சாதிய கட்டமைப்பில் ஒரு இனம்-அ.பாக்கியம்
சீனாவின் தேசிய இனங்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு இனம் யி(Yi) இனமாகும். இந்த இனத்தின் சமூக கட்டமைப்பு அடிமை முறைகளையும் படிநிலை சாதிய கட்டமைப்புகளையும் போன்றதொரு அமைப்பாக இருந்துள்ளது.
சமீபத்திய மக்கள் தொகை அடிப்படையில் யி இன மக்கள் சுமார் ஒரு கோடி பேர் இருக்கிறார்கள். இவர்கள் முக்கியமாக சிச்சுவான், யுன்னான் மற்றும் குய்ஜோ மாகாணங்களிலும், குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியிலும் பரவியுள்ளனர். சீனாவின் நிர்வாக அமைப்பின் அடிப்படையில் தன்னாட்சி பிரதேசங்களுக்குள் அதிக மக்கள் தொகையுடன் வாழும் இனக்குழுக்களுக்கு தனியான தன்னாட்சி மாகாணங்கள் அமைக்கப்படுவது ஒரு நிர்வாக முறையாக இருக்கிறது. “தன்னாட்சி மாகாணம்” என்பது சீனாவில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவினர் அதிக அளவில் வாழும் பகுதிகளுக்கு வழங்கப்படும் ஒரு நிர்வாக அந்தஸ்தாகும். இது அந்த இனக்குழுவினரின் கலாச்சாரம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தில் குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தை அளிக்கிறது.
அந்த அடிப்படையில் சீனாவின் மிகப்பெரிய ஒற்றை யி சமூகத்தைக் கொண்டுள்ள லியாங்ஷான் யி தன்னாட்சி மாகாணத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமான யி மக்கள் உள்ளனர். இது சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. யுனான் மாகாணத்தில் முப்பது லட்சத்திற்கும் அதிகமான யி மக்கள் உள்ளனர். இந்த மாகாணத்தில் சுமார் 5.5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் யி இன மக்கள் 55% க்கும் அதிகமானவர்கள் (தோராயமாக 3 மில்லியன்) பெரும்பாலான யி இன மக்கள் மலைப்பகுதிகளில் சிதறி வாழ்கின்றனர்.
அவர்களில் கணிசமான மக்கள் மலைகளின் உயரமான இடங்களில் கடுங்குளிர்பிரதேசங்களில் வாழ்வதும், மற்றொருபகுதி மக்கள் சமவெளிகளிலோ அல்லது பள்ளத்தாக்குகளிலோ வாழும் நிலை உள்ளது. வேறுபட்ட வாழ்விடங்களில் இருப்பதால் அவர்களுக்கு இடையிலான கால நிலைகள் அதாவது மழை பொழிவும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது. இந்த வியக்கத்தக்க வேறுபாடுகள் பல்வேறு பகுதிகளில் உள்ள யி இன மக்கள் தங்கள் வாழ்வாதார முறைகளில் ஒருவருக்கொருவர் மிகவும் வேறுபட்டு இருப்பதற்கு முதன்மையான காரணமாக அமைகின்றது.
தோற்றக்கதைகள்
யி இன மக்களின் உருவாக்கம் என்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ச்சியாக நடந்த ஒரு செயல்முறையின் விளைவாகும். அவர்களின் மூதாதையர்கள் பொ.ஆ.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.ஆ.1ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தற்போதைய யுன்னானின் டியான்சி ஏரி மற்றும் சிச்சுவானின் கியோங்டூ (இன்றைய சிச்சாங்) பகுதிகளில் மையமாக வாழ்ந்தனர். வடக்கிலிருந்து வந்த இவர்கள், தென்மேற்கு சீனாவில் ஏற்கனவே வாழ்ந்துகொண்டிருந்த உள்ளூர் பழங்குடி மக்களுடன் (குறிப்பாக பூ (Pu) மக்கள்) இணைந்தனர் .
இந்த இரண்டு குழுக்களின் கலப்பின் விளைவாகத்தான் யி இனம் உருவானது. கிழக்கு ஹான் (25-220), வெய் (220-265) மற்றும் ஜின் (265-420) வம்சங்களின் போது, இப்பகுதிகளில் வசித்த மக்கள் ‘யி’ என்று அழைக்கப்பட்டனர்; “ஆறு கிளைகள்” (Six Ancestors / Six Tribes) பிரிவு எனப்படும் முக்கிய நிகழ்வு, அவர்களின் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும். இது சுமார் பொ.ஆ.மு 5ஆம் நூற்றாண்டில் (போரிடும் நாடுகள் காலத்தின் தொடக்கத்தில்) நிகழ்ந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. யி இனத்தின் புராண மூதாதையரான “ஜோங்முயூ” (Zhongmuyou) என்பவரின் ஆறு மகன்கள், பின்னாளில் ஆறு முக்கிய கிளைகளின் மூதாதையர்கள் ஆனார்கள் . இந்த “ஆறு கிளைகள்” பிரிவைத் தொடர்ந்து, அவர்கள் தென்கிழக்கு நோக்கி விரிவடைந்து, படிப்படியாக தற்போது வாழும் பகுதிகளில் குடியேறினர் .
தனித்துவமான மொழி அடையாளம்
யி மொழி, சீன-திபெத்திய மொழிக்குடும்பத்தின் திபெத்திய-மியான்மீஸ் மொழிக் குழுவைச் சேர்ந்தது. மேலும், யி மக்கள் ஆறு வட்டார மொழிகளைப் பேசுகிறார்கள். யுனான், குய்ஷோ மற்றும் குவாங்சி ஆகிய பகுதிகளில் உள்ள பல யி மக்கள் ஹான் மொழியை அறிந்திருக்கிறார்கள். யி மக்கள், 13 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட பழைய யி மொழி எனப்படும் ஒரு அசையெழுத்தைப் பயன்படுத்தினர். தற்போதுள்ள பழைய யி எழுத்தில் சுமார் 10,000 சொற்கள் இருப்பதாகவும், அவற்றில் 1,000 சொற்கள் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்கள் என்றும் மதிப்பிடப்படுகிறது. வரலாறு, இலக்கியம், மருத்துவம் சார்ந்த பல படைப்புகளும், ஆளும் குடும்பங்களின் வம்சாவளிகளும் பழைய யி எழுத்தில் எழுதப்பட்டு, பெரும்பாலான யி பகுதிகளில் இன்றும் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட பழைமையான யி எழுத்தில் செதுக்கப்பட்ட பல கல்வெட்டுகளும் தூண்களும் சிதைவின்றி அப்படியே உள்ளன. பழைய யி மொழி, சொல் வடிவத்திலும் உச்சரிப்பிலும் சீரற்றதாக இருந்ததால், விடுதலைக்குப் பிறகு புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் பயன்படுத்துவதற்காக அது சீர்திருத்தப்பட்டது.
பழமையான படிநிலை சமூகம்
1949- கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைவதற்கு முன்பு , லியாங்ஷான் மலைப் பகுதிகளில் இருந்த யி இன மக்கள், “நுவோஹுவோ,” “குனுவோ,” “அஜியா” மற்றும் “ஷியாக்ஸி” என நான்கு வெவ்வேறு படிநிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். எஜமானர்களுக்கும் அடிமைகளுக்கும் இடையிலான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடாக இருந்த து. “நுவோஹுவோ” பிரிவு இரத்த உறவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு நிரந்தரமாக இருந்தது. இவர்கள் மட்டுமே ஆட்சியாளர்களாக இருந்தனர். மற்ற படிநிலைகளில் இருந்தவர்களால் ஒருபோதும் ஆட்சியாளர்கள் பதவிக்கு வர முடியவில்லை.
“நுவோஹுவோ” என்றால் “கருப்பு யி” என்று பொருள். இது சமூகத்தின் மிக உயர்ந்த படிநிலையாக இருந்தது. அடிமைகளை உடைமையாக வைத்திருந்த வர்க்கமாக இருந்த து. இவர்கள் மொத்த யி இன மக்கள் தொகையில் 7 சதவீதம் மட்டுமே இருந்தனர் . கருப்பு யி க்கள் மற்ற மூன்று படிநிலைகளைச் சேர்ந்த மக்களைப் பல்வேறு அளவுகளில் கட்டுப்படுத்தினர். மேலும் 60 முதல் 70 சதவீத சாகுபடி நிலங்களையும், பெருமளவிலான பிற உற்பத்திச் சாதனங்களையும் சொந்தமாகக் கொண்டிருந்தனர். கருப்பு யி க்கள் பிறப்பால் பிரபுக்களாக இருந்தனர். தங்கள் இரத்தம் “உன்னதமானது” மற்றும் “தூய்மையானது” என்று கூறி, மற்ற மூன்று படிநிலைகளைச் சேர்ந்தவர்களுடனான திருமணங்களைத் தடை செய்தனர். அவர்கள் உடல் உழைப்பை வெறுத்தனர். மற்ற படிநிலை மக்களை சுரண்டிப் பிழைத்தனர். மேலும் அடிமைகளை பலவந்தமாக அடக்கி ஆண்டனர்.
“குனுவோ” என்றால் “வெள்ளை யி” என்று பொருள். இவர்கள் படிநிலையில் ஆளும் கருப்பு யி மக்களுக்கு அடுத்தநிலையில் இருந்தனர். மக்கள் தொகையில் 50 சதவீதத்தைக் கொண்டிருந்தனர். அடிமை முறையின் கீழ் குடிமக்களாக இவர்கள் இருந்ததால், அவர்கள் பொருளாதார ரீதியாக ஒப்பீட்டு சுதந்திரத்தை அனுபவித்தனர். தங்களை விடத் தாழ்ந்தவர்களாக இருந்த “அஜியா” மற்றும் “சியாக்ஸி” ஆகியோரை இந்த வெள்ளை யி கட்டுப்படுத்த முடிந்தது. குனுவோக்கள் கருப்பு யி அடிமை உரிமையாளர்களால் ஆளப்பட்ட பகுதிகளுக்குள் வாழ்ந்தனர்.
அவர்களுக்கு இடம்பெயரும் சுதந்திரம் இல்லை. மேலும் தங்கள் எஜமானர்களின் அனுமதியின்றி அந்தப் பகுதிகளை விட்டு வெளியேறவும் முடியாது. தங்கள் சொந்த சொத்துக்களை விற்கும்போது அவர்களுக்கு முழுமையான உரிமை இல்லை. மாறாக தங்கள் எஜமானர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருந்தனர். அவர்கள் தங்கள் நிலத்தை விற்க விரும்பும்போது, தங்கள் எஜமானர்களுக்கு சில கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருந்தது. சந்ததி இல்லாத இறந்த நபரின் சொத்து அவரது எஜமானருக்கே சென்றது.
கருப்பு யி அடிமை உரிமையாளர்கள் தங்கள் விருப்பப்படி குனுவோக்களைக் கொல்லவோ, விற்கவோ அல்லது வாங்கவோ முடியாது. அதே நேரத்தில் அவர்கள் மீதான கட்டுப்பாட்டு அதிகாரத்தை அவர்களால் மாற்றவோ அல்லது பரிசாக மற்றவர்களுக்கு வழங்கவோ முடிந்தது. எனவே, குனுவோக்கள் அடிமைகள் அல்ல என்றாலும், அவர்களுக்குத் தங்களுக்கென ஒரு முழுமையான ஆளுமையும் இருக்கவில்லை.
மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காக இருந்த “அஜியா” பிரிவை சேர்ந்தவர்கள், கறுப்பின யி உடைமையாளர்களிடம் அடிமையாக இருந்த து மட்டுமல்ல, குனுவோ பிரிவினரிடமும் பிணைக்கப்பட்டிருந்தனர். அந்த உரிமையாளர்கள் அவர்களைத் தாராளமாக விற்கவும், வாங்கவும், கொல்லவும் உரிமை பெற்றிருந்தனர்.
“சியாக்ஸி” என்ற பிரிவினர் மக்கள்தொகையில் 10 சதவிகிதம் மட்டுமே இருந்த, மிகக் கீழான வகுப்பினர் ஆவர். அவர்களுக்குச் சொத்து, தனிப்பட்ட உரிமைகள் அல்லது சுதந்திரம் எதுவும் இருக்கவில்லை. மேலும் அவர்கள் மனிதர்களாக அல்ல “பேசும் கருவிகளாக” மட்டுமே கருதப்பட்டனர். அவர்கள் தங்கள் எஜமானர்களின் வீடுகளில் இருண்ட மூலைகளில் வாழ்ந்தனர். இரவில் குளிரைத் தாங்க வீட்டு விலங்குகளுடன் சுருண்டு படுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. எஜமானர்களின் மேற்பார்வையில், சியாக்ஸிகள் ஆண்டு முழுவதும் கடினமான வீட்டு வேலைகளையும், பண்ணை வேலைகளையும் செய்தனர்.
அவர்கள் கந்தல் ஆடைகளையும், கிழிந்த ஆட்டுத்தோல்களையும் அணிந்து, காட்டு வேர்களையும் மீதமுள்ள உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர். கிளர்ச்சி செய்தவர்கள் தப்பிச் செல்வதைத் தடுக்க, அடிமை உரிமையாளர்கள் அவர்களை இரும்புச் சங்கிலிகளாலும், மர விலங்குகளாலும் பிணைத்து, எல்லாவிதமான சித்திரவதைகளையும் செய்தனர். வீட்டு விலங்குகளைப் போலவே, சியாக்ஸிகளையும் சுதந்திரமாக உடைமைகளாகக் கையாளலாம், கட்டளையிடலாம், அவமானப்படுத்தலாம், அடித்துத் துன்புறுத்தலாம், வாங்கலாம், விற்கலாம் அல்லது தெய்வங்களுக்குப் பலியாகக் கொல்லலாம் என்ற அவலநிலையில் இந்தபிரிவு மக்களின் வாழ்க்கை இருந்தது.
குனுவோ பிரிவினரும், அஜியாவும் தங்கள் எஜமானர்களான கருப்பு யி பிரிவினரின் நிலத்தைப் பயிரிட, தங்களுடைய சொந்த கால்நடைகளையும் கருவிகளையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. குனுவோ ஒவ்வொரு ஆண்டும் ஐந்து, ஆறு அல்லது 10 நாட்களுக்கும் மேலாக இலவச வேலை செய்ய வேண்டியிருந்தது.இவர்கள் அதை செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் வைத்திருந்த அடிமைகளை இலவச வேலைக்கு அனுப்ப வேண்டும். அதுவும் செய்யவிலை என்றால் அவர்கள் அதற்குப் பதிலாக ஒரு குறிப்பிட்ட தொகையைப் பணமாகக் கொடுக்க வேண்டும். அஜியா பிரிவினர் செய்த இலவச வேலை, அவர்களின் மொத்த வேலை நேரத்தில் சரிபாதி வரை எடுத்துக்கொண்டது. தங்கள் எஜமானர்களின் நிலத்தைப் பயிரிடுவதற்காக, அவர்கள் பெரும்பாலும் தங்கள் சொந்த நிலத்தைப் புறக்கணிக்க வேண்டியிருந்தது. இலவச உழைப்பத்தவிர, குனுவோவும் அஜியாவும் தங்கள் கறுப்பின யி எஜமானர்களால் திணிக்கப்பட்ட கந்துவட்டி கடன்களையும் வாங்க வேண்டியிருந்தது.
சுமை சுமக்கும் மிருகங்களைப் போல உழைக்கக் கட்டளையிடப்பட்டதால், அடிமைகளுக்கு உற்பத்தியில் சிறிதும் ஆர்வம் இருக்கவில்லை. சுதந்திரத்தைப் பெறுவதற்காக, லியாங்ஷான் மலைப் பகுதிகளில் இருந்த அடிமைகள், மெதுவாக வேலை செய்வது, கருவிகளை அழிப்பது, விலங்குகளைத் துன்புறுத்துவது, தங்கள் எஜமானர்களின் சொத்துக்களை எரிப்பது, ஏன், தங்கள் எஜமானர்கள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொலைதூர மலைப் பகுதிகளில் இருந்த அடிமைகளுக்குத் தப்பி ஓடுவது கடினமாக இருந்தபோதிலும், அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் தப்பிக்க முயன்றனர். அடிமை உரிமையாளர்களுக்கு எதிராக அடிமைகளால் அரங்கேற்றப்பட்ட தன்னிச்சையான மற்றும் அவ்வப்போதைய கிளர்ச்சிகள் ஒருபோதும் ஓயவில்லை. தனிப்பட்ட உரிமைகளுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கூட்டுப் போராட்டமும் வளர்ந்தது, மேலும் கூட்டு வெறுப்பு பெரும்பாலும் சிறிய ஆயுதக் கிளர்ச்சியாக மாறியது.
நிர்வாகமும் நில உடைமையும்
லியாங்ஷான் மலைகளில் வசித்த சுமார் 70 ஆயிரம் கருப்பு யி இனத்தவர் தங்கள் இனத்தவர்களை 100 குலங்களாக பிரித்தார்கள். ஒவ்வொரு குலத்தின் எல்லையும் மலைத்தொடர்கள் ஆறுகளால் வரையறுக்கப்பட்டு எந்த அத்துமீறிலும் நடக்காமல் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுக்கான குலங்களில் முறையான நிர்வாக அமைப்புகள் எதுவும் இல்லை என்றாலும் குலத்தில் இருந்த மூத்தவர்கள் வர்க்க சர்வாதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் அடிமை உடைமையாளராக இருந்த கருப்பின யி பிரிவினருக்கு உதவியாக செயல்பட்டனர். கிளர்ச்சி செய்யும் அடிமைகளை அடக்குவது போன்ற குலங்களின் முக்கிய பிரச்சனைகளை அமுலாக்கினார்கள்.
கிளர்ச்சி செய்யும் இதர அடிமை பிரிவினரை கூட்டாக சேர்ந்து கடுமையான அடக்குமுறைகளை ஏவி விட்டார்கள். இந்தப் பகுதியில் வாழ்ந்த இனத்தவருக்கு எழுதப்பட்ட சட்டம் எதுவும் இல்லை வழக்காறு சட்டம் என்ற பெயரில் அடிமைகளை ஒட்டச்சுரண்டுவதும் திருமண உறவுகள் குலங்களை தாண்டி நடத்தக் கூடாது என்பதிலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர். அந்தப் பகுதிகளில், மக்கள் தொகையில் 5 சதவீதம் பேர் நில உரிமையாளர்களாகவும், 60 முதல் 80 சதவீதம் பேர் ஏழை விவசாயிகளாகவும் பண்ணைத் தொழிலாளர்களாகவும் இருந்தனர். கொடூரமான நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு ஆளான ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமான நிலத்தை விட, நில உரிமையாளர்கள் வைத்திருந்த நிலம் சராசரியாக 10 மடங்கு அல்லது பல டஜன் மடங்கு அதிகமாக இருந்தது. பொருளாகச் செலுத்தப்பட்ட நில வாடகை, அறுவடையின் 60 முதல் 70 சதவீதத்தை எட்டியது. மேலும், குத்தகைதாரர்கள் கடுமையான கட்டாய வரிகளையும் இதர கட்டணங்களையும் ஏற்க வேண்டியிருந்தது.
பல நூற்றாண்டுகளாக, லியாங்ஷான் மலைப் பகுதிகளில் யி இனத்தவரிடையே பண்டமாற்று முறையே வர்த்தக முறையாக இருந்தது. பரிமாற்றத்திற்கான பொருட்களில் முக்கியமாக கால்நடைகளும் தானியங்களும் அடங்கியிருந்தன. உப்பு, துணி, உலோகப் பொருட்கள், ஊசிகள், நூல்கள் மற்றும் பிற அன்றாடத் தேவைகள், யி மற்றும் ஹான் இனத்தவர் ஒன்றாக வாழ்ந்த இடங்களில் மட்டுமே கிடைத்தன. எப்போதாவது, யி இனத் தலைவர்களால் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்ட சில ஹான் வணிகர்கள், லியாங்ஷான் மலைப் பகுதிகளுக்குள் பொருட்களைக் கொண்டு சென்றனர்.
பிடிபட்டு அடிமைகளாக மாற்றப்படும் அபாயத்தையும் பொருட்படுத்தாமல், அவர்கள் சென்று, பெரும்பாலும் 100 சதவீதத்திற்கும் அதிகமான நிகர லாபத்தை ஈட்டினர். உற்பத்தி மற்றும் வாழ்வாதாரச் சாதனங்களின் கடுமையான பற்றாக்குறையால் அவதிப்பட்ட யி இனத்தவர், சிறிதளவு அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்காகக் கடுமையான சுரண்டலைச் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தது.
ஒரு கோழியின் மதிப்பு ஒரு ஊசிக்கு மட்டுமேயாகவும், ஒரு ஆட்டுத்தோலின் மதிப்பு ஒரு கைப்பிடி உப்புக்கு மட்டுமேயாகவும் இருந்தது. பல அடிமைகள் ஆண்டு முழுவதும் உப்பு இல்லாமல் இருக்க வேண்டியிருந்தது. சிக்கலான வரலாற்று காரணங்களால், லியாங்ஷான் மலைகளில் யி இனத்தவரின் அடிமை முறை 1949 வரை நீடித்தது.
1949-ஆம் ஆண்டு விடுதலைக்கு முன்பு, யுனான், குய்ஷோ மற்றும் குவாங்சி மாகாணங்களில் இருந்த யி இன மக்கள், தாவோயிசம் மற்றும் பௌத்த மதங்களின் தாக்கத்துடன் மூதாதையர் வழிபாட்டையும் இணைத்து, பலதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்தனர். லியாங்ஷான் மலைகளில் வசித்த யி இன மக்கள், தெய்வங்களையும் பேய்களையும் வழிபட்டதோடு, சிலை வழிபாட்டிலும் நம்பிக்கை கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு அடிக்கடி பலிகளைச் செலுத்தினர். அவர்களின் மதச் செயல்பாடுகள் மந்திரவாதிகளால் வழிநடத்தப்பட்டன. ஆரம்பகால யி நாட்காட்டி, ஆண்டை 36 நாட்கள் கொண்ட 10 மாதங்களாகப் பிரித்தது. பத்தாவது மாதம் வருடாந்திர விழாக் காலமாக இருந்தது.
அ.பாக்கியம்
அடுத்த தொடர் செப்டம்பர் 2 புதனன்று வெளியாகும்..