மைக்கேல் பரென்டி— ஏகாதிபத்திய எதிர்ப்பின் போர்க் குரல்
மைக்கேல் பரென்டி (Michael Parenti) அமெரிக்காவின் முக்கியமான மார்க்சிய அரசியல் அறிஞர், எழுத்தாளர், இடதுசாரி செயற்பாட்டாளர் மற்றும் லிபர்ட்டி யூனியன் கட்சியின் உறுப்பினராக இருந்தவர். 2026 ஜனவரி 24 அன்று தனது 92 வயதில் அவர் மறைந்தாலும், அவரது சிந்தனைகள் இன்றும் உலகெங்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்கின்றன. அவர் ஒரு கல்வியாளர் மட்டுமல்ல; உழைக்கும் வர்க்கத்தின் பக்கம் உறுதியாக நின்ற போராளி, ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் மற்றும் கார்ப்பரேட் அதிகாரத்திற்கு எதிரான சரியான மற்றும் சமரசமற்ற விமர்சகர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் உலகமயமாக்கல்
பரென்டியின் அரசியல் சிந்தனையின் மையத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு இருந்தது. ‘தீவிரவாதம்’ குறித்த பொதுவான புரிதலை மாற்றி, அதன் உண்மையான வேர் ஏகாதிபத்திய அரசியல் ,மேற்கத்திய , அமெரிக்க தலையீடுகள், என்பதை அவர் வெளிச்சமிட்டார். குறிப்பாக, அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்புகள், சோவியத் ஒன்றியத்தை எதிர்க்கும் நோக்கில், முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்து, பயிற்சி அளித்து வளர்த்தன என்பதை அவர் ஆவணங்களை முன் வைத்து ஆதாரத்துடன் விளக்கினார். இதன் மூலம், பயங்கரவாதம் தானாக உருவாகும் ஒன்றல்ல; அது ஏகாதிபத்தியத்தின் அரசியல் கருவி என்பதை பரென்டி உலகுக்கு தெளிவுபடுத்தினார்
ஏகாதிபத்தியம் தான் பயங்கரவாதத்தை வளர்க்கிறது; முதலாளித்துவம் போர் பொருளாதாரத்தைப் பயன்படுத்துகிறது. போர் என்பது பாதுகாப்புக்கான நடவடிக்கை அல்ல; அது முதலாளித்துவ நெருக்கடிகளை சமாளிக்க ஒரு வழிமுறை என அவர் விளக்கினார்.
ஊடக அரசியல்
Inventing Reality போன்ற நூல்களில், வெகுஜன கவனத்தை திசை திருப்பும் ஊடகங்கள் எவ்வாறு முதலாளித்துவ அமைப்புக்கு சேவை செய்கின்றன என்பதை பரென்டி விளக்கினார்.
ஊடகங்கள் மக்களின் உண்மையான தேவைகள் — உணவு, வேலை, சுகாதாரம், கல்வி — இவற்றிலிருந்து கவனத்தை திருப்பி, பயம், வெறுப்பு, தேசியவாதம் போன்றவற்றை முன்னிலைப்படுத்துகின்றன. இது ஜனநாயகத்தின் பெயரில் நடைபெறும் முதலாளித்துவக் கட்டுப்பாடு என கடுமையாக சாடினார். சமூக சிந்தனை எவ்வாறு குறிப்பாக இளம் தலைமுறையினரிடம் வடிவமைக்கப்படுகிறது என்பதை அவர் அறிவியல் பூர்வமாக விளக்கினார்.இது பத்திரிகையாளர் துறையில் உள்ள எவருக்கும் தேவையான ஆய்வறிக்கை.
யூகோஸ்லாவியா: எவ்வாறு அழிக்கப்பட்டது
பரென்டியின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்று To Kill a Nation என்ற நூலாகும். இந்நூலில் யூகோஸ்லாவியா எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதைக் கூறிய துணிச்சலான ஆய்வு.
யூகோஸ்லாவியா குறைபாடுகளுடன் இருந்தாலும், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றை மக்களுக்கு வழங்கிய ஒரு சோசலிச அமைப்பைக் கொண்ட நாடாக இருந்தது. அந்த அமைப்பின் வெற்றியை பொறுக்காத NATO மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம், இனவாத முரண்பாடுகளைத் தூண்டி, போரை உருவாக்கி, நாட்டை துண்டு துண்டாகப் பிரித்து போட்டது. இதன் பின்னணியில் இருந்தது வளங்களின் சுரண்டலும், சந்தைகளை கைப்பற்றும் முதலாளித்துவ நோக்கமும்.
சோவியத் ஒன்றியம் மற்றும் சோசலிசத்தின் சாதனைகள்
முதன்மை ஊடகங்கள் “சோசலிசம் விழுந்துவிட்டது” என்று கூறும் போது, பரென்டி சோவியத் ஒன்றியம் மற்றும் யூகோஸ்லாவியாவின் உண்மையான “சாதனைகளை” தெளிவாக எடுத்துக்காட்டினார்.
கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டது, அனைவருக்கும் கல்வி வழங்கியது, வேலைவாய்ப்பை உறுதி செய்தது, தரமான சுகாதார வசதிகளை ஏற்படுத்தியது போன்ற உண்மைகளை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.
அவரது புகழ்பெற்ற வாசகம் ஒன்று உள்ளது. “மூன்றாம் உலக நாடுகள் பின்தங்கியவை அல்ல; அவை அதிகமாகச் சுரண்டப்பட்டவை”. அவரது இந்த வரிகள் ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய செயல்முறையை எளிமையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது.
உழைக்கும் வர்க்கத்தின் ஆசானாக பரென்டி
மைக்கேல் பரென்டியின் சிறப்பு, அவர் அரசியல் கருத்துகளை கல்வியாளர்களுக்குள் மட்டுமே அடக்கி வைக்கவில்லை , பல்கலைக்கழகங்களின் சுவர்களைத் தாண்டி, உழைக்கும் மக்களிடம் மார்க்சிய அரசியல் அறிவை கொண்டு சென்றவர் அவர். இதனால், அவர் பிரதான கல்வி நிறுவனங்களாலும், ஊடகங்களாலும் புறக்கணிக்கப்பட்டார். இருப்பினும், அவர் தனது அரசியல் நிலைப்பாட்டை ஒருபோதும் தனது கருத்துகளை மாற்றிக் கொள்ளவும் இல்லை. உலகமயமாக்கலுக்குப் பிறகு தொடர்ச்சியான அமெரிக்க ஆதிக்கத்தை பரெண்டியின் படைப்புகள் கடுமையாகத் தாக்கின.
மைக்கேல் பரென்டி ஒரு எழுத்தாளர் அல்லது அரசியல் அறிஞர் மட்டுமல்ல. அவர் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு தொடர்ச்சியான போர்க் குரல்; முதலாளித்துவத்தின் முகமூடியைக் கிழித்த சிந்தனையாளர்; உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான தோழர். இன்று உலகம் எதிர்கொள்கின்ற போர், சுரண்டல், ஊடக பொய்மைகள் மற்றும் கார்ப்பரேட் அதிகாரத்தின் காலத்தில், பரென்டியின் சிந்தனைகள் மேலும் மேலும் அவசியமானதாக மாறுகின்றன.
மைக்கேல் பரென்டியின் அரசியல், சோசலிசம் மற்றும் மனித விடுதலை என்ற கனவு இன்னும் சாத்தியமானது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
செவ்வணக்கம் 🚩
– ஹிஷாம்