கோவிலும் உண்டியலும் கம்யூனிஸ்ட்கள் கையில் பாதுகாப்பாக இருக்கும்-கே.வசந்தன்
நாட்டில் மிகப்பிரபலமான முக்கிய செய்தி ஊடகங்களுக்கு இதை கண்டுகொள்ளாதீர்கள் அல்லது அடக்கி வாசியுங்கள் என்ற உத்தரவுகள் பறந்தன. அது அவ்வாறே நடைமுறைப்படுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுகின்றது. அது “இந்த கொள்ளைக்கூட்டத்திடமிருந்து கடவுள் ராமராவது தப்பித்து விடுவாரா?”
ராமர் கோவில் கொள்ளை
சமீபத்தில் அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கப்பட்டுள்ள கொள்ளை ராமரை தமது இஷ்ட தெய்வமாக போற்றி வழிபடும் உண்மையான பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது ஏதோ இப்பொது நடந்த கொள்ளை மட்டுமல்ல ஆரம்பத்திலிருந்தே நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மதவெறியை ஊதி விட்டு மக்களை திரட்டிய சங்பரிவார் கும்பல் அந்த சாதாரண மக்களின் கண்களை மறைத்து காதுகளையும் செவிடாக்கியதன் காரணமாக அவையெல்லாம் கவனத்திற்கு வராமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. அதிலும் யாரையெல்லாம் ‘என் நம்பிக்கைக்குரியவர்கள்’ என்று சொல்லி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோவில் பொறுப்புகளில் அமர்த்தினரோ அந்த கூட்டம் தான் இந்த திருப்பணியை செய்திருக்கிறது என்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது. திருவாளர் ஞானேஸ் குமார் குப்தாவை நாடறியும் அவர் பெயரை சொன்னவுடன் ‘ஓட்டுத்திருட்டு’ தான் அனைவரது சிந்தனையிலும் எழும். அதுமட்டுமல்ல மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விரும்பிய படி எல்லாம் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் அவர் தலைமை தேர்தல் அதிகாரியாக மிக உயர்ந்த பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.
இந்த திருட்டு நடந்த காலமெல்லாம் அதாவது 4 வருடங்களாக கோவில் கமிட்டிக்குள் ஒரு உறுப்பினராக மோடியால் நியமிக்கப்பட்டவரும் இதே ஞானேஸ் குமார் குப்தா தான். ராமர் கோவில் கட்டுமானக்குழுவின் தலைவர் நிரிகேந்தர மிஸ்ரா என்பவர் வெளிப்படுத்தியுள்ள கருத்து முக்கியமானது. குப்தா உறுப்பினராக இருந்த காலத்தில் தான் இத்தனைக் கொள்ளையும் நடந்தேறி இருக்கிறது. இந்த தகுதியை வைத்து தான் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு அவரை நியமித்தார் போலும் என வெளிப்படையாகவே பேசியுள்ளார்.
அடித்த கொள்ளைக்கு அளவில்லை
இந்த கொள்ளை வெளியுலகத்திற்கு தெரிய வரும் போது சொல்லப்பட்ட செய்தி ரூ.200 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதே. ஆனால் உண்மையான மதிப்பு இன்னும் பல மடங்காக இருக்கலாம். ஏனெனன்றால் திருடியது உண்டியலில் அளித்த காணிக்கையாக போட்ட பணத்தை மட்டுமல்ல, மிகப்பெரிய அளவில் அளிக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி என அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. உச்சபட்சமாக ராமர் பாதத்தில் இருந்த தங்கப் புத்தகமும் திருடப்பட்டுள்ளது. அதுமட்டுமா தங்கம் , வெள்ளி, துத்தாநாகம், செம்பு, ஈயம், தகரம், இரும்பு, பாதரசம் ஆகிய 8 உலோகங்களால் ஆன எண்மக் கலவையாக செய்யப்பட்ட அஷ்டதாது என்ற புனிதப்பொருளும் திருடப்பட்டுள்ளது.
இந்த அஷ்டதாதுவை கொன்டு தான் கோவில்களில் பொதுவாக கடவுள் உருவங்களை வடிவமைப்பது அவர்களின் புனிதச் சின்னங்களை வடிவமைப்பது என்பது வழக்கத்தில் உள்ளது. என்னே இவர்களின் ராமபக்தி! இன்னொரு முக்கிய செய்தி : மேற்சொன்ன உலோகங்கள் எல்லாம் ராமர் கோவில் கட்டுவதற்காக பலராலும் நன்கொடையாக முன்னரே கொடுக்கப்பட்டது. அவர்களின் இறை நம்பிக்கைக்கு இந்த இந்து மதக்காவலர்கள் இதனைக்காட்டிலும் துரோகம் இழைக்க எதுவும் உண்டா ? எனவே தான் இது வெறும் ரூ.200 கோடி பிரச்சனை மட்டுமல்ல பல நூறு கோடி திருட்டு. இன்று உபி அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள சிலர் தவிர இந்தக் கொள்ளையால் அதிக ஆதாயம் அடைந்த பலரும் இன்னும் வெளியில் இருக்கிறார்கள்.
பாதுகாப்பு மீறல்கள்
நன்கொடையாக பெற்ற பல வகையான பொருட்களை பாதுகாக்கும் பணியில் முக்கிய பொறுப்பு வகித்தவர் இது பற்றி செய்தியார்களிடம் கூறும் போது தங்கம் வெள்ளி வைரம் என விலை உயர்ந்த காணிக்கைப்பொருட்கள் எல்லாம் கோவிலின் அறக்கட்டளை பொதுச் செயலாளரான சாம்ப்த் ராய் அவர்களிடம் பொறுப்பாக கொடுக்கப்பட்டது. மற்ற பொருட்கள் மட்டுமே எனது பொறுப்பில் கர சேவக் புறத்தில் உள்ளது என கூறியுள்ளார். ( கர சேவக் புறம் ராமர் கோவிலில் இருந்து 2 கிலோமீட்டர் தள்ளி சுற்று சுவர் பாதுகாப்புடன் உள்ள ஒரு இடமாகும். இதுவே விஷ்வ ஹிந்து பரிசத்தின் உள்ளூர் தலைமையகமாகவும் இருந்து இருக்கிறது.
கோவில் கட்டுமானக்குழுவின் தலைவர் நிரி கேந்திர மிஸ்ரா சொல்வதைக்கேளுங்கள்: அதாவது பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள், கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிகள் இவற்றில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே செயல் படுத்தப்பட்டது. 90 சதவிகிதம் கண்டுகொள்ளப்படவில்லை. கொள்ளையடிப்பதற்கு கதவை திறந்து விட்ட கதைதான் இது என்று சொல்லாமல் சொல்கிறார். உதாரணத்திற்கு மிக முக்கியமான தேவையான இடங்களில் குறிப்பாக காணிக்கை என்னும் இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் எண்ணுபவர்கள் எல்லாம் நம்முடைய ஆட்கள் தான் அவர்கள் மீது சந்தேகம் தேவையில்லை எனக்கூறி காமிராக்கள் பொருத்தும் வேலையை அறக்கட்டளையின் செல்வாக்கு மிகுந்த நிர்வாகி தடுத்து இருக்கிறார். ஆனால் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள ஏஜென்சிகள் யாருக்கும் தெரியாமல் மறைவாக கேமிராக்களை பொறுத்தியுள்ளனர்.
அதனை வைத்து தான் விசாணையின் போது ஒரு கோவில் ஊழியர் வீட்டில் மாட்டு சாணக்குவியலுக்கு அடியில் 10 லட்சம் ரூபாய் மறைத்து வைக்கப்பட்டிருந்தது பிடிபட்டது. இப்படிப்பட்ட திருடர்களுக்கு கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் மறைமுக பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்பதெல்லாம் விசாரணையில் தெரிய வருகிறது. ஒரு சிறிய நிறுவனம் கூட தனது பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வேலை முடித்து வெளியே செல்லும் ஊழியர்களை பரிசோதனை செய்தே அனுப்பும்.
ஆனால் அயோத்தி ராமர் கோவிலில் ஒரு சிலருக்கு மட்டும் இப்படிப்பட்ட பரிசோதனைகளில் இருந்து விலக்களிக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில் ?
பொதுவாக இது போன்ற சம்பவங்களை தடுக்க திடீர் பரிசோதனைகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. ஆனால் உத்தர பிரதேச மாநில உயர் காவல்துறை அதிகாரிகளோ அல்லது பாதுகாப்புப்பணிக்கு அமர்த்தப்பட்ட அலுவலர்களோ காணிக்கை எண்ணும் அறைக்கு அருகே கூட செல்ல முடியாத அளவுக்கு தடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு என்ன பதில்? இவை எல்லாம் கோவில் அறக்கட்டளையின் செல்வாக்கு மிக்க அறங்காவலரின் உத்தரவுப்படியே நடந்துள்ளது என்பது தான் இவற்றுக்கான பதில்.
மோடியின் தலையீடு
1989 இல் கோவில் அறக்கட்டளையை உருவாக்கியவர்களில் மோடிதான் முக்கியமானவர். ஆர்எஸ்எஸ்-இன் நம்பகமான, இந்துத்துவா சிந்தாந்த பிடிப்பு கொண்ட உறுப்பினர்களைக் கொண்டே மோடி கோவில் அறக்கட்டளையை உருவாக்கினார். சட்ட விதிப்படி ஒரு தலித் உறுப்பினர் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரும் அறக்கட்டளை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எனவே மோடியின் ஆட்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பதற்கு வேறு ஆதாரம் தேவையில்லை.
நேரடி குற்றச்சாட்டுகள்
சாம்பட்ராய் என்பவர் நீண்டகால ஆர்எஸ்எஸ் செயல்பாட்டாளர். இவர் தான் கோவிலுக்கான நிலத்தை பலரிடமிருந்து மூன்று கோடி ரூபாய்க்கும் குறைவாக வாங்கி சில நாட்களே கழித்து அந்த நிலத்தை 24 கோடி ரூபாய் கொடுத்து அறக்கட்டளை வாங்கும்படி செய்த உத்தம ராம பக்தர். இது மிகபெரிய சர்சையை அப்போதே கிளப்பியது. ஆனாலும் இந்த சாம்பட்ராய் மேற்பார்வையில் தான் ராமருக்கு என்ன பூஜை புனஸ்காரங்கள் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து அன்றாட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே தான் இந்த நபருக்கு தெரியாமல் இவர் சம்மதம் இல்லாமல் இப்படிப்பட்ட கொள்ளை நடந்திருக்கும் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. இதற்க்கு இவருடைய கார் ஓட்டுனரான டுன்னு யாதவ் என்பவரும் உடந்தை என்பதும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிய வந்துள்ளது.
மூடி மறைக்கும் வேலை
மேலும் இந்த திருட்டுக்கள் ஒவ்வொன்றாக வெளி உலகத்திற்கு தெரிய வந்த உடன் பாஜகவின் ஐடி விங் இந்த கொள்ளை சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூசி எதிர்கட்சிகளை குற்றம் சாட்டி சமூக வலைத்தலங்களில் கருத்துக்களை பரப்பியது. ஒரு படி மேலே சென்று மாநில முதல்வர் ஆதித்யநாத் இந்த திருட்டை பற்றி பொது வெளியில் விவாதிப்பது கடவுள் ராமரை அவமதிப்பதற்கு சமமாகும் என்று கூட பேசினார். பிரச்சனையை திசைதிருப்ப சங்பரிவார் கும்பல் அனைத்து வகையிலும் கடும் முயற்சி எடுத்தன.
ஆனாலும் அவையெல்லாம் பலிக்கவில்லை. சங்கராச்சாரியார்கள் சிலர் உட்பட ராமர் கோவில் கட்டுமானத்தில் ஆரம்பத்தில் இருந்தே தங்களை இணைத்துக்கொண்ட சில தனிநபர்களும் இந்த கொள்ளை சம்பவங்களை கண்டித்து பொது வெளியில் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
மஹன்ட் கமல் நயன் தாஸ் என்பவர் தப்பு நடந்திருக்கும் பட்சத்தில் முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார். இவர் அறக்கட்டளையின் தலைவரான மகன்ட் நிருட்யா கோபால் தாஸ் என்பவருக்கு அடுத்தபடியாக தலைவராக வரக்கூடிய அளவுக்கு மதிப்பு மிகுந்தவர். அவர் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார். அப்படி விசாரிப்பது என்றால் யாரை விசாரிப்பது ? கடந்த காலங்களில் சைக்கிளில் சென்றவர்கள் இன்றைக்கு சொகுசு கார்களில் செல்கிறார்கள் அரண்மனை போன்ற சொகுசு பங்களாக்களில் வாழ்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் தெரியாமல் இந்த திருட்டு எப்படி நடந்திருக்கும் என கேள்வி எழுப்புகிறார் ஆனால் இறுதியில் விரக்தியில் தவறு செய்தவர்களை அந்த ராமர் பார்த்துக்கொள்வார் என அவர் கூற வேண்டிய சூழலில் தான் அங்கு நிலைமை உள்ளது.
மோடி ஏன் வாய் திறக்கவில்லை
அவி முக்டேஸ் வாராநந் சரஸ்வதி என்பவர் ஆரம்பத்தில் இருந்தே கோயில் அறக்கட்டளையை மோடி தனது கையில் வைத்திருந்தார் என்று பகிரங்கமாக விமர்சிக்கிறார். இதனை ஆமோதிக்கும் வகையில் வினைய் கட்டியார் என்ற ஆர்எஸ்எஸ் தலைவர் கோடிக்கணக்கான பக்தர்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சொல்லி இருக்கிறார்.
ஆனால் மோடியோ இது வரை இதுப்பற்றி வாய் திறக்க வில்லை. இந்த கொள்ளை சம்பவம் திடுதிப்பென்று நடந்த்தாகக் கருதிவிட வேண்டாம். ஆரம்பத்தில் இருந்தே இது போன்ற பிரச்சனைகள் எழுந்தது. கோவில் கட்டுமானத்திற்காக ரூபாய் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் நன்கொடை வந்து குவிந்த போது இது போன்ற திருட்டு குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால் மக்கள் கண்ணில் மண்ணை அள்ளித் தூவி விட்டு உண்மைகள் மறைக்கப்பட்டன. காவல் அரண் போல் நின்று பாதுகாக்க வேண்டிய ஊடகங்களோ ஆர்எஸ்எஸ்-இன் செல்லப்பிராணிகளாக மாறிவிட்டன.
பாபா லால் தாஸ்
பாபா லால்தாஸ் என்பவரை நாம் நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. 1980 இல் பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்ட ராம் லீலா சிலைக்கு பொறுப்பாக தலைமை பூசாரியாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர் தான் பாபா லால்தாஸ். அயோத்திப் பிரச்னை என்பது உள்ளூர் நிலப்பிரச்சனை தான். அதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது எனச் சொன்னவர். அதுமட்டுமல்ல தங்களின் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக ராமர் கோவில் பிரச்சனையை விஸ்வ ஹிந்து பரிஷத் பயன்படுத்தக்கூடாது என பகிரங்கமாக விமர்சனம் செய்தார். அயோத்தியில் பல நூற்றாண்டுகளாக இந்துக்களும் முஸ்லிம்களும் மத நல்லிணக்க உணர்வுடன் ஒற்றுமையாக அமைதியாக வாழ்ந்து வருவதை சீர்குலைக்க வேண்டாம் எனவும் குறிப்பாக எல்.கே. அத்வானியின் அயோத்தி ரத யாத்திரையை எதிர்த்தும் கருத்துக்கள் சொன்னவர். ஆனால் இப்படிப்பட்ட உணமையான ராம பக்தருக்கு நேர்ந்த கதி என்ன?
அன்றைய பாஜக முதல்வராக இருந்த கல்யாண் சிங்கின் உத்தரவின் பேரில் இவரை தலைமை பூசாரி பொறுப்பில் இருந்து விரட்டினார்கள் . கடைசியாக பாபா லால் தாஸ் 1993 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி ராணிபூர் சூட்டார் என்ற கிராமத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆர்எஸ்எஸ் அமைப்பில் குருஜி என்று சங்பரிவார் அமைப்புகளால் போற்றப்படுபவர் எம்.எஸ்.கோல்வால்கர். அவர் உதிர்த்த பொன்மொழி ஒன்று உண்டு “புரூட்டஸின் வாள் புனிதமானது” ஆர்எஸ்எஸ் இந்த பொன்மொழியை காந்தி கொலை தொடங்கி நடைமுறைப்படுத்திக்கொண்டே வருகிறது. துரோகம் இழைப்பதும் உயிரை மாய்ப்பதும் அவர்களுக்கு புனிதச்செயல். இந்துராஷ்டிரா என்ற தங்கள் லட்சியம் நிறைவேற தலைமை பூசாரியை மட்டுமல்ல தேவைப்பட்டால் கடவுள் ராமருக்கே துரோகம் செய்வார்கள். அதை ராம பக்தி என்று பொய்ச்சொல்லி நம்பவும் வைப்பார்கள்.
என்ன வேடிக்கை என்றல் இவ்வளவு நடந்து எல்லாம் வெளிச்சத்திற்கு வந்த பிறகும் பாஜகவின் இரட்டையர்களான மோடியும் அமித்ஷாவும் இது பற்றி வாய் திறக்கவே இல்லை. ஏன்னென்றால் ஆர்எஸ்எஸ்-இன் தலைமைபீடமான மோகன் பகவத்தும் இதுவரை வாய் திறக்கவே இல்லை.
இந்துத்துக்களுக்கு துரோகம்:
உத்தரபிரதேச மாநில அரசு இதுவரை இந்த கொள்ளை சம்பவங்களுக்காக மாநிலத்தில் எந்த ஒரு காவல்நிலையத்திலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வில்லை. ஒரு புகார் கூட பெறாமல் வெறும் சிறப்பு விசாரணைக்குழுவை மட்டும் மாநில அரசு நியமித்திருக்கிறது. இவை எல்லாம் தற்காலிகமாக செய்யப்பட்டுள்ள கண்துடைப்பு வேலை தான்.இவை அத்தனையும் தேசத்தையும் இந்துமதத்தையும் ராமரையும் இழிவுப்படுத்துவதாக தேச விரோதிகளால் புனையப்பட்ட கதை என்று கூட முடித்து விடுவார்கள்.
ஊடகங்கள் வாய்மூடி இருப்பதாலும் அனைத்தும் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும் எது நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எந்த ராமரை முன்னிறுத்தி ஆட்சிக்கு வந்தார்களோ அந்த ராமருக்கே துரோகம் செய்யவும் அஞ்ச மாட்டார்கள். எந்த இந்து மதத்தையும் இந்துக்களையும் சொல்லி அதிகாரத்திற்கு வந்தார்களோ அவர்களுக்கும் துரோகம் செய்ய தயங்க மாட்டார்கள். ஏன்னென்றால் அவர்கள் சங்பரிவார் குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. கஜினி முகமது இன்று உயிரோடு இருந்திருந்தால் என்னை விட மிகப்பெரிய கொள்ளையர்கள் நீங்கள் தான் என்று சொல்லி மோகன் பகவத் முன்பும் மோடி முன்பும் வெட்கித்தலைகுனிந்து வணங்கி இருப்பார்.
கே. வசந்தன்
ஆதாரம் பாதல் சரோஜ், பீப்பிள் டெமாக்ரசி 2026 ஜூலை 12 வாரம் வெளியான பீப்பிள் டெமாக்ரசி.