அதானிக்காக ஆபத்துக்குளாகும் ஆரவல்லி மலைத்தொடர்
உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றான ஆரவல்லி தில்லிக்கு அருகில் தொடங்கி, ஹரியானா வழியாக தென்மேற்கு திசையில் சென்று, ராஜஸ்தானைக் குறுக்காகக் கடந்து, குஜராத்தில் உள்ள அகமதாபாத்திற்கு அருகிலுள்ள சமவெளிகளில் சுமார் 700 கி.மீ நீளத்திற்குப் பரந்து விரிந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இயற்கை அரண்களுள் ஒன்றான இம்மலைத்தொடர் அதானி உள்ளிட்ட கனிம முதலாளிகளின் லாபத்திற்காக தற்போது ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளது.
எது ஆரவல்லி மலை?
ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடர்கள் குறித்த தெளிவான, அறிவியல் பூர்வமான வரையறை தேவை என்று சில வாரங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
பல ஆண்டுகளாக, இந்த மலைத்தொடர் குறித்த முரண்பாடான விளக்கங்கள் காரணமாக சுற்றுச்சூழல் விதிகள், நிலப் பயன்பாட்டுத் திட்டமிடல் மற்றும் சட்டவிரோதச் சுரங்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளைச் சிக்கலாக்கியுள்ளன என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.மேலும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட புவியியல் தரநிலைகளை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இந்நிலையில் சமீபத்தில் ஆரவல்லி தொடர்பான ஒன்றிய பாஜக அரசின் புதிய வரையறையை உச்ச நீதிமன்றமானது ஏற்றுக்கொண்டது. அதன்படி, 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட குன்றுகள் மட்டுமே ஆரவல்லி மலைகளாகக் கருதப்படும்.
இந்த முடிவால், சூழலியல் ரீதியாக மிக முக்கியமான ஆரவல்லியின் பல பகுதிகள் இனி ஆரவல்லியின் பகுதியாகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும் இருக்காது.
ஆரவல்லி தரும் பாதுகாப்பு
ஆரவல்லி மலைத்தொடரானது ராஜஸ்தானின் தார் பாலைவனம் கிழக்கு நோக்கி விரிவடைவதைத் தடுக்கும் இயற்கை அரணாகவும் தார் பாலைவனத்திலிருந்து வரும் மணல் மற்றும் புழுதியைத் தடுக்கும் அரணாகவும் செயல்படுகிறது. சம்பல், சபர்மதி மற்றும் லூனி போன்ற முக்கிய நதிகளின் ஆதாரமாக ஆரவல்லி மலைத்தொடர் உள்ளது.அத்தோடு, நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் ராஜஸ்தான் குஜராத் போன்ற சில மாநிலங்களின் பல்லுயிர் பெருக்கத்திற்கும் (Biodiversity) முக்கிய ஆதாரமாக உள்ளது.
இது மணற்கல், சுண்ணாம்புக்கல், பளிங்குக்கல், கிரானைட், ஈயம், துத்தநாகம், தாமிரம், தங்கம், டங்ஸ்டன் போன்ற கனிம வளங்களால் செழிப்பாக நிரம்பியுள்ளது.
இந்நிலையில் 100 மீட்டருக்கு மேல் உள்ளதை மட்டும் மலை என்று அழைப்பது, வட இந்தியாவின் பாதுகாப்பான சுவாசக் காற்றுக்கு உறுதுணையாக உள்ள மற்றும் நிலத்தடி நீரை தக்கவைத்து கிணறுகளில் நீர் சுரக்க வைக்கும் ஒரு பெரும் நிலப்பரப்பை அழிப்பதற்கு வழிவகுக்கும்.
90% மலைகள் அழியும் அபாயம்
ஆரவல்லி மலைத்தொடருக்கான வரையறையை அதன் உயரத்தின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் புதிதாக நிர்ணயித்துள்ளதால், அப்பகுதியின் சூழலியல் பாதுகாப்பு குறித்த பெரும் கவலை எழுந்துள்ளது.
இத்தீர்ப்பானது, அப்பகுதியில் சுரங்கப் பணிகளை அதிகரிக்க வழிவகுக்கும். ஆரவல்லியின் பெரும்பகுதியை குறிப்பாக ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் பாதுகாப்பிலிருந்து நீக்கிவிடும். இதனால் சுரங்கப் பணிகள், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அப்பகுதி தடையின்றி திறக்கப்படும்.
நிலையான வளர்ச்சிக்காக இந்த வரையறை ஏற்கப்பட்டுள்ளது என சொல்லப்பட்டாலும், ஏற்கெனவே பல தசாப்தங்களாக சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோதச் சுரங்கப் பணிகளால் ஆரவல்லி மலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இது ஏற்கெனவே நடந்த சட்டத்துக்குப்புறம்பான கனிமக் கொள்ளையை மேலும் அதிகரிக்கும்.
அத்துடன் தொழில் நுட்பச் சந்தையில் போட்டியிடும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு தேவையான கனிமங்களை ஏற்றுமதி செய்ய அதானி போன்ற கனிம முதலாளிகள் ஆரவல்லியை சூறையாட இந்த புதிய வரையறை வழி வகுத்து இயற்கைச் சூழலை சிதைக்கும் செயலாகவே இருக்கும். இது 90 சதவீத ஆரவல்லி மலைகள் அழிய வழிவகுக்கும்.
வட மாநிலங்கள் வாழத்தகுதியற்றவையாக மாறும்
ஏற்கெனவே தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசு அதிகரித்து வரும் சூழலில், இந்தத் தீர்ப்பு இயற்கைப் பாதுகாப்புகளை அழிப்பதாகவே அமையும். காடழிப்பு மற்றும் சுரங்கப் பணிகளால் ஏற்கெனவே இங்குள்ள ஏரிகள் வறண்டு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது.
ஆரவல்லி மலைக் காடுகள் காற்றில் உள்ள நச்சுத் துகள்களை உறிஞ்சும் திறன் கொண்டவை. தார் பாலைவனப் புழுதியிலிருந்து வடமாநிலங்களையும் தில்லியையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த கவசமாக இது உள்ளது.
இந்நிலையில் அம்மலைத்தொடர் அழிந்தாலும் அதன் சூழியல் பாதிப்பு சிதைந்தாலும், தற்போது தில்லி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மிகவும் மோசமான கற்று மாசு மேலும் தீவிரமடையும். குழந்தைகள், முதியவர்கள் மற்றும் திறந்தவெளியில் வேலை பார்க்கும் ஏழை எளிய தொழிலாளி வர்க்கம் முதல் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். தில்லி வாழ்வதற்குத் தகுதியற்ற நகரமாக மாறிவிடும்.
பாஜக அரசு இதை ஆரவல்லி மலை என்றால் என்ன என்பதற்கு தற்போதைய வரையறை என ஒரு ‘தொழில்நுட்ப ரீதியான விளக்கம்’ என கூறி வருகிறது. எனினும் இது ஆரவல்லி மலைகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையாகவே உள்ளது. இந்திய தலைநகரை காற்று மாசு கடுமையாக ஆட்டிப்படைத்து வரும் நிலையில் அது பற்றி விவாதிக்க நாடாளுமன்ற குளிர் காலத் கூட்டத்தொடரில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதனை பாஜக அரசு உதாசீனப்படுத்தியது மட்டுமல்லாது ஆரவல்லி மலையை கனிம வளக்கொள்ளைக்கு திறந்து விட்டு இந்திய தலைநகரையும் பொதுமக்களையும் ஆபத்தில் தள்ளியுள்ளது.
ஆரவல்லி அழிந்தால், முழு டெல்லி-NCR பகுதியும், பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பிற பகுதிகளும் மனிதர்கள் வாழத் தகுதியற்றதாகிவிடும். இது ஒரு முழுமையான பேரழிவாக இருக்கும்.
– சேது சிவன்