காதலிக்க நேரமில்லை-ஹிஷாம்
அன்பு ஒரு உணர்ச்சி மட்டுமல்ல; அது ஒரு செயல், மனித உணர்வின் தொடர்ச்சியான போராட்டம். “ஒரு உண்மையான புரட்சியாளன் அன்பெனும் பேருணர்ச்சியால் வழி நடத்தப்படுகிறான்” என்கிறார் தோழர் சே குவேரா, அதற்கு காரணம் இருக்கிறது.
காதல் என்பது தனிமனிதனைச் சார்ந்தது அல்ல; அது சமூக சார்ந்தது. சரியாகச் சொன்னால் அது அரசியல் சார்ந்தது என்கிறது இன்றைய நவீன உலகம். இன்றைய ஊடகங்கள் காதலை ஒரு கனவுலகமாகவும், சமூக ஊடகங்களில் அழகிய படமாகவும் சித்தரிக்கின்றன.
ஆனால் இதற்கு ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை முன்வைக்கிறார் பேராசிரியர் அலெயின் படியூ. காதல் உண்மையில் உழைப்பின் அங்கமாக உள்ளது. அது சமூகத்தால் அதிக சவால்களை எதிர்கொள்கிறது என்கிறார் படியூ. அன்பு சோதிக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு… சிரித்தபடி “ஆம், உண்மை; ஆனால் தைரியத்துடன், நிலைத்தன்மையுடன் அதை எதிர்கொள்ளும் சூழலும் உள்ளது” என்கிறார் படியூ.
காதல் — ஒரு அரசியல் போராட்டம்
காதலும் அரசியலும் சமூக ஈடுபாட்டின் இரண்டு பெரிய வடிவங்கள். அரசியல் கூட்டமைப்போடு செயல்படுவது என்றால்; காதல் இரண்டு பேருடன் தொடங்குகிறது. அதனால் காதல் கம்யூனிசத்தின் சிறிய வடிவம் தான் என்கிறார் அலெயின் படியூ.
காதல் எப்போதுமே எளிதான விசயம் அல்ல. சாதி ரீதியாக, பொருளாதார ரீதியாக, மத ரீதியாக நிறைய ஏற்றத்தாழ்வுகள் கொண்ட ஒரு சமுதாயத்தில் உள்ள சமூக அழுத்தங்கள், புரிதலின்மை போன்றவை காதல் உறவுகளைத் தொடர்ந்து சோதிக்கின்றன.
வரலாற்றிலிருந்து லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட், ஹீர் ரஞ்சா என காதல் ரசம் சொட்ட சொட்ட பேசப்பட்ட எல்லா கதைகளும் அரசியல் உரையாடல்களே. 2022 ஆம் ஆண்டின் தேசிய குற்றப்பதிவு (NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் ஆண்டுக்கு குறைந்தது 25–30 ஆணவக் கொலைகள் நாடர்ந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இது பதிவு செய்யப்பட்டவைதான் ஆணவப்படுகொலையாகவும், ஏன் கொலையாகக்கூட பதிவு செய்யப்படாமல் விடப்பட்ட பல சம்பவங்கள் அப்படியே மறைந்து விடுகின்றன.
தற்போது பாஜக ஆரம்பித்துள்ள “Love Jihad” என்ற அரசியல் பிரசாரம் மதங்களுக்கு இடையில் ஏற்கனவே உள்ள நல்ல உறவுகளை வெறுப்பு நிறைந்ததாக மாற்றி, காதலையும் மனிதர்களையும் திட்டமிட்ட வகையில் பிரித்து வைக்கிறது. இதை எதிர்கொள்ள தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் பல ஆண்டுகளாக சாதி மதம் கடந்த திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இது காதலுக்கும் அரசியல் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்பதை உறுதிப்படுத்துகிறது.
காதலின் சமூக பாத்திரம்
Love is a Encounter -காதல் ஒரு சந்திப்பு என்று படியு தொடங்குகிறார்…
சந்திப்பு ஒரு தனிமனிதனுக்குத் அவனுக்குள் விதைக்கப்பட்டதை வெளிப்படுத்துகிறது. அது மக்களைத் தங்களுக்குள் மீண்டும் அவர்களையே அறிமுகப்படுத்துகிறது.
அலெயின் படியூ காதலை “ஒரு உறுதிப்பாடான சாகசம்” (tenacious adventure) என்று வரையறுக்கிறார்:
சரிதானே? பின்ன காதல் பண்றதுன்னா சும்மாவா ? காதலை சொல்வதில் துவங்கி, வீட்டிற்கு தெரிந்து விடாமல் விடிய விடிய பேசுவது, காதல் துணையுடன் ஊர் சுற்றிப்பார்க்கச் செல்வது, இறுதியாக கல்யாணம் செய்து வாழ்க்கை யை துவங்குவதில் தான் எவ்வளவு எவ்வளவு சாகசங்களை நாம் பார்த்துள்ளோம். இந்த சாதி மத எதிர்ப்புகளை கடந்து நண்பர்களின் துணையுடன் நடக்கும் காதல் திருமணங்களின் சாகசம் இந்தியா முழுவதும் உள்ளது.
சாகசம் எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு இன்றைய சூழலில் காதலின் மீதான நிலைத்தன்மையும் அவசியம். இந்த நிலைத்தன்மைதான் காதலை உண்மையான போராட்டமாக மாற்றுகிறது.”
தம் காதல் துணை மீதான அன்பு வெறும் வார்த்தைகளாக மட்டுமே இல்லாமல்; பரஸ்பரம் கேள்வி கேட்டு, புரிந்துகொண்டு, ஒன்றாக வளர்வதே காதலின் அடித்தளமாக உள்ளது என்கிறார். வெறும் வார்த்தைகளுக்குப் பதிலாக, யதார்த்தத்திலிருந்து காதலை அணுகலாம் என்கிறார் அலெயின் படியூ.
” Perfect couple” எனும் மாயை
இன்றைய முதலாளித்துவ சமூகத்தால் “Perfect couple” எனும் மாயை விலைப்பொருளாக மக்களிடம் திணிக்கப்படுகிறது. உண்மையில் அப்படி ஒரு முழுமையான உறவு இருக்க முடியுமா??. அப்படி ஒன்று இருந்தால், அது இந்தசமூகம் முன்வைக்கும் ஒடுக்குமுறைகளை ஏற்றுக்கொண்டு அதற்கு சேவை செய்யும் உறவாகவே நீடிக்க முடியும். ஆனால் எதார்த்தம் அப்படி அல்ல.
உறவுகள் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்ளும்போது முரண்பாடுகளும் சிக்கல்களும் எழுகின்றன. அந்த சிக்கல்களில் தீர்வுகளைக் காண்பதே வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்தும் பயணம். சண்டைகள், கோபங்கள், கருத்து வேறுபாடுகள் போன்ற மோதல்கள் இருவரையும் பரிணமிக்க வைக்கிறது, அவைதான் அந்த உறவை ஒரு முற்போக்கான சமூக அமைப்பை நோக்கி எடுத்துச் செல்லும் என்கிறார்.
இப்படி வாய்ப்புகள் இருந்தாலும், இன்றைய இளைஞர்களிடம் டேட்டிங் செயலிகள், ரிலேசஷிப் கோச், உறவு வழிகாட்டிகள் அனைத்தும் சந்தை சமூகத்தின் கலாச்சார விதிமுறைகளுக்கு ஏற்ப உறவை முன்மொழிகின்றன. துரதிர்ஷ்டவசமாக காதல் இன்றைய நவீன சந்தையின் தாக்கத்தை மறுக்கிறது என்கிறார் அலெயின் படியு. இந்த பாதுகாப்பு அமைப்பு, சமூக அந்தஸ்து, வயது, பின்னணி மற்றும் அடையாளத்துடன் மக்களை ஒரே வட்டத்திற்குள் வைத்திருக்க விரும்புகிறது. டேட்டிங் மற்றும் காதலில் கூட அவர்கள் சாதி, வர்க்கம், இனம் மற்றும் பாலினத்தைத் தாண்டிச் செல்வதில்லை, ஏனென்றால் மக்கள் தங்கள் அந்தஸ்தையும் இந்த அமைப்பையும் கேள்விக்குள்ளாக்கினால் அவர்கள் பயப்படுகிறார்கள்.
நேரத்தை திருடும் முதலாளித்துவ சமூம்
இந்தியா உட்பட முதலாளித்துவ ஆட்சி முறை உள்ள நாடுகளில் மனிதனிடமிருந்து பணத்தை மட்டும் அல்ல நேரமும் திருடப்படுகிறது. வேலை நேர எல்லைகள் கடந்து “flexibility” , O.T, பிரீலான்சிங் , வேலை இல்லாதவர்களுக்கு வேலை தேடுவது என அனைத்தும் மனிதனின் ஓய்வு நேரத்தையே வேலை (உற்பத்தி) நேரமாக மாற்றுகின்றன.
அதன் விளைவாக, வேலை மட்டும் அல்ல, வாழ்க்கையே இந்த முதலாளித்துவ சந்தையின் கட்டுப்பாட்டுக்குள் இழுக்கப்படுகிறது. இந்த தொடர்ச்சியான ஓட்டத்துக்குள் தள்ளப்பட்ட மனித சமூகம், பொறுமையோடு தன்னைப் பற்றி சிந்திக்கவோ நிதானிக்கவோ நேரமின்றி இருக்கிறது. இதனால் அன்பு, பாசம் போன்ற உணர்வுகளை வெறும் வேடிக்கையான விசயம் என எண்ணும் சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள்.
புதிய சவால்கள்
முதலாளித்துவ சமூகத்தின் இந்த அழுத்தம் ஒரு மனிதனின் குடும்ப வாழ்க்கையையும், குழந்தைகளின் உணர்ச்சி வளர்ச்சியையும் ஆழமாக பாதிக்கிறது. குழந்தைப் பருவத்தில் உருவாகும் பிணைப்புகளே, வாழ்க்கை முழுவதும் உறவுகளை நிர்ணயிக்கும் அடித்தளமாகின்றன என உளவியல் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களுக்கு அன்பும் வழங்கும்போது தான் அக்குழந்தைகள் உறவுகளில் நம்பிக்கையுடனும், உணர்வுகளை வெளிப்படுத்துவதில் திறமையாகவும் வளர்கின்றனர். இது இன்று அரிதாகிவிட்டது.
பெற்றோர்களுக்கு தற்போது உருவாகி உள்ள அதிக வேலை pressure காரணமாக அவர்களது உணர்ச்சிகளை மறைக்கும்போது, குழந்தைகளும் தனிமையைத் தேர்வு செய்து, உணர்வுகளை மறைக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள். இதனால் எதிர்காலத்தில் மற்றவர்களை நம்புவது அல்லது அவர்களுடன் நெருக்கத்துடன் பயணம் செய்வது அவர்களுக்கு மிகவும் கடினமானதாக மாறுகிறது. இது அவர்களின் எதிர்கால சமூக உறவுகளையும் குடும்ப வாழ்க்கையையும் மிகவும் பாதிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்றைய இளைஞர்கள் திருமணம் மற்றும் காதல் உறவுகளில், பதட்டம் (Anxiety),தவிர்த்தல் (Avoidance), சுய வெறுப்பு, (Low esteem) தன்னம்பிக்கை இல்லாமை, தனிமைப்படுத்தப்பட்ட பயம் என உளவியல் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இந்த முதலாளித்துவ அமைப்பு இளைஞர்கள் தங்கள் உணர்வுகள், அந்தரங்கம், பலவீனம் ஆகியவற்றை தங்கள் துணையிடம் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ள பயப்படும் ஒரு இறுக்கமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
திட்டமிட்ட ஒவ்வாமை
காதலைச் சுற்றி புனிதத்தை உருவாக்குவது ஆபத்தானது தான் என்றாலும், காதலைச் சுற்றி உருவாகும் ஒவ்வாமை அதை விட ஆபத்தானது. அன்பின் மீது திட்டமிட்ட ஒவ்வாமை கட்டமைக்கப்படுகிறது. அதற்கு “பகுத்தறிவு” என்ற சாயம் பூசப்படுகிறது. ஹஸ்டில் கலாச்சாரம் (Hustle Culture) என்ற பெயரில் உணர்வுகளும் உணர்ச்சிகளும் அதீத பகுத்தறிவின் சோதனையில் “பலவீனம்” போலத் தோன்றும் வகையில் மாற்றப்படுகின்றன.
ஆனால் மனித உறவுகள் வெறும் தர்க்கத்தால் மட்டும் இயங்குவதில்லை. அவை பரிவு, உணர்ச்சி, விழிப்புணர்வு ஆகியவற்றின் மீது தான் நிலைக்கின்றன. இதை சமநிலைப்படுத்துவதற்கான திறன்தான் உணர்வியல் விழிப்புணர்வு (அ ) உணர்வுசார் நுண்ணறிவு (Emotional Intelligence) என்கிறார்கள்
ஆனால் ஒரு கேள்வி எழுகிறது:
நேரமே இல்லாத மனிதனிடம், உணர்ச்சி அறிவும் சமூகப் புரிதலும் எப்படி வளர முடியும்?
ஒரு தனி நபருக்குள் ஏற்படும் மாற்றம் மட்டுமே இதற்கு உதவாது, அதைத் தக்கவைக்க வெளிப்புற சமூக சூழலும் மாற வேண்டும். சகிப்புத்தன்மை, பரஸ்பர புரிதல், கூட்டு முயற்சி ஆகியவையும் இங்கு அவசியமாகிறது.
சோசியலிசமும் காதலும்
முதலாளித்துவம் மனிதர்களிடமிருந்து திருடிக் கொண்டிருக்கும் நேரத்தை மீட்டெடுத்து, ஒன்றிணைந்து வாழவும், ஒன்றிணைந்து வளரவும் இடமளிக்கும் ஒரு கூட்டுப் உலகம் தேவை. அதை சோசிலிசம் தான் தரும்.
சோசலிச சமூகத்தை அமைக்க கம்யூனிஸ்டுகள் நடத்துவதும் வெறும் பொருளாதார மாற்றத்திற்கான போராட்டம் மட்டும் அல்ல; அது மனித மான்பை மீட்டெடுக்கும் போராட்டம்.
இன்னும் சிறிது நேரம் அதிகமாக எந்த பயமும் இன்றி நமது துணையை காதல் செய்வதற்கு தற்போதைய முதலாளித்துவ சமூகம் உதவாது. அதற்கு சோசலிச சமூகம் தான் தீர்வு. அதற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்வோம்.
– ஹிஷாம்