‘மோடிநாமிக்ஸ்’ தோல்வியும் இந்தியர்களின் எதிர்காலமும்!-சேது சிவன்
ஏப்ரல் மாத மொத்த விற்பனை விலை பண வீக்கம் 42 மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.3% ஆக அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 3.88% ஆக இருந்தது. இதே நேரத்தில் பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையை 3 ரூபாய்க்கும் மேல் உயர்த்தியுள்ளது. இந்த இரண்டுமே சாமானிய மக்களின் தலையில் விழுந்த பேரிடிதான்.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் நேரடியாகப் போக்குவரத்துச் செலவு அதிகரிக்கும். லாரிகள் மற்றும் வேன்களுக்கான வாடகை உயரும். கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வரும் காய்கறிகள், பழங்கள், பால் மற்றும் தானியங்களின் விலை உயரும். மொத்த விற்பனை பணவீக்கம் (WPI) ஏற்கெனவே அதிகமாக இருப்பதால், சில்லறை வர்த்தகத்திலும் (Retail) இதன் தாக்கம் எதிரொலித்து,
இதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் தங்களின் மருத்துவச் செலவுகள் அல்லது குழந்தைகளின் கல்விக்காகச் சேர்த்து வைத்திருக்கும் சேமிப்பு கையை விட்டுச் செல்லும்.
மேற்கு ஆசியப் போரின் விளைவாக ஏற்பட விருக்கும் கடுமையான பொருளாதார அதிர்ச்சிக்கு இந்தியர்கள் இப்போதே தயாராக வேண்டும் என்று கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய கோடக் மே 13 அன்று விடுத்த எச்சரிக்கை, நாட்டின் நிதிநிலை குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. “மோசமான காலங்களை எதிர்கொள்ள இப்போதே தயாராகுங்கள்” என்று அவர் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.
பிரதமரின் அறிவிப்புகளும் ஒளிந்திருக்கும் உண்மையும்
இந்த எச்சரிக்கை வெறும் பொருளாதார வல்லுநரின் கணிப்பு மட்டுமல்ல, பிரதமர் மோடியின் சமீபத்திய செயல்பாடுகளும் இதனை உறுதிப் படுத்துகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்குக் கோரிக்கை விடுத்த பிரதமர், பெட்ரோல் – டீசல் நுகர்வைக் குறைக்கவும், தங்கம் வாங்குவதைத் தவிர்க்கவும், வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப்போடவும் வேண்டுகோள் விடுத்தார். மக்களுக்கு இத்தகைய ‘சிக்கன’ அறிவுரைகளை வழங்கிவிட்டு, அவரோ 6 நாள் வெளிநாட்டுப் பயணத்திற்குச் சென்றுவிட்டார். பிரதமரின் இந்த அறிவிப்புகள், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு எந்தளவிற்கு நெருக்கடியில் உள்ளது என்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன.
இதன் வீரியத்தை பெட்ரோலியத் துறை அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலமே உணர்த்துகிறது. எண்ணெய் நிறுவனங்கள் நாளொன்றுக்கு ₹1,000 கோடி இழப்பைச் சந்திப்பதாகவும், சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை உயர்விற்கேற்ப இனி அரசு இந்த விலையைத் தாங்கிக்கொள்ள இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 18 மாதங்களாகத் தேர்தல் லாபத்திற்காக மாற்றப்படாமல் இருந்த எரிபொருள் விலைகள், இனி விண்ணைத் தொடப் போகின்றன என்பதற்கான சமிக்ஞையே இது.
எரிசக்தி நெருக்கடியும் சர்வதேசச் சூழலும்
இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், இந்தியா தற்போது ஒரு கடுமையான “நேரடி பணம் செலுத்தும் சமநிலை அழுத்தச் சோதனையை” (Live Balance of Payments Stress Test) எதிர்கொண்டுள்ளதாக எச்சரித்துள்ளார். அதாவது நாட்டின் வரவு செலவுகளை சமப்படுத்த முடியவில்லை என்பதே அதன் அர்த்தம். எரிசக்தி விலைகளில் இதுவரை இருந்த “தாங்கு திறன் கொண்ட காலம்” (Buff er Era) முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் கூறுவது, பெட்ரோல் மற்றும் எரிவாயு விலைகள் இனி சாமானி யர்களின் கைகளை மீறிப்போகும் என்பதையே உணர்த்துகிறது.
இதற்குக் காரணம், அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டணி ஈரான் மீது நடத்திய தாக்குதல்களும், அதற்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதும் ஆகும். கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 120 டாலர் வரை உயர்ந்துள்ளது.
ஈரான் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை டொனால்டு டிரம்ப் நிராகரித்தது நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 87 சதவீதமும், எல்பிஜி தேவையில் 60 சதவீதமும் இறக்குமதியைச் சார்ந்தே இருப்பதால், இது இந்தியாவுக்கு “இரட்டை வலி” தரும் நெருக்க டியாகும்.
அந்நியச் செலாவணி வீழ்ச்சியும் சிதிலமடைந்த நிலையும்
போர்ச் சூழல் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பை வேகமாக அரித்து வருகிறது. பிப்ரவரி இறுதியில் 728.5 பில்லியன் டாலர்களாக இருந்த கையிருப்பு, மே மாதத் தொடக்கத்தில் 690.7 பில்லியனாகக் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் எஸ்டிஆர் (SDR)-ஐ நீக்கினால், சந்தையை நிலைப்படுத்தப் பயன்படும் கையிருப்பு பணம் 500 பில்லியனுக்கும் குறைவாகவே இருக்கும்.
ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக 95.94 என்ற வரலாற்று வீழ்ச்சியைத் தொட்டுள்ளது. ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்காவின் பிற வளர்ந்து வரும் நாடுகள் முதலீடுகளை ஈர்த்து வரும் வேளையில், 2026-ஆம் ஆண்டில் அந்நிய முதலீட்டாளர்களின் பார்வையில் இந்தியா ஒரு நம்பிக்கையான நாடாக இல்லை என்பது கவலையளிக்கிறது.
‘மோடிநாமிக்ஸ்’ தோல்வி
பாஜக அரசு இந்த நெருக்கடிக்கு ஈரான் போரை மட்டுமே காரணமாகக் காட்ட முயல்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல. போர் தொடங்குவதற்கு முன்பே இந்தியாவின் வெளியுறவுப் பொருளாதாரம் மோசமாகத்தான் இருந்தது. 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (FII) பெருமளவில் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 21 பில்லியன் டாலர் முதலீடுகள் வெளியேறியுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியா ‘பேலன்ஸ் ஆஃப் பேமெண்ட்’ எதிர்மறை நிலையில் தொடர்கிறது. மோடி அரசு பெருநிறுவன முதலாளிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதும், கடுமையான வரிகள் மற்றும் விசாரணை அமைப்புகளின் கெடுபிடிகளும் முதலீட்டாளர்களை விலகச் செய்துள்ளன. ‘மோடிநாமிக்ஸின்’ இந்தத் தோல்வி இன்று நாட்டைப் பெரும் பள்ளத்தில் தள்ளியுள்ளது.
சாமானியர்கள் மீதான இரட்டை நெருக்கடி
இந்த நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்படுவது சாதாரணக் குடும்பங்கள்தான். எரிபொருள் விலை உயர்வு மற்றும் அதனால் ஏற்படும் பணவீக்கம் என இரட்டை நெருக்கடியை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. எந்தத் திட்டமிடலும் இன்றி இயற்கை விவசாயத்திற்கு மாறுமாறு பிரதமர் விடுத்த வேண்டுகோள் மிக ஆபத்தானது. இது 2022-இல் இலங்கையில் ஏற்பட்டதைப் போன்ற உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கலாம்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தித் துறையின் பங்கு 13 சதவீதம் வரை சரிந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் அதலபாதாளத்தில் உள்ளது. 1983-இல் உற்பத்தித் துறையில் இருந்த இளைஞர்களின் விகிதத்தோடு ஒப்பிடுகையில் (15%), 2023-இல் அது வெறும் 15.8 சதவீதமாக மட்டுமே உயர்ந்துள்ளது.
சோசலிசமே மாற்று
சீனா, வியட்நாம் போன்ற சோசலிச நாடுகள் உற்பத்தித் துறையை வலுப்படுத்தியதன் மூலமே லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கின. ஆனால், மோடி தலைமையிலான இந்தியாவோ ‘வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியை’ (Jobless Growth) நோக்கிச் செல்கிறது. உற்பத்தித்துறை நலிவடைந்து, அந்நியச் செலாவணி கரைந்து, கடன் சுமை அதிகரிக்கும் இன்றைய சூழலில், முதலாளித்துவப் பொருளாதார முறையின் தோல்வி தெளிவாகத் தெரிகிறது. சோசலிசத்தைத் தவிர, மாற்று என்று மக்கள் முன் வைக்கப்படும் அனைத்தும் ஏமாற்றமாகவே முடியும்.
தற்போதைய நெருக்கடி தீவிரமானால், அது ஏழை எளிய மக்களைப் பெரும் பேரழிவுக்குள் தள்ளும். எனவே, இந்த ஆபத்தான பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து அணிதிரள்வதும், மாற்றுப் பொருளாதாரப் பாதையை நோக்கிச் சிந்திப்பதும் இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
-சேது சிவன்
இந்த கட்டுரை முதலில் தீக்கதிர் பத்திரிகையில் மே, 16,2026 அன்று வெளியானது.