காலிப் பணியிடங்களும் பாஜகவின் மௌனமும்! – சுதிர்
ஒன்றிய அரசின் மிக உயரிய அதிகாரப் பதவிகளான ஐ.ஏ.எஸ் (IAS), ஐ.பி.எஸ் (IPS) மற்றும் இந்திய வனப்பணி (IFoS) ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்துள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒட்டுமொத்தமாக இந்த மூன்று முக்கிய பிரிவுகளில் மட்டும் சுமார் 2,834 உயர்மட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இந்த தரவுகளை பார்க்கும் போது “அனைவருக்குமான வளர்ச்சி” (Sabka Saath, Sabka Vikas) என்று முழங்கும் பாஜக அரசு, நாட்டின் நிர்வாகத் தூண்களை வலுப்படுத்துவதில் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது.
இந்திய ஆட்சிப் பணியில் (IAS) மட்டும் சுமார் 1,300 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது, அனுமதிக்கப்பட்ட 6,877 இடங்களில் சுமார் 20% இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
அதேபோல், நாட்டின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐ.பி.எஸ் பிரிவில் 505 இடங்களும், வனப்பணிகளில் 1,029 இடங்களும் காலியாக உள்ளன.
ஒரு நாட்டின் நிர்வாகம் சீராக நடைபெற வேண்டுமானால், அங்கு போதிய எண்ணிக்கையில் அதிகாரிகள் இருக்க வேண்டும். ஆனால், இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் காலிப்பணியிடங்களை வைத்துக் கொண்டு, அரசு எப்படித் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறது? கூடுதல் சுமையுடன் பணியாற்றும் அதிகாரிகளால் தரம் வாய்ந்த சேவையை வழங்க முடியுமா?.
2012 முதல் ஆண்டுக்கு 180 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மட்டுமே தேர்வு செய்யப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். இந்தியாவின் மக்கள் தொகையும், தேவைகளும் பெருகி வரும் நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்னால் நிர்ணயிக்கப்பட்ட அதே எண்ணிக்கையிலேயே இன்றும் அதிகாரிகளைத் தேர்வு செய்வது காலத்திற்கு பொருந்தாத நடைமுறை. இது இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிப்பது மட்டுமல்லாமல், அரசு நிர்வாக இயக்கத்தை முடக்கும் செயலாகவும் பார்க்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இடஒதுக்கீடு பிரிவினரின் (OBC, SC, ST) நியமனங்கள் குறித்த புள்ளிவிவரங்களையும் அரசு வழங்கியுள்ளது. ஆனால், ‘பேக்லாக்’ (Backlog) காலிப்பணியிடங்கள் ஏதுமில்லை என்று அரசு கூறுவது ஆச்சரியத்தை அளிக்கிறது. உண்மையில் கள நிலவரப்படி, பல உயர்மட்டப் பதவிகளில் விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே இருக்கின்றன.
உண்மையிலேயே இடஒதுக்கீடு முறையான விகிதாச்சாரத்தில் பின்பற்றப்படுகிறதா? அல்லது காலிப்பணியிடங்களைக் கணக்கிடுவதில் ஏதேனும் தந்திரங்கள் கையாளப்படுகிறதா? என்ற கேள்விகள் எழுகின்றன.
“குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம்” (Minimum Government, Maximum Governance) என்பது பாஜகவின் தாரக மந்திரம். ஆனால், நிர்வாகத்திற்குத் தேவையான அதிகாரிகளையே நியமிக்காமல் இருப்பது ‘நிர்வாகமின்மைக்கு’ (No Governance) வழிவகுக்காதா? தனியார்மயமாக்கலை நோக்கி அரசு வேகமாக நகர்வதால், திட்டமிட்டே அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பைக் குறைக்கிறதா என்ற ஐயமும் எழுகிறது.
வெறும் டிஜிட்டல் இந்தியா என்றும், வல்லரசு என்றும் மேடைக்கு மேடை முழக்கமிடுவதால் மட்டும் நாடு முன்னேறிவிடாது. நாட்டின் நிர்வாகத்தை இயக்கம் அதிகாரிகளைச் சரியான நேரத்தில், சரியான எண்ணிக்கையில் நியமிக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை.
காலிப்பணியிடங்களை நிரப்பாமல் நிர்வாகத் திறனைப் பற்றிப் பேசுவது வெறும் கண்துடைப்பு நாடகமே அன்றி வேறில்லை. இந்த 2,800க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்குப் பாஜக அரசு சொல்லப்போகும் பதில் என்ன?
– சுதிர்