பெண் தொழிலளர் விடுதியில் ரகசிய கேமரா — பெண்கள் போராட்டம்
ஓசூர் அருகே நாகமங்கலம் பகுதியில் இயங்கும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பெண் தொழிலாளர்கள் கேளமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் “விடியல் ரெசிடென்சி” தங்கி பணி புரிந்து வருகின்றனர்.
இந்த விடுதியில் பல மாநிலங்களை சேர்ந்த பெண்களும் தங்கியுள்ளனர். இந்த விடுதியில் உள்ள குளியலறையில் ரகசிய கேமரா வைத்து பல பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் தொழிலளர்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) இரவு அங்கு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் தகவலின்படி, அந்த விடுதியில் வசித்து வந்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவர், நவம்பர் 2 ஞாயிற்றுக்கிழமை அன்று குளியலறையில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவை கவனித்துள்ளார்.
அவர் உடனே தனது தொழியான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த நீலு குமாரி குப்தா (22) என்ற பெண்ணிடம் இதைத் தெரிவித்ததாகவும், நீலா அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்தது போல நடித்து, தன் தோழி மற்ற பெண்களை அழைத்து வருவதற்கு முன் அந்தக் கேமராவை அகற்றியதாகவும் போலீசார் கூறினர். எனினும் இந்த சம்பவம் குறித்து பிற தொழிலாளர்கள் உதனப்பள்ளி போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கில் நீலு குமாரி மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு, சந்தேகத்தின் அடிப்படையில் நீலு குமாரி குப்தாவை கைது செய்து விசாரணை நடத்தியதில், அந்தக் கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை தனது ஆண் நண்பருக்கு நீலு குமாரி அனுப்பியிருந்ததும் , அந்த காணொளிகள் மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்தச் செய்தி பரவியதும், பெண் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்து, விடுதியின் முன்பாகக் கூடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ளன, தனியுரிமை மீறப்பட்டுள்ளது எனக் கூறி நவம்பர் 4 செவ்வாய்க்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தற்போது நீலு குமாரி குப்தா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஆண் நண்பர் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடைமுறைகள் குறித்து டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்
டாடா நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும்
அரசு தலையிட வேண்டிய நேரம்
டாடா எலெக்ட்ரானிக்ஸ் பெண்கள் விடுதியில் நடந்த இந்த சம்பவம், நிறுவனத்தின் பாதுகாப்பு குறைபாடையும் கவனக்குறைவையும் காட்டுகிறது. பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டிய இடத்தில் இப்படி நடப்பது மிகக் கவலைக்குரியது.
இந்த விடுதி, டாடா எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தமிழக அரசின் கூட்டிணைப்பில் (PPP முறையில்) ரூ.508 கோடி செலவில் நாகமங்கலத்தில் உருவாக்கப்பட்ட தொழிலாளர் தங்குமிட வளாகமாகும். 14 கட்டடங்களைக் கொண்ட இந்த வளாகம் போல, ஹோசூர், சென்னை SIPCOT, காஞ்சிபுரம் உள்ளிட்ட தொழிற்துறை மண்டலங்களிலும் இதே திட்டத்தின் கீழ் பல பெண்கள் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் இவ்விடுதிகள் ஒப்பந்த நிறுவனங்களுக்கு (third-party contractors) குத்தகைக்கு வழங்கப்படுகின்றன.
இதே நேரத்தில், தொழிலாளர் தங்குமிடங்களில் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்ந்து நிலவுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பெண்கள் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் இதே நிலையை வெளிப்படுத்தியது.
இதுபோன்ற பிரச்சினைகள் எழும்போதெல்லாம் நிறுவனங்கள் மற்றும் ஆளும் வர்க்கம் வட இந்திய தொழிலாளர்கள் தென்னிந்திய தொழிலாளர்கள் என்ற பிரிவினை வார்த்தைகள் மூலமாக மக்களைப் பிளவுபடுத்தி உண்மையான பிரச்சனைகளில் இருந்து அனைவரையும் திசை திருப்புகின்றன. இது கண்டிக்கப்பட வேண்டும். நீதி அனைவருக்கும் பொதுவானதாக வழங்கப்பட வேண்டும். அனைத்து இன மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் நீதி கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இந்த பிரச்சனையில் அரசு உடனடியாக தலையிட வேண்டும், தொழிலாளர் நலத் துறை இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இந்த ஒரு தொழிற்சாலை மட்டும் அல்ல — தமிழகத்தின் எல்லா தொழிற்சாலைகளிலும் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை நடைமுறைகள் குறித்து தொழிலாளர் நலத் துறை ஆய்வு செய்ய வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்புவதற்கு முறையான சங்கங்கள் அல்லது அமைப்புகள் இல்லாததால் தான இந்திய சூழலில் பல தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு மோசமான இடமாக மாறிவிட்டன.
இது தான் இன்று “திராவிட மாடல்” எனப் பெருமைப்படுத்தப்படும் ஆட்சியில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் உண்மை நிலை இவ்வாராகத்தான் உள்ளது.
பொது மக்கள் விழித்துக் கொண்டு உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது. பெண்களின் பாதுகாப்பும் தொழிலாளர் உரிமைகளும் தான் ஒரு சமூகத்தின் உண்மையான வளர்ச்சிக்கான அடிப்படை.
அதை உறுதி செய்வதே நமது அரசின் கடமை.
-தோழர் ஹிஷாம்
1 Comment
போராட்டம் குறித்த புகைப்படங்களை சேர்த்திருக்கலாம் தோழர். இது தமிழக அரசும், டாடா நிர்வாகமும் இணைந்து கட்டிய விடுதி… அந்த தகவலும் இதில் இடம்பெறவில்லை