Tamil Marx

சர்வதேசம்

போரிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த வல்லூறு

போரிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த வல்லூறு
  • PublishedNovember 22, 2025

“கெட்ட போரிடும் உலகினை வேரோடு சாய்ப்போம்” என்று எழுதினார் பாவேந்தர் பாரதிதாசன். போரில் கெட்ட போர் நல்லபோர் என்று உண்டா என கேள்விகள் வரும். ஆம் உண்டு என உறுதியாகக் கூறலாம், உரிமையை பறிப்பதும் அழிப்பதும் கெட்ட போர். அதனை எதிர்த்து உரிமைக்காகக் களம் காண்பது நல்ல போர்.

ஒரு நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்வது என்பது அவரவர் வெளியுறவுக்கொள்கை சார்ந்த விஷயம். அதேபோல அவர்களது இயற்கை வளத்தை பயன்படுத்துவதும் அந்நாட்டு மக்களின் உரிமை. இந்த இடத்தில் அமெரிக்கா என்ன சொல்கிறது? என்ன செய்கிறது?
நீ என்னிடம் அடிமையாகத் தான் நீ இருக்க வேண்டும். எனக்கு தான் உன் வளங்களை கொடுக்க வேண்டும் என அடித்துப் பிடுங்கி வருகிறது.

இப்படிப்பட்ட கெட்ட போர்களை கட்டவிழ்த்துவிடும் அமெரிக்கவின் உண்மை வரலாறுகளை சொல்லிக்கொடுக்கும் போது “அமெரிக்கா ஒரு வல்லரசும் அல்ல, நல்லரசும் அல்ல,” “அது உலகத்தை கொத்திக் கிழித்து தின்னும் வல்லூறு” என புரிந்து கொள்வார்கள்.
அமெரிக்கா தனது கெட்ட போர்களை நியாயப்படுத்த ஐ.நா அவையிலேயே பொய்களை கட்டவிழ்த்து விடுகிறது. அதற்காக ஊடகங்களையும் கட்டுப்படுத்துகிறது. அப்படித் தான் கியூபா மீதான தடையை நீக்குவது தொடர்பான ஐ.நா அவை தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கியூபாவை முடக்க அமெரிக்கா செய்து வரும் தனது அட்டூழியங்களை மறைக்க அமெரிக்கத் தூதர் மைக்கேல் வால்ட்ஸ் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

அதாவது கியூபா மீது பொருளாதாரத் தடை இல்லை. கியூபாவின் பொருளாதாரச் சிக்கல்களுக்கும் உணவு மற்றும் மருந்துப் பற்றாக்குறைக்கும் கியூப அரசு தான் காரணம் அவர்கள் மட்டுமே பொறுப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.வில் கியூபாவிற்கு ஆதரவாக கொண்டு வரப்படும் தீர்மானம் ஒரு பிரச்சாரம். கியூபா அதன் மருத்துவப் பணியாளர்களைக் கடத்துகிறது. பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய கியூபாவுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. கியூபா மீதான இந்தத் தடை கியூபாவுக்குத் தடையற்ற ஏற்றுமதியை அனுமதிக்கிறது. கூலிப்படையினரால் கியூபா பயனடைகிறது. ரஷ்யாவின் ‘போர் இயந்திரத்திற்கு’ கியூபா உதவுகிறது என அமெரிக்க அதிகாரிகளை தவிர உலகில் உள்ள மற்றவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்பது போலப் பேசியுள்ளார்.

இந்தப்பொய்கள் எதுவும் புதியவை அல்ல. ஏற்கெனவே பொய் என அம்பலப்படுத்தப்பட்டவை தான்.
கியூபா மீதான தடையை உறுதிப்படுத்தும் வகையில் ஹெல்ம்ஸ்-பர்ட்டன் சட்டம், டோரிசெல்லி சட்டம், “180 நாள் விதி” போன்ற பல்வேறு அமெரிக்கச் சட்டங்கள் இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்த விதிகளை ஐ.நா. தீர்மானம் “கற்பனை செய்யவில்லை”; அவை நடைமுறையில் இருப்பதை ஆவணப்படுத்திக் காட்டுகிறது. அமெரிக்காவின் சமீபத்திய அதிகாரப்பூர்வ ஆவணங்களும் கூட, கியூபாவுக்கு எதிரான “அதிகபட்ச அழுத்தத்தை கொடுப்பது” என்ற கொள்கை தொடர்வதைத் தெளிவுபடுத்துகின்றன.

கியூபாவின் பொருளாதாரத்தை “நசுக்க” (strangle the economy) அந்த சமூகத்தில் அமைதியின்மையைத் தூண்டுவதே அமெரிக்கக் கொள்கையின் நோக்கம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எரிபொருள், நிதி, சுற்றுலா மற்றும் மருத்துவ ஒத்துழைப்பு போன்றவற்றை இலக்கு வைத்துத் தாக்குவதும் இதில் அடங்கும்.இந்த தடை நடவடிக்கை தான் விலைவாசி, முதலீடுகள், விநியோகச் சங்கிலி (logistics) கியூப மக்களிடையே பணப்புழக்கம் ஆகியவற்றைப் பாதிக்கிறது. இதுவே தற்போதைய பொருளாதாரச் சிக்கல்களுக்கு முக்கியக் காரணமாகும்.

அதே போல கியூபா மீதான தடைகளை நீக்க ஆண்டுதோறும் ஐ.நா அவையில் நடத்தப்படும் வாக்கெடுப்பு, சர்வதேசச் சட்டத்தையும், ஐ.நா. சாசனத்தையும் பரவலாகப் பாதுகாப்பதைக் காட்டுகிறது. உலக நாடுகளை கியூபாவிற்கு எதிராக வாக்குகளை போட வைப்பதற்காக அமெரிக்கா தொடர் அழுத்தங்கள் தருகிறது. அத்துடன் ஐ.நா அவையில் அமெரிக்கா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து ரத்து (வீட்டோ) அதிகாரத்தையும் பயன்படுத்தும்.

அமெரிக்காவின் தடைகளால் தான் சப்ளையர்கள் கியூபாவுடன் வர்த்தகம் செய்ய மறுக்கும் நிலை உள்ளது. 10 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அமெரிக்கப் பொருட்களை கொண்ட தொழில்நுட்பப் பொருட்களை கியூபாவிற்கு விற்கத் தடை உள்ளது. இதனால் தான் அத்தியாவசியமாக அடிப்படையாகத் தேவைப்படுகிற 651 மருந்துகளில் 56 சதவீதமான மருந்துகள் கியூபா மக்களுக்கு கிடைக்கவில்லை.
அமெரிக்காவில் இருந்து ‘அனுமதிக்கப்பட்ட’ கொள்முதல் கூட, முன் பணம் செலுத்தினால் மட்டுமே தருவோம். அமெரிக்கக் கப்பல்களில் மட்டுமே போக்குவரத்து மற்றும் ஒரே வழிப் பயணங்கள் என்பது போன்ற நியாயமற்ற நிபந்தனைகளின் கீழ் தான் நடைபெறுகின்றன. இது கியூபாவிற்கான இறக்குமதிச் செலவுகளை அதிகரிக்கிறது. அத்தியாவசிய உணவுப் பொருள் விநியோகத்தில் தாமதங்களை ஏற்படுத்துகிறது.

உண்மையில் கியூபாவிற்கு வணிகச் “சுதந்திரம்” இல்லை. அமெரிக்கச் சட்டம், கியூபாவுக்கு ஏற்றுமதி/மறு-ஏற்றுமதியை மறுக்கும் கொள்கையை வைத்திருக்கிறது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க நிறுவனங்களின் துணை நிறுவனங்களும் கியூபாவுடன் வர்த்தகம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நிதி சார்ந்த வெளிநாட்டுத் தடைகளும் உள்ளன. கியூபா உக்ரைன் போரில் பங்கேற்கவில்லை. ரஷ்யாவிற்கு ஆதரவாகவும் ராணுவவீரர்களை அனுப்பவில்லை. ஆனாலும் அமெரிக்கா மீண்டும் மீண்டும் பொய்களை கட்டவிழ்த்து வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்காவின் கொடூரமான கெட்ட போர் நிலைபாட்டை அப்பட்டமாகக் காட்டுகிறது. இக்கெட்ட போரை எதிர்ப்பதற்காக உலக மக்கள் நல்லபோர் செய்ய வேண்டி கியூபாவின் பக்கம் ஒன்றிணைந்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

– சேது சிவன்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *