குற்றங்களுக்கு துணை போகும் விக்டீம் ப்ளேமிங்!-சினேகா
ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது, குற்றவாளியின் மீது திரும்ப வேண்டிய கோபமும், வெறுப்பும் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதே திரும்புகிறது என்பது எவ்வளவு கொடூரமான விஷயம்!
கோவையில் நடந்த கொடூரமான சம்பவத்தில் கூட, கேள்விகள் என்னவாக இருக்கின்றன?
- “அந்த நேரத்தில் அங்கு ஏன் போனாள்?”
- “யாருடன் போனாள்?”
- “அவளுக்கு அங்கு என்ன வேலை?”
இந்தக் கேள்விகளின் பின்னால்ஒளிந்திருக்கும் ஆணாதிக்கச் சிந்தனை என்ன? பெண்கள் சுதந்திரமாக நடமாட உரிமை இல்லை; அவர்கள் எப்போதும் யாரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்; அவர்கள் சென்ற இடம், நேரம், உடை, நடத்தை எல்லாமே சமூகத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனைதானே இது?
ஒரு தாய் மகளுடன் அந்த வழியாகச் சென்றிருந்தால் யாராவது கேள்வி கேட்டிருப்பார்களா? காரில் தனியாக இருந்த ஆணைத் தாக்கி காரைக் கடத்தியிருந்தால், “அவன் ஏன் அந்த நேரத்தில் அங்கு போனான்?” என்று கேட்டிருப்போமா?
இல்லை! ஏனென்றால், ஆண்களுக்கு எல்லா நேரமும், எல்லா இடமும் உரிமை உண்டு என்று நம் சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கு மட்டும் நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், தடைகள்!
குற்றத்தை மறைக்கும் கூச்சல்!
சமூக வலைத்தளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வரலாற்றை, அவளது வாழ்க்கையை, அவளது தேர்வுகளை விசாரணை செய்பவர்கள், உண்மையில் என்ன செய்கிறார்கள்? குற்றவாளிகளுக்கு நியாயம் பேசுகிறார்கள். “பெண்தான் தவறாக நடந்துகொண்டாள், அதனால்தான் இது நடந்தது” என்ற கதையை உருவாக்கி, குற்றவாளிகளின் பொறுப்பைக் குறைக்க முயற்சிக்கிறார்கள்.
இது ஆணாதிக்கச் சமூகத்தின் மிக நயவஞ்சகமான வழி – குற்றத்தின் பாரத்தைக் குற்றவாளியிடமிருந்து பாதிக்கப்பட்டவளிடம் மாற்றுவது.
சமூகத்தின் கோழைத்தனம்!
“பெண்கள் தனியாக வெளியே போகக்கூடாது, இரவில் வெளியே வரக்கூடாது” என்று சொல்வதன் மூலம் நாம் என்ன ஒப்புக்கொள்கிறோம்? ஆண்கள் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள்; பெண்களின் பாதுகாப்பு பெண்களின் பொறுப்பு; ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதன் உள்நோக்கத்தின் பிரதிபலிப்புதானே! இது ஆணாதிக்கத்தின் அப்பட்டமான வெளிப்பாடின்றி வேறு என்ன?
“பெண்களைப் பாதுகாக்க முடியாது, அதை ஏற்றுக்கொள்” என்பது எவ்வளவு கோழைத்தனமான, தோல்வியுற்ற சமூகத்தின் அறிவிப்பு!
பாதிக்கப்பட்டவர்களைக் குறை கூறுவதை முதலில் நிறுத்துங்கள்
- குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை கேளுங்கள்.
- அரசையும் காவல்துறையையும் முறையாகச் செயல்படச் சொல்லுங்கள்.
பாதிக்கப்பட்டவரை குற்றம் சாட்டுவது குற்றத்திற்குக் துணை போவதற்குச் சமமானது மட்டுமல்ல – அது ஆணாதிக்கத்தை நிலைநிறுத்துவதும், குற்றவாளிகளை ஊக்குவிப்பதும் ஆகும். இது சமூகத்தைப் பின்னோக்கிக் இழுப்பது மட்டுமன்றி, சமூக முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதாகும்.
பெண்களின் சுதந்திரமும், பாதுகாப்பும் பேரம் பேச வேண்டிய விஷயங்கள் அல்ல (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டவை அல்ல). அவை அடிப்படை மனித உரிமைகள். இதைப் புரிந்துகொள்ளாத வரை, நாம் நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியில்லை!
– சினேகா பத்திரிகையாளர்