பிரிவினைவாதத்தை தூண்டிய பிரதமரின் பேச்சை அம்பலப்படுத்திய புலம்பெயர் தொழிலாளர்கள்-லிவின்
பீகார் மாநிலத்தில் வரும் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய நாட்களில் இரண்டு கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் தங்கள் பரப்புரையை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், சரண் மாவட்டம் சாப்ராவில் அக்.30 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது “தமிழ்நாட்டில் திமுகவினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களை துன்புறுத்துகின்றனர்” என அவர் பேசியுள்ளார். இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அரசியல் இலாபத்திற்காக தமிழர்கள் மீது பிரதமர் மோடி பெரும்பழி சுமத்தியுள்ளார். இனவெறி பாகுபாட்டுடன் இருக்கும் பிரதமரின் பேச்சு அருவருக்கத்தக்கது என பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மோடியின் பேச்சுக் குறித்து திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் பீகார் மாநில தொழிலாளர்கள் கூறியது பின்வருமாறு:
அனில் குமார்:
நான் பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தை சேர்ந்தவன். நான் தமிழ்நாட்டிற்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. திருப்பூரில் ஸ்டீம் உட்பட பல்வேறு வேலைகள் செய்துள்ளேன். தற்போது பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறேன். இங்கு பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி கூறியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல.
என் அப்பா அசாமில் வேலை செய்தார், நான் திருப்பூரில் வேலை செய்கிறேன். எனது குழந்தைகள் வேறு எங்காவது சென்று வேலை செய்யும் நிலையில் தான் தற்போது பீகார் உள்ளது. மோடிக்கு அவ்வளவு வருத்தம் இருந்தால், பீகாரில் தொழிற்சாலைகள் கொண்டு வரட்டும். அப்படி அங்கு தொழில் வாய்ப்புகள் இருந்தால், நாங்கள் ஏன் இங்கு வந்து வேலை செய்யப் போகிறோம்.
தற்போது முடிந்த தீபாளி, சாத் பண்டிகைகளுக்கு கூட ஊருக்கு செல்லவில்லை. அங்கு வேலை வாய்ப்புகள் இருந்தால் அங்கு எனது குடும்பத்துடன் பண்டிகைகளை கொண்டாடி இருப்பேன். எனவே அவதூறு பேச்சுக்களை நிறுத்தி விட்டு, வேலை வாய்ப்புகளை உருவாக்கச் சொல்லுங்கள். அவர் கூறும்படி இங்கு யாரும் துன்புறுத்தப்படுவதில்லை என்றார்.
ரித்து தேவி:
நான் இங்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. எனது மகன் இங்குள்ள அரசு பள்ளியில் படித்து, தற்போது வேலைக்கு செல்கிறான். நண்பர் ஒருவரின் மூலம் நான் இங்கு வந்தேன். இத்தனை ஆண்டுகளாக இங்கு எனக்கோ எனது குடும்பத்திற்கோ எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. தேர்தலை முன்னிட்டு இதுபோன்ற கருத்துகள் கூறப்படுகிறது. தமிழர்கள் வடமாநிலத்தவர்கள் நண்பர்களாக பழகி வருகிறோம். பிரதமர் மோடி கூறியிருப்பது பொய் என்று தெரிவித்தார்.
கோபால்:
பீகார் மாநிலத்தில் இருந்து வந்து திருப்பூரில் காஜா பட்டன் வேலை செய்து வருகிறேன். எனக்கு இங்கு எந்த பிரச்சனையும் இல்லை. இதுபோன்ற பேச்சுக்கள் எல்லாம் தேர்தல் காலத்தில் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக பேசப்படும் பேச்சுகள் தான் என்றார்.
சனோஜ்:
திருப்பூர் வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. சிஐடியு தொழிற்சங்கத்திலும் இருக்கிறேன். மோடி பேசியிருப்பது வடிக்கட்டிய பொய். பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொழிலாளர்கள் திருப்பூரில் வேலை செய்கின்றனர். எல்லா மாநிலங்களில் பிரச்சனைகள் இருக்கும். ஏன் பீகாரில் பிரச்சனைகள் வராதா? தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு துன்புறுத்துவதாக கூறியிருப்பது அபாண்டமான குற்றச்சாட்டு.
இதை ஒருபோதும் ஏற்க முடியாது. நம் நாட்டின் பிரதமர் இப்படி ஒரு பொய்யை பீகாரில் கூறினால், அங்கு இருக்கும் எங்கள் சொந்தகளின் மனநிலை என்ன ஆகும் என்பதை பற்றி சிந்திக்காமல் வாக்குக்காக இப்படி கூறியிருக்கிறார். இது மிகவும் அறுவெறுக்கதக்கது. 20 ஆண்டுகளாக பாஜக கூட்டணி ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. இடையில் ஓர் ஆண்டு மட்டுமே வேறு கூட்டணி ஆட்சியில் இருந்தது. அப்போதும் நிதிஷ்குமார் தான் முதல்வர். இவர்கள் பீகாரில் வேலை வாய்ப்பை உருவாக்க எதுவும் செய்யவில்லை. தொழிற்சாலைகளை கொண்டு வரவில்லை.
குஜராத்தில் ஐடி பார்க், தொழில் பூங்கா என பல்வேறு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாருக்கு எதுவும் செய்யவில்லை. அதனால்தான் நாங்கள் அங்கிருந்து வேலைக்களுக்காக தமிழ்நாடு, டெல்லி, பெங்கால், அசாம், மகாராஷ்டிரா என நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கிறோம்.
குறிப்பாக கடந்த 20 ஆண்டில் தான் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்கள் எதுவும் செய்யாததால் தான் இதுபோன்ற கருத்துக்களை சொல்லி வாக்கை பெற்று விடலாம் என நினைக்கிறார்கள். இந்த முறை அது நடக்காது. எங்கள் மக்கள் அவர்களுக்கு தக்கப்பாடம் கற்று தருவார்கள் என தெரிவித்தார்.
– லிவின்