Tamil Marx

இந்தியா

பினராயி விஜயன் நேர்காணல்

பினராயி விஜயன் நேர்காணல்
  • PublishedMarch 24, 2026

இந்தியாவில் இடதுசாரிகள் ஆளுகின்ற ஒரே மாநிலமான கேரளாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கின்றது. மூன்றாவது முறையாக வெற்றியை நோக்கி நகருவோம் என சிபிஎம் தெரிவித்திருக்கின்றது. கடந்த பத்து ஆண்டுகளில் கேரளத்தை வளர்ச்சி பாதையில் செலுத்தியிருப்பதாகவே இந்த தேர்தலை இடதுசாரிகள் சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் ‘தி கியூ’ (The Cue) டிஜிட்டல் ஊடகத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன்எ அளித்த பேட்டியின் தமிழாக்கம்:

நெறியாளர் (மணீஷ் நாராயணன்): ஏ.கே.ஜி, சுசீலா கோபாலன் மற்றும் ரைரு நாயர் போன்ற மூத்த தலைவர்களுடனான உங்களின் ஆரம்பகால பயணங்கள் பற்றி கூறுங்கள். 

முதல்வர் பினராயி விஜயன்: ஏ.கே.ஜி. போன்ற தலைவர்கள் ஒரு பாதுகாவலர் போல செயல்பட்டனர்; எனது ஆரம்ப காலங்களில் அவர்கள் என் மீது அதிக பாசமும் அக்கறையும் காட்டினார்கள்.

நெறியாளர்: தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் மக்களின் வரவேற்பு எப்படி உள்ளது? 

முதல்வர்: மக்களிடம் எவ்வித அதிருப்தியும் இல்லை, அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் அன்போடும் என்னை வரவேற்கிறார்கள். குறிப்பாக சிறு குழந்தைகள் அதிக உற்சாகத்துடன் என்னை அணுகி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

நெறியாளர்: கே-ரயில் (K-Rail/SilverLine) திட்டம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் பற்றி?

முதல்வர்: அதிவேகமான பயணத்திற்கு கே-ரயில் திட்டம் அவசியமானது, ஆனால் அரசியல் காரணங்களுக்காகவே மத்திய அரசு அதற்கு அனுமதி மறுத்தது மாநிலத்திற்கு ஏற்பட்ட பெரும் இழப்பாகும். தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் கையகப்படுத்திய போது, சந்தை மதிப்பை விட கூடுதலான இழப்பீட்டை வழங்கி மக்களின் முழு நம்பிக்கையை அரசு பெற்றுள்ளது.

நெறியாளர்: முன்பு மின்சாரத்துறை அமைச்சராக நீங்கள் இருந்த நிர்வாக அனுபவம் இப்போது உதவுகிறதா? 

முதல்வர்: ஆம், அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் சரியாக ஊக்குவித்தால் அவர்களால் குறித்த காலத்திற்கு முன்பே திட்டங்களை முடிக்க முடியும் என்பதை நல்லளம் திட்டத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டேன்.

நெறியாளர்: ‘லைஃப் மிஷன்’ மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள் உருவான விதம் என்ன? 

முதல்வர்: வீடுகள் வேண்டி பல மனுக்கள் வருவதைக் கண்டு, வீடுகட்டும் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து 4 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன் ‘லைஃப் மிஷனை’ உருவாக்கினோம்; இதுவரை 5 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இதேபோல, தீவிர வறுமையில் வாடும் 64,006 குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களை வறுமையிலிருந்து முழுமையாக மீட்டுள்ளோம்.

நெறியாளர்: முதலீட்டாளர்களுக்கு உகந்த மாநிலமாக கேரளா எப்படி மாறியது? 

முதல்வர்: கேரளாவில் தொழிற்சங்கங்களால் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன என்ற தவறான பிம்பம் இருந்தது, ஆனால் முதலீட்டாளர்களிடம் பேசியபோது அது உண்மையில்லை எனத் தெரிந்தது. அந்த நிலையை மாற்றி, 7 சட்டங்கள் மற்றும் 10 விதிகளைத் திருத்தி, ஒற்றைச்சாளர முறையை அறிமுகப்படுத்தினோம். இதனால் கொச்சியில் நடந்த மாநாட்டில் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

நெறியாளர்: உள்ளாட்சித் தேர்தல்களில் ஏற்பட்ட பின்னடைவு ஆட்சிக்கெதிரான மனநிலையைக் காட்டுகிறதா? 

முதல்வர்: உள்ளாட்சித் தேர்தல்கள் உள்ளூர் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை; அதே சமயம் நாடாளுமன்றத் தேர்தல்கள் தேசிய அரசியலைச் சார்ந்தவை, எனவே இதை மாநில ஆட்சிக்கெதிரான மனநிலையாகக் கருத முடியாது.

நெறியாளர்: ‘தி கேரளா ஸ்டோரி’ போன்ற வெறுப்புப் பிரச்சாரங்கள் மற்றும் மத்திய அரசின் அணுகுமுறை பற்றி? 

முதல்வர்: 2018 பெருவெள்ளத்தின் போது குஜராத்திற்கு உதவியது போல நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கேரளாவிற்கு உதவவில்லை; வெளிநாடுகள் வழங்க முன்வந்த நிதியுதவியையும் தடுத்தது. மேலும், மாநிலத்திற்கான வரிப்பகிர்வைக் குறைத்தும், கடன் வாங்குவதைத் தடுத்தும் மத்திய அரசு தொடர்ந்து பொருளாதார ரீதியாக நம்மை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது.

நெறியாளர்: கேரளாவில் பாஜகவின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? 

முதல்வர்: கேரளா மதச்சார்பின்மையின் விளைநிலம், அதனால் பாஜக இங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. கடந்த 10 ஆண்டுகளில் கேரளாவில் எந்தவொரு மதக் கலவரமும் நடைபெறவில்லை; இதனால் முதலீட்டாளர்களும் சிறுபான்மையினரும் இங்கு மிகவும் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

நெறியாளர்: வேலைவாய்ப்பிற்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்க என்ன செய்கிறீர்கள்? 

முதல்வர்: அது உண்மைதான்; இதை சரிசெய்ய உயர்கல்வித் துறையை மேம்படுத்த 6000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். 4 வருட பட்டப்படிப்புகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த 13 சிறப்பு மையங்களை (Centers of Excellence) உருவாக்கி, மாணவர்களின் திறனை வளர்த்து சர்வதேச நிறுவனங்களை ஈர்க்கும் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

நெறியாளர்: பெருவெள்ளம் மற்றும் கொரோனா பேரிடர் காலங்களை எப்படி கையாண்டீர்கள்? 

முதல்வர்: அது முன் அனுபவம் இல்லாத பேரிடர் காலங்கள்; எனினும் மக்களுக்கான நமது கடமையை உறுதியோடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் செயல்பட்டோம்.

நெறியாளர்: தகவல் தொழில்நுட்பத் துறையின் (IT) வளர்ச்சி எப்படி உள்ளது? 

முதல்வர்: நமது ஐடி துறையின் ஏற்றுமதி ஒரு லட்சம் கோடியை நெருங்கியுள்ளது; மேலும் ஆசியாவிலேயே ஸ்டார்ட்-அப் (Start-ups) நிறுவனங்களுக்கான மிகச் சிறந்த இடமாக கேரளா உருவெடுத்துள்ளது.

நெறியாளர்: கேரளாவின் எதிர்காலத்திற்கான ‘விஷன் 2031’ (Vision 2031) இலக்கு என்ன? 

முதல்வர்: நடுத்தர வருமானம் கொண்ட வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, கேரள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.

நெறியாளர்: ஜி. சுதாகரன் போன்ற மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறுவது பற்றி? 

முதல்வர்: கட்சி என்பது ஒரு தாய் போன்றது; ஒரு தலைவரை வளர்ப்பதில் கட்சிக்குப் பெரும் பங்குண்டு. நாடாளுமன்றப் பதவியாசைகளுக்காக கட்சியை விட்டுச் செல்வது துரதிர்ஷ்டவசமானது, இவர்களால் கட்சிக்கு எந்த பாதிப்பும் வராது. அதனை எதிர்கொள்ளும் வலிமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உண்டு.

நெறியாளர்: சிபிஐ(எம்) கட்சியில் உங்களின் தனிநபர் ஆதிக்கம் (One-man show) உள்ளதாக வரும் விமர்சனங்கள் குறித்து? 

முதல்வர்: இது கட்சியை அழிக்க நினைப்பவர்களின் விமர்சனம். எங்கள் கட்சியில் தனிநபர் ஆதிக்கம் ஏதுமில்லை; அனைத்து முடிவுகளும் கூட்டாகவே விவாதிக்கப்பட்டு எடுக்கப்படுகின்றன, எவரும் கட்சிக்கு மேலானவர்கள் அல்ல.

நெறியாளர்: இறுதியாக, உங்கள் சொந்த ஊரான ‘பினராயி’ உடனான உங்கள் உணர்வுபூர்வமான பிணைப்பு பற்றி? 

முதல்வர்: எவருக்கும் தனது சொந்த ஊரின் மீதும், அந்த மண்ணின் மீதும் இயல்பாகவே ஒரு உணர்வுபூர்வமான பிணைப்பும் பாசமும் இருப்பது சகஜமான ஒன்றுதான்.

 

Edited by  சைலஸ் அருள் ராஜ்

Written By
sylasarulraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *