ஜவுளித்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்! செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.)
இந்தியாவில் ஜவுளித்துறை மிகப்பெரும் வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இருக்கும் நிலையில் இதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இங்கிருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக்கூடியதாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வெறும் லாப நோக்கத்திற்காக மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தடுத்து முறைப்படுத்த வேண்டியதும், முன்னெச்சரிக்கையுடன் கையாள வேண்டியதும் அவசியமாகும்.
தொழில்நுட்பம் என்பது மனித நுண்ணறிவை போலவே சிந்திக்கவும், பிரதிபலிக்கவும் கூடியது. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து தொழில் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே ஜவுளித் தொழில்களில் தானியங்கி செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு கருவிகளை தன்னியக்கமாக்குதல், பரப்புதல், வெட்டுதல், தையல் ஆகியவற்றில் உற்பத்தி செலவைக் குறைக்கவும், ஜவுளி உற்பத்தியில் மனிதரால் ஏற்படக்கூடிய குறைபாடுகளை நீக்கி துல்லியமாக இருக்கக்கூடிய ஆடைகளை வடிவமைப்பது உட்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஜவுளித் தொழில்களில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய ஜவுளித் தொழில்கள் அதிகளவில் தானியங்கிகள் வருகின்றன. மேலும் தரக் கட்டுப்பாடு போன்றவற்றின் பல்வேறு நிலைகளுக்கு செயற்கை நுண்ணறிவு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
பல வகையான செயற்கை நுண்ணறிவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.இணையத்தில் அதிகம் தேடப்படும் ஆடை வகைகளின் தரவுகளை பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு உதவியுடன் ஆடைகளை உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்கள் சந்தையின் தேவைகேற்ப ஆடையை வடிவமைக்க தொடங்கி உள்ளனர். அந்த வடிவமைப்பிலும், நூல் மற்றும் துணியின் தரவுகளைப் பயன்படுத்தி துணியின் தரத்தை சரி பார்க்க செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறது.
இது குறித்து சென்னை எஸ்.ஆர்.எம். கல்லூரி பேஷன் டிசைனிங் துறை பேராசிரியர் சத்திய நாரயணன் கூறுகையில், இந்த டிஜிடல் காலகட்டத்தில், பேஷன் துறையில் ஏஐ மற்றும் மெஷின் லேனிங் சார்ந்த தொழில்நுட்பங்கள் உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் உதவுகிறது. பொதுவாக இண்டஸ்ட்ரியல் இஞ்சீனியரிங் எனப்படும் தொழிற்சாலை உற்பத்தி விபரங்கள், ஒவ்வொரு பணிக்கான கால நேரம், தொழிலாளர்களின் உற்பத்தி திறன் குறித்த ஆய்வுகளை கணக்கிட்டு அதற்கேற்ப ஆடை உற்பத்தியை அதிகரிப்பதற்கான செயல்களில் ஏஐ பங்கு வகிக்கிறது. மேலும் உலக சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஆடை வடிவமைப்புகளை அந்தந்த நாடுகளின் தட்பவெப்பத்திற்கு ஏற்ப கண்டறிந்து அதற்கேற்ப ஆடை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
ஆடை வடிவமைப்பின் முக்கிய நோக்கமே வாடிக்கையாளர்களை கவர்வது. அதற்காக உருவாக்கப்படும் ஆடைகளை வடிவமைக்க சரியான வண்ணம் மற்றும் பேட்டர்ன்களை பொருத்திப் பார்த்து சரியானதை தேர்ந்தெடுத்து ஆடை உருவாக்குவது. இதில், பல பேட்டன்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து புதிய பேட்டன்களை உருவாக்குவதில் மனிதனின் துல்லியத்தை விட ஏஐயின் துல்லியம் சரியானதாக இருப்பதால், அமேசான் போன்ற பெரும் நிறுவனங்கள் ஏஐ செயலிகளை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். உற்பத்தி போன்று விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலிலும் ஏஐ-யின் தாக்கம் தொடங்கியுள்ளது. அந்தந்த பகுதிகளில் இணையத்தில் அதிகம் தேடப்படும் பிரபலங்களின் விவரங்கள், தேடுபவர்களின் வயது வரம்பு போன்ற தகவள்களை திரட்டி அதை பிராண்ட் ப்ரமோடிங் செய்து ஆடைகளை சந்தைபடுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் புதிய மூலப்பொருட்கள் மூலம் பருத்திக்கு மாற்றான மூலப்பொருளை பயன்படுத்தி ஆடை தயாரிக்கும் ஆராய்ச்சிகளுக்கும் ஏஐ சோதனை செய்து வருகின்றனர்.
உலக அளவில் உற்பத்திகள் அதிகரித்து வருகிறது. மேலும் புதிதாகத் தொடங்கப்படும் துளிர் நிறுவனம் (ஸ்டாட் அப்களும்) பெருகி வருகின்றன. ஆனால் சந்தையின் ஏற்ற இறங்க நிலவரங்களை அறிந்து அதற்கேற்ப உற்பத்தியைத் தீர்மானிக்கவும், ஏஐ உதவுகிறது என்று பேராசிரியர் சத்தியநாராயணன் தெரிவித்தார்.
விர்ச்சுவல் கண்ணாடி:
பல நாடுகளில் கிளைகள் வைத்துள்ள வான் ஹூசன் நிறுவனத்தின் ஸ்டோர்களின் ஆடைகளை போட்டு பார்க்காமலே, விர்ச்சுவல் கண்ணாடியின் முன் நின்று ஆடையின் பார் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்ணாடியில் முப்பரிமாணத்தில் நமது உடலுக்கு ஆடை பொருத்தமாக உள்ளதா என பார்க்க முடிகிறது. மேலும் வேறு ஆடைகளை நமக்கு பரிந்துரைக்கவும் செய்கிறது. இதுவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடியதாகும்.
கலர் ரீல்:
நமது ஆடைகளை அலங்கரிக்கும் எம்ராய்டிங் வடிவமைப்பை கோடிங் மூலம் வடிவமைத்து தந்தால் போதும் துல்லியமான வண்ணங்களில் பிரிண்டிங் போலவே எம்ராய்டிங் செய்து தருவதற்கு கலர் ரீல் இயந்திரம் உள்ளது. தானியிங்கியாக செயல்படும் இந்த இயந்திரம் சுவீடன் போன்ற நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இப்போது இந்தியாவிலும் இந்த கலர் ரீல் இயந்திரம் இறக்குமதி ஆகியுள்ளது. எம்ராயிடரிங் துறையில் கடந்த ஓராண்டாக இந்தியாவிலும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. நம் நாட்டில் மொத்தம் 7 கலர் ரீல் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன என்றும், அதில் ஹைதராபாத்தில் ஒன்றும், மீதி ஏழு தமிழ்நாட்டில் தான் உள்ளன. நான்கு திருப்பூரிலும், இரண்டு கோவையிலும், கன்னியாகுமரியில் ஒன்றும் இருப்பதாக விற்பனை முகவர் மூலம் தெரியவருகிறது. இந்த இயந்திரத்தின் முக்கியப்பணி வெள்ளை நூலை பிரிண்டர் போல செயல்பட்டு, ஆர்ஜிபி அடிப்படை வண்ணங்களை பயன்படுத்தி அனைத்து வண்ணங்களுக்கும் மாற்றக்கூடியது. மேலும் வண்ணம் மாற்றப்பட்ட நூலை மென்பொறியின் உதவியுடன் எம்ராய்டிங் வடிவமைப்புகளாக தைக்க கூடியதாகவும் இருக்கிறது.
இதிலும் என்ன மாதிரி வண்ணங்களின் கலவை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்க முடியும் என்று தெரிவிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.
பேஷன் துறையில் வடிவமைப்பில் இருந்து உற்பத்தி செயல்முறை, விநியோக தொடர் மற்றும் சந்தைப்படுத்துவது வரை அனைத்து நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புதிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது.
எதிர்மறை சமூக விளைவு
எனினும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதன் மற்றொரு விளைவாக ஏராளமானோரின் வேலைவாய்ப்பு பறிபோய்க் கொண்டிருக்கிறது. சமூக நெருக்கடி அதிகரிக்கிறது. எனவே செயற்கை நுண்ணறிவு தொழி்லநுட்பத்தை எப்படி பயன்படுத்துவது, எந்தெந்த வகையில், என்ன அளவில் பயன்படுத்துவது என்பது பற்றிய விவாதங்கள் உலகளவில் நடைபெற்று வருகின்றன. புதிய நவீன தொழில்நுட்பம் வருவதை தவிர்க்க முடியாவிட்டாலும், அவை மனித வாழ்வை எளிமைப்படுத்துவதற்கு உதவலாம், அவர்கள் வேலைவாய்ப்பை பறித்து சமூக நெருக்கடியை அதிகரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே அறிஞர்கள் கருத்தாக உள்ளது.
இந்தியாவில் ஜவுளித்துறை மிகப்பெரும் வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக இருக்கும் நிலையில் இதில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இங்கிருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கக்கூடியதாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, வெறும் லாப நோக்கத்திற்காக மட்டுமே இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை தடுத்து முறைப்படுத்த வேண்டியதும், முன்னெச்சரிக்கையுடன் கையாள வேண்டியதும் அவசியமாகும்.
கட்டுரையாளர்: லிவின்