இளம் வயதில் உயிர் நீத்த புரட்சியாளர்கள்- விஜய் பிரசாத்
பிரபல மார்க்சிஸ்ட் சிந்தனையாளர் பிரான்ஸ் ஃபானோனின் (Frantz Fanon) பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட, சில நாட்களுக்குப் பிறகு, ஜூலை மாதத்தில், நான் அவரது மகள் மிரெயில் ஃபானோன் மெண்டெஸ்-ஃபிரான்ஸ் அவர்களுடன் மதிய உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. ஃபானோன்
பிரபல மார்க்சிஸ்ட் சிந்தனையாளர் பிரான்ஸ் ஃபானோனின் (Frantz Fanon) பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட, சில நாட்களுக்குப் பிறகு, ஜூலை மாதத்தில், நான் அவரது மகள் மிரெயில் ஃபானோன் மெண்டெஸ்-ஃபிரான்ஸ் அவர்களுடன் மதிய உணவு உண்ணும் வாய்ப்பு கிடைத்தது. ஃபானோன் தனது 39- வயது இல், இளவயதிலேயே இறந்துவிட்டதாக நான் கருத்து தெரிவித்தபோது, மிரெயில் அதைத் திருத்தி, “இல்லை, 36” என்றார். மேலும் மூன்று வருடங்கள் கூடுதலாக இருந்திருந்தால் அது அவருக்கு ஒரு பரிசாக இருந்திருக்கும் , ஏனெனில் அவர் மேலும் பல பணிகளை முடித்திருக்கலாம் மற்றும் தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடியிருக்கலாம். ஏனெனில் நாமும் ‘பூமியின் சபிக்கபட்ட மனிதர்கள்’ (The Wretched of the Earth) புத்தகத்திற்குப் பிறகு வரக்கூடிய அடுத்த புத்தகத்தை பெற்றிருக்கலாம் – ஒருவேளை குறுகிய தேசியவாதத்தின் குழிகளில் வீழாமல் ஒரு தேசிய திட்டத்தை எவ்வாறு கட்டமைப்பது என்பது குறித்த புத்தகமாக கூட அது இருந்திருக்கலாம் . ஆனால் அது நடக்கவில்லை.
மிரெயில்லுடன் நடந்த உரையாடலையும், அவரது தந்தை விட்டுச்சென்ற மரபையும் நினைத்தபோது, நாற்பதாவது வயதுக்கு முன்னரே இறந்துவிட்ட புரட்சித் தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் பட்டியலை உருவாக்க டிரைகான்டினென்டல்: சமூக ஆராய்ச்சி நிறுவனத்தின் குழுவினரிடம் உதவி கோரினேன். பெயர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியே வந்தன, எனக்குத் தெரியாமலேயே, பல பக்கங்கள் எனக்கு முன்னால் இருந்தன. மொசாம்பிக் ஜோசினா மாஷேல் (25 வயது) முதல் கியூபாவின் சே குவேரா (39 வயது) வரையிலான பட்டியல் அது.
இந்த பட்டியலின் சுருக்கமான பதிப்பை இந்த செய்திமடலில் வெளியிட நான் ஆசைப்பட்டேன், ஆனால் நான் தயங்கினேன். ஏகாதிபத்திய அமைப்பால் அமைக்கப்பட்டுள்ள ஏவல் அமைப்புகளின் மூலம் பல இடங்களில் உள்ள எத்தனையோ மக்கள், தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், அத்தகைய ஒரு பட்டியலை ஒருவர் எவ்வாறு சுருக்கமாகச் சொல்ல முடியும்?
முழுமையற்ற ஒரு பட்டியலை வெளியிடுவதற்குப் பதிலாக, நாம் ஒரு கணம் ஃபானோனுடனேயே செலவிடுவோம். தனது குறுகிய வாழ்நாளில் அவர் இரண்டு நூல்களை வெளியிட்டார்: 1952இல் ‘கருப்பு தோல், வெள்ளை முகங்கள்’ (Black Skin, White Masks) மற்றும் 1961இல், அவரது மரணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு, ‘பூமியின் சாபக்கேடான மனிதர்கள்’ (The Wretched of the Earth). 1959 இல் எழுதப்பட்ட ‘ஒரு இறக்கும் காலனித்துவம்’ (A Dying Colonialism) மற்றும் 1952 முதல் 1961 வரை எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான ‘ஆப்பிரிக்கப் புரட்சியை நோக்கி’ (Toward the African Revolution) ஆகிய இரண்டு நூல்கள், 1964 இல் அவரது மரணத்திற்குப் பின்னர் 1964இல், வெளியிடப்பட்டன.
ஃபானோனின் பங்களிப்பு
இந்த படைப்புகளை எடுத்துக்கொண்டு, ‘இதுதான் ஃபானோன், அவர் உருவாக்கியதெல்லாம் இதுவே என்று சொல்ல இயலாது, மனநல மருத்துவராக அவர் செய்த பணி, அல்ஜீரிய விடுதலை இயக்கத்திற்காக அவர் செய்த பணி ஆகியவைதான் அவர் அளித்த முழுமையான பங்களிப்பு. அறிஞர்கள் ஃபானோனை ஒரு முழுமையன மனிதராக கருதுகிறார்கள், ஆனால் உண்மையில் அவர் தனது உச்சத்தை எட்டவே இல்லை. அவரது இறுதி நூலில் உள்ள வாதத்தின் தெளிவு, ஆய்வின் புதிய வழிகளைத் திறந்து காட்டியது, அவர் 1961க்குப் பிறகு அவற்றைத் தொடர்ந்திருந்தால் – குறிப்பாக, விடுதலை அடைந்த நாடுகளின் மீது உள் மற்றும் வெளி அமைப்புகளால் விதிக்கப்பட்ட வரம்புகள் குறித்த சாட்சியங்கள் வெளியானபோது – அவற்றைப் பின்தொடர்ந்திருப்பார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, டிரைகான்டினென்டல்: சமூக ஆராய்ச்சி நிறுவனம் ஃபானோன் குறித்து ‘The Brightness of Metal’ (மார்ச் 2020) என்ற ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது, இது தேசிய விடுதலை குறித்த ஃபானோனின் சிந்தனைக்கு ஒரு தற்காலிக அடித்தளத்தை வழங்கியது. ஆனால் அது தற்காலிகமானதே – ஃபானோனின் கோட்பாடு, அவரது மரணத்தின் தருணத்தில், முழுமைடையாமலே இருந்தது.
பூமியின் சாபக்கேடான மனிதர்கள்’ நூலுக்குப் பிறகு வந்திருக்கக்கூடிய நூலின் கூறுகள், 35 வயதான பாட்ரிஸ் லுமும்பா 17 ஜனவரி 1961 அன்று படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு ஃபானோன் எழுதிய கட்டுரையில் தெளிவாகத் தெரியும். பிப்ரவரி 1961இல் ‘Afrique Action’ இதழில் வெளியான ‘லுமும்பாவின் மரணம்: நாம் வேறு வழியில் செய்ய முடியுமா?’ (‘Lumumba’s Death: Could We Do Otherwise?’) என்ற கட்டுரையின் மையக்கருத்து ஒரு பத்தியில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது:
“நமது தவறு, ஆப்பிரிக்கர்களாகிய நாங்கள் செய்த தவறு, எதிரி ஒருபோதும் நேர்மையாக பின்வாங்க மாட்டான் என்பதை மறந்து விட்டதே. அவன் ஒருபோதும் புரிந்து கொள்ள மாட்டான். அவன் சரணடைகிறான், ஆனால் அவன் மனம்மாறுவதில்லை.
எதிரி தனது போராட்டத் தன்மையையும் கேடு விளைவிக்கும் குணத்தையும் இழந்துவிட்டான் என்று நம்பியதே நமது தவறு. லுமும்பா அவர்களின் பாதையில் தடையாக இருந்தால், அவரும் காணாமல் ஆக்கப்படுவார் (கொல்லப்படுவார்). ஏகாதிபத்தியதிற்கு ஒருபோதும் கொலை செய்வதில் தயக்கம் என்பதே கிடையாது.
உண்மையில், ஏகாதிபத்தியம் ஒருபோதும் தாராள மனப்பான்மையுடனோ அல்லது மனிதாபிமானத்துடனோ இருப்பதில்லை.”
படுகொலை செய்யப்பட்ட விடுதலை வீரர்கள்: ஃபானோனின் எச்சரிக்கை
லுமும்பா குறித்த தனது கட்டுரையில், ஃபானோன் இரண்டு பெயர்களைக் குறிப்பிடுகிறார், ஆனால் அவற்றைப் பற்றிய ஆழமான விவரங்களுக்குள் அவர் செல்லவில்லை: ‘பென் மெஹிதியைப் பாருங்கள், மூமியையைப் பாருங்கள், லுமும்பாவைப் பாருங்கள்’.
முகம்மது லார்பி பென் மெஹிதி (1923–1957) அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணியை (FLN Algerian National Liberation Front ) நிறுவிய ஆறு உறுப்பினர்களில் ஒருவர். ‘ஞானமுள்ள லார்பி'(Larbi the Wise’) என்று அறியப்பட்ட அவர், ஈரான் பிராந்தியத்தில் விலாயா ராணுவ மண்டலத்தின் தளபதியாக இருந்தார். பின்னர் அல்ஜீர்ஸ் போரில் அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணிக்கு தலைமை தாங்கினார். பிப்ரவரி 1957 இல் கைது செய்யப்பட்டு, மிருகத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு, ஒரு மாதத்திற்குப் பிறகு, முப்பத்தி மூன்று வயதில் தூக்கிலிடப்பட்டார்.
ஃபெலிக்ஸ்-ரோலாண்ட் மூமியே (1925–1960) கமரூனின் விடுதலைப் போராட்டம் முழுவதும் கமரூன் மக்களின் ஒன்றியத்திற்கு(Union of the Peoples of Cameroon) தலைமை தாங்கினார்; இந்தப் போராட்டம் 1955 இல் வெடித்தது. அல்ஜீரியைப் போலவே, கமரூனில் பிரான்சின் அடக்குமுறையும் மிருகத்தனமானதாக இருந்தது, இது ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. குறிப்பாக பொதுமக்கள் மீதான கடுமையான தாக்குதல்களில். இந்த வரலாறு பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டது. மூமியே ஜெனீவாவில் பிரான்ஸ் ராணுவ வீரரால் தாலியம் என்ற விஷம் கொடுத்து படுகொலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது முப்பத்தைந்து.
மெஹிதி, மூமியே மற்றும் லுமும்பா ஆகியோரின் மரணங்கள் இவர்கள் அனைவரையும் ஃபானோன் தனிப்பட்ட முறையில் அறிந்திருந்தார் . இது ஏகாதிபத்தியதின் குரூரத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. ஒரு மக்களின் இறையாண்மைக்கு வழிகாட்ட ஒரு புரட்சியாளன் (Radical) தோன்றினால், அந்த புரட்சியாளன் உயிருடன் இருக்க அனுமதிக்கப்பட மாட்டான்.
லுமும்பா ஒரு புரட்சியாளனாக இருந்தார். அவர் ‘ஆப்பிரிக்காவுக்கு விற்கப்பட்ட ஒரு மனிதர்’ என்று ஃபானோன் அவரை குறிப்பிட்டு எழுதினார். இதன் பொருள், அவரது இதயம் ஆப்பிரிக்க மக்களுடன் இருந்தது. அது ஏகாதிபத்தியத்திற்கு விற்கப்படவில்லை என்பதாகும். அதனால்தான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.
ஏகாதிபத்தியதின் குரூரத்தன்மை
ஐரோப்பிய காலனி ஆதிக்க நாடுகள் (பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ், போர்ச்சுகல்) ஆப்பிரிக்காவிலிருந்து அமைதியாக வெளியேற மறுத்து, இரண்டாம் உலகப் போரில் நாஜிகள் மற்றும் ஜப்பானியர்கள் செய்த அதே போர்க் குற்றங்களை ஒத்த குற்றங்களை செய்தன. இந்தச் செயல்கள் நியூரம்பெர்க் மற்றும் டோக்கியோ விசாரணைகளில் முறையே போர்க் குற்றங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த விசாரணைகளில் பயன்படுத்தப்பட்ட வரையறை அல்ஜீரியாவிலிருந்து கேமரூன் வரையிலான காலனியப் போர்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்தால், இந்த ஐரோப்பிய நாடுகளின் பல ராணுவ தளபதிகள் மற்றும் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டிருப்பார்கள்.
உதாரணமாக, ஜப்பான் பேரரசின் ராணுவ ஜெனரல் தோமோயுகி யமாஷிதா தலைமையிலான படைகள் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு இழைத்த குற்றங்களுக்காக கட்டளைப் பொறுப்புக் (command responsibility) கொள்கையின் (பின்னர் யமாஷிதா தரம் (Yamashita Standard) என்று அழைக்கப்பட்டது) கீழ் டோக்கியோ தீர்ப்பாயம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்த பின்னர், 1946 இல் தூக்கிலிடப்பட்டார். இந்தத் தரம் சீராகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், பிரிட்டனின் பீல்டு மார்ஷல் ஜெரால்ட் வால்டர் ராபர்ட் டெம்ப்லர் மலாயா அவசரநிலை (1948–1960) காலகட்டத்தில் அவரது பங்கிற்காக தூக்கிலிடப்பட்டிருப்பார்.
இதில் பொதுமக்களுக்கு எதிராக கட்டாய முகாம்கள் நடந்த மலாயா அவசரநிலையின் (1948-1960) போது, பிரிட்டிஷ் படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு உணவு மற்றும் மறைவிடம் அளிக்கும் பயிர்களை அழிக்கும் நோக்கில், பொதுமக்களின் பணப்பயிர்கள் மீது தாவரக்கொல்லிகளை தெளித்தனர். இது பொதுமக்களுக்கு எதிரான தாவரக்கொல்லிப் போர் முறை (herbicidal warfare) என அழைக்கப்பட்டது. இந்த முறையையே அமெரிக்கா பின்னர் வியட்நாம் போரில் ‘ஏஜென்ட் ஆரஞ்ச்’ (Agent Orange) என்ற பெயரில் மிகப்பெரும் அளவில் நடத்தியது.
பிரான்ஸ் ஜெனரல்களான ஜீன்-மேரி லம்பர்டன் மற்றும் மேக்ஸ் பிரையண்ட் ஆகியோர் கேமரூனில் நடந்த போரில் (1955–1964) தங்கள் பங்கிற்காக தூக்கிலிடப்பட்டிருப்பர். இப்போரில் பிரான்ஸ் படைகள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தலைகளை துண்டிப்பது உள்ளிட்ட தீவிர மிருகத்தனத்தைக் கையாண்டன. குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் குடிமக்கள் அல்லது கைதிகளை மொத்தமாக ஒரு இடத்தில் வைத்து படுகொலை செய்வது. அதனை செய்தி ஊடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்களுக்கு தெரிவித்து ஒரு மனத் தாக்குதல் (psychological warfare) உத்தியாக பயன்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் பயத்தைப் பரப்புவதன் மூலம் எதிரியின் போர் குணத்தையும் சமூகத்தின் ஒற்றுமையையும் உடைக்கும் வேலையையும் காலனிய சக்திகள் செய்தன.
ஆனால், நிச்சயமாக இந்த கொடூரத்தை செய்த யாரும் தண்டிக்கப்படவில்லை மாறாக அவர்கள் அனைவரும் மார்பில் பதக்கங்களை அணிந்தபடியே இறந்தனர்.
போரின் இறுதிக் கட்டத்தில், பிரான்ஸ் தங்கள் அணுகுண்டை அல்ஜீரியாவின் ரெகானில், சஹாரா பாலைவனத்தில், 1960 பிப்ரவரி 13 அன்று சோதனை செய்தனர் என்பதை நினைவு கூர்வது முக்கியம். இது பிரான்ஸை அணு ஆயுதங்களைக் கொண்ட நான்காவது உலக நாடாக மாற்றியது. பிரான்ஸ் 1963 இல் அணு சோதனை தடை ஒப்பந்தத்தில் இணைய மறுத்துவிட்டது. அல்ஜீரியா 1962 இல் தனது சுதந்திரத்தை வென்றது. ஆனால் ரெகானில் அணு ஆயுத சோதனைகளைத் தொடர ஐந்து ஆண்டு குத்தகையை பிரான்ஸ் தக்க வைத்துக் கொண்டது.இது 1966 வரை நீடித்தது. அதன் பிறகு, பிரான்ஸ் தனது சோதனைகளை பசிபிக் பெருங்கடலில் உள்ள ஃபங்காட்டாஃபா மற்றும் மோருரோவா(Fangataufa and Moruroa) பவளத்தீவுகளுக்கு மாற்றியது. அங்கு அடுத்த முப்பது ஆண்டுகளில் 193 அணு சோதனைகளை நடத்தியது.
செல்வம் ஒரு அடக்குமுறை கருவி
பிரான்ஸ் ரெகானில் தனது அணுகுண்டுகளை சோதனை செய்தபோது, ஃபானோன் ‘பூமியின் சாபக்கேடான மனிதர்கள்’ புத்தகத்தை எழுதினார். ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவமயமாக்கலுக்கும் உலகின் ஏழை நாடுகளின் பின்தங்கிய தன்மைக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பை கண்டறிந்தார். பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் முன்னாள் காலனிகளின் வளங்களைச் சுரண்டி, பின்னர் அதே வளங்களை ராணுவ ஆராய்ச்சி மற்றும் அணு ஆயுதங்களில் (அல்ஜீரிய பாலைவனத்தில் சோதனை செய்வது போன்றவை) முதலீடு செய்கின்றன.
ஃபானோன் வாதிட்டதாவது, இந்த ராணுவ ஆராய்ச்சிக்கு பயன்படும் கணக்கில்லாத தொகை மனித நலனுக்காக வழங்கப்பட்டிருந்தால், பதினைந்து ஆண்டுகளுக்குள் வளர்ச்சியடையாத நாடுகளின் வாழ்க்கைத் தரத்தை அறுபது சதவீதம் உயர்த்த முடியும்.” மாறாக, இந்த செல்வம் அடக்குமுறைக்கான ஒரு கருவியாக மாற்றப்படுகிறது.
அவர் அணுகுண்டு சோதனைகளைப் பற்றி பொருளாதார அடிப்படையில் எழுதிய போதிலும், அரசியல் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவர் அதே விதமாக எழுதி உள்ளார். காலனிய நாடுகளில் படுகொலைகள் வேலை செய்யவில்லை என்றால், பிரான்ஸ அதன் கிளர்ச்சி காலனிகளுக்கு அணு குண்டை பரிசாக அளித்திருக்கும்,
அல்ஜீரிய தற்காலிக அரசாங்கத்தின் சார்பாக ஃபானோன், 1958 இல் அக்கிராவில் கானாவின் பிரதமர் குவாமே ந்குருமா (Kwame Nkrumah) ஏற்பாடு செய்த அனைத்து-ஆப்பிரிக்க மக்கள் மாநாட்டில் ( All-African People’s Conference ) லுமும்பா மற்றும் மூமியே ஆகியோரைச் சந்தித்தார். தேசிய விடுதலைப் போராட்டங்களின் அவசியம், காலனிய நாடுகளில் உள்ள மக்கள் படும் துன்பங்கள் . ஏகாதிபத்திய ராணுவத்தின் மிருகத்தனத்தில் இருந்து தங்களை எவ்வாறு சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்வது, மற்றும் நவ-காலனிய கட்டமைப்பின் சேதங்களில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும். இக்கட்டமைப்பு பொருளாதார சுரண்டல், அரசியல் தலையீடு மற்றும் கலாச்சார ஆதிக்கம் மூலம் செயல்படுகிறது.” இதற்கு அப்பால் எவ்வாறு முன்னேறுவது என்பது குறித்து அவர்கள் உரையாடினார்கள் . ஒரு ஆப்பிரிக்க லெஜியன் (African Legion), அதாவது ஆப்பிரிக்க கண்டத்தின் விடுதலைப் போர்களுக்கான ஒரு ராணுவப் படையை உருவாக்குவதில் ஃபானோன் ஆர்வம் காட்டினார்; இந்தப் படை அல்ஜீரியர்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். இந்த சந்திப்புகளின் குறிப்புகளில், மூமியேயின் மரணம் குறித்து ஃபானோன் எழுதினார்:
ஃபானோன், தனது நெருங்கிய நண்பரும் கேமரூன் விடுதலைப் போராட்டத் தலைவருமான ஃபெலிக்ஸ்-ரோலாண்ட் மூமியேவின் இழப்பைக் குறித்து ஒரு கடிதத்தில் இந்த சோகமான அஞ்சலியைப் பதிவு செய்தார்.
பிரான்ஸ் உளவு அமைப்பால் நஞ்சூட்டிக் கொல்லப்பட்ட மூமியேவின் உறுதித்தன்மை தேசப்பற்று மற்றும் அழியாப் புரட்சிக் குணங்களை ஃபானோன் இவ்வாறு அடையாளப்படுத்துகிறார்.
“அறுபது கிலோ தசை மற்றும் எலும்புகளில் அடைக்கப்பட்ட புரட்சிகர ஆவியின் ஒரு கட்டு” என்றார். இது காலனியாதிக்க எதிர்ப்பு இயக்கங்களின் முன்னணியில் நின்ற இளம் தலைவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கு ஒரு சான்றாக நிற்கிறது. அறியாமல் வந்த மரணம், மிக வெளிப்படையான, மிக உறுதியான, மிக உற்சாகமான மனிதனை தாக்கியது. ஃபெலிக்ஸ் (மூமியே) எப்போதும் அதிரக் கூப்பிடும் குரலில் பேசினார். புரட்சிகர உணர்வால் நிரம்பியவர்; அக்கறை, கோபம் மிகுந்தவர்; தன் தாய் நாட்டை காதலித்தவர்; பயங்கரவாதிகளையும் சூழ்ச்சிக்காரர்களையும் வெறுத்தவர்.
மூச்சுக்குழல் நிமோனியா தான் ஃபானோனின் மரணத்திற்கு காரணம் என அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் அது சான்றிதழில் எழுதப்பட்டது தான். அவர் இறந்த போது central intelligence agency (சிஐஏ) அதிகாரியான சி. ஆலிவர் ஐசலின், அங்கிருந்தார். ஆம் அப்படித்தான்.
பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதிய 32 ஆவது செய்தி மடல்
தமிழில் தோழர் தீபக்