Tamil Marx

சர்வதேசம்

குப்பைத் தொட்டியைத் தாண்டிய பயணம்-எரன்

குப்பைத் தொட்டியைத் தாண்டிய பயணம்-எரன்
  • PublishedNovember 1, 2026

ஒரு சின்ன கேள்வியிலிருந்து தொடங்குவோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் எந்த நுகர்வுப் பொருளாக இருந்தாலும், பயன்பாடு முடிந்ததும் அது எங்கே போகிறது? நிச்சயமாகக் குப்பைத் தொட்டிக்குத்தான். அந்தத் தொட்டியிலிருந்து எங்கே போகிறது? குப்பைகள் குவிக்கப்படும் ஏதோ ஒரு பெரிய நிலத்துக்கு. போகும் முன் மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்தாலும், பெரும்பாலானவை கடைசியில் ஒரே இடத்தையே சென்றடைகின்றன.

சில பொருட்கள் “மறுசுழற்சி செய்யத்தக்கது” என்று முத்திரை பதிக்கப்பட்டிருக்கும். அவை உண்மையிலேயே மறுசுழற்சி செய்யப்படுகின்றனவா? அப்படி என்றால் எத்தனை சதவிகிதம்? இந்தக் கேள்விகளை நாம் ஆராய்ந்தே ஆக வேண்டும். ஏனெனில் இது குப்பைகளைப் பற்றிய கேள்வி மட்டுமல்ல; அவை நம் வாழ்க்கையில் என்ன‌ மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதைப் பற்றிய கேள்வியாகும்.

எண்கள் சொல்லும் கசப்பான உண்மை

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி அமைப்பின் (OECD) அறிக்கைப்படி, 2019ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 35 கோடி டன்னுக்கு மேலான பிளாஸ்டிக் கழிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் இறுதியில் மறுசுழற்சி ஆனவை வெறும் 9 சதவிகிதம் தான். 19 சதவிகிதம் குப்பைகளை எரிக்கும் நிறுவனங்களால் எரிக்கப்பட்டது; ஏறத்தாழ பாதி குப்பைகள் பூமிக்குள் புதைக்கப்பட்டுவிட்டன; மீதி 22 சதவிகிதம் கட்டுப்பாடற்ற குப்பைமேடுகளிலும், திறந்தவெளியில் எரிப்பதிலும், இயற்கையை நாசப்படுத்தும் வகையிலும் வீசப்படுள்ளன.

ஈ-வேஸ்ட் எனப்படும் மின்னணுக் கழிவின் நிலையும் இதுதான். ஐ.நா. அமைப்புகளின் அறிக்கையின்படி 2022 இல் உலகம் முழுவதும் 6.2 கோடி டன் மின்னணுக் கழிவுகள் உருவாகியுள்ளன; அதில் முறையாகச் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்பட்டது 22.3 சதவிகிதம் மட்டுமே. ஆப்பிரிக்க நாடுகளில் இது ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. துணிகளின் கதையோ இன்னும் மோசம். ஆடை தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவாகவே மீண்டும் புதிய ஆடையாக மாறுகிறது.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஆடை உற்பத்தி ஏறத்தாழ இரட்டிப்பாகிவிட்டது. ஒரு ஆடையை அணியும் காலமோ சுமார் 40 சதவிகிதம் குறைந்துவிட்டது. அதிகமாக உற்பத்தி செய்கிறோம், அதிகமாக வாங்குகிறோம், விரைவாக தூக்கி வீசுகிறோம். “மறுசுழற்சி” என்ற சொல் பெரும்பாலான நேரங்களில் உண்மையில் மறுசுழற்சியை குறிப்பதில்லை, மாறாக ஒரு ஆறுதல் வார்த்தையாக மட்டுமே உள்ளது.

கானா கடற்கரையில் நமது குப்பைகள் 

இந்த மின்னணுக் குப்பையில் பெரும்பகுதி ரகசியமாக வேறு நாடுகளுக்குப் பயணம் செய்கிறது. மின்னணுக் கழிவில் எட்டில் ஒரு பங்கு ஒரு நாட்டில் இருந்து வேறு நாட்டுக்கு அனுப்பப்படுகிறது; அதில் மூன்றில் இரண்டு பங்கு, பணக்கார நாடுகளிலிருந்து ஏழை மற்றும் நடுத்தர நாடுகளுக்குக் கணக்கு வழக்கு இன்றி அனுப்பப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது ஐ.நா. அறிக்கை துணிகளுக்கும் இதே கதைதான்.

கானாவின் தலைநகர் அக்ராவில் கன்டமாண்டோ என்ற சந்தை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய பழைய ஆடைச் சந்தையாகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவிலிருந்து வாரத்துக்குச் சுமார் ஒன்றரைக் கோடி ஆடைகள் இங்கே வந்து இறங்குகின்றன. இங்குள்ள தொழிலாளர்களுடன் இணைந்து செயல்படும் ஓர் ஆய்வு அமைப்பு செய்த மதிப்பீட்டில், ஒவ்வொரு மூட்டையிலும் ஏறத்தாழ 40 சதவிகிதம் விற்கவே முடியாத குப்பைகள் தான் உள்ளன. அவை பெரும்பாலும் ஓடைகளில் கொட்டப்பட்டு விடும். கடலில் மிதந்து கடற்கரைகளில் ஒதுங்குகின்றன; அல்லது திறந்தவெளியில் எரிக்கப்படுகின்றன.

இத்தகைய நிலையில் அக்ரா நகரின் கழிவு மேலாண்மைத் தலைவர், தங்கள் நாடு பிறரின் கழிவைக் கொட்டும் இடமாக இருக்க முடியாது என்றும், அந்தச் சுமையைத் தங்கள் மக்களின் வரிப்பணத்தில் சுமக்க முடியாது என்றும் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்.

இங்கே ஒரு முக்கியமான உண்மையையும் மறைக்கக் கூடாது. இந்தச் சந்தையை நம்பி 30,000க்கும் மேற்பட்டோர் பிழைக்கிறார்கள். மூட்டை சுமக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் துணி மூட்டைகளை தூக்கிக் கொண்டு செல்லும் ஒரு நடைக்குச் சில சென்ட்கள் முதல் இரண்டு டாலர் வரை மட்டுமே பெறுகிறார்கள். மூட்டை பிரித்துப் பார்த்த பிறகுதான் அதற்குள் விற்கத்தக்க துணி எவ்வளவு என்று தெரியும்; விற்க தக்க துணிகள் இல்லாமல் இழப்பு ஏற்பட்டால் அது சிறு வியாபாரிகளுக்கு இழப்பு. அதாவது குப்பையை உருவாக்கியவர்கள் லாபத்தை அள்ளிக்கொண்டு ஓடிவிட, அதன் சுமையை வளரும் மற்றும் ஏழை நாடுகளில் உள்ள ஏழை மககள் தங்கள் தோளிலும் மண்ணிலும் சுமக்கிறார்கள்.

இதுமட்டுமின்றி மின்னணுக் கழிவுகள் ஏழை மற்றும் நடுத்தர நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்டு அங்கு அத்துக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்களால் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி அவற்றை தரம் பிரிக்கின்றனர். அப்படி தரம் பிரிக்கப்பட்ட பிறகு எஞ்சும் கழிவுகள் அவர்களால் அகற்றவும் படுகிறது.

இவ்வாறாக செயல்முறைக்கு உள்ளாகும் மின்னணுக் கழிவுகள் சாதாரணமானவை அல்ல; அடிப்படையில் மின்னணு சாதனங்களின் மூலப்பொருட்களில் கன உலோகங்கள், காட்மியம், ஈயம், பாதரசம், புரோமினேட்டட் தீத்தடுப்பான்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும். இவை அனைத்தும் புற்றுநோய் (Cancer), சுவாசக் கோளாறுகள் (Respiratory Disorders) மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகள் (Reproductive Disorders) தொடர்பான பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

பொறுப்பு யாருடையது?

இவ்வளவுக்கும் யார் பொறுப்பு? பெருநிறுவனங்களின் நடைமுறைப் பதில் இதுதான்: “பொருளை விற்றுவிட்டோம்; அதை என்ன செய்வது என்பது வாங்கியவரின் பாடு.” அமேசான்(Amazon), Flipkart, Reliance, Trends, Zudio, சாரா(ZARA), (H&M), ஷீன்(SHEIN) போன்ற நிறுவனங்கள் ‘நிலைத்தன்மை’(Stability) பற்றிய விளம்பரங்களையும், பழைய துணிகளைத் திருப்பித் தருவதற்கு ஏற்ற வகையில் மறுசுழற்சி பெட்டிகள் வைப்பதையும் (Recycle Box) வழியாக முன்வைக்கின்றன.

அப்படியே பெட்டிகள் வைத்தாலும் அவற்றில் போடப்படும் துணிகளில் எவ்வளவு உண்மையில் புதிய ஆடையாக மாற்றப்படுகிறது. எவ்வளவு துணி கடல் கடந்து அனுப்பப்படுகிறது என்பதற்கு வெளிப்படையான பதில் சொல்லுங்கள் என கணக்கு கேட்பது தப்பே இல்லை. ஏனெனில் உலக அளவில் உருவாகும் துணிக்கழிவுகளில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான துணிகளே மீண்டும் புதிய ஆடையாகின்றது.

நிலமை இப்படி இருக்க மறுபக்கம், துணிகளை வாங்கிப் பயன்படுத்திய “நுகர்வோரே குற்றவாளி” ஆக்கப்படுகிறார்கள். இது‌ பெருநிறுவன முதலாளிகளுக்கு ஒரு வசதியான குற்றச்சாட்டு. ஒரு சாதாரணத் தொழிலாளி தன் சம்பளத்தை வைத்துக் கொண்டு மலிவான ஆடையைத்தான் வாங்க முடியும்; நீடித்து உழைக்கும் பொருளை வாங்கும் வசதி அவனுக்கு இல்லை. எந்தப் பொருள் எவ்வளவு காலம் உழைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர் நுகர்வோர் அல்ல; வாரம் தோறும் புதிய ‘ஃபேஷனை’ உருவாக்கி, பழையதை ‘வழக்கொழிந்தது’ (Out of Fashion) என்று நம்ப வைப்பவர்கள் நிறுவனங்களே. உற்பத்தி முடிவுகள் அனைத்தும் அவர்கள் கையில் தான் உள்ளது; ஆனால் குப்பை உருவாவதற்கான குற்றச்சாட்டு மட்டும் நம் மீது சுமத்தப்படுகிறது. தனிநபர் பொறுப்பு என்ற பெயரில் நடக்கும் பொறுப்புத் தட்டிக்கழிப்பு தான் இது.

அரசுகள் என்ன செய்கின்றன?

2025 செப்டம்பரில் ஐரோப்பிய ஒன்றியம் (EU) ஒரு முக்கியமான சட்டத்தை நிறைவேற்றியது. ஆடை உற்பத்தியாளர்கள் தாங்கள் சந்தைக்கு அனுப்பும் ஆடைகளை மீண்டும் சேகரிக்கவும், தரம் பிரிக்கவும், மறுசுழற்சி செய்யவும் ஆகும் செலவை அவர்களே ஏற்க வேண்டும்; இது இணைய வணிக நிறுவனங்களுக்கும், ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள நிறுவனங்களுக்கும் பொருந்தும்; ‘ஃபாஸ்ட் ஃபேஷன்’ நிறுவனங்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கவும் உறுப்பு நாடுகள் அனுமதிக்கப்படுகின்றன.

இதை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுப்பு நாடுகளுக்கு 30 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல நாடுகளிலும் மின்னணுக் கழிவு, பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு உற்பத்தியாளர் பொறுப்பு விதிகள் உள்ளன.

இவை வரவேற்கத்தக்க முன்னேற்றம்தான்; ஆனால் இதற்கு பின்னால் உள்ள உண்மையையும் பார்க்க வேண்டும். இந்தச் சட்டம் ஐரோப்பாவுக்குள் வரும் ஆடைகளுக்கான சட்டம் மட்டுமே. ஏற்கெனவே கானா போன்ற நாடுகளின் கடற்கரைகளில் குவிந்துவிட்ட குப்பைக்கு இது இழப்பீடு தரவில்லை.

ஏழை நாடுகளில் அடிப்படைக் கழிவு மேலாண்மைக் கட்டமைப்பு உருவாக்க ஆண்டுக்குப் பல பில்லியன் யூரோ முதலீடு தேவை என்று OECD கூறுகிறது; அந்தப் பணத்தை யார் தருவார்கள் என்பது இன்னும் தெளிவில்லை. சட்டங்கள் காகிதத்தில் இருப்பது ஒரு விஷயம்; அவை கடுமையாக அமல்படுத்தப்படுவது இன்னொன்று. மக்கள் இயக்கங்களும், சூழலியல் அமைப்புகளும், பாதிக்கப்பட்ட நாடுகளும் தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் எதிர்ப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்ததால்தான் இந்த அளவுக்காவது சட்டம் வந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அழுகிப்போன அமைப்பின் விளைவு

இந்தக் குப்பை மலைகளை யாரோ ஒருவரின் அலட்சியம் என்று பார்த்துவிட்டு நாம் நகர்ந்து விட்டால் அதன் அடிப்படை பிரச்சனையே புரியாது. மார்க்சியம் இதை ஒரு சமூக அமைப்பின் இயல்பில் இருந்து உருவாகும் விளைவாகப் பார்க்கிறது.

இந்த முதலாளித்துவ அமைப்பில் செய்யப்படும் உற்பத்தியின் நோக்கம் என்பது மனிதர்களின் தேவையைப் பூர்த்தி செய்வது அல்ல; மாறாக லாபம் ஈட்டுவது மட்டுமே. லாபம் அதிகரிக்க வேண்டும் என்றால் விற்பனை பெருக வேண்டும்; விற்பனை பெருக வேண்டுமானால் புதிய புதிய பொருட்கள், மாடல்கள் வேண்டும், அல்லது ஏற்கனவே உள்ளவை பழையதாகத் தோன்ற வேண்டும். அதனால்தான் விரைவில் கிழியும் ஆடைகளும், பழுது பார்க்கவே முடியாத மின்னணுச் சாதனங்களும் (Electronic Devices) உற்பத்தி செய்யப்படுகின்றன.

லாபம் தனியாருக்கு; கழிவுகளும் அதனால் உருவாகும் செலவுகளுக்கும் இந்த சமூகத்துக்கு. குப்பைகளை உருவாக்கும் நிறுவனங்களால் உருவாகும் பல்வகை மாசுகள் (Various Pollutions), அதனால் உருவாகும் நோய்கள், நீர்நிலை மாசு மற்றும் அடைப்புகள், கடற்கரை உள்ளிட்ட சுற்றுச்சூழல் அழிவு ஆகிய எதற்கும் அந்த நிறுவனங்கள் பொறுப்பேற்காது.

இந்த பாதிப்புகளால் உருவாகும் இழப்புகள் எல்லாம் உலகம் முழுவதும் உள்ள பொதுமக்களின் தலையில் தான் விழுகின்றன. மண்ணிலிருந்து வளங்களை எடுத்து அதை குப்பையாக்கி, கழிவுகளைத் தவிற பதிலுக்கு இயற்கைக்கு எதையும் திருப்பித் தராமல் விடுவது, இயற்கையுடனான மனித உறவில் ஏற்படும் விரிசலாக மாறுகிறது. இன்றைய குப்பை மலைகள் அந்த விரிசலின் கண்கூடான வடிவமாக உள்ளன.

லெனின் விளக்கிய ஏகாதிபத்திய முகத்தை இங்கே காணலாம். மூலதனம் மலிவான உழைப்பையும் மலிவான மூலப்பொருளையும் தேடி ஏழை நாடுகளுக்குப் போனது; அதேபோல குப்பையும் மலிவான நிலத்தையும், பலவீனமான சட்டங்களையும், வறுமையையும் தேடி அதே பாதையில் போகிறது. இதையே ‘கழிவுக் காலனியாதிக்கம்’ என்று சூழலியலாளர்கள் அழைக்கிறார்கள். மேலும், அரசு என்பது நடுநிலையான நபர் அல்ல; அது ஆளும் வர்க்கத்தின் நலன்களைக் காக்கும் கருவி என்று மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் சொன்னதன் பொருள், ‘தன்னார்வ இலக்குகள்’ (Volunteer Goals) என்ற பெயரில் நிறுவனங்களைக் கெஞ்சும் கொள்கைகளில் தெரிகிறது.

உதாரணமாக, ஒரு பெரிய ஆடை உற்பத்தி நிறுவனம் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான ஆடைகளைத் தயாரித்து, பெருமளவு கழிவுகளை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.

அந்த நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி,-இவ்வளவு சதவிகிதக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய வேண்டும்.

-சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கான செலவை நிறுவனமே ஏற்க வேண்டும்.

-குறிப்பிட்ட அளவுக்கு மேல் கழிவுகளை உருவாக்கக் கூடாது.

என்று சுற்றுச்சூழலையும் மக்களையும் பாதுகாக்கும் கட்டாயச் சட்டங்கள் இயற்றுவதற்குப் பதிலாக, அரசு அந்த நிறுவனத்திடம்,

“நீங்களாகவே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சில இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ளுங்கள். உங்கள் பொறுப்பை நீங்களே உணர்ந்து செயல்படுங்கள்” என்று தன்னார்வ உறுதிமொழிகளை (Voluntary Commitments) கூறுகிறது.

தன்னார்வ இலக்கு (Voluntary Goal) என்பது நிறுவனம் தானாகவே ஏற்றுக்கொள்ளும் இலக்கு. அதை அடையாவிட்டால் அவசியமாகச் சட்டரீதியான தண்டனை இருக்காது.

கட்டாயச் சட்டம் (Mandatory Regulation) என்பது நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கட்டுப்பாடு. மீறினால் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

நிறுவனங்களின் லாபத்தை பாதிக்காத விதிகள் சாதாரணமாக வரும்; ஆனால் அவற்றைத் பாதிக்கும் விதிகள் வர மக்கள் போராட வேண்டியிருக்கிறது.

தீர்வு எங்கே?

குப்பைத் தொட்டியை இன்னும் அழகாக வண்ணம் தீட்டுவது மட்டுமே தீர்வில்லையோ, அதே போலத்தான் பெருநிறுவனங்கள் மலையளவு குப்பைகளைத் உருவாக்கி நச்சுக்களால் மக்களையும் மண்ணை மாசுபடுத்திவிட்டு, நாத்து நடுவதைப்போல் சமூக அக்கறை கொண்டு மரக்கன்றுகளை நடுவதும் தீர்வல்ல.

  • கழிவு உருவாவதன் மூலத்தையே, அதாவது உற்பத்தியின் நோக்கத்தையே கேள்வி கேட்க வேண்டும், மாற்றியமைக்க வேண்டும்.
  • உடனடியாகச் செய்யக்கூடியவை, கழிவின் முழுச் செலவையும் உற்பத்தியாளர்களும் விநியோக நிறுவனங்களுமே ஏற்க வேண்டும்; அந்தச் செலவு விலையில் ஏற்றப்பட்டு மக்கள் மீது திணிக்கப்படக் கூடாது.
  • ஏழை நாடுகளுக்குக் கழிவு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும்; ஏற்கனவே குவிந்த குப்பைக்கு இழப்பீடும், சுத்தப்படுத்த நிதியும் வழங்க வேண்டும்.
  • நீடித்து உழைக்கும் பொருட்களையும், பழுது பார்க்கும் உரிமையையும் சட்டமாக்க வேண்டும்.
  • கழிவு சேகரிப்பும் மறுசுழற்சியும் பொது அல்லது சமூகக் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டும்; அதில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான வேலையும், நியாயமான கூலியும் உறுதி செய்யப்பட வேண்டும்.
  • நீண்ட காலத்தில், எதை எவ்வளவு உற்பத்தி செய்வது என்ற முடிவு ஒரு சில நிறுவனங்களின் லாபக் கணக்காக மட்டுமே இல்லாமல், சமூகத்தின் தேவையையும் இயற்கையின் எல்லையையும் அடிப்படையாகக் கொண்ட திட்டமிடலில் இருக்க வேண்டும் என்பதே மார்க்சிய-லெனினியப் பார்வை.
  • அதற்கு முதல் படி, தொழிலாளர்கள், விவசாயிகள், சூழலியல் இயக்கங்கள், பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் ஆகியோர் ஒன்றிணைந்து நிற்பது தான். தங்களுக்கான உற்பத்தியை தாங்களே நிற்மானிக்கும் ஒரு சோசலிச உற்பத்தி முறையைக் அவர்கள் கட்டமைக்க வேண்டும்.

ஆகவே குப்பைத் தொட்டி முடிவல்ல; அது கேள்விகளின் தொடக்கம். இந்தக் குப்பையை உருவாக்கியது யார்? அதனால் லாபம் அடைந்தது யார்? அதன் சுமையைச் சுமப்பது யார்? இந்த மூன்று கேள்விகளுக்கான விடை ஒரே திசையைக் காட்டும்போது, தீர்வும் அந்தத் திசையிலேயே தொடங்க வேண்டும்.

 

கட்டுரையாளர் – எரன்☭

(Also Watch: “Buy Now! The Shopping Conspiracy”- Available on Netflix).

 

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *