலமோ, வியாபாரமோ செய்ய முயன்றாலும் அவர்களை மிரட்டி பணம் பெறுவது வரை நீண்டது.

தமிழ்நாட்டின் கிராமங்கள்தோறும் “ஆதிபராசக்தி மன்றம்” என கடவுளுக்கே நற்பணி மன்றம் தொடங்கியதில் பங்காருக்கு நிகர் எவருமில்லை. இன்றைய கணக்குப்படி 7 ஆயிரத்துக்கும் அதிகமான மன்றங்ககள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பெயரில் கோடிக்கணக்கில் நிதி வசூலிப்பது, கல்வி நிறுவனங்கள் தொடங்குவது என கூலியில்லா தொழிலாளிகள் மூலம் ஒரு மத நிறுவனத்தையே கட்டி எழுப்பியிருக்கிறார் என்றால் அது சாதாரணமா? அவருக்கு அந்த பட்டத்தையம், விருதுகளையும் ஆட்சியாளர்கள் வழங்குவதில் ஆச்சர்யமில்லைதான்…

அரசியல்வாதிகளுக்கு நிகராக தனியார் பொறியியல், மருத்துவம், நரசிங் மற்றும் மெட்ரிகுலேசன் கல்வி நிறுவனங்களை தொடங்கி நடத்தி வருகிறது ஆதிபரா சக்தி மன்ற பீடம். எளிமையான வாழ்க்கையை வாழ வழி சொல்லும் பங்காருவுக்கு எப்படி இவ்வளவு சொத்துக்கள் என பக்தகோடிகளை சிந்திக்க செய்யாமல் நியாயப்படுத்தும் அளவுக்கு ஆன்மீக போதையை ஊட்டி வளர்த்திருக்கிறார் ‘அம்மா’. பங்காரு நடத்தும் கல்லூரியில் அடிப்படை வசதியில்லை என முகநூலில் புகார் பதிவு செய்த மாணவரை கடுமையாக தாக்கி இருக்கிறது ஆதிபராசக்தி மன்றம். இதுவும் கடவுள் கொடுத்த சோதனையென மாணவரின் பெற்றோர் பங்காருவுக்கு பன்னீர் அபிஷேகம் செய்திருந்தாலும் ஆச்சரியமில்லை.

பல் மருத்துவ கல்லூரி தொடங்க மருத்துவ கவுன்சிலுக்கு லஞ்சம் கொடுத்ததில் வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். அரசின் புறம்போக்கு மற்றும் நீர், நிலைகளை ஆக்கிரமித்து பல்வேறு கட்டிடங்களை ஆதிபராசக்தி மன்றம் கட்டியிருப்பதை இடிக்க சொல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதனை நிறைவேற்றாத அரசாங்கம் அதை செய்தவரின் இறுதி சடங்கிற்கு அரசு மரியாதை செய்து கவுரவித்திருக்கிறது. என்ன ஒரு அவலம்!

மோடிக்கு கூஜா தூக்கிய பங்காருக்கு “திராவிட அரசு மரியாதை”:

பங்காரு அடிகளார் சனாதன சித்தாந்தவாதிகளுக்கு எதிராக களமாடியவர் என பலரும் தற்போது மெச்சி வருவதை பார்க்க முடிகிறது. ஆனால் பங்காருவோ தன் சொத்துக்களை பாதுகாக்கவும், வளர்த்துக்கொள்ளவும் அவர்களோடு கூட்டு வைத்து கொண்டிருக்கிறார். பல் மருத்துவ கல்லூரி லஞ்ச விவகாரத்தில் சிக்கிய பங்காரு குடும்பத்தார், அதிலிருந்து மீள 2019-ல் மோடியை ஆதரிக்க சொல்லி பக்தர்களுக்கு செய்தியனுப்பினார். ஆதிபராசக்தி மன்றங்கள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை ஆர்.எஸ்.எஸ். மேற்கொள்ள முயற்சித்து வருகிறது. அதன் ஒருபகுதியாக பங்காருவுக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கியிருந்தது. அவரது மறைவுக்கு கூட தமிழக பாஜக நடத்தும் யாத்திரையை ஒத்தி போட்டுள்ளது. கர்நாடகத்தில் கணிசமாக ஆதிபராசக்தி பக்தர்கள் இருப்பதால் அம்மாநில தலைவர் நளின் குமார் கட்டீலும் பங்காருவின் இறுதி நிகழ்வில் பங்கேற்றிருந்தார். இப்படியானவருக்குத்தான், சனாதன எதிர்ப்புவாதி, அரசு மரியாதை என திராவிட இயக்கத்தினர் வழங்கியிருக்கின்றனர்.

பகுத்தறிவுவாதிகளின் வக்காலத்து!

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அரசாங்க பிரதிநிதிகள் இரங்கல் தெரிவித்து, அரசு மரியாதை செய்ய உத்தரவிட்டதை தமிழ்நாட்டின் பகுத்தறிவுவாதிகள் பலர் வியாக்கியானம் செய்து நியாயம் கற்பித்து வருகிறார்கள். பெண்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறார், சனாதனிகளின் சிம்ம சொப்பனம், சூத்திர மடாதிபதி என ஏகத்துக்கும் புகழ் அர்ச்சனை! பங்காருவின் பக்தர்களையே மிஞ்சியிருக்கிறார்கள்.முதலாளித்துவ – சீர்திருத்த கட்சியான திமுக அரசு வாக்கு நலனுக்க்காக அதை செய்கிறது என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் பெரியார் கொள்கைகளை பரப்பும் திராவிட இயக்கமும் அதே நிலைப்பாட்டை எடுத்திருப்பது சந்தர்ப்பவாதமா? அரசின் ஊதுகுழலா?

பெண்களுக்கு கருவறையில் அனுமதி, தமிழில் பூஜை, கல்வி திருப்பணிகள் செய்த மவுன புரட்சியாளர் என்றெல்லாம் இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்கள். பெரியார் கடவுள் மறுப்பை முன்வைத்து வறட்டுத்தனமான அதை பிரச்சாரம் செய்யவோ, கடைபிடிக்கவோ இல்லை. உன் மூளைக்கு எட்டுற வர சிந்திச்சிக்கோ என மக்கள் மத்தியில் பேசியவர். கருத்தியல் தளத்தில் பெரியாரின் நாத்திகவாதம் குறித்து பல விமர்சனங்கள் இருந்தாலும், மக்கள் மத, மூட நம்பிக்கைகளில் மூழ்குவதை தன வாழ்ந்த நாட்களில் கடுமையாக எதிர்த்தார். கடவுளின் பெயரால் சொத்து சேர்த்து வைத்திருக்கும் கோவில்களையும், மத குருமார்களாக இருந்த அன்றைய பார்ப்பனர்களையும் எதிர்த்து பேசிய பெரியார், மதத்தின் பெயரால் மக்கள் மீது நடத்தும் சுரண்டலையும், போலியான நம்பிக்கையையும் உடைத்து பேசியிருக்கிறார்.

பங்காரு அடிகளாரின் அடாவடி அத்துமீறல்களை, வரி ஏய்ப்பு, நிலங்கள் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து திராவிட ஆட்சியாளர்கள் என்றுமே பேசியதில்லை. பார்ப்பனர்கள் சமூகத்தில் உயர்ந்த இடங்களில் இருக்கிறார்கள். அதற்கு மதத்தின் பெயரால் பிற சமூக மக்களை ஒடுக்கி வைத்திருப்பதே காரணம் என அதற்கெதிராக போர்க்கொடி உயர்த்திய பெரியார் வழிவந்த இயக்கங்கள், சமூகத்தில் பெரும்பான்மையாக ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கும் மக்களை மத, மூட நம்பிக்கைகளில் இருந்து மீட்பதற்கு முயற்சிக்காமல், பங்காரு அடிகளாரின் அடாவடித்தனத்திற்கும், மூட நம்பிக்கைக்கும் சாமரம் வீசுவதென்பது அயோக்கியத்தனம். பெரியாரின் கைத்தடி சனாதனவாதிகளுக்கு மட்டுமல்ல சொந்த இயக்கத்தினருக்கும் உரைப்பதற்கு உயரவேண்டும் போல…!

கட்டுரையாளர்: அருள் (சமூகவியல் மாணவர்)

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *