வேலியே பயிரை மேயலாமா? பாசிசம் பேசும் மோடி ஜனநாயகவாதியா?
“பிரதமர் மோடி அவர்களே நீங்கள்தான் இந்த நாட்டின் பாதுகாவலரா (chowkidar)? கூறுங்கள் என் மகன் எங்கே?” 5 வருடங்களுக்கு முன்பு மாயமான மாணவர் நஜீப் அகமது தாயாரின் வார்த்தைகள் இவை.
நேர்மையை வளர்த்து கொள்ளுங்கள் என எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து பாடம் எடுக்கும் மோடி இந்த தாயின் கண்ணீருக்காவது தான் கூறிய அத்தகைய ‘அறிவார்ந்த நேர்மை”-யுடன் பதிலளிப்பாரா?
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சிறுபான்மை மக்கள் மற்றும் ஜனநாயக அமைப்புகளில் இருந்து குரல் கொடுப்பவர்கள் மீது வன்முறை தாக்குதலையும், கடுமையான சட்டங்களையும் தொடுத்து வருகிறது.
கடந்த ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லி ‘ஷாகீன்பாக்’கில் முஸ்லீம் பெண்கள் கூட்டமைப்பு தலைமையில் போராட்டம் பெரிய அளவில் நடந்து வந்தது. இதை சீர்குலைப்பதற்காக டெல்லி தேர்தல் பிரசாரத்தின்போது போராட்டகாரர்களை கொச்சைப்படுத்தும்விதமாக “துரோகிகள் ஊடுருவி விட்டார்கள், தேசவிரோதிகள் மற்றும் பாகிஸ்தான் ஆதரவு கைக்கூலி என பா.ஜ.க. தலைவர்கள் விஷமத்தனமான பேச்சுக்களால் வெறுப்பரசியல் செய்தனர்.
இதன்விளைவாக வடகிழக்கு டெல்லியில் முஸ்லீம் சிறுபான்மை மக்கள் மீது சங்பரிவார கும்பல் கலவரத்தை உண்டு பண்ணியது. இந்த கலவரத்தினால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நாட்டின் பாதுகாப்புக்கு என்ன ஆவது?? என்று எந்நேரமும் கவலை கொள்ளும் பிஜேபி அரசும் , மத்திய உள்துறை அமைச்சரும் இதுவரை இந்த கலவரம் தொடர்பாக மவுனம் சாதித்து வருகின்றனர்.
கலவரத்தை தூண்டிய பா.ஜ.க எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா மீதோ, அதில் ஈடுபட்டவர்கள் மீதோ நடவடிக்கை எடுக்காத மோடி அரசு, போராட்டத்தின் முன்னனியில் நின்று கலந்து கொண்ட மாணவர்களையும், இயக்க தலைவர்களையும் தேசவிரோத மற்றும் ஊபா போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் போலியான வழக்குகளில் சிறைப்படுத்தியவர்களுக்கு பிணை கூட வழங்காமல் மோடி அரசு தனது பாசிச போக்கை கடைபிடித்து வருகிறது.
இவ்வழக்கில் சிறையில் உள்ள ஜே.என்.யூ மாணவர் சங்க தலைவர் உமர் காலித் மீது குற்றம் சாட்டியதற்கான ஆதாரத்தை நீதிமன்றம் கேட்டபோது மோடி அரசு ஊடகங்களை கை காட்டியது. அவையோ பா.ஜ.க. ஐடி விங்க்கின் போலி செய்திகளை நீதிமன்றத்தில் சாட்சியங்களாக காண்பித்து இருக்கின்றன.
இவ்வாறு முழுக்க முழுக்க பழிவாங்கும் நோக்கில் உண்மைக்கு புறம்பாக வழக்குகளை சித்தரித்திருப்பதும் அம்பலமாகி இருக்கிறது.
இதே வேலையைத்தான் பீமா கோரேகான் வழக்கிலும் செய்தது. இவ்வாறு பல தில்லுமுல்லுகளின் மூலமாக வழக்குகளில் சிக்க வைக்கும் முயற்சியை, தொடர்ச்சியாக போராடும் ஜனநாயக அமைப்புகள் மீது அரச பயங்கரவாத ஆயுதம் கொண்டு அடக்கி வருகிறது பாஜக அரசு.
‘என் மகன் உயிரோடு இருக்கிறான். மீண்டும் திரும்பி வருவான்’ என நம்பிக்கையோடு காத்திருக்கும் நஜீப்பின் தாயாருக்கு இந்த அரசு என்ன பதில் சொல்லப்போகிறது? இந்த வேளையில் டெல்லி காவல்துறையும், மத்திய புலனாய்வு பிரிவும் (சி.பி.ஐ.) எங்களால் நஜீப்பை கண்டுபிடிக்க முடியவில்லை என கைவிரித்து வழக்கையும் அத்தோடு முடித்து வைத்திருக்கிறது.
இந்தியாவின் பண்பாட்டையும், பெருமைகளையும் உலக அரங்கில் மெச்சி கொள்ளும் பிரதமர் மோடியும், அவரது அரசும் தன் கையாளாகத்தனத்தை மறைக்க மக்களின் குரல்வளை நெறிபடுவதை விடுத்து, பொய்யான வழக்குகளில் சிறையில் உள்ள இயக்க தலைவர்களையும், மாணவர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!