திராவிட மாடல் ஒரு பார்வை! – பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
திராவிட மாடலின் பிரதானமே அனைவருக்குமான சமூக நீதி அதை இந்தியாவும் முழுவதும் கொண்டு செல்வோம் என தமிழக முதலமைச்சரும், ஆளுங்கட்சியான திமுக-வும் தொடர்ச்சியாக கூறி வருகிறது. அரை நூற்றாண்டுகளில் தமிழகம் அடைந்திருக்கும் வளர்ச்சியில் இருபெரும் திராவிட கட்சிகளின் பங்கு உண்டு. ஆனால் அவை சாமானிய மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அன்றாட வாழ்க்கை நிலைமையை மாற்றியிருக்கிறதா?
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட 10 மாதங்களுக்கு உள்ளாகவே தேசிய அளவில் திராவிட மாடலை முன்னிறுத்தும் வேலைகளை நாங்கள் துரிதப்படுத்துவோம் என்று சமீபத்தில் தமிழக முதல்வர் கூறியிருந்தார். ஆனால் திராவிட மாடல் செய்ததெல்லாம் மக்கள் நலன் திட்டங்களைதான். அதிகாரம் மையப்படுத்தப்பட்ட கூட்டாட்சி கட்டமைப்பின் நவதாராளவாத பொருளாதாரத்தில் இது சாத்தியமா? இவை குறித்து சமீபத்திய தமிழக பட்ஜெட்டின் வாயிலாக பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா விளக்குவதே இக்கட்டுரை.
வெ. ஆத்ரேயா: உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி, அதிகாரம் மற்றும் அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் இருபெரும் திராவிட கட்சிகளின் அரசாங்கமும் பொதுவாகவே பெரும் தயக்கம் காட்டுகின்றன. கேரளாவிற்கு இது முற்றிலும் நேர்மாறாக உள்ளது. குறிப்பாக 2016 முதல் தொடர்ச்சியாக கேரளாவில் ஏற்பட்ட பேரிடர்களின் படிப்பினைகளில் இருந்து, அவர்கள் வருங்காலத்தில் எதிர்கொண்ட பேரழிவை கேரள அரசாங்கம் உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் அற்புதமாக கையாண்ட விதத்தை நாம் பார்க்கலாம்.
தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் முன்வைத்த திட்டமான அதிகாரம் பரவலாக்குதல் என்ற ஜனநாயக அமைப்பினையே கேரளா நீண்டகால பாரம்பரியமாக கொண்டிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் திட்டம் (People’s Planning) என்ற வரையறையுடன் செயல்பட தொடங்கினர். உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி மற்றும் வளங்களை வெறுமனே இழப்பீடாக மட்டும் வழங்காமல் அதிகாரங்கள் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியிலும் அவர்களை பங்கு கொள்ள செய்தனர். கோவிட் பெருந்தொற்றினை கட்டுப்படுத்தியதிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு அளப்பரியது. ஆனால் தமிழ்நாடோ அதிகார பரவலாக்கலை செய்ய தவறிவிட்டது. அவர்களுக்கு அதில் விருப்பமும் இருந்ததில்லை. ஏனென்றால் பல நேரங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கென தேர்தலையே நிறுத்தி வைத்திருக்கின்றனர்.
கேள்வி : இது ஒன்றிய அரசாங்கத்தின் செயல்பாடுகளுடன் முற்றிலும் ஒத்துப்போகிறதே?
சில மாதங்களுக்கு முன்பு நகர்ப்புற, கிராமப்புற அமைப்புகளுக்கான தேர்தல்களை திமுக அரசாங்கம் நடத்தியது. அதோடு அதன் வேலை முடிந்துவிட்டதாக இருக்க கூடாது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி, வளங்கள் மற்றும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதனை ஒரளவுக்கு செய்திருக்கிறார்கள் ஆனால் இன்னும் அதிகமான அளவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். பட்ஜெட்டில் மற்ற துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஆதாரங்களை போன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கேள்வி: திராவிட மாடலின் முரண்பாடுகள் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?
திராவிட மாடல் என்பது மக்கள் நல திட்டங்களை அடிப்படையாக கொண்டிருக்கிறது அதில் மாற்றுக்கருத்து இல்லை. திராவிட மாடல் என்று கூறியதுமே அதன் முக்கியமான செயல்பாடுகளான சமூக நீதி, சாதிக்கு எதிரான சீர்திருத்த நடவடிக்கைகள் இருந்திருக்கின்றன. அவர்கள் முக்கியமாக நிலச் சீர்திருத்தம் என்பதை தவிர்த்தே வந்திருக்கிறார்கள். திராவிட மாடலை பின்பற்றுபவர்கள் நில உரிமையாளர்களே தேவையில்லை என்கிறார்கள். அதற்கு மாற்றாக சமூக நீதி, இட ஒதுக்கீடு மற்றும் பொது விநியோக முறையை (PDS) காண்பிக்கிறார்கள். இவற்றையே போதுமானது என்று கருதிவிடமுடியாது.
பொது விநியோக முறை மற்றும் பிற மக்கள் நல திட்டங்களின் நிதி ஆதாரங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கப்போகும் நிதியை பொறுத்தே உங்களால் அதனை செயல்படுத்த முடியும். அது ஒரு நிச்சயமற்ற தன்மையை கொண்டது. நிலச்சீர்திருத்தம் வெறுமனே பொருளாதார நடவடிக்கையாக மட்டும் இல்லாமல், கிராமப்புறங்களில் சாதிய மேலாதிக்கத்தையும், ஒடுக்குமுறையையும் உடைத்தெறியக்கூடிய ஒரு வழிகாட்டியாக விளங்குகிறது. தமிழ்நட்டில் தலித்துகளுக்கு எதிரான அடக்குமுறைகள் இன்னமும் மக்களின் பொதுப்படையான பேச்சின் முக்கியமான அங்கமாக நீடிப்பதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆணவ படுகொலைகள் போன்றவை இப்பிரச்சினையை மேலும் வீரியமாக்குகின்றன. இதற்கு நிலச்சீர்திருத்தம் குறித்து ஒரு பரந்துபட்ட பார்வை இல்லாததும் ஒரு காரணம். இதனை திராவிட ஆட்சியாளர்களும் முக்கியமான ஒன்றாக ஏற்க மறுக்கிறார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதை முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடலின் முன்னுதாரணமாக காண்பித்தார். ஆனால் நிதியமைச்சர் தியாகராஜன் திராவிட மாடல் என்ற சொல்லாடலை எந்த அர்த்தத்தில் தொடர்ச்சியாக குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் திராவிட மாடலின் வரையறைகள் அதன் பலம் குறித்து நாம் விவாதிக்கலாம்.
‘திராவிட மாடல் என்பது முற்றிலும் நவதாராளவாத கொள்கை கட்டமைப்பாகும். இக்கட்டமைப்பிற்கும் பொது விநியோக முறை (PDS) மற்றும் மாநிலத்தின் பிற துறைகளின் மூலம் மக்களின் நலன் திட்ட தேவையை நிவர்த்தி செய்ய முயலும் கொள்கை கட்டமைப்பிற்கும் இடையேயான உள்ளார்ந்தபடி மோதல் நடைபெறுவதால் இதில் ஒரு நிலையற்ற தன்மை நிலவுகிறது. பல விசயங்களில் தெளிவற்ற தன்மை இருக்கிறது. எனவேதான் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனே இதனை முழுமையாக அங்கீகரிக்க மறுக்கிறார்.
– பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா.