இந்தியா பாகிஸ்தான் மோதலின் போது ‘லாபி’ நிறுவனத்தைப் பயன்படுத்திய பாஜக
மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்த பிறகு, இந்திய வெளியுறவுத்துறைக் கொள்கையில் பல தடுமாற்றங்கள், சிதைவுகள், பாரபட்சங்கள் மற்றும் ஆதிக்கம் காட்டும் நாடுகளுக்கு வளைந்து கொடுத்தல் எனப் பெருமளவு சிதைந்து வருகிறது என கடும் விமர்சனங்கள் எழுந்து வந்தன.
இந்நிலையில், இந்தச் சிதைவுகள் உண்மைதான் எனக் கூறும் அளவிற்கு ஒரு தகவல் அம்பலமாகியுள்ளது. அதாவது, அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு நேரடியாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்குப் பதிலாக, அமெரிக்காவில் லாபி (Lobby) செய்வதற்காக உள்ள ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்குப் பல கோடி ரூபாய் பணம் கொடுத்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளது. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் எழுப்பிய கேள்விகள் அடிப்படையில் பல உண்மைகள் தற்போது வெளியாகியுள்ளன.
அமெரிக்கத் தலையீடும் மோடி அரசின் மறுப்பும்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நான்கு நாள் மோதல் நடைபெற்றது. இந்த மோதலை நான்தான் நிறுத்தினேன் என டிரம்ப் 70-க்கும் மேற்பட்ட முறை டமாரம் அடித்துள்ளார்.
டிரம்ப் இவ்வாறு பேசிய போதெல்லாம், ‘ஆட்டோ ரிப்ளே’ மூலம் ஏற்கனவே பதிவு செய்து வைத்த ஒரே பதிலைத் திரும்பத் திரும்ப அனுப்புவது போல, மோடி அரசும் இந்தப்போர் நிறுத்தத்தில் மூன்றாவது நபர்களின் (அமெரிக்கா) தலையீடு இல்லை எனத் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனாலும் டிரம்ப்பும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவும் அந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவிற்குப் பங்கு இருக்கிறது எனக் கூறி வருகின்றனர். குறிப்பாக, போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகத்தைத் தடுத்து நிறுத்துவேன் என்று டிரம்ப் விடுத்த எச்சரிக்கையையும் கூட இந்திய வெளியுறவுத்துறை மறுத்துள்ளது.
அமெரிக்க நீதித்துறை ஆவணங்கள் காட்டும் உண்மை
இந்தச் சூழலில், 2025 மே 10 அன்று (ஆபரேஷன் சிந்தூர் போர் நிறுத்தத்தின் போது), அமெரிக்க வர்த்தகத்துறை அதிகாரியான ஜேமிசன் கிரீர், வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி சூசி வைல்ஸ், தேசிய பாதுகாப்பு கவுன்சிலைச் சேர்ந்த ரிக்கி கில் உட்பட மூன்று மூத்த டிரம்ப் அதிகாரிகளை இந்தியத் தூதரகம் லாபி நிறுவனத்தின் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.
இத்தேதியில் நடைபெற்ற தொடர்பு குறித்த தகவலானது அமெரிக்க நீதித்துறையின் (DoJ) ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தகவல்கள் இந்திய வெளியுறவுக்கொள்கையின் பலத்தின் மீதான கேள்வியையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளன.
இந்தியத் தூதரகத்தின் விளக்கம்
இது குறித்து ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகை எழுப்பிய விரிவான சில கேள்விகளுக்குப் பதிலளித்த இந்தியத் தூதரகம், இந்த ஆவணங்கள் எதையும் மறுக்கவில்லை. மாறாக, இதுபோன்ற லாபி (இடைத்தரகர்) நிறுவனங்களை நியமிப்பது “தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான ஒரு வழக்கமான நடைமுறை” என்று பகிரங்கமாகவே கூறியுள்ளது. மேலும், இதனை நியாயப்படுத்தும் வகையில் 1950-களில் இருந்தே இத்தகைய நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு வருவதாக இந்தியத் தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இந்நிலையில், சர்வதேச அளவில் இரு நாடுகளுக்கும் இடையிலான மிக முக்கியமான பேச்சுவார்த்தைக்கு ஏன் லாபி நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டன என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
SHW LLC நிறுவனமும் 15 கோடி ரூபாய் ஒப்பந்தமும்
அமெரிக்காவின் ‘வெளிநாட்டு ஏஜெண்டுகள் பதிவுச் சட்டத்தின்’ (FARA) கீழ் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கைகள், அந்தப் பேச்சுவார்த்தைகள் போர் நிறுத்தத்திற்கு முன்பு நடந்ததா அல்லது பின்னர் நடந்ததா எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அமெரிக்கா – இந்தியா இடையே இந்நாளில் நெருக்கமான தொடர்பு (பேச்சுவார்த்தைகள்) இருந்துள்ளது என்பதை இந்தத் தகவல் மூலம் தெரிய வருகிறது.
டிரம்ப்பின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் ஜேசன் மில்லர் தலைமையிலான ‘SHW LLC’ என்ற நிறுவனத்தின் மூலமாக நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைக்கு, ஆண்டுக்கு 1.8 மில்லியன் டாலர் (சுமார் ₹15 கோடி) பணத்தை இந்தியா கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் தான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பவன் கபூர் மற்றும் இந்தியத் தூதர் வினய் குவாத்ரா ஆகியோருக்கு அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்துள்ளது. இதனை அந்நிறுவனமும் உறுதி செய்துள்ளதாகத் தகவல் உள்ளது.
அதிகாரிகளின் அதிர்ச்சி
தில்லியில் உள்ள தூதரக அதிகாரிகள் மத்தியில் இந்த விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக இத்தகைய சந்திப்புகள் தூதரக அதிகாரிகளாலேயே நேரடியாக ஏற்பாடு செய்யப்படும். ஆனால், ஒரு தனியார் நிறுவனம் மூலம் இவை நடந்திருப்பது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
2025 ஜூன் மாதம் ஜெய்சங்கர் அமெரிக்கா செல்வதற்கு முன்னதாக, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், சி.ஐ.ஏ (CIA) தலைவர் ஜான் ராட்க்ளிஃப் ஆகியோருடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்ய இந்த நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யக் கச்சா எண்ணெய் விவகாரம்
பாகிஸ்தான் உடனான மோதல் மட்டுமல்ல, ரஷ்யக் கச்சா எண்ணெய் விவகாரத்திலும் இந்த நிறுவனத்தின் தலையீடு உள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரி விதித்தார். அந்தச் சமயத்தில் இந்த லாபி நிறுவனம் வர்த்தகம் குறித்து விவாதிக்க சுமார் 30 முறை தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டுள்ளது.
மேலும், பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துகளை டிரம்ப் நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதையும் இந்த நிறுவனம் ஒரு வேலையாகவே செய்துள்ளது. உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால், 2025 செப்டம்பர் 6 அன்று மோடி பதிவிட்ட கருத்தை ஜேசன் மில்லர் வெள்ளை மாளிகைக்குத் தெரியப்படுத்தியுள்ளார். அதன் பிறகே டிரம்ப் மற்றும் மோடி இடையே தொலைபேசி உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன என ‘தி இந்து’ நாளிதழின் வெளியுறவுத்துறை விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் சுஹாசினி ஹைதர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் பாகிஸ்தான் போன்ற நாடுகள் மட்டுமே அமெரிக்காவில் இத்தகைய லாபி நிறுவனங்களை (நெட்வொர்க்குகளை) அதிகம் பயன்படுத்தின. ஆனால், இப்போது இந்தியா போன்ற வலுவான வெளியுறவுக் கொள்கை கொண்ட நாடும், சர்வதேச அரசியலில் மிக முக்கியமான வெளியுறவுக்கொள்கை பற்றிப் பேசுவதற்கு லாபி நிறுவனங்களைப் பயன்படுத்தும் நிலை, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அமலாக்கத்தின் பலம் பற்றிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
- சேது சிவன்