Tamil Marx

கட்டுரைகள்

CUET நுழைவு தேர்வை தேசம் முழுவதும் நிராகரிப்போம்!

CUET நுழைவு தேர்வை தேசம் முழுவதும் நிராகரிப்போம்!
  • PublishedMay 19, 2022

ஒரே நாடு ஒரே வரி, ஒரே தேர்தல், ஒரே ரேசன், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே மதம் … என்ற வரிசையில் ”ஒரே நாடு ஒரே நுழைவு தேர்வு” என்ற பதத்தில் வந்துள்ளதே இந்த CUET நுழைவுத் தேர்வு.

தேசியக் கல்வி கொள்கை 2020 அமுலாக்கத்தின் அடிப்படையில் அனைத்து மத்திய பல்கலைக்கழகம், அரசு, நிகர்நிலை மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள இளம்நிலை மாணவர் சேர்க்கைகான CUET (பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வு) வரும் 2022-23 முதல் நாடு முழுவதும் ஒன்றிய அரசு நடைமுறைபடுத்த உள்ளது.
CU-CET மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவு தேர்வு என்பது 2009 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றபட்ட சிறப்பு சட்டத்தின்படி 11 மத்திய பல்கலைக் கழகங்களுக்கும், பின் திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகங்கத்தையும் இணைத்து 12 மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் ஒரே தேர்வு நடந்து வந்தது.

2019 முதல் மொத்தம் உள்ள 54 மத்திய பல்கலைக் கழகங்களில் 45 மத்திய பல்கலைக் கழகங்களுக்கும் இத்தேர்வை விரிவுபடுத்துவதாக அறிவித்தது. கடந்தாண்டு அறிவிப்பில் இதில் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் நிகர் நிலை உள்ளிட்ட எந்த பல்கலைக்கழகமும், கல்லூரியும் விருப்ப பட்டால் இந்த தேர்வில் இணையலாம் என அறிவித்தது. மேலும் CU-CET மத்திய பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத்தேர்வை CUET பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வாக அறிவித்து தற்போது எப்ரல் 4ம் தேதி அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
இதற்கான நோக்கமாக இளம்நிலை சேர்க்கைகாக தேசம் முழுவதும் ஒரே நேரத்தில் அல்லது ஒரே நாளில் பலதரபட்ட தேர்வை எழுத வேண்டியுள்ளதை தவிர்க்கவும். ஒரு மாணவர் ஒரு துறையில் சேர ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு எழுத வேண்டியுள்ளதை தவிற்பதற்காகவும், அரசு மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தனிதனியான சேர்க்கை நடைமுறையை தவிற்த்து ஒரே நுழைவுத்தேர்வு மூலம் சேர்க்கையை எளிமைபடுத்த போவதாகவும், செலவை குறைக்கப் போவதாகவும் கூறியுள்ளது.

நீட் தேர்வு நடத்துவதற்கு சொன்ன அதே உண்மைக்கு புறம்பான கூற்றை இதற்கும் கூறியுள்ளது. கியூட் தேர்வை மேல்நிலை மற்றும் உயர்நிலை கல்வியோடும், தனியார்மயம், மத்தியபடுத்துதல், இணையவழிக் கல்வி மற்றும் கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றோடு இணைத்து பார்க்க வேண்டியுள்ளது. UDISE+ (Unified District Information System for Education Plus) மூலம் ஒன்றிய கல்வி அமைச்சகத்திற்கு வழங்கியுள்ள தகவல்படி 2019-20ல் இந்தியா முழுவதும் 2.6 கோடி மாணவர்கள் மேல்நிலை பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு படிப்பதாகவும். இந்த எண்ணிக்கையானது இதே வயதை ஒத்த 16, 17 வயதுடையவர்களில் 51.4% மட்டுமே மேல்நிலையில் பயில்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது. அதாவது முழுமையான மேல்நிலை கல்வியே இந்தியாவில் இன்னும் சாத்தியபடாமல் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

ஒன்றிய அமைச்சகத்திற்கு உட்பட்ட AISHE (All India Survey of Higher Education) அறிக்கை தகவலின்படி 2019-20 கல்வியாண்டில் நாடு முழுவதும் மொத்தம் 3.06 கோடி மாணவர்கள் இளம்நிலை படிப்பில் பயின்று வருகிறார்கள். இதில் 79.1% பேர் கல்லூரியிலும், 17% பேர் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அலகில் உள்ள நிறுவனங்களில் இளம்நிலை படிப்பில் பயின்று வருகிறார்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களில் கணிசமான எண்ணிக்கையில் நேரடியாக பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் ஏறக்குறைய 1.3 கோடி மாணவர்கள் பள்ளிக்கல்வி முடித்துவிட்டு 70 இலட்சம் மாணவர்கள் மட்டுமே உயர்கல்வியில் இணைகிறார்கள் எனவும். இதில் அகில இந்திய கல்வி முறையான CBSE-யில் 15 இலட்சம் மாணவர்களும், ICSE-யில் ஒரு இலட்சத்திற்கு குறைவான மாணவர்களும் பயில்வது போக மீதமுள்ள மாணவர்கள் பல்வேறு மாநில கல்வி திட்டம் State Board மற்றும் அதற்கு ஒப்பான போர்டில் பயில்கிறார்கள் என கூறுகிறது.

மாநில பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மாநில அரசால் நிர்ணயிக்கப்படும் கல்வி திட்டம் (Curriculum) பின்பற்றபடுவதால் உயர்கல்விக்கு ஏற்ப மேல்நிலை கல்வி வடிவமைப்பையும், மேல் நிலை கல்விக்கு ஏற்றாற்போல் உயர்கல்வி திட்டமும் வடிவமைக்கப்படுகிறது. இத்திட்டமிடல் 1976 வரை முழுமையாக மாநில அரசு கையிலிருந்தாலும் அதன்பிறகு கல்வி ஒத்திசைவு பட்டியலுக்கு சென்ற பிறகும் ஓரளவு மாநில அரசாலயே திட்டமிடப்பட்டு வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வும் உயர் கல்விக்கு தேவையான வகையிலேயே தேர்வு முறை வகுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் தவிற அனைத்து உயர்கல்வி சேர்க்கையும் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான மாநிலங்களிலும் தொழிற்கல்வி உள்ளிட்டு மேல்நிலை இறுதி வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடக்கிறது.

ஒருசில மாநிலங்கள் மட்டுமே தொழிற்கல்வி, அறிவியல் துறை போன்ற படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்தினாலும் பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்னிற்க்கு மாற்றாக நடைபெறுவதில்லை. மருத்துவம் உள்ளிட்ட அனைத்தையும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வின் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என நாம் சொல்லும் அதே நேரத்தில் மத்திய பல்கலைக்கழகங்கள், IIT, IIM, NIT, JIPMAR போன்ற தேசிய கல்வி நிறுவனங்கள் சேர்க்கையில் தனது பல்கலைக்கழக தன்மைக்கு ஏற்ப நுழைவு தேர்வு அவசியப்படுகிறது. மாநில பல்கலைகழகத்திலும் சில பாடங்களுக்கு நுழைவு தேர்வு தேவைப்படுகிறது எனும் போது பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்ணையும் வெயிடேஜ் கணக்கிட வேண்டும் என்ற நடைமுறையுள்ளது. ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஒரு தனித்தன்மை உள்ளது, பாடபிரிவுகள் உள்ளது, கற்றல்-கற்பித்தல் முறை உள்ளது. இந்த பன்முகதன்மை வளர்தெடுக்கப்பட வேண்டும். தேவையான மாற்றத்தை இப்பல்கலைக் கழகங்களுக்கிடையே பகிர்ந்து கொள்வது, வளர்ச்சியை நோக்கிய திட்டமிடல் அவசியமாகிறது. ஆனால் ஒன்றிய அரசு அனைத்தையும் மத்திய பல்கலைக்கழகம் முதல் மாநில பல்கலைக்கழகம் வரை ஒரே மாதிரியான தேர்வு மூலம் தனது காவிகார்பரேட் கல்வி கொள்கை மூலம் பன்முகத்தன்மையை அழிக்க துடிக்கிறது.

தேசியக் கல்வி கொள்கை (NEP-2020)-ம், கடந்த பிப்ரவரியில் வெளியிட்ட NHEQF உயர்கல்வி கட்டமைப்பு வரைவும், நவதாராளமய அடிப்படையிலான முதலாளித்துவ வர்க்க கல்வி திட்டமிடலின்படி கல்வியை பணம் படைத்தவற்கான பண்டமாகவும், இட ஒதுக்கீட்டை ஒழித்து உயர் சாதி வகுப்பினருக்கான கல்வியாகவும் மாற்றப்பார்க்கிறது.

உழைக்கும் வர்க்கத்தினரும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதியினரும் கல்வியிலிருந்து தூக்கியெரியப்பட்டு சனாதன மனுவாத கொள்கையின்படி குலத்தொழில் அல்லது உடல் உழைப்பு தொழிலுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது. உயர்கல்வி நிறுவனங்கள் தேவையில்லை எனவும், சிறப்பு தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டும் அரசு நிறுவனங்கள் இருந்தால் போதுமானது என்கிறது. மற்ற உயர்கல்வி நிறுவனக்களை வசதிபடைத்தவர்கள் பயிலும் வகையில் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்கிறது.

உயர்கல்வி பயில்வோரில் 2014-15 கல்வியாண்டு முதல் 2019-20 கல்வியாண்டு வரை ஐந்தாண்டுகளில் 12.8% மட்டுமே உயர்ந்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.5% மட்டுமே உயர்ந்துள்ளது. இதே 2012-13 முதல் 2014-15 வரையிலான மூன்று கல்வியாண்டுகளில் 13.7% உயர்ந்துள்ளது. ஒப்பிட்டளவில் உயர்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் 12 ஆண்டுகள் பயின்று தேர்வாகி கல்லூரி சேர வரும் மாணவர்களை ஒரே நிழைவுத்தேர்வு என அச்சுறுத்துவது மேலும் எண்ணிக்கையை பன்மடங்கு குறைக்கவே செய்யும். மேல் நிலை கல்வி முடித்த மாணவர்களில் 50% மட்டுமே உயர் கல்வியில் இணைகிறார்கள் என்பது போதிய இடங்கள் இல்லாததும் ஒரு அடிப்படையான காரணமாகும். கடந்த இருபது ஆண்டுகளில் கல்வி பயில்வோர் எண்ணிக்கை உயர்ந்த அளவிற்க்கு கல்விகூடங்கள் எண்ணிக்கை உயரவில்லை. சீட்டுகள் எண்ணிக்கையும் கூடுதலாகவில்லை. பேராசிரியர்கள் எண்ணிக்கை, வகுப்பறைகள், உட்கட்டமைப்பு வசதி எதுவும் கூடுதலாக்கவில்லை.

ஜேஎன்யு போன்ற மத்திய பல்கலைக்கழகத்தில் 90% இடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் குறைக்கப்பட்டுள்ளது. கலைத் துறை சார்ந்த படிப்புகள் திட்டமிட்டு பல்வீனமாக்கப்பட்டு வருகிறது. தேசியக்கல்வி கொள்கையானது கலை துறைசார்ந்த படிப்பே தனியாக தேவையில்லை என்கிறது. தொழிற்கல்வியோடு ஒரு இணை படிப்பாக இணைத்துவிட கூறியுள்ளது. ஜிடிபி யில் கல்விக்கான ஒதுக்கீடு குறைப்பதோடு கல்வி செலவீனங்களை மாநில அரசிடம் தள்ளிவிட திட்டமிட்டுள்ளது.
கியூட் தேர்வானது CBT (Computer Based Test) முறையில் முழுவது கணிணிமயபடுத்தப்பட்ட தேர்வாகும். கேள்விகள் MCQ (Multiple Choice Questions) முறையில் கேட்கப்படும். அதாவது கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு நான்கு பதில்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்பதாகும். இது மாணவர்களின் முழுமையான மதிப்பீடாகாது. பனிரெண்டாம் வகுப்பில் கணித துறை மாணவர் கேட்கப்படும் கேள்விக்கு பல்வேறு கணித கணக்கீட்டு முறையில் விரிவாக விளக்கி பதிலில் மட்டும் சிறு தவறு ஏற்பட்டாலும் பதிலை நோக்கிய அவர் படிநிலை விளக்கத்திற்கு மதிப்பெண் வழங்கப்படும். இது போல் மாணவரின் தர்க்கம், ஆதாரம் காண்பித்தல், ஒப்பிடுதல், பகுப்பாய்வு செய்தல், உளவியல் அனைத்தும் தூக்கி எறிந்துவிடுகிறது. மாணவர்களும் பதிலை மட்டும் மொந்தையாக கூறும் ஆற்றலற்ற மாணவர்களாக்கப்படுவார்கள். பதிலை விரிவாக தெரிந்து கொள்ள அல்லது விளக்க அவசியமில்லை. மேலும் நுழைவு தேர்வுகான கல்வியாக மாறும் போது மேல் நிலைக்கல்வியும் பொருளற்ற கூடாக மாறிவிடும்.

நீட் தேர்வுக்கு போல் கியூட் தேர்வுக்கும் தனியார் கோச்சிங் மாபியா கும்பல் கொள்ளை அதிகமாகும். தனியார் பள்ளிகள் நேரடியாக நுழைவு தேர்வுக்கான வகுப்புகளும் அதற்கான கட்டணமும் வசூலிக்கும் ஏற்கனவே இந்தியாவில் மேல்நிலை பள்ளியில் 40.7% மாணவர்கள் தனியாரிலும், 36.3% மாணவர்கள் மட்டுமே அரசு பள்ளியிலும் பயின்று வருகிறார்கள். இந்த எண்ணிக்கை இனி வரும் காலத்தில் மேலும் அதிகரிக்கும். உயர்கல்வியிலும் இதே விகிதமே உள்ளது. 1976 கல்வியை ஒத்திசைவு பட்டியலுக்கு கொண்டு சென்ற பின் இத்தகைய தனியார் கல்விகூடங்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் கல்வியை மத்தியதுபடுத்தும் போது 80%-90% கல்வி நிறுவனங்கள் தனியார் கல்விக்கூடமாக மாறும்.

கியூட், நீட் போன்ற தேர்வுகளை நடத்தும் NTA (National Testing Agency) தேசிய தேர்வு முகமை குளறுபடிகள் ஊழல் மலிந்து காணப்படுகிறது. கடந்தாண்டு ஜவஹர்லால் நேரு மத்திய பல்கலைக்கழகத்திற்க்கான நுழைவு தேர்வில் விடைபட்டியலை முழுமையாக வெளியிடவில்லை. வெளியிட்ட விடைகளிலுள்ள தவறான பதிலுக்கு முறையீடு செய்தும் தவறை கலையவில்லை. இது சிறு எடுத்துகாட்டுதான் இதுபோல் பல பிரச்சனைகள் இத்தேர்வு முகமையில் உள்ளது. கேள்விகளை முன்கூட்டியே வெளியிடுதல், ஆள்மாறாட்டம், சில தனியார் கோச்சிங் நிறுவனத்தோடு அதிகாரிகள் மூலம் நேரடியாக புளுபிரிண்ட் லீக் செய்வது என பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இளம்நிலை பாடங்களுக்கான நுழைவு தேர்வு ACT/SAT யை 1,600 கல்வி நிலையங்கள் தேவையில்லை என மறுத்து மேல்நிலை தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே சேர்க்கை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்காவில் மூன்றில் இரண்டு அதாவது 2,330 இளம்நிலை கல்வி வழங்கு நிறுவனம் நுழைவு தேர்வு அவசியமில்லை எனவும், இத்தேர்வு முறையானது அவர்கள் கல்வி சூழலோடு பொருந்தி வரவில்லை என்றும், நுழைவு தேர்வில் மதிப்பெண் பெற்றவர்கள் அதற்கேற்ற கல்வி தரத்தோடு இல்லை என கூறி இத்தேர்வு முறையே ஒரு கண்மூடிதனமான ஏற்பாடு என தெரிவித்துள்ளனர்.

நீட் வரிசையில் கியூட் தேர்வையும் கடுமையாக மாணவர்கள் எதிர்த்தாக வேண்டும். கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருவதோடு, அனைத்து பல்கலைக் கழகங்களையும் சுயேட்சையாக தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்பட செய்வதும், மாணவர் சேர்க்கை நடத்திக்கொள்ளவும் வேண்டும். மேலும் கூடுதல் நிதி ஒதுக்குதல், பேராசிரியர்கள், வகுப்பறைகள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். இந்தியாவில் உயர்கல்வியை வளர்ச்சிக்கு இட்டு செல்ல இத்தகைய நடவடிக்கையே அவசியமாகும்.

கட்டுரையாளர்: க.நிருபன் சக்கரவர்த்தி
                                  இந்திய மாணவர் சங்கம்(SFI)

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *