Tamil Marx

Uncategorized

இஸ்ரேலிய இந்துத்துவ சினிமா – நூல் அறிமுகம்

  • PublishedSeptember 12, 2026

“இஸ்ரேலிய இந்துத்துவா சினிமா “- நீங்கள் ஒரு தேச துரோகியானால் இப்புத்தகத்தை படிக்க முழு தகுதியானவர். அமரன்,தூரந்தர் படங்களைப் பார்க்கும் போது என்ன வெங்காயம் இது என்று உங்களுக்கு தோன்றினால் நீங்களும் தேசதுரோகியே! அதன் அடிப்படையில் இப்புத்தக்கத்தை வாசிக்கும் அனைவரும் இந்துத்துவ அரசுக்கு மன்னிக்க முடியாத பரம எதிரிகள் பாகிஸ்தானைப் போல.

சமூக வலைதளங்கள் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தி மக்களின் முடிவுகளை தீர்மானிக்கின்ற காலக்கட்டத்தில் நாம் இப்போதிருக்கிறோம். விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு சமூக வலைதள செல்வாக்கைப் பற்றி மீண்டும் ஒரு முறை நாம் அதிகம் பேச தொடங்கியிருக்கிறோம். சமூக வலைதளத்தைக் கொண்டு ஆட்சிக்கு வருவது ஒரு காலம் எனில், 1947லேயே திரைப்படங்களைக் கொண்டு ஒரு நாட்டை வளைத்து போட்டது ஒரு காலம்.

அது கொஞ்சம் கூட தவறில்லை, அது நம்முடைய வீர தீர செயல்களது என்று மண்டையைக் கழுவியது அந்த காலம். அந்த கேடுகெட்ட வரலாறு தான் இஸ்ரேலுடையது. பாலஸ்தீன் பகுதிகளை ஆக்கிரமித்து இன்று வரை அவர்களை போர்களிலும் சிறைகளிலும் கொன்றுக் குவித்துக்கொண்டிருக்கிறது.

நூலாசிரியர் புத்தகத்தின் தொடக்கத்தில் ஒரு கேள்வியை முன்வைக்கிறார். பாலஸ்தீனுக்கு ஆதரவாக இத்தனை நாடுகளும் மக்களும் குரல் எழுப்பும் போதும், அங்கே கொன்று குவிக்கப்படும் மக்களைக் கண்ட போதும் இஸ்ரேல் மக்கள் ஏன் அரசிடம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? மனிதாபிமானத்தின் அடிப்படையில் அவர்கள் அரசிடம் போரை நிறுத்தச் சொல்லி முறையிட்டிருக்கலாமே என்று. ஆனால்,அவர்கள் கொல்லப்படுவது சரி, அவர்கள் அப்படி தான் கொல்லபட வேண்டும் என்ற எண்ணம் இவர்களின் மனதில் ஆழமாக புரையோடி இருக்கிறது. அதற்கு காரணம் என்ன,அதன் பரிணாமங்கள் என்ன என்பதை அலசுகிறது இந்த நூல்.

முக்கியமான சில விசயங்களை மட்டும் கூறி உங்களை இப்புத்தகத்தை வாசிக்கவும் விவாதிக்கவும் அழைக்கிறேன்.

இஸ்ரேல் ராணுவம் பலாத்காரமாக பாலஸ்தீன பகுதிகளை ஆக்கிரமிக்கும் போது அங்கு குடியமர்த்தப்படும் யூத மக்களுக்கு எவ்வித குற்ற உணர்வும் வாராமலிருக்க கவனமாக பார்த்துக் கொண்டது. ஒரு இடத்தில் வன்முறைக்கு ஆளான மக்கள் அங்கிருந்து தப்பி இன்னொரு நாட்டுக்கு வந்தவர்கள் அங்கு இருந்த மக்களை வன்முறையால் துரத்தி விட்டு அங்கே அவர்களுக்கென ஒரு தனி நாட்டை உருவாக்கி கொள்ள முற்பட்டனர். ஹிந்து ராஸ்ரியத்தைப் போல. சிறுபான்மையாக இருக்கும் மக்கள் பெரும்பான்மை மக்களின் உரிமைகளை தங்களின் அதிகாரத்தின் மூலமாக பறித்துக் கொள்வதை நாம் காலமெல்லாம் பார்த்திருக்கிறோம்.

இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு இரண்டே மாதங்களில் அதன் ராணுவத்தின் ஒரு அங்கமாக ஒரு திரைப்படத் தயாரிப்பு பிரிவை தொடங்கியிருக்கிறது இஸ்ரேல் அரசு இதை கவனமாக கவனிக்க வேண்டும் நாம். அரசை உருவாக்க வெறுமனே வன்முறையும் ஆயுதங்களும் போதாது கூடவே மக்கள் மண்டையைக் கழுவ திரைப்படங்களும் டிவி சீரியல்களும் கூடவே கொஞ்சம் கார்ட்டூன்களும் தேவைப்படும் என்று இஸ்ரேல் அரசு அன்றே கணித்ததின் விளைவு தான் இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் திரைப்படச் சங்கம் இருந்ததும் அங்கு பயிற்சி அளிக்கப்பட்டதும் அதன் பிறகு நேரடியாக அரசின் கட்டுபாட்டுக்கு சென்றதும்.

இதை நாம் அப்படியே இந்தியாவுக்கு பொருத்திப் பார்க்கலாம். தூரந்தரரும் அமரனும் பேசிய மையக் கருத்து என்ன? மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்திய ராணுவத்தின் வீர தீர செயல்களைப் போற்றுவதாக இருக்கும் ஆனால் அதன் மையக் கருத்தே, நாம் பொது எதிரிகள் முஸ்லிம்கள் தான் என்றும் அவர்களில் யாரும் நல்லவர்கள் இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கும். இப்படியான நூற்றுக்கணக்கான படங்களை எடுத்து ஓட விட்டு அதற்கு விருதும் கொடுத்து விழாவும் நடத்தி மக்களை மடைமாற்றி வைத்திருக்கிறது இஸ்ரேல் அரசாங்கம். ஆதலால் தான் பாலஸ்தீனத்தில் மக்கள் கொல்லப்படும் போது அவர்களால் ரசிக்க முடிகிறது.

இது என்தாய் நிலம் என்னால் அவர்களோடு பகிர்ந்து கொள்ள முடியாது என்ற நிலைக்கு கொண்டு சேர்க்கிறது. இஸ்ரேலிய மக்களுக்குள் பல பாகுபாடுகளும் முரண்பாடுகள் இருப்பினும் அதைக் களைய எந்த ஒரு முயற்சியும் எடுக்கப் படாமல் வலதுசாரி கருத்துக்கள் புரையோடிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை தலைவர்களாக தேர்ந்ததெடுத்து உலக வரலாற்றில் மிகமோசமான அரசியலைச் செய்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேலிய அரசு.

மக்களை ஏமாற்றும் சூழ்ச்சியை இஸ்ரேலிய அரசு எவ்வாறு கையாண்டது, அதன் நோக்கம் தான் என்ன, அடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகள் என்ன என்பதை ஆய்வு செய்து தரவுகளோடு இப்புத்தகம் நமக்கு தரப்பட்டிருக்கிறது. இவ்வரசியலை இந்திய இந்துத்துவ அரசியலோடு பொருத்திப் பார்க்க ஒரு கையேடாகக் கொள்ளலாம். பாலஸ்தீனம் பற்றிய தகவல்களுக்கு ஆசிரியரின் பாலஸ்தீனம் நம்மால் என்ன செய்ய முடியும் என்ற புத்தகம் வாசிக்கவும்.

வெறுப்பின் கொற்றம் வீழக! அன்பே அறமென எழுக என்ற முழக்கத்தை பரப்புவோம்.

 

நூல் பெயர்:- இஸ்ரேலிய இந்துத்துவா சினிமா

நூலாசிரியர்:- இ. பா. சிந்தன்

பக்கங்கள்:72

விலை: ரூ. 80/-

புத்தகம் கிடைக்கும் இடம்: பாரதி புத்தகாலயம்-9444567935

 

நூல் அறிமுகம் செய்தவர்

Dr.வினிஷா. மா BNYS,MPH

தமுஎகச ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *