அமெரிக்காவின் முதலாளித்துவ ஜனநாயகமும் அநாகரீகத்தின் உச்சமும்-சேது சிவன்
ஜனநாயகம் என்றால் அமெரிக்கா. சுதந்திரம் என்றால் அமெரிக்கா. பெண் உரிமை என்றால் அமெரிக்கா, என்றுதான் சிறுவயது முதல் எல்லோருக்கும் காட்டப்படுகிறது.
அதிலும் குறிப்பாக ஒரு ரஷ்யா,சீனா, அல்லது வடகொரியாவை சேர்ந்த நபர்கள் கெட்டவர்களாக வருவார்கள். அவர்களை வீழ்த்தி உலகை காக்கும் நல்லவர்கள் அமெரிக்கர்களே என்று ஜேம்ஸ் பாண்டு முதல் அவென்ஜர்ஸ் வரையிலான ஹாலிவுட் படங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டு வந்தது.
கம்யூனிஸ்டுகள் இடதுசாரிகள் ஆளும் நாட்டில் சர்வாதிகாரம் நடக்கிறது. அந்த நாட்டில் ஊழல் நடக்கிறது. ஜனநாயகம் இல்லை. அமெரிக்காவால்தான் மற்ற நாடுகளில் ஜனநாயகத்தை காப்பற்ற முடியும் என அங்கு ராணுவத்தை அனுப்பி ஒட்டுமொத்த நாட்டையும் சூறையாடுவதே அதன் குணம் என்பது நமக்கு தெரியும். கடந்த ஜனவரி மாதம் வெனிசுலாவிலும் அதுதானே நடந்தது.
உலக அரசியலின் ஒவ்வொரு நகர்வும் அமெரிக்காவின் மிகவும் இழிவான முகத்தையும் நடவடிக்கையும் அம்லப்படுத்தி தான் வருகிறது. அப்படி ஒரு சம்பவமாகத்தான் எப்ஸ்டீன் பைல்ஸ் விவகாரமும் வெடித்து கிளம்பியுள்ளது.
இது அமெரிக்காவின் ஜனநாயகம், அவர்கள் பேசும் மனித உரிமைகள் என அனைத்தையும் புரட்டி போட்டு அமெரிக்க அரசின் மிகக்கொடூரமான முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.
எப்ஸ்டீன் பைல்ஸ் என்றால் என்ன?
அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் அவரது தோழி கிஸ்லேன் மேக்ஸ்வெல் ஆகியோர் பெண்கள் மற்றும் சிறுமிகளைப் பல ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள். இது தொடர்பான குற்ற விசாரணைகளின் ஆவணங்களே எப்ஸ்டீன் பைல்ஸ் என குறிப்பிடப்படுகின்றன.
அமெரிக்கா மற்றும் உலக அரசியலில் வலம் வந்த, தற்போதும் வலம் வருகிற பெரும் கோடீஸ்வரர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பதுடன், அவர்களின் பாலியல் தேவைக்காகப் பெண்கள் மற்றும் சிறுமிகளை அனுப்பி வைப்பது; அவர்களை தனது தீவுக்கு வர வைத்து போதைப்பொருள், பெண்களை குறிப்பாகச் சிறுமிகளை கடத்தி வந்து சப்ளை செய்வது என குற்றங்களைச் செய்தவர்கள் தான் எப்ஸ்டீன் மற்றும் அவரது தோழி மேக்ஸ்வெல்.
அமெரிக்காவில் மிகப்பெரும் அரசியல் செல்வாக்கு கொண்ட பலம் வாய்ந்த நபர்களை லாபி செய்யக்கூடிய மற்றும் மிரட்டிப் பணிய வைக்கும் சக்தி வாய்ந்த நபராகவும் எப்ஸ்டீன் வலம் வந்தார்.
எப்போது வெளியானது?
இந்த வழக்கு அமெரிக்க அரசியலில் தொடர்ந்து விவாதமாகி வந்த நிலையில் 2024 தேர்தல் பிரச்சாரத்தின் போது, தான் மீண்டும் ஜனாதிபதியானால் எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவேன் என டிரம்ப் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும் நிலை உருவானது. எனினும் வெற்றி பெற்ற பிறகு வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றினார். இதனால் நாடாளுமன்றத்தில் அழுத்தம் உருவான பின்னணியில் 2025 நவம்பர் 18 அன்று ‘எப்ஸ்டீன் கோப்புகள் வெளிப்படைத்தன்மை சட்டம்’ (Epstein Files Transparency Act) நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி, எப்ஸ்டீன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதித்துறை வெளியிட்டு வருகிறது. ஜன.30 வரை 30 லட்சத்திற்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.
எனினும் வழக்கில் எப்ஸ்டீனின் கூட்டாளிகளாக இருந்த பல அதிகார வர்க்கத்தினர் மறைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு வருகின்றனர். இன்னும் வெளிச்சத்திற்கு வராமலேயே இருக்கிறார்கள். உயர்மட்ட செல்வாக்குள்ள நபர்களைப் பாதுகாப்பதற்காகவே தகவல்கள் மிக மெதுவாகவும், திருத்தப்பட்டும் வெளியிடப்படுவதாகப் பாதிக்கப்பட்டவர்களும் வழக்கறிஞர்களும் குற்றம் சாட்டுகின்றனர்.
வழக்கின் துவக்கமும் சந்தேக மரணமும்
2005-இல் புளோரிடாவில் 14 வயதுச் சிறுமியைப் பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தியதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் எப்ஸ்டீன் மீது விசாரணை தொடங்கியது. எப்.பி.ஐ இவ்வழக்கில் இணைந்தது. ஆனால், எப்ஸ்டீன் அன்றைய அமெரிக்க அரசுக்கும் தனக்கும் இருந்த ஒரு ரகசிய உறவின் மூலம் தண்டனையிலிருந்து தப்பினார். அதேபோல 2008-இல் ஒரு வழக்கில் 13 மாதங்கள் மட்டும் சிறையில் இருந்தார். அதுவும் பகல் நேரத்தில் வேலைக்குச் செல்ல அவருக்கு அனுமதி கொடுக்கும் அளவு அரசாங்கத்தின் மீதே செல்வாக்கு செலுத்தினார்.
அதன் பிறகு 2019-இல், டிரம்ப் முதல் முறையாக ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இந்த வழக்கு மீண்டும் கையில் எடுக்கப்பட்டது. பல சிறுமிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக எப்ஸ்டீன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார்.
அதே ஆண்டு ஜூலை 29 அன்று, எப்ஸ்டீனின் வழக்கறிஞர்கள் எப்.பி.ஐ மற்றும் அரசு வழக்கறிஞர்களைச் சந்தித்து, இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் எப்ஸ்டீன் ஒத்துழைப்பு அளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்த சில நாட்களிலேயே (ஆஸ்.10) சிறையில் மர்மமான முறையில் பலியானார். உடனடியாக அவர் தற்கொலை செய்துகொண்டார் எனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.
அது மட்டுமல்ல எப்ஸ்டீனின் உடலை ஊடகங்களுக்குத் தெரியாமல் கொண்டு செல்வதற்காகச் சிறை ஊழியர்கள் பெட்டிகள் மற்றும் துணிகளைக் கொண்டு ஒரு போலி உடலை உருவாக்கி, அதை மருத்துவப் பரிசோதகர் அலுவலக வாகனத்தில் ஏற்றியுள்ளனர். செய்தியாளர்கள் அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து செல்ல, எப்ஸ்டீனின் உண்மையான உடல் ஒரு கறுப்பு நிற வாகனத்தில் யாருக்கும் தெரியாமல் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகளும் வழக்கில் தொடர்புடைய நபர்கள் பெரும் புள்ளிகளாக இருப்பதன் காரணமாக எப்ஸ்டீன் கொல்லப்பட்டிருக்கலாம் என ஆழமான சந்தேகம் எழுந்துள்ளது.
2021-இல், எப்ஸ்டீனின் தோழி கிஸ்லேன் மேக்ஸ்வெல் பாலியல் வணிகத்திற்காக சிறுமிகளைக் கடத்தி வர உதவியதற்காகக் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இந்த வழக்கு ஆவணங்களில் எப்ஸ்டீனுடனான பெரும் புள்ளிகளின் பலரது பயணம் தொடர்பான பதிவுகள், ஒலிப்பதிவுகள் மற்றும் மின்னஞ்சல்கள் இடம்பெற்றுள்ளன.
அனில் அம்பானி – எப்ஸ்டீன் – மோடி தொடர்பு
இந்த பாலியல் குற்றவாளியின் வழக்கு பைல்களில் பிரதமர் மோடி, அனில் அம்பானி உள்ளிட்டோரின் பெயரும் இடம் பெற்றுள்ள மின்னஞ்சல்கள் உள்ளன.
அனில் அம்பானி ராணுவம் தொடர்பான ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு வெள்ளை மாளிகையில் லாபி செய்யத் திட்டமிட்டு எப்ஸ்டீனின் உதவியை நாடியுள்ளார்.
“இதற்குப் பதிலாக எனக்கு என்ன கிடைக்கும்?” என எப்ஸ்டீன் கேட்டதற்கு, “இந்திய சந்தை உட்பட எதுவாக இருந்தாலும் சரி” என அனில் அம்பானி கூறியுள்ளார்.பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போது கூட அனில் அம்பானி தனது பிசினஸ் டீல்களைப் பெறுவதற்கான லாபி நடவடிக்கைகளை எப்ஸ்டீன் மூலம் செய்துள்ளார்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், மோடி 2017-இல் இஸ்ரேலுக்குச் சென்ற பயணம், அமெரிக்காவைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் செய்தார் என ஒரே போடாகப் போட்டுள்ளார் எப்ஸ்டீன். இதுவும் அந்த ஆவணத்தில் வெளியாகியுள்ளது.
கிழியும் முகத்திரை
இளைஞர்கள்,தொழில் முனைவோர்கள், அரசியல்வாதிகள், தொழில் நுட்ப வல்லுநர்கள், திரைத்துறையில் சாதிக்க விரும்புபவர்கள் என பலரும் தங்களின் ரோல்மாடலாக பாவித்த உலகப் பெரும் கோடீஸ்வரர்கள், அமெரிக்க ஜனாதிபதிகள், இங்கிலாந்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஹாலிவுட் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் எனப் பலரும் எப்ஸ்டீனுடன் பாலியல் வணிகத் தொடர்பில் இருந்துள்ளனர்.
உலகத்திற்கு நான் தான் நாட்டாமை, என ஆதிக்கத்துடன் செயல்படும் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன், எலான் மஸ்க், பில் கேட்ஸ், இங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் (மவுண்ட்பேட்டன் பிரபுவின் பேரன்), டிரம்பின் தற்போதைய வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக், ஒபாமாவின் ஆலோசகராக இருந்த கேதி ரூம்லர், இங்கிலாந்து தூதர் என மிகப்பெரிய அரசியல்வாதிகள், பிரபலங்கள் என பல கோடீஸ்வரர்களின் பெயர்கள் இந்த ஆவணங்களில் இடம் பெற்றுள்ளன.
பெண்ணுரிமை, ஜனநாயகம் பேசும் நாடுகளின் இன்னாள், முன்னாள் ஆட்சியாளர்கள் அதிகாரிகள் என பலரும் 14, 16 வயதுக்கு குறைவான சிறுமிகளை தங்களின் பாலியல் இச்சைக்காக சுரண்டியுள்ளனர். இது போன்ற நபர்களுக்கு சப்ளை செய்வதற்காகவே உலகம் முழுவதும் பல சிறுமிகளை கடத்தி வந்து எப்ஸ்டீனின் தனது தீவில் அடைத்து வைத்துள்ளார்.
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட ஒரு பெண், தனக்கு 14 வயதாக இருந்தபோது மார்-ஏ-லாகோ விடுதியில் டிரம்பிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதாக கூறியுள்ளார். மற்றொரு பெண், அவருக்கு 13 வயதாக இருந்த போது டிரம்பும் எப்ஸ்டீனும் தன்னை வன்கொடுமை செய்ததாக 2016-இல் வழக்குத் தொடர்ந்தார் (பின்னர் மிரட்டல் காரணமாக அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது).
எப்ஸ்டீன் பாலியல் நடத்தி வந்த தீவுக்குச் என்னையும் அழையுங்கள் என கேட்டு எலான் மஸ்க், 2012 மற்றும் 2013-ஆம் ஆண்டுகளில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில் “உன் தீவில் எப்போது மிகவும் பிரம்மாண்டமான பார்ட்டி நடக்கும்?” என்று மஸ்க் கேட்டுள்ளார்.
இதன் மூலம் அவரும் குழந்தைகளை பாலியல் இச்சைக்கு (pedophiles-குழைந்தைகளை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் நபர்கள்) என தெரிய வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதிகள்
இந்த ஆவணங்கள் சில பகுதிகள் ஏற்கனவே இரு முறை வெளியானது. அதில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் ஆடையின்றி நீச்சல் குளத்தில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள், டிரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுடன் உள்ள புகைப்படங்களும் வெளியானது.
பில் கிளிண்டன், டிரம்ப், இங்கிலாந்து முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் எப்ஸ்டீனுடன் மிக நெருக்கமாக இருந்த நபர்களாக உள்ளனர்.
எப்ஸ்டீன் தான் தற்போதைய டிரம்பின் மனைவியான மெலனியாவை டிரம்பிற்கு அறிமுகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
எப்ஸ்டீனின் வழக்கு தொடர்பான ஆவணங்களில் சில பகுதிகளை பார்த்தாலே நியாவான்களாக தங்களைக் காட்டிக்கொண்ட கோடீஸ்வரர்களின் மறுபக்கம், அமெரிக்கா பேசும் ஜனநாயகத்தின் போலித்தன்மை, அவர்களின் உண்மை முகம் என்ன என்பது அம்பலமாகிறது.
பெண்களையும் சிறுமிகளையும் பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதும், அமெரிக்க அரசின் உயர் மட்ட ஆட்சியாளர்கள் டிரம்ப் உட்பட அதில் ஈடுபடுவதும் மனித அநாகரீகத்தின் உச்சம் என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளது இந்த எப்ஸ்டீன் பைல்ஸ்.
– சேது சிவன்