பட்ஜெட் 2026–27 : வளர்ச்சி பாதையா? -ஹிஷாம்
பட்ஜெட் 2026–27 இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாக கூறுகிறது. “Viksit Bharat”, உற்பத்தி வளர்ச்சி, முதலீடு, ஏற்றுமதி என்ற வார்த்தைகள் பட்ஜெட் உரை முழுவதும் ஒலிக்கின்றன. ஆனால் ஒரு அடிப்படை கேள்வி தவிர்க்க முடியாதது: இந்த வளர்ச்சி சாதாரண மக்களின் வாழ்க்கையில் உண்மையாகப் பிரதிபலிக்கிறதா?
உலக அனுபவம் ஒன்றை தெளிவாக சொல்கிறது. ஒரு நாட்டின் நீடித்த வலிமை அதன் தொழில்துறையில்தான் (உற்பத்தி துறை ) இருக்கிறது. சீனா, தென் கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் தொழில்துறை GDP-இல் 25%க்கு மேல் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் அது இன்னும் 15–16% அளவிலேயே உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக “Make in India” பேசப்பட்டாலும், உற்பத்தி வளர்ச்சியின் அளவு பெரிதாக முன்னேறவில்லை. இதனால் உற்பத்தி பொருளாதாரம் வளர்ந்ததாக கூற முடியாது.
Make in India – உற்பத்தி இல்லா நிலை
இதன் நேரடி விளைவு வேலைவாய்ப்பில் தெரிகிறது. 2016 இல் தொழில்துறையில் வேலை செய்தவர்கள் 5.7 கோடி பேர். 2023 இல் அது 5.2 கோடியாக குறைந்துள்ளது. தொழில்துறையில் வளர்ச்சி இருக்கிறது என்றால் வேலை அதிகரிக்க வேண்டும். ஆனால் இங்கு வேலைகள் குறைகின்றன. இந்த முரண்பாடு பற்றி பட்ஜெட்டில் ஒரு நேரடி விவாதமும் இல்லை.
இந்தியாவின் உற்பத்தி கொள்கைகளும் இதே முரண்பாட்டை காட்டுகின்றன. PLI (Production Linked Incentive) மற்றும் ELI (Employment Linked Incentive) போன்ற திட்டங்கள் “வேலைவாய்ப்பை உருவாகும்” என்று கூறப்பட்டாலும், பல துறைகளில் இன்னும் assembly மட்டுமே நடக்கிறது; முக்கிய spare parts மற்றும் மூலப்பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து வருகிறது. ₹1.97 லட்சம் கோடி செலவிட்ட PLI திட்டம் பெரிய தொழில்துறை அடித்தளத்தை உருவாக்கியதா என்ற கேள்வி எழுகிறது. ELI திட்டத்தில் 3.1 கோடி வேலைகள் உருவாகும் என்று கூறப்பட்டாலும், நிரந்தர வேலை எத்தனை உருவானது என்ற தெளிவான தரவுகள் இல்லை. வேலை இல்லாமல் வளர்ச்சி என்றால் அது காகிதத்தில் மட்டுமே எழுதப்பட்ட வளர்ச்சியாக இருக்கும்.
இந்தியா 4-ஆவது பொருளாதார நாடா?
“இந்தியா உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம்” என்று மோடி அரசு பெருமையாகக் கூறுகிறது. ஆனால் அந்த எண்ணிக்கையின் பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பதே முக்கியமான கேள்வி. GDP உயர்ந்தாலும், மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்ததா? ஒருவருக்கு வரும் வருமானம் (Per Capita GDP) இன்னும் குறைந்த நிலையில் தான் உள்ளது. 2024 இல் இந்தியாவின் per capita GDP 2 லட்சத்து 45 ஆயிரத்து 533 ரூபாய் ($2,711) மட்டுமே. இது உலகளவில் 144-ஆவது இடம். பெரிய பொருளாதாரம் என்ற பெயரில், குறைந்த ஊதியம், பாதுகாப்பற்ற வேலைகள், சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் பெண்கள் போன்ற சமூக பிரச்சனைகள் மறைக்கப்படுகின்றன.
இதை விட ஆபத்தானது பொதுத்துறை நிறுவனங்களின் பலவீனம். “தேசியம்”, “தன்னிறைவு”, “டிஜிட்டல் இந்தியா” என்று பேசும் அரசு, CDAC, NIC போன்ற முக்கியமான அரசு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அதிக நிதி ஒதுக்கி பலப்படுத்தாமல், தனியார் நிறுவனங்களின் மீது அதிக நம்பிக்கை வைக்கப்படுகிறது. உற்பத்தி திறன் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அரசு நேரடியாக பங்கு பெறாமல் இருந்தால், உண்மையான தேசிய தன்னிறைவு சாத்தியமில்லை. பொதுத்துறை பலவீனமானால் வேலை பாதுகாப்பும் குறையும்; வேலைவாய்ப்பு உருவாக்கும் திறனும் குறையும். அதே நேரத்தில் MGNREGA போன்ற நேரடி ஆதரவு திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படுவது உள்நாட்டு நுகர்வை மேலும் பலவீனப்படுத்தும்.
“நுகர்வில்லா பொருளாதாரம் சாத்தியமா”
இல்லை. ; தரவுகள் சொல்கிற உண்மை. Private Final Consumption Expenditure (PFCE) என்பது மக்கள் தினசரி தேவைகளுக்காக செலவழிக்கும் பணம். 2010–12 காலத்துடன் ஒப்பிட்டால், இன்றைய PFCE வளர்ச்சி தெளிவாக மந்தமாகியுள்ளது. Reserve Bank of india (RBI) , National Sample Survey Office (NSSO) ஆய்வுகள் கிராமப்புறங்களில் சம்பளங்கள் நீண்ட காலமாக உயராமல் நிற்கின்றன என்பதையும், நகரங்களில் நடுத்தர வர்க்கத்தின் கையில் மீதமிருக்கும் வருமானம் வீட்டு வாடகை, கல்வி, மருத்துவ செலவுகளால் கடுமையான நெருக்கடியில் உள்ளது என்பதையும் காட்டுகின்றன. மக்கள் வாங்க முடியாத சூழலில் உற்பத்தி வளர்ச்சி எப்படி சாத்தியம்? உள்நாட்டு சந்தை பலவீனமாயிருந்தால், பொருளாதாரம் வெளிநாட்டு ஏற்றுமதியை மட்டுமே நம்பும் நிலைக்கு தள்ளப்படுகிறது.
இந்த பாதை எங்கு கொண்டு செல்லும்?
உள்நாட்டு நுகர்வு குறைந்தால், நாட்டின் பொருளாதாரம் கடன் வாங்குவதன் மூலமே இயங்கும். அதிக மதிப்புள்ள பொருட்களுக்கு வரிச்சலுகைகள் கொடுத்துவிட்டு, அடிப்படை தேவைகளின் செலவுகள் அதிகரித்தால் நடுத்தர வர்க்கமும் கிராமப்புற மக்களின் வாழ்கையும் பொருளாதாரமும் சுருங்கும். வரலாறு இதற்கான எச்சரிக்கையை ஏற்கனவே கொடுத்துவிட்டது.
1997ல் நடந்த கிழக்கு ஆசிய பொருளாதார நெருக்கடியில், தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் ஏற்றுமதியை மட்டும் நம்பியதால் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. அவை மீண்டு வர 10 ஆண்டுகளுக்கு மேல் பிடித்தது. கடன் சுமை உயர்ந்தது, சமூக நல திட்டங்கள் குறைக்கப்பட்டன, பல நிறுவனங்கள் அந்நாட்டில் தங்கள் தொழிலை மூடிவிட்டு வெளியேறின.
இது நமக்கு ஒரு தெளிவாக பாடம் கற்பிக்கிறது. உள்நாட்டு நுகர்வு இல்லாமல், ஏற்றுமதியை மட்டுமே நம்பி இருப்பது வளர்ச்சி அல்ல. அது ஒரு ஆபத்தான சார்பு. மக்கள் கையில் பணம் இல்லாமல் எந்த பொருளாதாரமும் நீடித்து நிலைக்க முடியாது. இன்றைய இந்திய பட்ஜெட்டும் அதே தவறைத் தான் மீண்டும் செய்கிறது. மக்களின் வருமானத்தை உயர்த்தாமல், அவர்களின் அடிப்படை நுகர்வை வலுப்படுத்தாமல், உயர்மதிப்புப் பொருட்களுக்கும் கடனுக்கும் தள்ளுகிறது. இது மீட்பு அல்ல; நடந்து கொண்டிருக்கும் நெருக்கடியிலிருந்து தப்பிக்க முயலும் இன்னொரு வழி மட்டுமே.
நடுத்தர வர்க்கத்தை மையமாக வைத்து வளர்ச்சி காணும் முயற்சி ஏற்கனவே தோல்வியடைந்துள்ளது.“சீனாவைப் போல சந்தையை திறக்க வேண்டும்” என்று சொல்லுபவர்கள், சீனாவின் பொருளாதாரம் எப்படி செயல்படுகிறது என்பதைக் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை. முக்கிய துறைகளும், BAIC, MG, China Mobile போன்ற பெரிய நிறுவனங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன; அதன் பலன் மக்களுக்கு சென்றடைகிறது. வெளிநாட்டு அழுத்தங்களுக்கும் சந்தை நெருக்கடிகளுக்கும் எதிராக தன்னை பாதுகாக்கும் வலுவான நிர்வாக மற்றும் நிதி அமைப்புகள் சீனாவிடம் உள்ளது.
சீனாவின் பாடம் தெளிவானது. அரசு தொழில்துறையை வழிநடத்துகிறது, பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துகிறது, உள்நாட்டு சந்தையை பாதுகாக்கிறது. இந்திய பட்ஜெட் அதற்கு மாறாக வெளிநாட்டு சந்தையையும், தனியார் முதலீட்டையும் மட்டுமே நம்புகிறது. இது மக்கள் நலன் சார்ந்தாகவும் இல்லை.
அதற்கான மாற்று என்ன?
உண்மையான உற்பத்தி வளர்ச்சி என்பது வரிச்சலுகைகள் கொடுப்பதால் மட்டுமே வந்து விடாது. அரசு வழிநடத்தும் தொழில்துறை முதலீடு, பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துதல், திறன் மேம்பாட்டு திட்டங்கள், வேலை பாதுகாப்பு, மற்றும் உள்நாட்டு சந்தையை வளர்க்கும் கொள்கைகள் தேவை. சீனா, தென் கொரியா போன்ற நாடுகள் உற்பத்தி வளர்ச்சியை அரசின் திட்டமிட்ட முதலீடு மற்றும் மக்கள் நலனை மையப்படுத்திய கொள்கைகளால் உருவாக்கின. இந்தியாவும் உள்நாட்டு நுகர்வை வலுப்படுத்தி, வேலைவாய்ப்பை அதிகரித்து, உற்பத்தி துறையான தொழில்துறையை வளர்த்தால் மட்டுமே நிலையான வளர்ச்சி சாத்தியம்.
கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு அரசியல் மேடையில் தேச பக்தர்கள் போலவும் தேசத்தை எங்களால் தான் பாதுகாக்க முடியும் என பேசிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் வார்த்தைகளுக்கு தலையாட்டி இந்திய பொருளாதாரத்தை அவர்களுக்கு கொடுத்து விட்டது.
மீண்டும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தொழில்துறை வளர்ச்சி வரிச்சலுகைகள் கொடுப்பதால் மட்டுமே வந்து விடாது. வேலை, போதிய ஊதியம், அரசு முதலீடு, வேலை உத்தரவாதம் என அனைத்தும் சேர்ந்தால்தான் நாட்டிற்கு உண்மையான வளர்ச்சி வரும்.
2026–27 பட்ஜெட்டில் இந்த அடிப்படை உண்மையை புறக்கணிக்கிறார்கள். அதனால் இது இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சிக்கு உதவுவாது என்பதுடன் நாட்டின் முறையான வளர்ச்சிக்கு ஒரு தடையாகவே மாறுகிறது.
அப்படியென்றால் இந்த பட்ஜெட் யாருக்காக?
1.)வேலை இல்லாத இளைஞர்களுக்கா?
2.)கிராமப்புற மக்களுக்கா?
3.) பெண்களுக்கா?
4.) பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மட்டுமா?
என்று கேள்வி எழுப்பினால் நமக்கே உண்மை விளங்கி விடும்.
– ஹிஷாம்