Tamil Marx

தமிழ் நாடு

நீதியின் பெயரால் மதவாத அரசியல் : திருப்பரங்குன்றம்

நீதியின் பெயரால் மதவாத அரசியல் : திருப்பரங்குன்றம்
  • PublishedNovember 22, 2026

திருப்பரங்குன்றம் வழக்கில் ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றுக்கொள்ளலாம் என நீதித்துறை, இந்துத்துவ அரசியல் சேர்ந்து ஒரு மத அரசியல் நாடகத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஒரு சர்வே கல்லை திட்டமிட்டு பிரச்சாரம் செய்து தீபத்தூண் ஆக்கி வரலாற்றை திருத்திருகிறோம் என்ற பெயரில் வரலாற்றை திருடுயிருக்கின்றது இந்துத்துவா சங்கி கும்பல். நூற்றாண்டு காலமாக முருகன் கோயிலும், சிக்கந்தர் தர்காவும் அருகருகே அமைதியாக இருந்து வருகிறது. அந்த அமைதியைக் குலைத்தது மட்டுமின்றி, அதை வைத்து மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பியிருக்கிறது இந்த ஆளும் வர்க்கம்.

முன்னுதாரணத்தின் ஆபத்து – Stare Decisis

இந்த ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற சொல்வது உரிமை கிடையாது, இது மீண்டும் தீபம் ஏற்ற முன்னுதாரணம் இல்லை என்று சொல்கிறது உச்சநீதிமன்றம். ஆனால் சட்டத்தில் “ஒருமுறை மட்டும்” என்ற எதுவும் கிடையாது.
Stare Decisis என்பது முந்தைய தீர்ப்பை பின்பற்ற வேண்டும் என்ற கோட்பாடு. ஒரு தடவை ஒரு கல்லுக்கு தீபம் ஏற்ற அனுமதி கொடுத்துவிட்டால், அது நடைமுறையில் முன்னுதாரணமாகிவிடும். நாளை இதே தர்க்கத்தை வைத்து நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான தர்காக்கள், மசூதிகள், தேவாலயங்கள் மீதும் இதே போன்ற இந்துத்துவா கும்பல்கள் உரிமையைக் கோருவதற்கு வழிவகுக்கும்.

வார்த்தையில் “முன்னுதாரணம் இல்லை” என்று சொன்னாலும் கூட செயலில் அதுதான் மீண்டும் நடக்க வழிவகுக்கும். எனவே நடப்பது உண்மையில் சட்டத்தின் ஆட்சிதானா? என்ற கேள்வியே எழாமல், இது பெரும்பான்மை மதவாதத்தின் ஆட்சிதான் என்று வலிமையாகக் கூறுவது போல உச்சநீதிமன்றம் இப்படியொரு தீர்ப்பை வழங்கியுள்ளது.

இருந்த நிலையை உடைத்தது – Status Quo

திருப்பரங்குன்றத்தில் பல வருடங்களாக இருந்த நிலை என்ன? உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் தீபம் ஏற்றுவார்கள். மேலே தர்கா இருக்கிறது. இரு இடங்களிலும் அவரவர் வழிபாட்டைச் செய்து கொண்டு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக இருந்து வந்தார்கள்.

இடைக்கால உத்தரவு ஏற்கெனவே இருந்த நிலையைப் பாதுகாக்காமல், மாறாக, அதுவரை இருந்த நிலையை மாற்றி, ஒரு தரப்பினருக்கு மட்டும் சாதகமாக மலையின் மேலே செல்ல அனுமதி கொடுத்திருக்கிறது. பொதுவாக, சட்டத்தில் இடைக்கால உத்தரவு என்பது ஏற்கெனவே இருக்கும் நிலையைப் பாதுகாப்பதற்குத்தானே தவிர அதை மாற்றுவதற்கல்ல. ஆனால் இங்கே அதற்கு நேர்மாறாக நடந்திருக்கிறது. இது வெளிப்படையாகத் தெரியும் தவறு.

இன்று இப்படி மாற்றப்பட்ட நிலை, நாளை அதுவே வழக்கமான நிலையாக மாறிவிடும். அதன் பிறகு பழைய நிலைக்குக் கொண்டுவருவது மிகவும் கடினமாகிவிடும். இறுதியில், நடந்தது நடந்துவிட்டது, இனி அதை மாற்ற முடியாது என்ற நிலை உருவாகும்.

தவறான தீர்ப்பின் ஆபத்து – Per Incuriam

Per Incuriam என்றால், ஏற்கெனவே உள்ள சட்ட விதிகளையும், முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளையும் கவனத்தில் கொள்ளாமல் வழங்கப்படும் தீர்ப்பு என்று பொருள்.
இங்கே மூன்று முக்கியமான ஆபத்துகள் இருக்கின்றன.

முதலாவது, தற்காலிக நீதி.

சட்டம் என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். “கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கிவிட்டது, அதனால் இந்த ஒருமுறை மட்டும் அனுமதிக்கலாம்” என்று சொல்வது சட்டப்படி சரியான அணுகுமுறை அல்ல. சட்டம் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளக்கூடியது கிடையாது. இப்படிச் செயல்பட்டால், நீதிமன்றம் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதற்குப் பதிலாக, சூழ்நிலையைப் பார்த்து தீர்ப்பு வழங்கும் கட்டப்பஞ்சாயத்தைப் போல ஆகிவிடுகிறது.

இரண்டாவது, போதிய ஆதாரம் இல்லாமல் முடிவெடுப்பது.

அந்தக் சர்வே கல் உண்மையிலேயே தீபத்தூண் என்று நிரூபிக்கப்பட வில்லை. இப்படி அடிப்படை ஆதாரங்களே இல்லாத நிலையில், அங்கு தீபம் ஏற்ற அனுமதி கொடுத்திருப்பது ஆபத்தானது. சட்ட ரீதியாகவும் இது கேள்விக்குரிய முடிவு. ஏற்கெனவே உள்ள சட்டங்களையும், முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளையும் கவனிக்காமல் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருப்பதை Per Incuriam என்பார்கள்.

மூன்றாவது, சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆபத்து.

நீதிமன்றம் இதனால் எந்தப் பிரச்சினையும் வராது, அமைதியாகத்தான் நடக்கும் என்று நம்புகிறது. ஆனால் வரலாறு நமக்கு வேறு ஒன்றைச் சுட்டிக்காட்டுகிறது. பாபர் மசூதி விவகாரமும் இதேபோன்றுதான் தொடங்கியது. முதலில் ஏற்கெனவே இருந்த இதே நிலைதான் இருந்தது. பிறகு சிறிய அளவில் சில அனுமதிகள் வழங்கப்பட்டன. படிப்படியாக நிலைமை மாறி, இறுதியில் அதை மாற்ற முடியாத சூழல் உருவானது.

இதைத்தான் Fait Accompli என்று சொல்வார்கள். அதாவது, ஒரு செயல் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டதால், இனி அதை மாற்ற முடியாது என்ற நிலைக்குக் கொண்டு செல்வது.
இப்படிச் சிறிய மாற்றங்களுக்கு அனுமதி கொடுத்துக்கொண்டே போனால், நாளடைவில் பெரிய மாற்றங்களுக்கு அது வழிவகுத்துவிடும். இதற்குப் பெயர்தான் சறுக்குப் பாதை.

மதச்சார்பின்மை என்றால் அரசும் நீதிமன்றமும் எந்தவொரு மதத்தின் பக்கமும் சாயாமல், நடுநிலையாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படைப் பொருள். ஆனால் இங்கே நீதிமன்றமே ஒரு தரப்பினரின் மத நம்பிக்கைக்கு முன்னுரிமை கொடுத்து, அதை தீர்ப்பாக மாற்றியிருப்பது ஆபத்தானது.

தர்கா தரப்பினர் சமர்ப்பித்த ஆவணங்கள், 1920 மற்றும் 1923ஆம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புகள், தமிழ்நாடு அரசின் வாதங்கள் எனப் பல முக்கியமான விஷயங்கள் புறக்கணிக்கப்பட்டு, சட்ட ஆதாரங்களைவிட மத உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இது வெறும் இந்து – முஸ்லிம் பிரச்சினை மட்டுமே பார்க்கக் கூடாது. மதத்தின் பெயரால் உழைக்கும் மக்களைப் பிரித்து, அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்தி, அந்தப் பிளவைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி என்பதே உண்மை.

மத நம்பிக்கை என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட உரிமை. ஆனால் பொது இடங்களும் வரலாற்றுச் சின்னங்களும் எந்தவொரு தனிப்பட்ட மதத்திற்கோ, சமூகத்திற்கோ சொந்தமானவை அல்ல. ஒரு சமூகத்தின் மத வழிபாட்டு முறையை மற்றொரு சமூகத்தின் மீது திணிக்க யாருக்கும் இங்கு உரிமை இல்லை. ஆக நீதிமன்றங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அதோடு நின்றுவிடக் கூடாது. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மதச்சார்பின்மை நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டம் கூட்டி அவர்கள் மூலம் குடியரசு தலைவர் சந்தித்து இந்த மோசமான தீர்ப்பு எதிராக முறையிட வேண்டும். தமிழ்நாட்டு மக்களும், குறிப்பாக உழைக்கும் வர்க்கமும், மக்களை மதத்தின் பெயரால் பிளவுபடுத்தும் இந்த மதவாத அரசியலை உறுதியாக நிராகரிக்க வேண்டும்.

திருப்பரங்குன்றம் மலை எந்தவொரு தனி மதத்திற்கோ, தனி சமூகத்திற்கோ சொந்தமானதல்ல. அது அனைத்து மக்களுக்கும் சொந்தமானது.

 

கட்டுரை படம் :- உச்சி பிள்ளையார் கோவிலில் பாரம்பரியமாக ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தின் காட்சி

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *