Tamil Marx

சினிமா அரசியல்

Witness ஒரு தலித் சினிமா வா?

Witness ஒரு தலித் சினிமா வா?
  • PublishedDecember 17, 2022

மலக்குழியில் இறந்த தன் மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்த நிர்வாக அமைப்பை எதிர்த்து துப்புரவு பணி செய்யும் ஒரு தாயின் 300 நாள் சட்டப்போராட்டம் தான் படத்தின் கதையாக உள்ளது.

மலக்குழி மரணங்களை தடுக்க 2013ல் மலம் அள்ளும் தொழிலுக்கு தடை மற்றும் மறுவாழ்வு சட்டம் என்ற சட்டம் இயற்றப்பட்டது ஆனால் அதற்கு பின்பும் பல மரணங்கள் மலக்குழியில் இறங்கி நிகழ்ந்துள்ளது. அதில் பெரும்பாலும் இளைஞர்கள் தான் மரணத்திற்கு உள்ளாகுகிறார்கள். அந்த இளைஞர்கள் முழுக்க முழுக்க சேரி, காலனி போன்ற உழைக்கும் தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதியை சேர்ந்தவர்கள். அதை இந்த படம் காட்சியாக்கியுள்ளது.

கதாபாத்திரங்கள் கதைக்கான அதனதன் பங்கை செலுத்தியதும் நின்றுவிடுகின்றன, கதை நகர்வுக்காக வரக்கூடிய அடுத்தடுத்த கதாபாத்திரங்களும் சுருக்கமாக என்ன தேவையோ அதை மட்டுமே அளிக்கின்றன.

ஆனாலும் படத்தில் வரும் architect ன் கதாபாத்திரம் வெறுமனே இந்த கதைக்கு உதவி மட்டும் செய்யவில்லை அது மறைமுகமாக இன்னொரு கதையையும் தன்னகத்தே சொல்லி வருகிறது. அதாவது அந்த கதாபாத்திரத்தை வைத்து இரண்டு விசயங்களை செய்துள்ளனர் படக்குழுவினர்.

ஒன்று ஒரு இளைஞன் நம் வீட்டு வாசலில் இறந்துள்ளான் அதை பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் தீட்டு கழிக்க ஹோமம் நடத்தும் பார்பனிய கலாச்சாரத்தையும், மனித மலத்தை மனிதனே அள்ளுவது ஒரு தொழில் தான் என்றும் அதை 1000 ரூபாய் கூலிக்கு ஆசைப்பட்டு தான் அந்த தொழிலாளர்கள் செய்கிறார்கள் என்ற பொதுபுத்தி மனநிலையும் கொண்ட நகர்புற நடுத்தர வர்க்கத்தை இந்த கதாபாத்திரத்தின் வழியே காட்டியுள்ளனர். மற்றொன்று அந்த கதாபாத்திரத்தோடே பயணிக்கும் ஒரு மௌன கதை; அது – நல்ல நிலையில் வருமானம், சொந்தமான வீடு என வைத்திருந்தாலும் ஒரு தலித் தாய்க்கு பிறந்த மகள் என்பதால் அவள் எதிர்கொள்ளும் பிரச்சினையை வெளிபடுத்தியுள்ளது. இந்த வழக்கில் architect கதாபாத்திரம் ஈடுபடுவதற்கு முன்னமே தொந்தரவு தரும் அந்த அப்பார்மெண்ட் மக்கள் வழக்கில் அவள் உதவி செய்யும் போது தொந்தரவு அதிகமாக தருகிறது ஒரு கட்டத்தில் அவளை விரட்டியடித்து விடுகிறது.

மேலும் இந்த கதாபாத்திரம் தான் வெகுளியான நடுத்தர வர்க்க இளைஞர்களின் பிரதியாகவும் உள்ளது. இந்த வழக்கின் பயணத்தில் அது சமுதாயம் குறித்த பல உண்மைகளை புரிந்து கொள்கிறது. அதன் மூலம் பார்வையாளர்களுக்கும் அந்த புரிதலை கடத்த படக்குழு முயன்றுள்ளது.

இது போன்ற மரணங்களுக்கு முக்கிய காரணம் உட்கட்டமைப்பு, architect கதாபாத்திரம் கட்டிட வடிவமைப்பில் இந்த பிரச்சனையை தீர்பதற்கான ஒரு தீர்வை முன்வைக்கிறது. ஆனால் முதல் போட்டு கட்டிடம் கட்டவுள்ள பெரும் முதலாளிகள் அதை தேவையில்லாத செலவு என்று தட்டிகழிக்கிறார்கள். இதுதான் பிரச்சினையின் ஆணி வேர் அதாவது மலம் அல்லுவதற்கு குறைந்த கூலியில் ஆட்கள் உள்ளபோது நான் ஏன் கட்டுமானத்திலோ, எந்திரத்திலோ என் மூலதனத்தை வீண்ணடிக்கவேண்டும் என்று இந்த முதலாளித்துவ சமூகம் கருதுகிறது. அதற்கேற்ப முதலாளிகளுக்கு சார்பாகவே அரசும் இயங்குகிறது. இந்த படத்திலேயே இடையில் இதே architect ம் உதவி வக்கீலும் உரையாடும் போது அரசிற்கு மனிதர் மலத்தை மனிதரே அள்ளும் இந்த கொடுமையை ஒழிக்க conviction இல்லை என்று விளக்குகின்றனர்.

அடுத்ததாக ஏன் படிக்கும், நிச்சல் வகுப்பு எடுக்கும் இளைஞன் இதில் இறங்க வேண்டும் என்று விமர்சனங்களில் மேதாவிகள் கேள்வி எழுப்புகின்றனர். ஏனெனில் அவர்கள் அந்த படத்தில் வரும் அப்பாராட்மெண்ட் ஆட்களின் பிரதிநிதிகள் என்பதால் இந்த கேள்வி அவர்களின் கபாலத்தில் உதிக்கிறது.

கத்துவட்டி தொல்லை அந்த குடும்பத்திற்கு உள்ளது என்பதை படத்தின் தொடக்கத்தில் காட்டியுள்ளனர். மேலும் கள எதார்த்தத்திலும் எப்படி இந்த வேலையில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்றோமோ, அதே போல அவர்கள் சமூக பொருளாதார வாழ்வு கடன், கந்துவட்டி, மது, போதைப்பொருள் பழக்கம் போன்றவற்றால் பிணைக்கப்பட்டுள்ளது, அதேபோல குழியில் இறங்க மட்டுமல்ல காப்பாற்ற சென்று இறந்தவர்களும் கணிசமாக உள்ளனர்.

விமர்சனங்களை தவிர்க்கவும் மேலும் கதையை வலுவாக்கவும் அந்த வாட்ச்மென் / ப்ளம்பர் காலனிக்கு சென்று அந்த இளைஞனை அழைத்து வருவதுபோல் ஒரு காட்சி வைத்திருக்கலாம். பெரும்பாலான உண்மை சம்பவங்களில் இது போன்று தான் நடக்கும் அப்பாராட்மெண்ட் ஆட்களுக்காக ஒரு வாட்ச்மெனோ, கொத்தனாரோ, ப்ளம்பரோ தான் சேரியில், காலனியில் உள்ள வேலையற்ற இளைஞர்களை ஆசை வார்த்தைகள் பேசி அழைத்து வருகிறார்கள். கைது போன்ற நடவடிக்கைகளுக்கு பலியாவதும் மலம் அள்ள ஆட்களை கூட்டி வரக்கூடிய இந்த நபர்கள் தான். இவர்களை மாட்டி விட்டு தான் பணம் படைத்த உடைமையாளர்கள் தப்பித்துக்கொள்கின்றனர். தாய் இந்திராணி கதாபாத்திரம் வழக்கில் வெற்றி அடைவோமா, அதனால் இறந்த பிள்ளை திரும்ப வருமா என்ற மனநிலையை கடந்து “ஜெயிக்கலேனா பரவாயில்ல சார் ஏ மகன கொன்னவங்க கோர்ட் படி ஏறனும் அவுங்க பதில் சொல்லனு” என வெற்றி தோல்வியை பொருட்படுத்தாமல் போராட்டத்தில் இறங்கும் போராளியாக வடிவமைக்கப்படுள்து. அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடினால் உங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படும் என்பதை இந்திராணி க்கு நிகழ்வதை கொண்டு எதார்த்தத்தை நம்மிடம் நகர்த்தியுள்ளது இந்த படம்.

கம்யூனிஸ்டுகள் உண்மையில் களத்தில் என்ன செய்கிறார்கள் எந்த மக்களின் பக்கம் நிற்கிறார்கள் என்பதை இப்படம் காட்டியுள்ளது. சாதியா வர்க்கமா என்பதற்கு பிரச்சினையின் தன்மையைகொண்டு கம்யூனிஸ்ட்கள் பிரித்து அதை கையாளுகின்றனர் என்பதை இந்த படம் உடைத்துபேசியுள்ளது. இப்படி காட்சிகள் அமைய காரணம் என்ன என்றால், ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஒரு மேடையில் சொன்னார் ‘நான் கம்யூனிஸ்ட்களை படம் எடுக்க செல்லவில்லை மக்கள் பிரச்சினையைத்தான் காட்ட சென்றேன் ஆனால் மக்களோடு கம்யூனிஸ்ட்களே நின்றனர் அதை தான் காண்பித்தேன்’ என்று; அதே போல தான் இந்த படத்தின் இயக்குனரும், எழுத்தாளரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, CITU போன்ற அமைப்புகளில் உள்ள கம்யூனிஸ்ட்களுடன் பயணித்து தான் இந்த கதையை அவர்களால் உருவாக்கியுள்ளனர்.

முதலாளித்துவம் பன்னெடுங்காலமாக உள்ள சாதிய அமைப்பை தன்னுடைய லாபவெறிக்கு, எப்படி பயன்படுத்திக் கொள்கிறது என்பதையும் அதற்காக எளிய மக்களின் குடியிருப்பு அகற்றத்தில் தொடங்கி, அவர்களின் சமூக பொருளாதார வாழ்வை கீழ்நிலையிலேயே வைத்திருப்பது வரை இதில் பேசியுள்ளனர். இப்படியாக உழைக்கும் எளிய மற்றும் ஒடுக்குமுறையை சுமக்கும் மக்களின் கதையை பேசியுள்ளனர். குறிப்பிட்ட மலக்குழி மரணத்திற்கு காரணமாக உள்ள மக்கள் சமூகம், தனியார் ஒப்பந்ததாரர்(முதலாளி), அரசு அதிகாரிகள் என எல்லோரின் கடமை, பொறுப்பு, பொறுப்பை தட்டிகழிப்பது என இந்த அமைப்பு முறையையே விமர்சித்துள்ளது இப்படம். ஆயினும் ஏன் அரசியல் கட்சிகள் மீதும் அதன் போலியான முகமூடிகள் மீதும் இப்படத்தில் கேள்வி எழுப்பவில்லை என்பதே இப்படத்தின் மீதான எனது விமர்சனம்.

படத்தின் இறுதி கட்ட காட்சி சமூக எதார்த்தத்தை Metaphorical ஆகவே சமூக அவலத்தை தோலுரித்துக் காட்டியது இந்த கதைக்கு ஒரு கலை அழகியலாக அமைந்துள்ளது.

மேலும் படம் ஒரு ஆவணப்படம் போல உள்ளது கலை வடிவில் இல்லை என்ற விமர்சனம் எல்லாம் இந்த கதையின் இப்படத்தின் மதிப்பு தெரியாமல் உளரும் கலை மேதாவி தனம். அதை தவிர்த்துவிட்டு உழைக்கும் மக்களிடம் சென்று இப்படத்தை பற்றி கேளுங்கள் அவர்கள் இப்படத்தை இதில் பேசியிருக்கும் உண்மையை கொண்டாடுவார்கள்.

தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடை என்னவென்றால் இப்படம் குறிப்பாக துப்பரவு பணியில் பெரும்பான்மையாக ஈடுபட்டுள்ள தலித் மக்களை பற்றி தான் பேசியுள்ளது. ஆனால் இது யாருக்காக முக்கியமாக எடுக்க பட்டதோ அந்த மக்கள் இதை பார்க்க முடியாத வண்ணம் OTT யில் உள்ளது இந்த படத்தை துப்புரவு தொழிலாளர்களுக்காக பிரத்யேக சிறப்பு காட்சிகளை ஏற்பாடு செய்து திரையிடப்படவேண்டும். ஆனால் அதற்கு முதல் போட்ட முதலாளி ஒப்புக்கொள்வாரா என்றால் அதற்கு பதில் இல்லை! உழைக்கும் மக்களின் கதையை பேசினாலும் அது அவர்களைப் போய் சேரவில்லை, சேர்க்க முயற்சிக்கவில்லை என்றால் அந்த படைப்பு வெறும் முதலாளித்துவ சமுதாயத்தின் ஒரு பண்டமாகவே சுருங்கிவிடும். அந்த அபாயம் இப்படத்திற்கும் உள்ளது.

கட்டுரையாளர்: பாலமுருகன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *