Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

மார்க்சிய இன கோட்பாட்டை சீனமயமாக்குதல்-அ.பாக்கியம்

மார்க்சிய இன கோட்பாட்டை சீனமயமாக்குதல்-அ.பாக்கியம்
  • PublishedSeptember 23, 2026

19 ஆம் நூற்றாண்டில் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ்  ஆகிய இருவராலும் நிறுவப்பட்ட தேசிய இன கோட்பாடு ஒரு அறிவியல் ரீதியான கோட்பாடு ஆகும். தேசிய இனங்களின் சமத்துவத்தையும் ஒற்றுமையும் இந்த கோட்பாடு ஆதரித்தது. அதே நேரத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களை, தேசிய சுதந்திரம் மற்றும் விடுதலையை நோக்கி வழிநடத்தவும் இந்த கோட்பாடு வழிவகுத்தது. தேசிய இனப் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் தேசிய உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் தேசத்தின் வளர்ச்சியை பின் தொடர்வதற்கும் அனைத்து தேசிய இனங்கள் இடையே பொதுவான செழிப்பை வளர்ப்பதற்கும் இந்த கோட்பாடு வழிகாட்டியாக அமைந்துள்ளது. மார்க்சியர்களின் இந்த கோட்பாட்டை 20 ஆம் நூற்றாண்டில் லெனினும்,  ஸ்டாலினும் குறிப்பாக  ரஷ்ய புரட்சியின் காலகட்டத்தில், குறிப்பிட்ட யதார்த்தங்களின் அடிப்படையில், மார்க்சிய தேசிய இன கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி செம்மைப்படுத்தினார்கள். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும், சீன மக்களும் மார்க்சிய கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.

இதன் மூலம் தேசிய இனப் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்கும் தீர்ப்பதற்கும் வழிகாட்டும் சித்தாந்தமாக மார்க்சிய தேசிய கோட்பாட்டை மாற்றினர்.  எந்த ஒரு கோட்பாடும் உலகளாவிய ரீதியில் அனைவருக்கும் பொருந்தக்கூடியது அல்ல என்பது சமூக அறிவியலாகும். இதன் அடிப்படையில் ஆரம்பத்தில் சீனாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்சிய தேசிய இன கோட்பாடு சீனாவின் தேசிய நிலைமைகளுடனும், தேசிய இன பிரச்சனைகளின் உண்மையான சூழ்நிலையுடன் முழுமையாக பொருந்தவில்லை. எனவே, தேசிய இனங்கள் குறித்த மார்க்சிய கோட்பாட்டை தேசியப் பிரச்சனைகளின் எதார்த்தங்களுடன், உண்மையாக ஒருங்கிணைப்பதன் மூலமே, மார்க்சியே தேசிய இன கோட்பாட்டை வலுப்படுத்தி வளர்க்க முடியும் என்ற முடிவுக்கு  சீன கம்யூனிஸ்ட் கட்சி வந்தது.

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு அந்த நாட்டின் தேசிய இனப் பிரச்சனைகளை புரிந்து கொள்வதற்கு மிகப்பெரிய களமாக செம்படையின் நீண்ட அணிவகுப்பு அமைந்தது. சீனாவில் சிறுபான்மை தேசிய இனங்களைப் பற்றி அறிந்து கொள்வது மட்டுமல்ல, தேசிய இனக் கொள்கையை உருவாக்குவதற்கும் செம்படையின் நீண்ட அணிவகுப்பு அனுபவ அறிவை கொடுத்தது. அந்த அளவிற்கு செம்படையின் நீண்ட அணிவகுப்பு ஊடுருவி சென்று மக்களை வென்றெடுத்தது. அதைப் பற்றிய சில வரிகளுடன் தேசிய இனக் கொள்கை சீனமயமாக்குதல் பற்றி அறிந்து கொள்ளலாம்.

சிவப்பு இராணுவத்தின் நீண்ட அணிவகுப்பின் அவசியம் 

1930 முதல் 1934 வரை, குவோமின்டாங் படைகள் செம்படைக்கு எதிராக ஐந்து முறை பெரும் தாக்குதலை நடத்தினார்கள். முதல் நான்கு முறை தாக்குதல்களை செம்படை, திறமையான கெரில்லா (guerrilla) தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாக முறியடித்தது. இருப்பினும், அக்டோபர் 1933 இல் தொடங்கிய ஐந்தாவது தாக்குதல் முற்றிலும் மாறுபட்டதாக அமைந்தது. குவோமின்டாங் தலைவர் சியாங் கை-ஷேக் (Chiang Kai-shek) சுமார் 700,000 வீரர்களை திரட்டி, முற்றுகை அரண்கள் (blockhouses) அமைத்து முன்னேறும் “ஆக்கிரமிப்பு உத்தியை” (encirclement strategy) பின்பற்றினார். இந்த உத்தி, செம்படையின் பகுதிகளுக்கு அனுப்பப்படும் அனைத்து அத்தியாவசிய மற்றும் ஆயுத விநியோகங்களையும் துண்டித்தது.

மேலும், செம்படையின் தலைமையில் இருந்த பவோ கு (Bo Gu) மற்றும் காமின்டேர்ன் (கம்யூனிஸ்ட் அகிலம்) ஆலோசகர் ஒட்டோ பிரவுன் (Otto Braun) ஆகியோர், முன்பு வெற்றி தந்த கெரில்லா உத்திகளை கைவிட்டு, நிலையான போர் உத்தியை (positional warfare) தேர்வு செய்தனர். இந்த தவறான முடிவு பேரழிவை ஏற்படுத்தியது. 1934-ன் முற்பகுதியில், செம்படைக்கு பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அது முற்றிலும் நொறுக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. 1934 செப்டம்பரில், குவோமின்டாங் படைகள் செம்படையின் தலைமையக மான ருஜின் (Ruijin) நகரத்தை நெருங்கியதும், கம்யூனிஸ்ட் தலைமை ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டிய தாயிற்று.  அங்கேயே தங்கி அழிவதா, அல்லது எதிரிகளின் சுற்றிவளைப்பை உடைத்து வெளியேறுவதா? அவர்கள், உத்திக் கால்வாட்டத்தை (strategic retreat) மேற்கொள்ள முடிவு செய்தனர். இதன் மூலம் மற்ற செம்படை பிரிவுகளுடன் இணைந்து, அழிவிலிருந்து தப்பிக்கத் திட்டமிட்டனர்.

 இந்த முடிவின் பேரில், 1934 அக்டோபர் மத்தியில், சுமார் 85,000 வீரர்கள் மற்றும் 15,000 அதிகாரிகளுடன் நீண்ட அணிவகுப்பு தொடங்கியது. நான்கு முக்கிய செம்படைப் படைகளும் இணைந்து சுமார் 2,00,000 பேர் வரை இந்த அணிவகுப்பில் பங்கேற்றிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 60,000 பேருக்கும் குறைவானவர்களே உயிருடன் யானானை அடைந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. முதல் படைப்பிரிவில் 86000 வீரர்களில் 8000 பேர் மட்டுமே உயிருடன் வந்தனர். மற்றொரு மதிப்பீட்டின் படி, மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் இந்தப் பயணத்தில் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர். அக்டோபர் 1934 முதல் அக்டோபர் 1936 வரை, சுமார் இரண்டு ஆண்டுகள் நீடித்தது. செம்படையின் நீண்ட அணிவகுப்பு நிகழ்வு மொத்தம் இரண்டு ஆண்டுகள் நடந்தது என்பதை அதிகாரப்பூர்வ வரலாற்றுப் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன

இரு ஆண்டுகள் என்பது ஒட்டுமொத்த படைகளின் கூட்டு நடவடிக்கைக்கான கால அளவு. இதில் முதன்மைப் படையான மத்திய செம்படை (Central Red Army) சுமார் ஓராண்டு காலம் (1934 அக்டோபர் – 1935 அக்டோபர்) பயணித்து, ஷாங்க்சி (Shaanxi) மாகாணத்தில் முதலில் தங்குமிடம் அடைந்தது.  இரு ஆண்டுக் காலத்தில் பல்வேறு செம்படைப் பிரிவுகள் வெவ்வேறு காலகட்டங்களில் பயணத்தை மேற்கொண்டன. இந்த நான்கு முக்கிய படைப்பிரிவுகளும் (First, Second, Fourth Front Armies மற்றும் 25th Army Corps) 1936 அக்டோபரில் கான்சு (Gansu) மாகாணத்தில் ஒன்றிணைந்ததையே அணிவகுப்பின் முடிவாகக் கருதப்படுகிறது. சீன கம்யூனிஸ்டுகளின் சுமார் 12,500 கி.மீ. வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாகும் இது.

செம்படைகள் 18 மலைத்தொடர்களையும், 24 ஆறுகளையும் கடந்து வடமேற்கு மாகாணமான ஷான்சியை அடைந்தன. இந்த நீண்ட பயணத்தின் வீரச்செயல், பல இளம் சீனர்களைப் படையில் சேரத் தூண்டியது. மொத்தத்தில் இந்தப் பயணத்தில் 380 க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய போர்கள் நடந்தன. இந்த அணிவகுப்பு மிகக் கடுமையான இயற்கைச் சூழல்களுக்கு மத்தியில் நடைபெற்றது. பனி மூடிய மலைகள் (எ.கா: ஜியாஜின் மலை), ஆழமான ஆறுகள், மற்றும் ஆபத்தான சதுப்பு நிலங்கள் (மார்ஷஸ்) வழியாக அவர்கள் பயணிக்க வேண்டியிருந்தது. இவற்றுடன், குவோமின்டாங் படைகளின் இடைவிடாத தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது

இது வெறும் தப்பிக்கும் பயணமல்ல. ஒவ்வொரு அடியும் எதிரிகளின் (குவோமின்டாங் படைகள்) தாக்குதலுக்கு மத்தியில், முற்றுகையை உடைத்து முன்னேறும் ஒரு இராணுவ நடவடிக்கையாகும். குவோமின்டாங்கின் அழிவு தாக்குதலில் இருந்து சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) மையப் படையைக் காப்பாற்றியது இதுவே. இல்லையென்றால், அந்தக் கட்சியே அழிந்திருக்கும். பல்வேறு இடங்களிலிருந்து வந்த செம்படை பிரிவுகள் இந்தப் பயணத்தின் இறுதியில் ஒன்றிணைந்தன. இது ஒரு ஒருங்கிணைந்த தேசிய இராணுவத்திற்கான அடித்தளத்தை உருவாக்கியது. இந்தப் பயணத்தின் வழியாக, கம்யூனிச கொள்கைகள் சீனாவின் கிராமப்புறங்களில் பரவின, உள்ளூர் மக்களின் ஆதரவைப் பெற்றது.

மனித உறுதியின் சிகரம் ‘செம்படை ஆவி’ (Red Army Spirit)

கம்யூனிச இராணுவ வரலாற்றின் மாபெரும் காவிய நிகழ்வுகளில் ஒன்று செம்படையின் நீண்ட அணிவகுப்பு. மேற்கத்திய வரலாற்றா சிரியர்களும், இந்த நிகழ்வை பண்டைய கிரேக்கரின் ‘எனியாஸின் பயணம்’ அல்லது ‘ஹானிபாலின் ஆல்ப்ஸ் மலைக் கடப்பு’ போன்ற உலக வரலாற்று காவியங்களுடன் ஒப்பிட்டுள்ளனர். எனியாஸின் பயணம் (Aeneas’ Journey) தனது அழிந்துபோன தாய்நாடான டிராயை விட்டு வெளியேறி, இத்தாலியில் ஒரு புதிய இராச்சியத்தை நிறுவும் இவரது பயணம். ஒரு தேசத்தின் அஸ்திவாரத்திற்கான காவிய முயற்சியாகும். இது இலக்கை அடைவதற்கான நீண்ட, துன்பமான பயணத்தின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது. ஆனால், வரலாற்று ஆதாரமற்ற புராணக் காவியத்தின் அடிப்படையில் அமைந்த பயணம் இது. ஹானிபாலின் ஆல்ப்ஸ் மலைக் கடப்பு (Hannibal’s Crossing of the Alps) இது கிமு 218 ஆம் ஆண்டில், இரண்டாம் பியூனிக் போரின் போது, கார்தேஜ் தளபதி ஹானிபால் தனது போர் யானைகள் உட்பட ஒரு பெரிய படையுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரைக் கடந்த வரலாற்று நிகழ்வாகும். இது 15 நாட்கள் நடைபெற்றது. பனிப்புயல், பகைவர் தாக்குதல், கடும் குளிர் உள்ளிட்ட பல தடைகளை மீறிய இந்த இராணுவ நடவடிக்கை, அது நிகழ்த்தப்பட்ட துணிச்சல் மற்றும் தளவாடத் திறனின் காரணமாக பிரபலமானது.

செம்படையின் நீண்ட அணிவகுப்பு இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு வரலாற்று காவியமாக அறியப்படுவதற்கு பலகாரணங்கள் உள்ளது.

  • செம்படையின் நீண்ட அணிவகுப்பு (லாங் மார்ச்) உலக வரலாற்றிலேயே மிக முக்கியமான இராணுவ நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது வெறும் ஒரு பின்வாங்கல் அல்ல; மாறாக, மனித சகிப்புத்தன்மை, தியாகம், மற்றும் உறுதிப்பாடு ஆகியவற்றின் உச்சகட்ட வெளிப்பாடாக இது விளங்குகிறது. சாத்தியமற்றதை சாத்தியமாக்கிய   மாபெரும் சவாலை சந்தித்தது.

  • தோராயமாக 12,500 கிலோமீட்டர் (பெய்ஜிங்கிலிருந்து லண்டனுக்கான தூரத்திற்குச் சமம்) அணிவகுப்பு.

  • கொடூரமான நிலப்பரப்பில், பனி மூடிய மலைகள், கொசு நிறைந்த சதுப்பு நிலங்கள், மற்றும் ஆழமான ஆறுகள் என உயிருக்கு ஆபத்தான இடங்களைக் கடந்தனர்.

  • ஏராளமான எதிரிப் படைகளின் தாக்குதலையும், வான் தாக்குதலையும் சமாளித்தனர். ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கும் ஒரு முறை போரில் ஈடுபட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.

  • புறக்கணிக்க முடியாத மிகப் பெரிய அளவிலான உயிரிழப்புகள் இருந்தபோதிலும், இந்தப் பயணம் தொடர்ந்தது.

  • உணவு, ஆயுதப் பற்றாக்குறை மிகக் கடுமையாக இருந்தது. பசியைப் போக்க, புல்லால் செய்யப்பட்ட காலணிகள், மாட்டுத் தோல் பெல்ட்கள் வரை வேகவைத்துச் சாப்பிட்டனர்.

  • பல தளபதிகள் உயிர் துறந்தனர். மாவோவின் சகோதரர் உட்பட பலர், பிரதான படை பின்வாங்க உதவும் பொருட்டு பின்புற காவலில் போராடி உயிர் நீத்தனர்.

  • பனி மூடிய மலையில் கால் விரல்கள் உறைந்து போக, அவற்றையே கோடரியால் வெட்டியெறிந்த வீராங்கனை ஒருவரின் கதை, செம்படையின் மன உறுதியை எடுத்துக்காட்டுகிறது.

  • இந்த பயணத்தின் போதுதான் மாவோ சேதுங், கடுமையான சவால்களுக்கு மத்தியிலும் தனது தலைமைப் பண்புகளையும், உறுதியையும் நிரூபித்து, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக தனது நிலையை உறுதிப்படுத்தினார்.

  • பலத்த இழப்புகளுக்கு மிடையிலும் உயிர் பிழைத்து வடக்கே சென்றடைந்த இந்தப் படையே, பின்னர் சீன மக்கள் விடுதலைப் படையாக (PLA) உருவெடுத்து.  சீனாவின் எதிர்காலத்தை வடிவமைத்தது.

  • இந்த வரலாற்று நிகழ்வு, உலக அளவில் “100 Events that Changed the World” (உலகை மாற்றிய 100 நிகழ்வுகள்) பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

  • இந்தக் காரணங்களால்தான், செம்படையின் நீண்ட அணிவகுப்பு வெறும் ஒரு இராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படாமல், மனித சகிப்புத்தன்மையின் ஒரு உலகளாவிய காவியமாக போற்றப்படுகிறது.

  • நீண்ட அணிவகுப்பு என்பது சீனாவின் உள்நாட்டுப் போரில் ஒரு திருப்புமுனையாகும் என்பதையும், அது ஒரு தோல்வியின் இறுதிப் புள்ளியாக இல்லாமல், வெற்றியின் ஆரம்பப் புள்ளியாக அமைந்தது என்பதையும் உணர்த்துகிறது.

உண்மையை யதார்த்தத்திலிருந்து தேடுதல்

செம்படை வீரர்கள் துயரக் கடலில் நீந்திய பொழுதுதான், வறுமையிலும் ஒடுக்கு முறைகளும் வாடிக்கிடந்த இனச் சிறுபான்மை மக்களை அணி திரட்டுவதற்காகவும் சீனாவின் இனச் சிறுபான்மை மக்களை குறித்த கொள்கை உருவாக்குவதற்குமான செயலில் ஈடுபட்டார்கள். எத்தகைய களம் அவர்களை உருவாக்கி இருக்கிறது என்பதை அறிய முடியும். நீண்ட அணிவகுப்பின் போது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CPC) முதன்முறையாக மார்க்சிய இனக் கோட்பாட்டைச் சீனாவின் குறிப்பிட்ட தேசியச் சூழல், இனப் பிரச்சினைகளின் யதார்த்தங்களுடன் ஒருங்கிணைத்தது. இக்காலகட்டத்தில், கட்சியின் இனக் கோட்பாடுகள் “கொள்கை இறுக்கம்” (dogmatism) என்பதிலிருந்து “உண்மையை யதார்த்தத்திலிருந்து தேடுதல்” (seeking truth from facts) என்பதை நோக்கி மாற்றமடைந்தது. இது மார்க்சிய இனக் கோட்பாட்டை இயந்திரத் தனமாகப் பின்பற்றுவதிலிருந்து, அதைச் சீனாவின் உண்மையான சூழலுடன் ஒருங்கிணைக்கும் நிலைக்கு மாறியதைக் குறிக்கிறது.

வர்க்க உறவுகளின் முரண்பாடு மற்றும் ஒத்திசைவு அம்சங்களுக்கு இடையிலான இயங்கியல் ஒற்றுமை குறித்த விளக்கத்தின் அடிப்படையில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஐக்கிய முன்னணி கொள்கையின் இலக்குகளைச் சரியான நேரத்தில் மாற்றியமைத்தது. ஒற்றுமை மற்றும் போராட்டம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கொள்கையைக் கடைப்பிடித்தது. இதன் அடிப்படையில் இன மற்றும் மத வட்டாரங்களில் உள்ள உயர்மட்டப் பிரமுகர்களுடன் அது கூட்டணி அமைத்தது. மார்க்சியப் பொருள்முதல்வாத இயங்கியலின் உண்மையை அனுபவபூர்வமாக உறுதிப்படுத்தியது. நீண்ட அணிவகுப்பு, உள்நாட்டு இனச் சிறுபான்மையினர் குறித்த கட்சி மற்றும் செம்படையின் (Red Army) புரிதலை ஆழப்படுத்தியது. ஒரு ஒருங்கிணைந்த பல-இன அரசாகத் திகழும் நாட்டின் தேசிய யதார்த்தம் குறித்த புரிதலை, வெறும் புலன்சார் அறிவிலிருந்து (perceptual knowledge) பகுத்தறிவு சார்ந்த புரிதலுக்கு (rational understanding) உயர்த்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இது வழிவகுத்தது.

செம்படையின் நீண்ட அணிவகுப்பிற்கு முன்புவரை, சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது புரட்சிகர பணிகளை முக்கியமாக ஹான் இன சீன மக்கள் வாழ்ந்த பகுதிகளில்தான் மேற்கொண்டது சிறுபான்மை இன மக்கள் வாழ்ந்த பகுதிகளில் பணியாற்றிய நடைமுறை அனுபவம் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் கட்சியின் ஆரம்பகால திட்டங்களும் கொள்கைகளும் மார்க்சிய சித்தாந்தத்தினை விளக்குவதற்கு உள்ளேயே அடைபட்டு கிடந்தது. அனுபவப் பூர்வமான பரிசோதனைகள் இல்லாமல் கோட்பாட்டை பற்றிய எளிய முறையிலான விளக்கங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன.

செம்படையின் நீண்ட அணிவகுப்பின் போது, ​​சீன கம்யூனிஸ்ட் கட்சி மியாவோ, யி, திபெத்தியன் மற்றும் ஹுய் உள்ளிட்ட 13 இன சிறுபான்மை பகுதிகளில் செம்படையை வழிநடத்தியது. மேலும் மார்க்சிய தேசியக் கோட்பாட்டின் சீனமயமாக்கல் கோட்பாட்டின் ஆரம்ப கட்ட ஆய்வை இங்குதான் மேற்கொண்டது. அந்தப் பயணத்தின் போது, சிறுபான்மை இனக் குழுக்களின் குறிப்பிட்ட யதார்த்தங்களையும் புரட்சிகரப் போராட்டத்தின் நடைமுறைத் தேவைகளையும் கருத்தில் கொண்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியான ஆவணங்களையும் பிரகடனங்களையும் உருவாக்கி வெளியிட்டது.

அ.பாக்கியம்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *