Tamil Marx

21 ஆம் நூற்றாண்டில் சீன சோசலிசம்

இனக்கல்வி சீனாவின் முன்னுரிமை-அ.பாக்கியம்

இனக்கல்வி சீனாவின் முன்னுரிமை-அ.பாக்கியம்
  • PublishedApril 1, 2026

உலகம் முழுவதும் பின்தங்கிய இனக்குழுக்களை வறுமையில் இருந்தும் சுரண்டலில் இருந்தும், மீட்பதற்கும், சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கும், பொதுவான திட்டங்கள் மட்டும் போதுமானதாக இல்லை. இன அடிப்படையில் பின்தங்கிய மக்களின் வறுமையை போக்குவதற்கும், சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கு கையாள வேண்டிய பிரதான ஒரு நடவடிக்கையாக கல்வி முறை தேவைப்பட்டது. இந்த கல்வி முறையை பின்தங்கிய இனக்குழுக்கள் எளிய முறையில் அணுகுவதற்கு வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குறிப்பாக இந்த மக்களுக்கு உயர்தர கல்வியை வழங்குவது மிக மிக அவசியமானதாகும்.

இதற்கான அணுகல்களை அதிகரிக்க வெவ்வேறு இனங்கள் உள்ள நாடுகளும், மாறுபட்ட பொருளாதார நிலைமைகளை உடைய நாடுகளும், கல்வி நிலைமைகளிலேயே ஏற்றத்தாழ்வான சூழல் இருக்கக்கூடிய நாடுகளிலும் இட ஒதுக்கீடு கொள்கை அல்லது முன்னுரிமை கொள்கைள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம்தான் பின்தங்கிய இன மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான அல்லது சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாக்க முடியும்.

ஒரு சமூகத்தின் வறுமை விகிதத்தையும், எதிர்காலத் திறனையும் அளவிடுவதற்கான மிக முக்கியமான குறிகாட்டிகளில் ஒன்றாக உயர்கல்வி அடைவு என்பது இருக்கிறது. இவை நீண்ட காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்க உறுதிப்படுத்தும் நடவடிக்கை 

சிறுபான்மைக மக்களுக்கான கல்வியை வழங்குவதற்கு முன்னுரிமை அல்லது இட ஒதுக்கீடு அடிப்படையில் இந்தியா உட்பட பல நாடுகளில் திட்டங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில் இன பாகுபாடுகள் மிகப் பெரும் அளவிற்கு இந்த நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் உருவானது. இவை மிகப் பெரும் அளவிற்கு இன பாகுபாடுகளையும், குரோதங்களையும் உருவாக்கிய பொழுது கல்வியில் முன்னுரிமை கொள்கைகள் வழங்குவதற்கான கட்டாய தேவை ஏற்பட்டது. 1950 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் பொதுப்பள்ளிகளில் நிலவிய மிக மோசமான இன பாகுபாடு என்பது அரசியல் அமைப்பிற்கு முரணானது என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதற்கும், சமத்துவ கல்வியை வழங்குவதற்கும் மிகப்பெரிய போராட்ட அலைகள் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்த போராட்ட அலைகளின் ஊடாக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் எழுந்தது.

இக்காலங்களில் அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கும் கருப்பின அமெரிக்கர்களுக்கும் இடையில் கல்வி அறிவைப் பெறுவதில் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. கருப்பின அமெரிக்கர்களில் 33 சதவீதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளி படிப்பை முடித்தவர்களாக இருந்தனர். அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்த வெள்ளை இனத்தவர்களில் 61 சதவீதம் பேர் உயர்நிலை பள்ளிப்பட்டத்தை பெற்றவர்களாக இருந்தார்கள். இந்தக் கல்வி பாகுபாடு மூலமாக பொருளாதாரத்திலும் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் நீடித்தது.

1960 ஆம் ஆண்டு கருப்பின ஆண்கள் வெள்ளை இன ஆண்கள் பெறக்கூடிய ஊதியத்தில் 58 சதவீதத்தை மட்டுமே பெற்றார்கள். இந்தப் பின்னணியில்தான் மக்கள் இனப்பாகுபாடுகளை எதிர்த்தும் சமத்துவத்திற்குமான போராட்டத்தை தொடங்கினார்கள். இதன் விளைவாக 1960 ஆம் ஆண்டு அனைத்து இனங்கள் பாலினங்கள் இனக்குழுக்கள் மதங்கள் மற்றும் தேசிய பின்னணியைச் சேர்ந்த மக்களுக்கு சமமான வாய்ப்பை கல்வியில் உறுதிப்படுத்துவதற்காக அபர்மேட்டிவ் ஆக்சன் என்ற அதாவது உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் திட்டங்களை முன் வைத்தார்கள். இந்த ஆஃபர்மேட்டிவ் ஆக்சன் வழிகாட்டல் அடிப்படையில் கருப்பர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறைகளை அமலாக்கினார்கள்.

சீனாவின் கல்வி முன்னுரிமை கொள்கை

சீனாவும் பல இனங்களைக் கொண்ட நாடாகும் இங்கு பல்வேறு இன குழுக்கள் இடையே கல்வி மற்றும் பொருளாதார நிலைமைகளில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் இருந்தது. அமெரிக்காவில் இருந்த அல்லது கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளுக்கு மாறாக சீனாவில் சிறுபான்மையினருக்கான கல்வி முன்னுரிமை கொள்கை கடைபிடிக்கப்பட்டது. 1949 ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட காலத்திலிருந்து கல்வி முன்னுரிமை கொள்கைகளை உருவாக்க ஆரம்பித்தார்கள்.அமெரிக்காவைப் போல போராட்டங்களின் காரணமாக உருவாக்கப்பட்டது அல்ல. மாறாக சீன கம்யூனிஸ்ட் கட்சி சோசலிச இலக்கை அடைவதற்கு இந்தத் திட்டத்தை இயற்றினார்கள் . 1950 ஆம் ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் இருந்த இனச் சிறுபான்மையினரில் 80 சதவீதத்திற்கு மேல் எழுத்தறிவற்றவர்களாக இருந்ததினால், இந்த பிராந்தியங்களுக்கு கல்வி வளர்ச்சியில் ஒரு முன்னுரிமை என்பது உடனடி தேவையாக இருந்தது. ஏற்றத்தாழ்வை போக்கிட கல்வி என்பது மிக அத்தியாவசியம் என கருதினார்கள்.

சீன மக்கள் குடியரசின் கல்வி முன்னுரிமை கொள்கை பல கட்டங்களில் வளர்ச்சி அடைந்தது மேலும் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. 1950 இல் முதல் கட்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு 1953 மற்றும் 1962 ஆம் ஆண்டு காலகட்டங்களில் செழுமைப்படுத்தப்பட்டது. மீண்டும் கலாச்சார புரட்சி காலத்தில் முன்னுரிமை கல்வி கொள்கை பின்னுக்குத் தள்ளப்பட்டன.

1978 ஆம் ஆண்டு முதல் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொண்ட பொழுது கல்வி முன்னுரிமை கொள்கை முன்னெடுக்கப்பட்டு 1980, 2004 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் பல்வேறு மாற்றங்களுடன் செழுமைபடுத்தப்பட்டு அமலாக்கப்பட்டது. 1950 ஆம் ஆண்டு “இனச் சிறுபான்மை சகோதர சகோதரிகள்” என்ற திட்டத்தில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

1953 ஆம் ஆண்டு ஒரே மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் இன சிறுபான்மை மாணவர்களுக்கு உயர்கல்வியில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு சேர்க்கப்பட்டார்கள். 1962 ஆம் ஆண்டு பெரும்பான்மை இனமாக இருந்த ஹான் இன மாணவர்களை விட சிறுபான்மை மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தாலும் கல்வி நிலைய சேர்க்கைகளில் சிறுபான்மை இன மாணவர்களுக்கு தேவைக்கு ஏற்ற வகையில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.

1978 மற்றும் 80 ஆம் ஆண்டுகளிலும் 2004 ஆம் ஆண்டுகளிலும் இனச் சிறுபான்மை மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்காக ஒவ்வொருவருக்கும் 20 புள்ளிகள் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு போட்டித் தேர்வுகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இதுபோன்ற நடவடிக்கை சீனாவில் இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியை மேம்படுத்துவதில் முன்னுரிமை கொள்கை மிக முக்கியமான பங்காற்றியது. இதன் மூலம் மக்கள் பெரும் பயனடைந்தார்கள் என்று ஆய்வுகள் நிரூபிக்கிறது. இந்த முன்னுரிமை கொள்கை நோக்கம் என்பது உயர்கல்வியில் சிறுபான்மை மக்களை அதிகரிக்கவும், அதே நேரத்தில் வறுமையின் விகிதத்தை குறைக்கவும் இந்தக் கொள்கை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.

அமெரிக்காவில் நீடிக்கும் பாகுபாடு..

அமெரிக்காவில் இட ஒதுக்கீடு கொள்கை அமல்படுத்துவதற்கு முன்பாக 22 முதல் 28 வயது உடைய கருப்பின ஆண்களில் கல்லூரி படிப்பை முடித்தவர்கள் 3 சதவீதம் மட்டுமே. 1960 ஆம் ஆண்டுகளில் இட ஒதுக்கீடு கொள்கை அமலாக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை 5 சதவீதம் என்ற அளவில் தான் உயர்ந்து இருந்தது. அதன் பிறகு கருப்பின மக்களுக்கான கல்வி ஓரளவு முன்னேற்றம் கண்டது. இந்த இட ஒதுக்கீடு கொள்கை அமுலாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை படிப்படியாக அந்த நாட்டின் அரசும், நீதிமன்றமும் தடை செய்ய ஆரம்பித்தன. 1996 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணம் இந்த இட ஒதுக்கீடு கொள்கையை தடை செய்தது. 1998 இல் வாஷிங்டன் மாகாணமும், 1999 இல் ஃப்ளோரிடா, 2006 இல் மெக்சிகன் மாகாணம் என்று பல மாகாணங்கள் அடுத்தடுத்து தடைகளை உருவாக்கின. 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த தடைகளுக்கு 2023 ஆம் ஆண்டு அமெரிக்கா முழுவதும் தடைவிதிக்கப்பட்டது. இக்காலங்களில் சீனாவில் கல்வி முன்னுரிமை கொள்கை என்பது எந்தவித தளர்வும் இன்றி அமுல்படுத்தப்பட்டது.

அமெரிக்காவில் இட ஒதுக்கீடு தடை செய்யப்பட்ட பிறகு கருப்பின மாணவர்களின் கல்லூரி வருகை 35 சதவீதம் குறைந்தது. இதேபோன்று வெவ்வேறு வகையான உயர்நிலைக் கல்விகளை பொருத்தவரையில் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களிலும் இனப் பன்முகத்தன்மை வாய்ந்த மாணவர்களின் வருகை குறைந்தது. குறிப்பாக உயர்கல்விக்கான அணுகல்கள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அமெரிக்காவின் உயர்கல்வியில் கருப்பின மாணவர்களின் விகிதம் இக்காலகட்டங்களில் ஓரளவு அதிகமானாலும் அவர்கள் பின் தங்கிய நிலைமையிலே இருந்தார்கள். 2016 ஆம் ஆண்டு வெள்ளை இன வயது வந்தவர்களில் 47.1 சதவிகிதம் கல்லூரி பட்டங்களை பெற்றிருந்த நிலையில், கருப்பின மாணவர்களில் வயது வந்தவர்களில் 30.8 சதவீத மட்டுமே பட்டங்களைப் பெற்றிருந்தார்கள். அமெரிக்காவில் இட ஒதுக்கீடு கொள்கை சில மாற்றங்களை கொடுத்திருந்தாலும் முழுமையான முன்னேற்றம் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகின்றது.

தடையின்றி செயல்படும் முன்னுரிமை கொள்கை

அமெரிக்காவில் இட ஒதுக்கீடு கொள்கைகள் தடை செய்யப்பட்ட இக்காலகட்டத்தில் சீனாவில் கல்வி முன்னுரிமை கொள்கை முன்னிலும் துல்லியமாக கணக்கிடப்பட்டு தேவைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கப்பட்டு அமலாக்கப்பட்டது. 1977 ஆம் ஆண்டு தேசியக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளை மீண்டும் தொடங்கிய பொழுது இன சிறுபான்மையினருக்கு மதிப்பெண்களை சேர்க்கும் முறைகள் மிக விரிவான முறையில் அமல்படுத்தப்பட்டது. திபெத்தில் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு பெரும்பான்மை இனமான ஹான் தேசியஇன மாணவர்களுக்கு மதிப்பெண்கள் 400 என்று தீர்மானிக்கப்பட்டது. சிறுபான்மை மாணவர்களுக்கு 170 என்று தீர்மானிக்கப்பட்டது. மாகாணங்களுக்கு இடையிலான வேறுபட்ட நிலைமைகளுக்கு ஏற்ப இந்தக் கொள்கை நெகிழ்வுத்தன்மையுடன் கடைபிடிக்கப்பட்டது.

பொதுவாக சிறுபான்மை மாணவர்களுக்கு ஐந்து முதல் 20 புள்ளிகள் அதிகமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. சில மாகாணங்களில் 50 புள்ளிகள் வரை மதிப்பெண்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த நடவடிக்கைகள் பெரும்பான்மை இனமாக இருந்த ஹான் சீனர்கள் மத்தியில் மிகப்பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அவர்களிடம் சீன கம்யூனிஸ்ட் கட்சியும், அரசும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையில் பிரச்சாரங்களை செய்து நிலைமையில் சரி படுத்தினார்கள். சில பிரதேசங்களில் மதிப்பெண் சேர்க்கும் முறைகளை ரத்து செய்வதற்கான முயற்சியில் சில பிராந்திய அரசுகள் முயற்சி செய்த பொழுது அவற்றை தலையிட்டு சரி செய்தார்கள்.

இந்த மதிப்பெண் சேர்க்கும் முறையால் இன சிறுபான்மை மாணவர்களின் கல்வி அறிவு உயர்ந்தது. 1982 மற்றும் 1990ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எட்டுக்கும் மேற்பட்ட இனச் சிறுபான்மை மாகாணங்களில் இருந்த பட்டதாரிகளுடைய எண்ணிக்கை 120.70 சதவீதமாக அதிகரித்தது. இதே காலத்தில் இனச் சிறுபான்மையினரின் வயது வந்தோரின் எழுத்தறிவின்மை 1982ல் 44.45 சதவீதத்திலிருந்து 1990 இல் 30.81% அளவிற்கு குறைந்தது. இதன் மூலமாக ஹான் தேசிய இனத்திற்கும் சிறுபான்மை தேசிய இனங்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் பெருமளவு குறைந்தது. இந்த முறைகள் இனச் சிறுபான்மை மக்கள் மத்தியில் கல்வியிலும் இதர வளர்ச்சியிலும் ஒரு நேரடி முன்னேற்றத்தை பெருமளவு ஏற்படுத்தியது.

சீனாவிலும் அமெரிக்காவிலும் அமல்படுத்தப்பட்ட இன சிறுபான்மை மக்களுக்கான கல்வி கொள்கைகளை பகுத்தாய்வு செய்து பல முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் கருப்பின மக்களுக்கும் வெள்ளை இன மக்களுக்கும் இடையிலான தற்போதைய கல்வி ஏற்றத்தாழ்வுகள் என்பது, சீனாவில் ஹான் இன பெரும்பான்மை மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் இடையிலான கல்வி ஏற்றத்தாழ்வுகளை விட பல மடங்கு அதிகமாக உள்ளது என்று தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கல்வி ஏற்றத்தாழ்வுகள் மட்டுமல்ல பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் இங்கே அதிகமாக இருப்பதாக தரவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

வெள்ளை இனத்தவர்களிலேயே வசதியானவர்களுக்கும் ஏழைகளுக்கு இடையிலான கல்வி ஏற்றத்தாழ்வுகள் அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறது. சீனாவில் இந்த ஏற்றத்தாழ்வுகள் மிக மிக குறைவாக இருப்பதையும் தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இன்னும் குறிப்பாக கணக்கில் எடுக்க வேண்டியவை, சில இனச் சிறுபான்மை பிரதேசங்களில் இனச் சிறுபான்மை மக்களுக்கும் ஹான் பெரும்பான்மை மக்களுக்குமான வருமான வேறுபாடுகள் சமமான நிலையில் இருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. சிறுபான்மை இன இளைஞர்கள் கல்வியின் மூலமாக பெற்ற திறமையினால் அதிக வளர்ச்சி அடைந்த பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து அங்கு வருமானத்தை ஈட்டுவது மூலமாக மற்ற இனத்திற்கு சமமான அளவில் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளார்கள். வேலைவாய்ப்பிலும் இனச் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடுகள் அமெரிக்காவை போன்று குறிப்பிடக்கூடிய அளவிற்கு எதுவும் இல்லை. இனச் சிறுபான்மை மாணவர்கள் தங்கள் தாய் மொழியை கற்று உயர் கல்விக்கு வருகிற பொழுது மாண்டரின் மொழியும் கற்றுக் கொள்வதற்கான மிகப்பெரிய ஆதரவை அரசு வழங்கி இருந்ததனால் இனச்சிறுபான்மையினருக்கு தங்கு தடை இல்லாமல் வேலை வாய்ப்புகளை பெற முடிகிறது. வேலைவாய்ப்பு பெறுவதில் இன ரீதியிலான வேறுபாடுகள் இல்லாத நிலைமை உள்ளது. இவை இனச் சிறுபான்மையினரின் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாகும்.

அமெரிக்காவில் கருப்பின மக்களுடன் ஒப்பிடும் பொழுது இந்த பாகுபாடு இன்றும் பெருமளவு நீடிக்கிறது. சீனாவில் இனச் சிறுபான்மையினர் பொருளாதார நிலைமையும், கல்வியும் பல ஆண்டுகளாக வியத்தகு முறையில் மேம்பட்டு உள்ள அதே சமயத்தில், அமெரிக்க கருப்பர்களின் கல்வி மற்றும் பொருளாதார இரண்டிலும் ஒப்பிட்டு அளவில் மிகவும் பின்தங்கி உள்ளனர். சீனாவில் இப்பொழுதும் கல்வி முன்னுரிமை கொள்கை வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு கொள்கை தடை செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் போன்று இந்தியாவிலும் இட ஒதுக்கிடை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியில் வகுப்புவாத உயர்சாதி ஆதிக்க சக்திகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அ.பாக்கியம்

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *