Tamil Marx

ஆசியா சர்வதேசம்

நேபாள ஆட்சிக்கவிழிப்பு ஒரு பாடம்-அமீர் ஹைதர் கான்

நேபாள ஆட்சிக்கவிழிப்பு ஒரு பாடம்-அமீர் ஹைதர் கான்
  • PublishedSeptember 15, 2025

நேபாளத்தில் Gen Z போராட்டக்குழுவினர் முன்மொழிந்த அந்நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சுசீலா கார்க்கி பதவியேற்றுள்ளார். போராட்டத்த்தின் தீவிரம் கலவரமாக மற்ற பட்ட பிறகு பிரதமர் சர்மா ஒலி மற்றும் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால அரசை அமைக்க வேண்டிய பொறுப்பை ராணுவம் ஏற்றுக்கொண்டது. எனினும் இடைக்கால பிரதமராக நியமிக்க முன்மொழியப்பட்ட 3 பெயர்களில் சுசீலா கார்க்கி, அமெரிக்காவின் கைப்பாவையாக உள்ள அந்நாட்டின் ராப் பாடகரும் தலைநகர் காத்மாண்டு மேயருமான பாலேந்திரா ஷா முன்னிலை வகித்தனர்.

இதில் சுசீலா கார்க்கியை இடைக்கால அரசுக்கு பொறுப்பேற்க வைக்க வேண்டும் என Gen Z போராட்டக்குழுவினர் கூறிய நிலையில் பாலேந்திரா ஷா வை மற்றொரு தரப்பினர் கூறினர் இதனால் பிரதமர் நியமனம் தாமதமானது. பிறகு Gen Z போராட்டக்குழுவினர் கூறிய சுசீலா கார்க்கி பதவியேற்றார். தற்போதைய சிறு நிம்மதி நேரடியாக அமெரிக்காவின் கைப்பாவைக்கு அந்த நாடு செல்லவில்லை என்பது மட்டும் தான்.

ஆனால் இந்த போராட்டத்திற்கு பிறகு உருவாகும் நேபாள சமூகத்தை தீவிர வலது சாரிகள் கைப்பற்றக்கூடிய அபாயம் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் ஆட்சியில் இருந்த இடதுசாரிகள் நேபாள சமூகத்தை முறையான கட்டுக்கோப்பான தலைமையின் கீழ் அணி திரட்டவில்லை மற்றும் நிலையற்ற ஆட்சியின் காரணமாக அந்நாட்டு மக்களின் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதும் தான். இதனால் ஏற்பட்ட இடைவெளியை அந்நாட்டின் தீவிர வலதுசாரிகளும் இந்துத்துவா அமைப்புகளும் அறுவடை செய்துவிட்டன என்பதே இடதுசாரிகள் சுய விமர்சனத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

அரசியல் நெருக்கடி 

Gen Z போராட்டமானது வெடித்து காட்டுத் தீ போல வெடித்து பரவி தற்போது கட்டுக்குள் வந்திருந்தாலும் அது பல ஆண்டுகால அரசியல் நெருக்கடியில் இருந்து தான் வெடித்துள்ளது.

தெற்காசிய நாடுகளில் நிலவிவருகிற பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, பணவீக்கம், ஊழல், சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட வெளிநாட்டு கடன்கள் அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே ஆட்சி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதில் ஆட்சியாளர்களின் நிர்வாகத் தோல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை இலங்கை, வங்கதேசம், நேபாளம் ஆகிய மூன்று நாடுகளிலும் காணமுடியும்.

இடதுசாரிகளும் நேபாளமும்

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற நேபாள தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகள் 75 சதவீதமான இடங்களை வென்றன ஆனால் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தால் என்னென்ன நடவடிக்கைளை மேற்க்கொள்ளுமோ அது நேபாளத்தில் நடைபெறவில்லை. குறிப்பாக கம்யூனிஸ்ட் அரசின் அடிப்படை வர்க்க கடமையாக பார்க்கப்பட்டும் நில சீர்திருத்தம் கூட அங்கு முறையாக அமலாகவில்லை.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு சில கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்றிணைந்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கின. கட்சிகளுக்குள் வலுவான ஒற்றுமை இல்லதாததாலும், ஒருங்கிணைந்த கட்சியாக இல்லாததாலும் தேர்தல் கூட்டணியாக மட்டுமே அவை செயல்பட்டன. அதே நேரத்தில் சட்டசிக்கல்கள் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அந்த இணைப்பு சிதைந்தது

இடதுசாரி அரசாங்கங்கள் நேபாளத்தில் நீடிக்கும் சிக்கல்களில் சிலவற்றைத் தீர்க்க சில நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள். அதன் விளைவாகத்தான் அந்நாட்டு மக்களின் வறுமை விகிதம் குறைந்தது. குறிப்பாக அந்நாட்டின் வறுமை விகிதம் குறைந்ததது. அந்நாட்டில் 2015 இல் 36 சதவீதமாக இருந்த குழந்தைகளின் வறுமை விகிதம் 2025 இல் 15 சதவீதமாக குறைந்துள்ளது. உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு சுமார் 99 சதவீதமான மக்களுக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டிலும் அந்நாட்டை மேம்படுத்தி கொண்டு வந்தனர். எனினும் ஏற்றத்தாழ்வுகள் வேகமாக குறையவில்லை.

ஆனால் இந்த மேம்பாடு மேலும் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும் என்றால் அங்கு இடதுசாரிகள் தலைமையிலான அரசியல் நிலைத்தன்மை இருந்திருக்க வேண்டும் ஆனால் கெடுவாய்ப்பாக அது நிகழவில்லை. அதே நேரத்தில் முன்பு சொன்னதுபோல நிலச் சீர்திருத்தம் முழுமையாக நடக்கவில்லை. இதன் காரணமாக மன்னராட்சிகள் தொட்டு இருந்து வந்த நிலப்பிரபுத்துவ நடைமுறைகளும் சாதிஒய கட்டமைப்புகள் உடையும் அப்படியே இருந்துள்ளது. இடது போன்ற தோல்விகளும் இடதுசாரிகள் ஆட்சியில் கவனிக்க வேண்டிய அம்சமாகும்.

பிறகு 2021 இல் அந்தக் கூட்டணி உடைந்த பிறகு இடதுசாரிக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. இதை மக்கள் ஆரோக்கியமானதாகப் பார்க்கவில்லை மாறாக இதனை ஒரு சந்தர்ப்பவாதம் என்றே கருதினார்கள். ஆட்சி மாற்றங்கள் நடந்து கொண்டே இருந்ததால் அரசியல் நிலைத்தன்மை இல்லாமல் போனது. இது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகான ஒரு பொதுவான திட்டமும், அதற்கான அரசியலையும் அவர்களால் முன்வைக்க முடியவில்லை. இப்படித்தான் அந்நாட்டில் மாற்றத்தை கொண்டு வர இடதுசாரி கட்சிகளுக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு வீணானது என பேராசிரியர் விஜய் பிரசாத் மற்றும் அதுல் சந்திரா அவர்களுடைய கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பிரச்சனைகளுக்கு பின்னணியில் தான் 2024 இல் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான இடதுசாரிகளின் வலதுசாரி பிரிவும் நேபாள காங்கிரஸ் என்ற வலதுசாரிகளும் ஒன்றினைந்து ஒரு மைய-வலதுசாரி அரசாங்கத்தை அமைத்தனர். இது மிகப்பெரிய பிழையாகும். மேலும் அவரது அரசு அமெரிக்காவுடன் மிக நெருங்கிய தொடர்பை வைத்தது. இதற்கு இடதுசாரிகள் கடுமையான எதிப்பை தெரிவித்து வந்தனர்.

நேபாளத்தின் நெருக்கடி

இத்தகைய மோசமான நிலையற்ற ஆட்சியின்காரணமாக நேபாளத்தின் வளர்ச்சியில் அரசுகளின் முழுக்கவனம் செல்லாமல் செய்தறியாது. இதன் காரணமாக வேலையின்மை மிகப்பிரதான பிரச்சனையாக உருவெடுத்தது. வேலைக்காக அந்நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்லத்துவங்கினர். 2000 ஆம் ஆண்டு 55,000 நேபாள இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை பார்த்ததாக தரவுகள் கூறும் நிலையில் இந்த அளவு தற்போது 5,34,500 ஆக அதிகரித்துள்ளது. சரியாக சொன்னால் ஒவ்வொரு 1000 நேபாளி இளைஞர்களில் சுமார் 17.2 பேர் வேலைக்காக வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்து செல்கிறார்கள். அதாவது வெளிநாட்டுக்கு வேலை தேடி செல்லும் நேபாள இளைஞர்களின் எண்ணிக்கை கடந்த 25 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்துள்ளது.

அதே போல அந்நாட்டில் ஊழலும் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு 180 நாடுகளில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் அதிக ஊழல் செய்யும் நாடுகளின் பட்டியலில் நேபாளம் 107 ஆவது இடத்தில் இருந்தது. இந்த ஊழல், தொடர்ந்து மாறி வந்த நிலையற்ற ஆட்சி, சூழ்நிலைக்கு ஏற்ற சந்தர்ப்பவாத கூட்டணிகள், அரசியல்வாதிகளின் குடும்பங்களுக்கு கொடுக்கப்படும் அதிகபடியான சலுகைகள் (nepotism ) உள்ளிட்டவை கட்சிகள் மீது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசாங்கத்தின் மீதும் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியது.

வேலையின்மையின் காரணமாக பெரும்பாலானான இளைஞர்கள் டிஜிட்டல் சமூக ஊடகங்களை பயன்படுத்தி அதில் பிரபலங்களாக உருவெடுத்து தங்களுடைய வருமானத்தை அதன் மூலம் தேடி வந்தனர். இந்நிலையில் இதனையும் கணக்கில் எடுக்காமல் அரசு சமூக ஊடகங்களை தடை செய்தது ஒட்டுமொத்த கோபமும் ஒரு புள்ளியில் Gen Z தலைமுறையினரின் போராட்டம் வெடித்தது.

என்ஜிஓ மற்றும் வெளிநாட்டு தலையீடு

ஆனால் இந்தப் போராட்டங்கள் கலவரமாக மாறி ஒட்டு மொத்த அரசாங்கத்தையும் கவிழ்ப்பதற்கு நேரடி காரணம் அந்நாட்டின் Gen Z தலைமுறை அல்ல, நாட்டை சிதைக்க வேண்டும் என முன்கூட்டியே திட்டமிடப்பட்ட வெளிநாட்டினரின் சூழ்ச்சிக்கு Gen Z தலைமுறை போராட்டம் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிதியமும் (National Endowment for Democracy), இந்தியாவில் உள்ள தீவிர வலதுசாரி இந்துத்துவா அமைப்புகளும் இதில் பெரும் பங்கு வகித்துள்ளன என பேராசிரியர் விஜய் பிரசாத்தும், ஆசிய திட்ட அமைப்பின் துணை ஆசிரியருமான அதுல் சந்திரா ஆகியோர் குறிப்பிடுகின்றனர.

ஹமி நேபாளம் என்ற என்ஜிஓ அமைப்பானது 2015 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த அமைப்புக்கு அமெரிக்காவின் தேசிய ஜனநாயக நிதியம், சீனாவில் ஆட்சிக் கவிழ்ப்பை நடத்துவதற்காக உருவாக்கப்பட்ட திபெத் விடுதலை குழு (free tibet), கோகோ கோலா, நேபாள காவல்துறைக்கு ஆயுதம் வாங்குவதில் ஊழல் செய்த தீபக் பாட்ட என்பவரது இன்பினிட்டி ஹோல்டிங்க்ஸ் (infinity holdings) என்ற நிறுவனம், கொரோனா காலத்தில் காய்ச்சலை கண்டறிய பயன்படுத்திய துப்பாக்கி வடிவ தெர்மாமீட்டரை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த சாஹில் அகர்வாலின் சங்கர் குழுமம், அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ விடம் விருது வாங்கிய சண்டுக் ரூட் உள்ளிட்ட ஊழவாதிகளும் அமெரிக்க ஆதரவாளர்களுமே ஹமி நேபாளம் அமைப்புக்கு நிதி வழங்கிய முக்கிய நபர்களாக இருந்துள்ளனர்.

38 வயதான சூடான் குருங் என்பவர்தான் ஹமி நேபாளம் அமைப்பின் தலைவராக உள்ளார். இவர் இந்த நிதி மூலமாக gen z தலைமுறை இளைஞர்களை தொண்டு செய்வது நிவாரணப்பணிகளில் ஈடுபடுவது என ஒருங்கிணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அமைப்பை துவங்கிய 2015 இல் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்ட பொது 200 இளைஞர்களை திரட்டி நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சமூக ஊடங்களுக்கு தடை விதிக்கப்பட்ட போது இளைஞர்களின் கோபக் கொதிநிலை உச்சத்தை அடைந்தது. அப்போது அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்த இவர் அழைப்பு விடுத்தார். எப்படி போராட வேண்டும் மாணவர்கள் சீருடை புத்தகங்களுடன் போராட்டகளத்திற்கு வர வேண்டும் என இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக அவர் ஒவ்வொரு வழிமுறையையும் பகிர்ந்துள்ளார்.

நேபாள முதலாளிகளின் இந்துத்துவா ஆதரவு

இதே நேரத்தில் நேபாளத்தில் உள்ள முதலாளித்துவ வர்க்கம் சார்ந்த பிரச்சனைகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏற்கனவே சொன்னது போல நிலச் சீர்திருத்தம் நடக்காததால் 19 ஆம் நூற்றாண்டில் நேபாளத்தில் வேரூன்றி இருந்த மன்னராட்சியுடன் தொடர்புடைய நபர்களே தற்போதும் அந்நாட்டின் மிக முக்கிய அதிகார மையங்களாக சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நபர்களாக உள்ளனர். நிலம், நிதி, மற்றும் அரசு ஒப்பந்தங்கள் ஆகியவை அந்த அதிகார வர்க்கத்தை சார்ந்த சிலரின் கைகளில் தான் உள்ளது.

ஒடுக்கப்பட்ட அல்லது இடைநிலை சதியை சார்ந்த நேபாளத்தின் சிறு முதலாளித்துவ வர்க்கத்தினர் பல ஆண்டுகால உயர் சாதியினரின் ஆதிக்கத்தால் விரக்தியடைந்து இருந்தனர். இவர்கள் இந்தியா-நேபாள எல்லை மாநிலமாக உள்ள உ.பி யில் இருந்த தீவிர வலதுசாரி ஆர்எஸ்எஸ் இந்துத்துவா கருத்தியலை பின்பற்றிய சிறு முதலாளிகளின் அரசியலால் ஈர்க்கப்பட்டனர். இதன் பின்னணியில் தான் போராட்டக்காரர்களின் ஒரு பிரிவினர் உ.பி முதல்வர் யோகி ஆதித்திய நாத்தின் புகப்படத்தை ஏந்தி சென்றார்கள்.

இவர்கள் நேபாளத்தை மீண்டும் அழிவுப்பாதைக்கு தள்ளும் வகையில் இந்து மன்னரின் தலைமையில் மன்னராட்சிக்கே “திரும்ப” வேண்டும் என கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி (RPP) போன்ற மன்னராட்சிக்கு ஆதரவான கட்சிகள் அம்மக்களை தூண்டி விட்டு வருகின்றன. இதற்காகவே 2025 மார்ச் மாதம் சிவசேனா நேபாளம், விஸ்வ இந்து மகாசப உள்ளிட்ட இந்துத்துவா ஆதரவு அமைப்புகளை ஒன்றிணைத்து கூட்டு மக்கள் இயக்கக் குழுவை உருவாக்கியுள்ளனர்.

நேபாளாத்தில் 1990 களில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ் இன் சர்வதேச அமைப்பான இந்து சுயம்சேவக் சங்கம் (HSS) நேபாளத்தில் பல ஷாகாக்களை நடத்தி அதன் மூலம் ஆர்எஸ்எஸ் ஊழியர்களை உருவாக்கியது. இந்து சுயம்சேவக் சங்கம், சிவசேனா மற்றும் ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சி போன்ற பல அமைப்புகள் இணைந்து மதச்சார்பற்ற கொள்கைகள், ஜனநாயகம் ஆகியவற்றிக்கு எதிராகவும் இந்து ராஜ்யம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்து வந்தன. அதாவது இந்தியாவில் இருந்து செயல்படும் இந்த அமைப்புகள் நேபாளத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அந்நாட்டின் இந்து தேசியவாத வலதுசாரி கட்சியின் பங்கை ஊக்குவித்தன.

இதற்காக இந்து விழாக்களை முன்னெடுத்து இணையத்தில் பிரபலமாக உள்ளவர்களை அழைத்து அவர்களை கவுரவித்து அவர்கள் மூலமாக தங்களது பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள். அதேபோல ஒடுக்கப்பட்ட சாதியினரை அணிதிரட்டுவது ஊழல் எதிர்ப்பு மற்றும் தொண்டு செய்கிறோம் என்ற பெயரிலும் மக்களை தங்களது சுய அரசியலுக்கு பயன்படுத்தினார்கள்.

இந்த வலதுசாரி குழுக்கள் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகள் தான் gen z இளைஞர்களின் போரட்டத்தை கலவரமாக மாற்றியுள்ளன எனவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த பெரும் போராட்டத்திலும் கலவரத்திலும் எந்த இந்துத்துவ வாதிகளின் வீடுகளும் தாக்கப்படவில்லை. இந்த கலவரம் வெடிப்பதற்கு முன் மார்ச் மாதமே ராஷ்ட்ரிய பிரஜாதந்திர கட்சியினர் நேபாளத்தில் ஒரு கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கினர். தற்போது கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை குறிவைத்து பல பிரிவினர் தாக்கி தீ வைத்து வருகிறார்கள்.

சரியான தலைமை இல்லாத காரணத்தாலும், முன்கூட்டிய திட்டமிடலாலும் இந்த போரட்டத்தை இந்துத்துவா பழமைவாதிகள், ஹமி நேபாளம் (Hami Nepal) என்ற என்ஜிஓ அமைப்பின் வெளிநாட்டு நிதி உதவி மூலம் இந்த போரட்டம் கைப்பற்றப்பட்டு பல வன்முறைகள் உருவாக்கப்பட்டது. இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முழுமையாக அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளால் அரங்கேற்றப்படிருந்தாலும் இந்திய வலதுசாரிக் குழுக்களே அதிக லாபம் அடைய வாய்ப்பு உள்ளது.

இடதுசாரிகள் செய்யும் தவறுகள் எப்படி ஒரு நாட்டையும் மக்களையும் பாதிக்கும் என்பதற்கு இந்த ஆட்சிக்கவிழ்பு ஒரு உதாரணம். இந்த கட்டுரையில் பேசப்பட்டுள்ள விஷயங்கள் நேபாள ஆட்சி கவிழ்ப்பு பற்றிய விவாதத்தையும் ஆய்வையும் தூண்டும் சிறு பணித்தான். இக்கட்டுரையை படிக்கும் தோழர்கள் இந்தப்பணியை மேலும் செழுமைப்படுத்தும் வகையில் புதிய ஆய்வுகளையும் இடதுசாரிங்கள் முன்வைக்கும் விமர்சனங்களைப் பற்றியும் இங்கு பேசலாம்.

கட்டுரையாளர் அமீர் ஹைதர் கான்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *