Tamil Marx

சர்வதேசம்

“Gen Z” தலைமுறை நடத்திய போராட்டங்களைப் புரிந்துகொள்வதற்கான கோட்பாடுகள் – பேரா.விஜய் பிரசாத்

“Gen Z” தலைமுறை நடத்திய போராட்டங்களைப் புரிந்துகொள்வதற்கான கோட்பாடுகள் – பேரா.விஜய் பிரசாத்
  • PublishedNovember 12, 2025

சிலியில் 2019-ஆம் ஆண்டு தலைநகர் சாண்டியாகோவில் நடந்த எழுச்சிமிக்க சமூகப் போராட்டங்களின் போது சுவர்களில் எழுதப்பட்ட முழக்கங்கள், அந்நாட்டின் ஆழமான சிக்கலைக் காட்டின: “நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறித்தார்கள், இறுதியில் நம் பயத்தையும் சேர்த்துப் பறித்துவிட்டார்கள்” மற்றும் “இது 30 பெசோஸ் பிரச்சனை அல்ல, 30 ஆண்டுகாலப் பிரச்சனை”. சிலி அரசு மெட்ரோ ரயில் கட்டணத்தை 30 பெசோஸ் உயர்த்தியதும், சமூக நலத் திட்டங்களுக்கான நிதியைத் தொடர்ந்து குறைத்ததும், 30 ஆண்டுகால நவ தாராளமயக் கொள்கைகளால் மக்கள் சந்தித்த மோசமான பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்தியது.

இந்தப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் 2001 முதல் 2005 வரையிலான காலகட்டத்தில் பிறந்த மாணவர்கள்தான். இவர்கள் ‘ஜென் Z தலைமுறை’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஆனால், இந்த வார்த்தையானது, இத்தலைமுறையினர் நடத்தும் எழுச்சிமிகு போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள வேலையின்மை, பணவீக்கம், பொருளாதார நெருக்கடி, குறைந்த ஊதியம், ஆட்சியாளர்களின் ஊழல் உள்ளிட்ட ஒவ்வொரு நாட்டின் தனித்துவமான உள்நாட்டுச் சிக்கல்களையும் மறைக்கிறது. இருப்பினும், ‘தலைமுறை’ என்ற கருத்தை ஆராய்வது அவசியம்.
சிலிப் போராட்டம், வலதுசாரி அரசாங்கத்தின் மீதிருந்த நம்பிக்கையைத் உடைத்தது. இது தனிப்பட்ட நிகழ்வல்ல. இதே காலகட்டத்தில் பிறந்த இளைஞர்கள் உலகம் முழுவதும் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கினர்.

இந்தியாவில் 2012-இல் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான எழுச்சி, அமெரிக்காவில் 2018-இல் துப்பாக்கிச்சூடு வன்முறைக்கு எதிரான ‘மார்ச் ஃபார் அவர் லைவ்ஸ்’, காலநிலைச் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் 2018-இல் தொடங்கிய ‘ஃபிரைடேஸ் ஃபார் ஃபியூச்சர்’ பிரசாரம், 2021-இல் கொலம்பியாவில் வேலைநிறுத்தம், 2022-இல் இலங்கையில் மாபெரும் போராட்டம் (‘அரகலய’), 2023-இல் நேபாளத்தில் ஏற்பட்ட எழுச்சி போன்றவை மத்திய-வலதுசாரி அரசுகள் ஆட்சியை விட்டு வெளியேற வழிவகுத்தன.

இந்தப் போராட்டங்கள் தனிப்பட்ட பிரச்சினைக்கு எதிரான தார்மீகக் கோபமாகத் தொடங்கி, படிப்படியாக, இளைஞர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை வழங்க முடியாத ஒரு அரசின் மீதான விமர்சனமாகவும் கோபமாகவும் மாறின.

தலைமுறைகள் பற்றிய சமூகவியல் பார்வை
ஜெர்மன் அறிஞர் கார்ல் மான்ஹெய்ம் (1928), ‘தலைமுறை’ என்பது பிறந்த காலத்தை வைத்து அல்லாமல், ஒரு குழுவினரின் சமூக நிலையை வைத்தே வரையறுக்கப்படுகிறது என்றார். ஒரு தலைமுறையானது குழப்பமான மாற்றங்களை அனுபவித்து, புதிய கலாச்சாரப் பரிமாற்றங்கள் மூலம் பாரம்பரியத்தை எதிர்கொள்ளும் போதுதான் சமூக மாற்றத்திற்கான உந்துசக்தியாகிறது. ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்வந்த தலைமுறைகள், நவ-தாராளமய கலாச்சார உலகில், சந்தைப்படுத்தும் யுக்தியின் அடிப்படையில் வெறும் பிராண்டுகளாக மாற்றப்பட்டன.

சமூகத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் குறைந்ததால் விரக்தியடைந்த இளைஞர்கள், தோல்வியடைந்த அரசுகளுக்கு எதிராக வீதியில் இறங்குகின்றனர். இப்போராட்டங்களை வெளிநாட்டுத் தலையீடாக மட்டும் பார்ப்பது தவறு. இந்தப் போராட்டங்களைப் புரிந்துகொள்ள, அந்தந்த நாடுகளின் உள்நாட்டு சமூகவியல் காரணிகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டியது மிக அவசியம்.

இந்த இளைஞர் எழுச்சிகள் உலகச் சூழ்நிலையால் தீர்மானிக்கப்பட்டாலும், இந்தப் போக்கைப் புரிந்துகொண்டு அதை முற்போக்கான திசையில் செலுத்த ஏழு கோட்பாடுகள் இங்கே முன்வைக்கப்படுகின்றன.

ஜென் Z எழுச்சிகளைப் புரிந்துகொள்வதற்கான ஏழு கோட்பாடுகள்

1. இளைஞர்கள் அதிகமுள்ள தெற்குலக நாடுகள்

தெற்குலக நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. சர்வதேச வங்கிக் கடன்களால் திணிக்கப்படும் சிக்கன நடவடிக்கைகளால் அரசுகள் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதிகளை வெட்டிச் சுருக்க, இதனால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி, காலநிலை மாற்றப் பேரழிவுகள், போர்கள் ஆகியவற்றால் இளம் தலைமுறையினர் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர்.

2. வேலையின்மையால் ஏற்படும் விரக்தி

தெற்குலக இளைஞர்கள் வேலையின்மையால் விரக்தியடைந்துள்ளனர். நவ-தாராளமயம் அரசின் இப்பிரச்சினையைத் தீர்க்கும் திறனைக் குறைத்துவிட்டது. ஜென் இசட் தான் வரலாற்றிலேயே அதிகம் படித்த தலைமுறையாக இருந்தாலும், அதே தலைமுறைதான் அதிக கடன்பட்ட மற்றும் போதிய வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளது. இது அவர்களுக்கு அரசின் மீது மிகப் பெரிய கோபத்தை உருவாக்குகிறது.

3. வாழும் இடத்திலேயே நல்ல வாழ்க்கையை விரும்பும் இளைஞர்கள்

நல்ல கண்ணியமான வாழ்க்கைக்காக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர வேண்டிய கட்டாயத்துக்கு எதிராக நேபாள இளைஞர்கள் முழக்கமிட்டது போல, இவர்கள் தங்கள் வாழ்விடத்திலேயே வேலை செய்ய விரும்புகிறார்கள். தங்கள் வாழ்விடத்தில் இருந்து வெளியேறுவது, அத்துடன் சர்வதேச வேலை இடங்களில் நிலவும் இனப் பாகுபாடுகள், ஒடுக்குமுறைகள் போன்ற காரணங்களால், வெளிநாடு செல்வதற்கான ஆசை கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகிவிட்டது.

4. விவசாயப் பின்னணியும் நகரமயமாக்கலும்

பெரிய விவசாய வணிக மற்றும் சுரங்க நிறுவனங்களால் சிறு விவசாயிகள் சுரண்டப்படுவதால், கிராமப்புறத்தில் வாழ முடியாத சூழல் உருவாகிறது. சோர்வடைந்த விவசாய வர்க்க இளைஞர்கள், நகரங்களுக்கும் பின்னர் வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். இவர்கள் கிராமப்புற அனுபவத்தை நகரங்களுக்குக் கொண்டு வந்து, இது போன்ற போராட்டங்களின் முக்கியப் படையாக இருக்கிறார்கள்.

5. காலநிலை நெருக்கடி கற்பனையல்ல

ஜென் இசட் தலைமுறையினருக்குக் காலநிலை மாற்றம் என்பது வேலை இழப்பு, வீடிழப்பு மற்றும் விலைவாசி உயர்வு மூலம் அவர்களை உடனடியாக வறுமையின் பிடியில் தள்ளிவிடும் காரணியாக உள்ளது. லித்தியம், கோபால்ட் போன்ற கனிம வளங்களுக்காக ஏகாதிபத்திய நாடுகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் கிராமப்புறங்களைச் சுரண்டும்போது, அக்கிராமப்புற மக்கள் பேரழிவுகளாலும் சுரண்டல்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.

6. பாரம்பரிய அரசியலின் இயலாமை

ஏற்கனவே உள்ள பாரம்பரிய அரசியல் அமைப்புகளால் ஜென் இசட்-இன் விரக்திகளைத் தீர்க்க முடியவில்லை. அரசியலமைப்புச் சட்டங்கள் நடைமுறையில் பிரதிபலிக்கவில்லை. அரசியல் கட்சிகள் அமெரிக்காவின் அழுத்தத்தால் உருவான கடன் மற்றும் சிக்கன நடவடிக்கைகளால் முடங்கிக் கிடக்கின்றன. இது தெற்குலக நாடுகளில் ஒரு அரசியல் வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளது. அலட்சியமான அதிகாரிகளும், அமைதியான போராட்டத்தையும் வன்முறையால் கலைக்கும் காவல்துறையும் மட்டுமே அரசுடன் இவர்களுக்குத் தொடர்புகொள்ளக் கிடைக்கிறது.

7. முறைசாரா வேலை மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு

முறைசாரா துறைகள் மற்றும் கிக் வேலைகள் (‘ஊபரமயமாக்கல்’) அதிகரித்துள்ளது. இது தொழிலாளர்கள் மத்தியில் ஒற்றுமை உணர்வோ, தொழிற்சங்கங்களில் உறுப்பினராகும் எண்ணமோ இல்லாத ஒரு ஒழுங்கற்ற சமூகத்தை உருவாக்கியுள்ளது. சிந்தனைகளையும் உத்திகளையும் பரப்பும் தகவல் தொடர்பு கருவியாகச் சமூக ஊடகங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தாலும், சமூக ஊடகங்களே போராட்டங்களின் முக்கிய உந்துசக்தி என்று சொல்வது தவறான கூற்று.

சவால்களும் முற்போக்கு திசையும்
இந்த ஏழு கோட்பாடுகள், ஜென் இசட் தலைமுறையின் எழுச்சிக்குப் பின்னால் உள்ள நிலைமைகளை விளக்குகின்றன. இந்தப் போராட்டங்கள் நீண்டகால கட்டமைப்பு நெருக்கடிகளை அரிதாகவே கையாளுகின்றன.

பொதுவாக, ஜென் இசட் போராட்டங்களின் அரசியல் போக்கு நடுத்தர வர்க்கத்தினரின் கோபத்தில் முடிவடைகிறது.

சோசலிச சக்திகளுக்கு உள்ள சவால் என்னவென்றால், ஜென் இசட் தலைமுறைக்கு உள்ள உண்மையான குறைகளை ஒரு திட்டத்தின்படி ஒருங்கிணைத்து, சமூக உபரியில் (வரிப்பணத்தில்) அதிக பங்கைக் கேட்டு, இளைஞர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பயன்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

பேராசிரியர் விஜய் பிரசாத்
தமிழில்: சேது சிவன்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *