Tamil Marx

இந்தியா

முஸ்லிம் தொழிலாளர்களை தடுப்பு சிறையில் வைக்கும் காங்கிரஸ் அரசு

முஸ்லிம் தொழிலாளர்களை தடுப்பு சிறையில் வைக்கும் காங்கிரஸ் அரசு
  • PublishedSeptember 4, 2026

கர்நாடக காங்கிரஸ் அரசு, அங்கு வசிக்கும் பெங்காலி மொழி பேசும் மேற்கு வங்க புலம்பெயர் தொழிலாளர்களை “வங்க தேசத்தைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள்” என கைது செய்து தடுப்புக் காவலில் வைப்பது தீவிரமடைந்துள்ளது. இந்த நடவடிக்கையால் இந்தியாவின் சொந்த குடிமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஃபிகுல்பிஸ்வாஸ் என்பவர் பெங்களூருவில் ஓட்டுநராகவும், பழைய பொருட்கள் வியாபாரமும் செய்து வந்தார். கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், வங்க தேசத்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்டு பெங்களூரு காவல்துறையால் அவர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் மையத்தில் (Detention Centre) அடைக்கப்பட்டார்.

அவரிடம் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைபோன்ற அனைத்து இந்திய ஆவணங்களும் இருந்தபோதும், அவை “போலியானவை” எனக் கூறி அதிகாரிகள் ஏற்க மறுத்தனர்.

சுமார் ஓராண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, 2026 ஆகஸ்ட் 4 அன்று கர்நாடக உயர்நீதிமன்றம், “பிஸ்வாஸின் குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் வசித்து வரும் இந்தியக் குடிமகன்” எனத் தீர்ப்பளித்தது. ஆனால், நீதிமன்றத் தீர்ப்பு வந்த நான்கு நாட்களிலேயே (ஆகஸ்ட் 8), ‘ஆபரேஷன் முக்தா’ என்ற பெயரில் நடத்தப்பட்ட சோதனையில்,பிஸ்வாஸையும் அவரது மனைவியையும் காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர். இவ்வாறு சுமார் 3,000தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதில் 105 பேர் மட்டுமே ஆவணங்களற்ற வங்கதேசக் குடியேறிகள் என்பது தெரியவந்தது. எஞ்சிய நூற்றுக்கணக்கான இந்தியக் குடிமக்கள் 12 முதல் 14 மணி நேரம் திருமணமண்டபங்கள் மற்றும் காவலில் வைக்கப்பட்டுப் பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.

நீண்ட தாடி மற்றும் லுங்கி அணிந்திருந்த காரணத்திற்காகவே, ஆவணங்களைச் சரிபார்க்காமல் காவல்துறையினர் தங்களை “வங்க தேசத்தினர்” என முடிவுசெய்து துன்புறுத்தியதாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேபோல பெங்களூருவில் வலதுசாரி அமைப்புகள் மேற்கு வங்க மற்றும்முஸ்லிம் தொழிலாளர்களுக்கு எதிராகநடத்தி வரும் பிரச்சாரங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே, அரசியலமைப்பு நடைமுறைகளைப் பின்பற்றாமல் காங்கிரஸ் அரசு இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளப்பட்டுள்ளதாக மனிதஉரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர் .

பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களைப் போலவே, காங்கிரஸ் ஆட்சியிலும் பெங்காலி பேசும் இந்திய முஸ்லிம் தொழிலாளர்கள் ‘வங்கதேசத்தவர்’என்ற சந்தேகக் கண்ணோட்டத்துடனே. பார்க்கப்படுகிறார்கள்.சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக்கண்டறிவதில் தவறு இல்லை என்றாலும், அதைப் போர்வையாகக் கொண்டு இந்தியக் குடிமக்களைத்துன்புறுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *