Tamil Marx

இந்தியா சுற்றுச்சூழல்

ஆரவல்லி மலைத்தொடர்: கனிம வெட்டியெடுப்பா, சுற்றுச்சூழல் பாதுகாப்பா?-ஆய்வாளர் சங்கர் பிரகாஷ்

ஆரவல்லி மலைத்தொடர்: கனிம வெட்டியெடுப்பா, சுற்றுச்சூழல் பாதுகாப்பா?-ஆய்வாளர் சங்கர் பிரகாஷ்
  • PublishedFebruary 4, 2026

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சமீபத்திய முக்கியமான விவாதங்களில் ஒன்று, ஆரவல்லி மலைத்தொடரில் கனிமங்களை வெட்டி எடுப்பதற்கான வரையறை குறித்தது. உச்ச நீதிமன்றத்தின் 20 நவம்பர் 2025 தீர்ப்பு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEFCC) குழு பரிந்துரைத்த 100 மீட்டர் உயர வரம்பை ஏற்றுக்கொண்டது. இது மலைத்தொடரின் பெரும்பாலான பகுதிகளை பாதுகாப்பு வரம்பிலிருந்து விலக்கி, கனிம வெட்டி எடுப்புக்கு வழிவகுக்கும் என சுற்றுச்சூழல் வல்லுநர்களும், செயற்பாட்டாளர்களும் கடுமையாக விமர்சித்தனர். பொதுவாகவே நம் நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சுணக்கம் காட்டப்படுகிறது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபிக்கிறது.

உதாரணமாக, 2014 முதல் 2023 வரை சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம்; நீர் மற்றும் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டங்கள் ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மொத்த எண்ணிக்கை வெறும் 4,390 மட்டுமே. சராசரியாக ஆண்டுக்கு 439 வழக்குகள் என்ற அளவில், இந்தியா முழுவதும் பல சுற்றுச்சூழல் விதி மீறல்கள் தொடர்ந்து நடைபெறும் நிலையில், இந்த சொற்பமான எண்ணிக்கை அச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பெரும் சுணக்கத்தைக் காட்டுகிறது. மேலும் இது, பல நிறுவனங்கள் வெளிப்படையாக எவ்வித தடையுமின்றி சுற்றுச்சூழல் குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன என்ற உண்மையை உறுதிப்படுத்துகிறது. இந்நிலையில்தான் ஆரவல்லி மலைத்தொடர் குறித்த விவாதம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஆரவல்லியின் சுற்றுச்சூழல் முக்கியத்துவம்

ஆரவல்லி மலைத்தொடர், இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள 3.2 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த மலைத்தொடராகும் — இமாலயத்தை விடவும் பழமையானது. டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் சுமார் 692 கிலோ மீட்டர் தூரத்திற்கு பரவியுள்ள இம்மலைத்தொடர், தார் பாலைவனத்தின் பரவலைத் (பாலை வனக் காற்றில் வரும் மணல் துகள் உள்ளிட்டவையும்) தடுக்கும் முக்கிய இயற்கை அரணாக விளங்குகிறது. இந்த அரண் இல்லாவிட்டால், பாலைவனம் விரைவாக டெல்லி நகரம் வரை பரவும் அபாயம் உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது வெறும் கற்பனை அல்ல — ஏற்கனவே ஹரியானாவின் சில பகுதிகளில் பாலைவன மயமாதல் அறிகுறிகள் தெரிகின்றன.

நிலத்தடி நீரை சேமித்து, சபர்மதி, லூனி, பனாஸ் உள்ளிட்ட பல நதிகளின் உற்பத்தியை உறுதிப்படுத்தி, உயிரினங்களின் பன்முகத்தன்மையை பாதுகாக்கும் இம்மலைத்தொடர், வட இந்தியாவின் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கும் முதன்மை காரணியாக உள்ளது. சிறுத்தைகள், கழுதைப்புலிகள், காட்டுப் பூனைகள், நரிகள், முள்ளம்பன்றிகள், பல்வேறு பறவை இனங்கள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட நூற்றுக்கணக்கான உயிரினங்கள் இங்கு வாழ்கின்றன. இவை அனைத்தும் இப்போது ஆபத்தில் உள்ளன.

ஆனால், கனிம வெட்டி எடுப்பு காரணமாக ஏற்கனவே ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இம்மலைத் தொடரின் பல பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளன என்று டெல்லி பல்கலைக்கழகத்தின் மூத்த பேராசிரியர் சி.ஆர். பாபு கூறுகிறார். இந்த அழிவு, பாலைவன மயமாதல், நிலத்தடி நீர் உற்பத்தி குறைவு மற்றும் உயிர் பன்மை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 1975 முதல் 2019 வரை இம்மலைத் தொடரின் 8 சதவீதத்தை நாம் இழந்துள்ளோம்; 2059க்குள் 22% இழக்கப்படலாம் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

அறிவியலுக்கு எதிரான வரையறை

MoEFCC குழு, ஆரவல்லி மலைகளை “உள்ளூர் நிலப்பரப்பிலிருந்து 100 மீட்டர்கள் அல்லது அதற்கு மேல் உயரம் கொண்ட நிலப்பகுதிகள்” என்று வரையறுத்தது. இந்த வரையறை அறிவியல் அடிப்படையில் முற்றிலும் பிழையானது என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டினர். ராஜஸ்தானில் 12,081 மலைப்பகுதிகளில் வெறும் 1,048 (சுமார் 8.7%) மட்டுமே 100 மீட்டர் வரம்பை தொடுகின்றன. இது மலைத்தொடரின் 90% பகுதிகளை பாதுகாப்பிலிருந்து விலக்குகிறது! இது ஒரு பாதுகாப்பு வரையறையா அல்லது கனிம வெட்டி எடுப்புக்கு சட்டபூர்வ அனுமதி வழங்கும் தந்திரமா என்று கேள்வி எழுவது நியாயமானது.

இந்த வரையறை, அமெரிக்க புவியியல் ஆய்வாளர் ரிச்சர்ட் மர்பி (1968) வகுத்த 100 மீட்டர் உயர வரம்பை அடிப்படையாகக் கொண்டது. ராஜஸ்தான் அரசு இதை கனிம வெட்டி எடுப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தியது, மத்திய அமைச்சகமும் ஏற்றுக்கொண்டது. ஆனால், ஆரவல்லி மலைகளின் சராசரி உயரம் 20-60 மீட்டர்கள் வரை மட்டுமே இருப்பதால், இத்தகைய வரையறை அடிப்படை புள்ளியியலுக்கு எதிரானது. MoEFCC குழுவில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள், புவியியலாளர்கள், நீரியல் வல்லுநர்கள் யாரும் இல்லாதது, அதன் அறிவியல் தன்மையை கேள்விக்குள்ளாக்கியது. பெரும்பாலும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளால் ஆன இந்த குழு, கனிம வெட்டி எடுப்பை எளிதாக்கும் வகையில் வேண்டுமென்றே வரையறை உருவாக்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.

சட்டவிரோத சுரங்கம்: அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

ஏற்கனவே ஆரவல்லியில் சட்டவிரோத கனிம வெட்டி எடுப்பு ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. 2020-2023 காலகட்டத்தில், ராஜஸ்தானில் பதிவான 2,671 சட்டவிரோத சுரங்க வழக்குகளில் 2,070 (சுமார் 77.5%) ஆரவல்லி மலைத்தொடர் மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்கள் மாநிலத்தின் சுரங்கக் குத்தகைகளில் 45% மட்டுமே இருந்தாலும், சட்டவிரோத செயல்பாடுகளில் 77%க்கும் மேல் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கிறது. இது அப்பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதைக் காட்டுகிறது!

2021-22ல் ராஜஸ்தானில் 919.8 மில்லியன் டன் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டன — இதில் 40.6% ஆரவல்லி மாவட்டங்களிலிருந்து மட்டும். ஜெய்ப்பூர், அல்வார், ராஜ்சமந்த், சிகார், அஜ்மீர், பாலி, பன்ஸ்வாரா, உதய்பூர் உள்ளிட்ட 21 ஆரவல்லி மாவட்டங்கள் சட்டவிரோத சுரங்கத்தின் மையங்களாக உள்ளன. 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் மத்திய அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் (Central Empowered Committee) அறிக்கை, 128 மலைகளில் 31 ஏற்கனவே அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. கனிம மாஃபியாவின் செல்வாக்கு எந்த அளவுக்கு பரவியுள்ளது என்பதை இது காட்டுகிறது.

பாதிப்புகள்: யாருக்கு?

100 மீட்டர் வரையறை, மலைத்தொடரின் இணைப்பை பிரிக்கும் “இடைவெளிகளை” உருவாக்கி, திறந்தவெளி கனிம வெட்டி எடுப்புக்கு வழிவகுக்கும். இது காட்டுயிர்களின் வாழிடங்களை துண்டு துண்டாக்கி, அவற்றின் பயணப் பாதைகளை பாதிக்கும். பறவைகள் மற்றும் பூச்சி இனங்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும். உயிரி இணைப்பு பாதை துண்டிக்கப்பட்டால், இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, உயிரினங்கள் அழியும் ஆபத்து உள்ளது.

நிலத்தடி நீரோட்டம் பாதிக்கப்பட்டால், டெல்லி-என்.சி.ஆர். பகுதிகளில் ஏற்கனவே தீவிரமாக உள்ள தண்ணீர் பிரச்சினை மேலும் மோசமடையும். ஆரவல்லி, நீர் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது; ஒரு இடத்தில் ஏற்படும் பாதிப்பு ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்கும். மழைநீர் சேகரிப்பு குறைந்து, ஆறுகள் வறண்டு, விவசாயம் பாதிக்கப்படும். திறந்தவெளி கனிம வெட்டியெடுப்பு, மண் அரிப்பு, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் உயிர்ப்பன்மை இழப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக, கல் குவாரிகளிலிருந்து வரும் தூசு மக்களின் சுவாச ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இப்பகுதிகளில் ஏற்கனவே காற்று மாசுபாடு உச்ச நிலையில் இருக்கும்போது, இம்மலைத் தொடரில் முன்னெடுக்கப்படும் கனிமச் சுரண்டல் இந்நிலையை மேலும் மோசமாக்கும்!

நீதிமன்றப் போராட்ட வரலாறு

1992ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் எம்.சி. மேத்தா, ஆரவல்லியில் சட்டவிரோத கனிம வெட்டி எடுப்பை தடை செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகினார். 1996இல் நீதிமன்றம் இத்தகைய செயல்களை தடை செய்தது. 2002இல் டெல்லி-என்.சி.ஆர். பகுதியில் கனிம வெட்டி எடுப்புக்கு தடை விதித்தது. 2009இல் ஆரவல்லி தொடர்புடைய அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோத கனிம வெட்டி எடுப்பை முற்றிலும் தடை செய்தது. ஆனால், இந்த தடைகள் இருந்தும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்றே வந்துள்ளன!

தற்போது எழுந்துள்ள விமர்சனங்களால், 29 டிசம்பர் 2025 அன்று உச்சநீதிமன்றம் தனது 20 நவம்பர் 2025 தீர்ப்பை ஒத்திவைத்தது. 21 ஜனவரி 2026 அன்று, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு (நீதிபதிகள் ஜெயமால்ய பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி), ஆரவல்லியில் சட்டவிரோத சுரங்கப் பணிகள் “நீண்டகாலத்தில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று எச்சரித்தது. சுரங்கப் பணிகளுக்கான இடைக்காலத் தடையை நீட்டித்து, புதிய நிபுணர் குழுவுக்கு சுற்றுச்சூழலியலாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் உள்ளிட்ட துறைசார் நிபுணர்களின் பெயர்களை 4 வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளது. இது ஒரு சிறிய நம்பிக்கையை கொடுத்தாலும், அரவல்லியை பாதுகாப்பதற்கான போராட்டம் இன்னும் முடியவில்லை!

விமர்சன குரல்களை அடக்கும் முயற்சிகள்

சமூக ஊடகங்களில் ஆரவல்லி தொடர்பான விமர்சன குரல்களை அடக்க முயற்சிகள் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 17 ஜனவரி 2026 அன்று ‘தி வயர்’ வெளியிட்ட கட்டுரை, சமூக ஊடக இன்ப்ளூயென்சர்களை அணுகி, அரசுக்கு ஆதரவான கருத்தை உருவாக்க வேண்டும் என்று சமூக ஊடக ஏஜென்சிகள் கோரியதாக தெரிவிக்கிறது. ஆல்ட் நியூஸ் விசாரணையின்படி, இன்ப்ளூயென்சர்களுக்கு ஐந்து அல்லது ஆறு இலக்க தொகை வழங்கி, விமர்சன ரீல்களை நீக்கி, அரசுக்கு ஆதரவான வீடியோக்களை பதிவிடுமாறு கோரப்பட்டதாக கூறப்படுகிறது.

மறுத்தவர்களுக்கு, அவர்களின் விமர்சன பதிவுகளை சட்டரீதியாக அல்லது வேறு வழிகளில் அகற்றுவோம் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. சுற்றுச்சூழல் விவாதங்களில் இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு எதிரானவை. விமர்சனங்களை அடக்குவதற்கு பதிலாக, அவற்றிற்கு செவிசாய்த்து சரியான பதில் அளிப்பதே முதிர்ந்த ஜனநாயகத்தின் அடையாளம். ஆனால் இத்தகைய அணுகுமுறைகளை தற்போதுள்ள அரசுகளிடம் நாம் எதிர்பார்க்க முடியாது!

செயல்பட வேண்டிய நேரம்

ஆரவல்லி மலைத்தொடரின் அழிவு என்பது வெறும் சுற்றுச்சூழல் இழப்பு மட்டுமல்ல — டெல்லி-என்.சி.ஆர். மக்களின் குடிநீர் எதிர்காலத்தையும், வட இந்தியாவின் காலநிலை சமநிலையையும், காற்றின் தரத்தையும் நேரடியாக அச்சுறுத்துவதாகும். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இம்மலை தொடருடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இன்று நாம் எடுக்கும் முடிவுகள் நாளைய தலைமுறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

உச்சநீதிமன்றத்தின் சமீப உத்தரவுகள் நம்பிக்கை தருகின்றன. ஆனால், உண்மையான மாற்றம் பொதுமக்கள் விழிப்புணர்வு, கடுமையான சட்ட அமலாக்கம், அறிவியல் அடிப்படையிலான கொள்கைகள் ஆகியவற்றின் மூலமே வரும். ஆரவல்லி தொடர்புடைய அனைத்து நிகழ்வுகளையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம். புதிய நிபுணர் குழு எவ்வாறு அமைக்கப்படுகிறது, யார் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள், அவர்களின் பரிந்துரைகள் என்ன என்பதை நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

இந்த மலைத்தொடரைக் காப்பாற்றுவது நம் கடமை மட்டுமல்ல, வருங்கால சந்ததியினருக்கான நமது பொறுப்பும் ஆகும். இலாபத்திற்காக இயற்கையை அழிப்பது குறுகியகாலச் சிந்தனையே; சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுதான் நீண்டகால நலன். ஆரவல்லியைக் காப்போம்!

 

கட்டுரையாளர் ஆய்வாளர் சங்கர் பிரகாஷ். இயற்கை சூழியல் சார்ந்து நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்து எழுதி வருகிறார். 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *