Tamil Marx

இந்தியா கட்டுரைகள்

நம் உணவுத் தட்டில் இருப்பது என்ன? – எரன்

நம் உணவுத் தட்டில் இருப்பது என்ன? – எரன்
  • PublishedNovember 20, 2026

ஓர் அரசு மருத்துவமனை. அங்கு வழக்கம்போல் சலசலப்பும் அவசரமும். அவசர சிகிச்சைப் பிரிவில் பிரியா என்ற ஐந்தாம் வகுப்புக் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறாள். பிரியாவுக்குத் தாய் மட்டுமே. தந்தையை, பல ஆண்டுகளுக்கு முன்பே கடன் தொல்லைக்குப் பலிகொடுத்தாயிற்று. தாய் இப்போது வீட்டு வேலை செய்து, மகளைப் படிக்க வைத்து வருகிறாள்.

அங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் ஒரு தனியார் மருத்துவமனை இருக்கிறது. அங்கு மோகன் என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். அரசு மருத்துவமனையில் சாமானிய மக்களுக்கு உரிய சிகிச்சை, மரியாதை கிடைக்காது என்பதைத் தான் சிறுவனாக இருக்கும்போது தன் தாயின் சிகிச்சைக்கு அங்கு சென்றபோது அனுபவித்துள்ளான். மோகனுக்கு வயது 35; ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு மகள்.

வெவ்வேறு இடங்களில் சிகிச்சை பெறும் இருவரின் உடல்நிலையும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கவலைக்கிடமாக இருந்தது. மோகன் சிகிச்சை பலனின்றி இறந்துபோனான். அவன் இறப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே, அரசு மருத்துவமனையில் பிரியாவும் இறந்திருந்தாள்.

முதலில் ஒரு கேள்வி: ஊட்டச்சத்துக் குறைபாடு ஏன் வருகிறது?

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) 2020-ல் வெளியிட்ட பரிந்துரைகளின்படி, 65 கிலோ எடையுள்ள ஓர் ஆணுக்கு உட்கார்ந்து செய்யும் வேலைக்கு நாளொன்றுக்கு 2,110 கிலோ கலோரி ஆற்றல் தேவை. மிதமான உடலுழைப்புக்கு 2,710 கிலோ கலோரியும், கடின உடலுழைப்புக்கு 3,470 கிலோ கலோரியும் தேவை. 55 கிலோ எடையுள்ள பெண்ணுக்கு இதே மூன்று நிலைகளில் முறையே 1,660, 2,130, 2,720 கிலோ கலோரி தேவை எனச் சொல்கிறது.

அதேபோல ஒரு கிலோ உடல் எடைக்கு 0.83 கிராம் புரதம் தேவை. அதன்படி ஆணுக்குச் சுமார் 54 கிராமும், பெண்ணுக்குச் சுமார் 46 கிராமும் வேண்டும். இரும்புச்சத்து ஆணுக்கு 19 மி.கி., பெண்ணுக்கு 29 மி.கி., கால்சியம் இருவருக்கும் 1,000 மி.கி. தேவை. குழந்தைகளுக்கான வயதுவாரி மதிப்புகளும் இதே அறிக்கையில் உள்ளன. வளரும் குழந்தைக்கு, உடல் எடையோடு ஒப்பிட்டால், புரதமும் இரும்பும் கால்சியமும் இன்னும் முக்கியம்.

ஆனால் கலோரியும் புரதமும் மட்டுமே ஆரோக்கியமாகிவிடாது. 2024-ல் ICMR-NIN “இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டி” என்ற தலைப்பில் ஒவ்வொரு நபரின் உணவுத் தட்டில் என்னென்ன உணவுகள் இருப்பது நல்லது என எட்டு உணவுகளைப் பரிந்துரை செய்தது.

ஒரு தட்டில் பாதியளவு காய்கறி, கீரை, பழங்களாக, அதாவது தினமும் தோராயமாக அரை கிலோவாக இருக்க வேண்டும். மீதத்தில் தானியம் அல்லது சிறுதானியம், பருப்பு-பயறு, முட்டை/இறைச்சி/மீன், கொட்டை-எண்ணெய் விதைகள், பால்/தயிர் ஆகியவை இடம்பெற வேண்டும். சமையல் எண்ணெய் 25-30 கிராமுக்குள்ளும், சர்க்கரை 20-25 கிராமுக்குள்ளும் இருக்க வேண்டும் எனச் சொன்னது.

இதன் அர்த்தம், கிடைப்பதை எல்லாம் சாப்பிடக்கூடாது; எதைச் சாப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியம். சத்து இல்லா உணவுகளை உண்டு வயிறு நிறைந்திருந்தாலும், அத்தகைய நிலையை “மறைந்த பசி” என்கிறார்கள். அதாவது, உடலுக்குத் தேவையான சத்து பசியை நிரப்பவில்லை என்பதே இதன் அர்த்தம்.

இந்த மாதிரியான சாப்பாட்டை ஒரு நாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஒரு சாதாரண தொழிலாளியின் குடும்பத்தால் வாங்க முடியுமா? அந்தக் கேள்விதான் இக்கட்டுரையின் தொடக்கம்.

உணவு இருக்கிறது, சத்து இல்லை

2025-ல் சுமார் 64.5 கோடி பேர் (உலக மக்கள்தொகையில் 7.8%) பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் SOFI அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர, சுமார் 210 கோடி பேர் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையில் உள்ளனர். இதில் இன்னும் கவலைக்குரிய விஷயம், உலகம் முழுவதும் சுமார் 269 கோடி பேர் (32.7%) சத்தான உணவுகளை வாங்க முடியாதவர்களாக உள்ளனர்.

குழந்தைகளின் நிலையும் இதுதான். UNICEF-WHO-உலக வங்கி 2025-ல் வெளியிட்ட JME அறிக்கையில், ஐந்து வயதுக்குட்பட்ட 15.02 கோடி குழந்தைகள் வளர்ச்சிக் குன்றி (stunting, வயதுக்கேற்ற உயரம் இல்லாமை) உள்ளனர். 4.28 கோடி பேர் உயரத்துக்கேற்ற எடை இல்லாமல் (wasting) உள்ளனர். இந்த அறிக்கையின் தலைப்பே “சத்துணவின் அதிக விலையைப் புரிந்துகொண்டு அதைத் தீர்த்தல்” எனப் பிரச்சினையை நேரடியாகக் காட்டும் வகையில் இருந்தது. அதாவது, பிரச்சினை சத்தான உணவுகள் இல்லை என்பதல்ல; அந்த உணவை வாங்கும் திறன் இல்லாததுதான்.

இந்தியாவின் வளர்ச்சிக் கதையும் முரண்பாடும்

நேர்மையாகப் பேசுவோம்; இந்தியா வளர்ந்துள்ளது என்பது உண்மையா? எந்தக் கேள்வியும் கேட்காமல் அறிக்கையை ஏற்றுக்கொண்டால் உண்மைதான். ஆனால், பட்டினி, வறுமை போன்றவற்றை கணக்கிடும் முறையில் பாஜக நிர்வாகம் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. இதன் காரணமாக உண்மையான அளவு குறைத்துக் காட்டப்படுகிறது. இந்திய அரசின் தரவுகளையே சர்வதேச அமைப்புகள் பயன்படுத்துவதால் பெரிய வேறுபாடுகள் இன்றி முன்னேற்றம் இருப்பதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

எனவேதான் இந்தியாவில், பட்டினியில் இருப்போர் எண்ணிக்கை  2023-25-ல் 14.25 கோடியாக (9.8%) குறைந்துள்ளது. 2026 மே 29-ல் வெளியான தேசியக் குடும்ப நல ஆய்வு NFHS-6 (கள ஆய்வு 2023-24) அறிக்கையின்படி, ஐந்து வயதுக்குட்பட்டோரில் வளர்ச்சிக் குன்றல் 35.5%-லிருந்து 29.3%-ஆகவும், மிக மோசமான மற்றும் உயிருக்கு ஆபத்தான ஊட்டச்சத்துக் குறைபாடான “கடுமையான wasting” 7.7%-லிருந்து 5.2%-ஆகவும் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது 100% உண்மை அல்ல; அதில் அறிவியல் பூர்வமான பிழைகளும் உள்ளன என்பதையும் வாசகர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இரத்தசோகை பற்றிய நிலை இன்னும் மோசமாகும். NFHS-5-ல் 6-59 மாதக் குழந்தைகளில் 67%, பெண்களில் 57% பேருக்கு இரத்தசோகை இருந்தது. NFHS-6 அறிக்கையில் இந்த அளவே காட்டப்படவில்லை; புதிய ஆய்வின் (DABS-I) முடிவுகளும் ஜூன் 2026 வரை வெளிவரவில்லை. அதாவது, நாட்டின் மிகப் பரவலான ஊட்டச்சத்துப் பிரச்சினைக்கு இன்றுவரை புதிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரமே இல்லை.

உலகப் பட்டினிக் குறியீடு (GHI) 2026-ல் இந்தியா 24.1 மதிப்பெண்ணுடன் 122 நாடுகளில் 100-வது இடத்தில் உள்ளது. இதற்கு அர்த்தம் இந்தியா தீவிரப் பிரிவில் உள்ளது என்பதுதான். 2012 முதல் இதுதான் நிலை. வங்கதேசம் 19.2, நேபாளம் 14.5, இலங்கை 10.2 ஆகிய நாடுகளை விட மோசமான இடத்தில் நம் மக்கள் உள்ளனர். மேலும், இந்தியாவின் மொத்த நோய்களில் 56.4% ஆரோக்கியமற்ற உணவால் வருகிறது.

ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு மூன்று முக்கிய காரணங்களை UNICEF சொல்கிறது

நேரடிக் காரணங்கள்:- போதிய அளவு இல்லாத மற்றும் ஒரே மாதிரியான உணவுகள், அடிக்கடி ஏற்படும் தொற்று, தாயின் ஊட்டச்சத்துக் குறைவு, அதனால் குறையும் தாய்ப்பால் (55.8%) ஆகியவை இதில் அடங்கும்.

குடும்பம் சார்ந்த காரணங்கள்:-  குறைந்த குடும்ப வருமானம், அதிக உணவுச் செலவு. தானியத்தை மட்டுமே சார்ந்துள்ள உணவு முறையும் இதில் அடங்கும். இந்தியர்களின் ஆற்றலில் 50-70% தானியங்களே பங்களிக்கின்றன; குறைந்த பட்சம் 14% பங்களிக்க வேண்டிய பருப்பு, இறைச்சி, மீன் மூன்றும் சேர்ந்து 6-9% மட்டுமே பங்களிக்கின்றன. அத்துடன் சுகாதாரமான குடிநீர், கழிப்பறை இல்லாதது, குழந்தையைப் பராமரிக்க நேரமில்லாத அளவு நீளும் தாய்மார்களின் வேலை நேரம், அதிக மருத்துவச் செலவு ஆகியவையும் இதில் உள்ளன.

அடிப்படை காரணங்கள்:-  வருமானம், விலைவாசி, வேலை, பொதுச் செலவு போன்ற அடிப்படை காரணங்கள். இவையாவும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

“அம்மா சரியாக உணவு கொடுக்கவில்லை”, “மக்களுக்கு உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இல்லை” என்று முதல் இரண்டு காரணங்களைப் பற்றி நாம் நிறையப் பேசுகிறோம்; ஆனால் மூன்றாவது காரணத்தைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை. ஒன்றைப் பற்றிப் பெரிதாகச் சிந்தித்தால்தானே அதைப் பற்றிப் பேச முடியும்? இவற்றைப் பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்தித்து, அதற்கு எதிராகக் கொடிபிடித்து ஒரு கூட்டம் தெருவில் கத்திக்கொண்டிருக்குமே, அதையாவது நாம் கேட்டதுண்டா?

“கையறு நிலையில்” மக்கள்

தங்களது பிரச்சினைகள் பற்றி மக்களுக்குக் கொஞ்சம் தெரியும்; ஆனால், அதற்காக எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இது அவர்களுடைய பலவீனமோ அலட்சியமோ அல்ல. குறைந்த சம்பளம், விலைவாசி உயர்வு இப்படிப்பட்ட சூழலில் சத்தான உணவுகளை எப்படி மக்களால் வாங்க முடியும்?

இதில் மருத்துவச் செலவு வேறு பெரும் சுமையாக உள்ளது. 2022-23-ல் இந்தியாவின் மொத்தச் சுகாதாரச் செலவில் 43.4% மக்களின் சொந்தப் பாக்கெட்டிலிருந்தே செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசின் பங்கோ GDP-யில் 1.43% மட்டுமே. உணவு விலை அதிகமாக உள்ளது; அதை வாங்குவதற்கு ஏற்ப ஊதிய உயர்வு தருவதில்லை. மருத்துவச் செலவுகளும் அதிகமாக உள்ளன. இச்சூழலில் குறைந்த ஊதியம் பெறும் குடும்பம் எப்படி உடல் நலத்துக்கு முக்கியத்துவம் தர முடியும்? “பாதிக்கப்பட்ட பிறகு நீதான் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை” என சமூகம் அவரையே குற்றவாளியாக்கும்.

பொருளாதார அடித்தளம்

உணவுப் பற்றாக்குறை இருப்பதால் மட்டுமே மக்கள் பசியில் இல்லை; அவர்களுக்கு வாங்கும் சக்தி குறைவாக இருப்பது முக்கிய பிரச்சனை. 2026 ஜூலை 1 நிலவரப்படி, ஒன்றிய அரசின் மத்தியத் தொகுப்பில் உள்ள நெல்-கோதுமை இருப்பு 925.85 லட்சம் டன். விதிக்கப்பட்ட இருப்பு அளவோ 411.20 லட்சம் டன். அதாவது இருப்பு இரு மடங்குக்கும் மேல் உள்ளது. ஆனால் அதே நாட்டில் 35.5% பேர் சத்தான உணவை வாங்க முடியாதவர்களாக உள்ளனர்.

1991-2003 காலத்தில் ஒரு இந்தியரின் ஆண்டு உணவுத்தானிய நுகர்வு தலா 177 கிலோவிலிருந்து 155 கிலோவாகக் குறைந்துவிட்டது என்கிறார் பொருளாதார அறிஞர் உத்சா பட்நாயக். 2017-18 நுகர்வுத் தரவு நேரடியாக வெளியிடப்படாத நிலையில், கசிந்த தரவை வைத்து, கிராமப்புறத்தில் சுமார் 80% பேர் ஊட்டச்சத்து அளவுகோலை எட்டவில்லை என அவர் மதிப்பிடுகிறார்.

ஒரு தொழிலாளியின் உழைப்புச் சக்தியின் மதிப்பு என்பது, அவரையும் அவர் குடும்பத்தையும் உயிருடன் வாழ வைக்கத் தேவையான வாழ்வாதாரப் பொருட்களின் மதிப்பு. அதில் சத்தான உணவும் அடங்கும். ஒரு நபர் அல்லது குடும்பத்தின் வருமானம் அவர்களுக்கு தேவையான ஒட்டுமொத்த அத்தியாவசியப் பொருட்களின் விலையை விடக் குறைவாக இருந்தால் என்ன நடக்கும்? தொழிலாளியும் அவர் குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாடுடனே வளர வேண்டிய கட்டாயம் தான் உருவாகும்.

சமத்துவமின்மை  

உலக சமத்துவமின்மை அறிக்கை 2026-ன்படி, இந்தியாவின் மொத்தச் செல்வத்தில் சுமார் 40%-க்கு 1% பணக்காரன்களிடம் குவிந்துள்ளது; 65% செல்வம் அடுத்தக்கட்ட 10% பணக்கான்களிடம் உள்ளது. நாட்டின் மொத்த வருமானத்தில் 58% மேல்மட்ட 10% பேருக்குச் செல்கிறது. ஆனால் மக்கள்தொகையில் பாதியாக இருக்கும் கீழ்மட்ட 50% பேருக்குக் கிடைப்பது வெறும் 15% வருமானம் மட்டுமே.

இந்தியாவில் முதல் ஐந்து பெருங்கோடீஸ்வரன்களின் சொத்து ஆறு ஆண்டுகளில் சுமார் 400% உயர்ந்துள்ளது. உலக அளவிலும் நிலைமை இதுவே. மேல்மட்ட 10% பேரிடம் செல்வத்தின் முக்கால் பங்கும், கீழ்மட்ட 50% பேரிடம் வெறும் 2%மும் உள்ளது.

இதை ஈடுகட்ட முடியாதா என்றால், முடியும். கோடீஸ்வரன்கள் மீது ஒரே ஒருமுறை 2% வரி விதித்தால் கிடைக்கும் தொகையைக் கொண்டு, ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளோருக்கான மூன்றாண்டுத் தேவையை (₹40,423 கோடி) ஈடுகட்டலாம்.

முழு பயனற்ற திட்டம்

அரசின் செலவுகளில் இலவசத் தானியத் திட்டத்தின் (PMGKAY) கீழ் 2026-27-ல் 2 லட்சத்து 27 ஆயிரத்து 429 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, சுமார் 81.35 கோடி மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ தானியம் வழங்கப்படுகிறது. இது கோடிக்கணக்கான மக்களின் பசியைப் போக்க உதவுகிறது. ஆனால் சத்துணவின் முக்கியத் திட்டமான Saksham Anganwadi & Poshan 2.0-க்கு ஒதுக்கப்பட்டது வெறும் 23,100 கோடி ரூபாய் மட்டுமே.

உடலுக்குத் தேவையான கலோரியைத் தானியமாகக் கொடுப்பது செலவு குறைவாக உள்ளது. ஆனால் புரதம், நுண்ணூட்டம், தாய்-சேய் பராமரிப்பு, மனிதர்களின் உழைப்பு ஆகியவற்றுக்கு அதிகச் செலவு தேவைப்படுகிறது. இவற்றுக்கு அரசு குறைவான நிதியைத்தான் ஒதுக்கீடு செய்கிறது. அரசு பசியைத் தணிக்கும் நடவடிக்கையில்தான் ஈடுபடுகிறதே தவிர, ஊட்டச்சத்தை உறுதி செய்வதில்லை.

போர்கள், காலநிலைப் பேரிடர்கள், எரிசக்தி மற்றும் உரங்களின் விலை உயர்வு ஆகியவை உலகளாவிய உணவுப் பாதுகாப்பை மேலும் பாதிக்கின்றன. 2030-ல் பசியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 51-52 கோடியாக இருக்கும். இத்தகைய நெருக்கடிகளின் பாதிப்பு, ஏற்கெனவே வறுமையில் வாழும் மக்கள் மீதே அதிகம் விழுகிறது. ஆனால் பெருமுதலாளிகளின் நிலையோ வருடா வருடம் உயருகிறது; விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் செழித்தோங்குகின்றனர், விரலுக்கேற்ற வீக்கம் என்று தொழிலாளர்கள் வாழ்ந்து மடிகின்றனர்.

மக்கள் மீதும் இச்சமூகத்தின் மீதும் அக்கறை கொண்ட என்னைப் போன்ற ஒரு சாதாரண நபராலேயே, இவ்வளவையும் படித்துச் சிந்தித்துப் பல தீர்வுகளை முன்வைக்க முடிகிறது. இப்பிரச்சினைகள் சார்ந்த துறைகளில் நிபுணர்களாகவும், வல்லுநர்களாகவும், அறிஞர்களாகவும் உள்ள பல நூறு பேர், அவற்றின் பிரத்யேக அம்சங்களுக்கு ஏற்ப பல நூறு வழிகளையும், யோசனைகளையும், திட்டங்களையும் ஏற்கெனவே முன்வைத்துள்ளனர். இருந்தும் குறிப்பிடத்தகுந்த மாற்றம் எதுவும் சமூகத்தில் நிகழவில்லை. மாறாக, போகப்போக நிலைமைகள் படுமோசமாகி வருகின்றன. இதற்கான ஒற்றைக் காரணம் என்ன என்பது ஒரு கணத்தில் என் நெஞ்சைத் திக்குமுக்காடச் செய்தது.

சொல்லப்படாத காரணங்கள்

உண்மையில் நாம் வாழும் இச்சமூகம் யாருக்கானது? இந்த அரசும் அரசமைப்பும் அது தூக்கிப் பிடிக்கும் ஜனநாயகமும் யாருக்கானவை? அவை உண்மையில் மக்களுக்கானவையாக இருந்திருந்தால், இப்பிரச்சினைகள் என்றோ தீர்வு கண்டிருக்கும். ஆதரவற்ற பிரியாவோ, குடும்பத்தின் ஒரே சம்பளக்காரனான மோகனோ, லாபவெறி கொண்ட முதலாளித்துவத்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்களைப் போல் பல கோடி மக்கள் உயிர்விட்டுக்கொண்டும், உயிர்விடும் நிலையில் வைக்கப்பட்டுக்கொண்டும் இருக்க மாட்டார்கள்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டால் இறந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் எழுதப்படாத காரணங்கள் பல உள்ளன: கடன், குறைந்த ஊதியம், விலைவாசி உயர்வு, சுகாதாரமின்மை, சத்தில்லாத உணவு, அரசு பட்ஜெட்டில் வெட்டப்பட்ட பொதுச் செலவு, பெரும்பணக்காரன்களுக்கு வரிவிதிக்காத பட்ஜெட், முதலாளித்துவத்தை மையமாகக் கொண்ட திறந்தவெளிச் சந்தை, இவை அனைத்துக்கும் மேலாக, முழுக்க முழுக்க லாபவெறியை மையமாகக் கொண்ட முதலாளித்துவம்.

மனிதர்களுக்கு மூன்று வேளை உண்ணச் சத்தான உணவு, உடுத்தத் தரமான உடை, வாழ்வதற்குத் தேவையான இருப்பிடம், சமூகப் பாதுகாப்புடன் கூடிய நிலையான வேலை இவ்வளவுதானே தேவை? இத்தனை ஆண்டுகால அறிவியல், விஞ்ஞான வளர்ச்சிகளுக்குப் பிறகும், உயிர்வாழ்வதற்கான இந்த அடிப்படைகளைக்கூடத் தர முடியாத ஓர் அரசும், அந்த அரசின் அடிப்படையான, லாப நோக்கில் இயங்கும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் இருக்க வேண்டுமா? இல்லை மாற்றப்பட வேண்டுமா?

சட்டங்களும் திட்டங்களும் சீர்திருத்தங்களும் தற்காலிகமானவை. ஆனால் பிரச்சனைகளின் குறிப்பறிந்த சமரசமற்ற போராட்டங்களும், ஒன்றுபட்ட மக்கள் இயக்கங்களும் மட்டுமே, உண்மையில் அனைவரும் உரிமை கொள்ளும் ஒரு அரசை அமைக்க உதவும். அந்த அரசு நிச்சயமாக, மக்களின் தேவைகளை முதலில் முன்னிலைப்படுத்தும் ஒரு சோசலிச உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கும். அதை சாத்தியப்படுத்த ஒரு புரட்சிகரக் கோட்பாட்டை கடைபிடிக்கும் ஒரு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியால் மட்டுமே முடியும்.

ஒரு கண்ணியமான வாழ்க்கைக்கு அடிப்படை; சத்தான உணவு, சுகாதாரமான இருப்பிடம், சமூகப் பாதுகாப்புடன் ஒரு வேலை, அவற்றை எல்லோரும் பெறுவதற்கான பாதையில் அனைவரும் ஒன்றுபடுவோம்! வெல்லுவோம்!

 

தோழமையுடன்,

எரன்

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *