விஜய் பிரச்சார கூட்டத்தில் மக்கள் பலியானதற்கு யார் காரணம் ? – தோழர் பாலா
கடந்த 2 நாட்களாக ஒட்டுமொத்த ஊடகங்கள் ஒரு முகாமில் நின்று கருத்துக்களை பரப்புகின்றன,
சமூக ஊடகங்களில் இரண்டு முகாம்களாக பிரிந்து சண்டைகள் நடக்கின்றன,
அரசியல் கட்சிகள் தத்தமது அரசியலை செய்கின்றன,
அரசோ தன் கடமையை கடமைக்கு ஆற்றிக்கொண்டிருக்கிறது,
மக்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.
தனிநபராக, உச்ச நட்சத்திரமாக, புதிய அரசியல் தலைவராக திரு. விஜய் மற்றும் அவரது கட்சியை, தொண்டர்களை மட்டுமே குறை கூறும் எவரும் அரசாங்கம் Crowd management இல் தொடர்ந்து தோல்வியை காட்டிவருவதை நோக்கி கேள்வி எழுப்புவதில்லை.
அதே போல இந்த சம்பவத்தில் ஆளும் கட்சி தான் சதி செய்துள்ளது என்று பேசிவரும் எவரும் பிம்பத்தை மட்டுமே வைத்து ஸ்தாபன (கட்சி ) கட்டுபாட்டு, ஒழுங்குமுறை இல்லாத கட்சியின் கட்டமைப்பு குறித்து விமர்சிக்கவில்லை,
40 பேர் இறப்பிற்கு யார் பொறுப்பு விஜயா? அரசா? அல்லது மக்களா? என்று தனித்தனியாக தேடுவதை விட Crowd management செய்யவேண்டிய அரசின் முக்கிய பொறுப்பு, தவெக தொண்டர்களை சரியாக வழி நடத்தாத அதன் தலைமை, மக்களை முறையாக அரசியல் படுத்தாமல் அப்படியே வைத்திருக்கும் ( முற்போக்கு இயக்கங்கள் ) அரசும், சமூக அமைப்பையும் பற்றி நாம் கட்டாயம் பேச வேண்டும்.
தமிழகத்தில் படித்தோர் பகுத்தறிவு கொண்டோர் அதிகம் உள்ள மாநிலம் என விளம்பரம் செய்யும் இதே வேளையில் தான் பிம்ப சிறையில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையும் உள்ளதெனில் இதற்கு இத்தனை ஆண்டுகளாக ஆட்சி செய்த ஆட்சியாளர்களுக்கு எந்த பொறுப்பும் இல்லை என்பதா? எனவே மக்களை குறை சொல்லும் மேலோட்டமான பார்வை என்பது வெறும் பொது புத்தி கருத்தாக மட்டுமே இருக்க முடியும்.
அடுத்தாக அரசோ அதன் கட்டமைப்பை பயன்படுத்தி கடந்த கால அனுபவங்கள், மற்ற இடங்களில் இதுபோன்ற கூட்ட நெரிசலில் சம்பவங்களின் படிப்பினைகள் கொண்டு இதில் தீர்வு காணும் வடிவத்தை, ஒழுங்குமுறைகளை வடிவமைத்து அதை ஒவ்வொரு முறையும் கச்சிதமாக செயல்படுத்தியும் இருக்கவேண்டும், 2024 அக்டோபர் மாதம் சென்னையில் அரசு நடத்திய ஏர்சோவில் ஏற்பட்ட மரணங்களிலிருந்து கூட அரசு பாடம் கற்றுகொண்டு அந்த சம்பவத்தின் அனுபவத்தையாவது பிற இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் வகையில் நடக்கும் நிகழ்வுகளில் அரசாங்கம் முறையாக பயன்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால் தற்போது அரசு மீண்டும் தன் நிர்வாக திறனின்மையையே வெளிப்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த பிறகு துரித கதியில் நடவடிக்கையை அரசு எடுப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது.
கூட்ட நெரிசலை தடுக்க முன்னெச்சரிக்கையாக காவல்துறை டிரோன் ஆய்வு, கள ஆய்வு மேற்கொண்டு கூட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க கூடிய அனைத்து கட்டமைப்புகளும் காவல்துறையிடம் உள்ளது. அவற்றை பயன்படுத்தி கூட்டம் கூடுவதை காவல்துறை தடுத்திருக்கலாம். ஆனால் நிலைமை கை மீறிய பிறகே காவல்துறை செயல்பட்டதாக தெரிகிறது.
41 பேரை கொன்று தான் நேற்று அரசியலுக்கு வந்த ஒரு கட்சியை எதிர்கொள்ள திமுக மாதிரியான பெரும் கட்சி அரசை பயன்படுத்தி முயற்சி செய்கிறது என்று கூறினால் எப்படி வேடிக்கையாக இருக்குமோ அதே போல தான் அரசு தன் கடமையை செய்தது அதற்கு மேல் அரசிற்கு பொறுப்பில்லை என கூறுவதும்.
ஒரு உதாரணத்திற்கு, அரசியல் கட்சி நிகழ்வில் இந்த அசம்பாவிதம் நடக்காமல் வேறொரு நிகழ்வில் அதாவது அரசு, மதம், கலாச்சாரம், பொழுதுபோக்கு போன்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்டிருந்தாலும் அரசை குறை கூறாமல் நிகழ்சி ஏற்பாட்டாளர்களை தான் குறை கூறுவோமா?
10,000 பேர் தான் கூடுவார்கள் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினார்கள் அதனால் தான் குறைந்த எண்ணிக்கையிலான காவல்துறையினரை பயன்படுத்தினோம் என்ற பதில் எல்லாம் ஏற்புடையதாக இருக்காது. கரூரில் விஜய் தனது பியச்சாரத்தை துவங்க 7 மணிநேரம் தாமதமான போது மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது. அப்படியானால் அரசின் உளவுத்துறையின் வேலை மந்தமானதா என்ற கேள்வி எழுகிறது
சம்பவம் நடந்த பிறகு துரித கதியில் நடவடிக்கையை அரசு எடுப்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது. இதற்கு முன்னர் கள்ளச்சாராயம் குடித்து தற்போதை விட அதிக எண்ணிக்கையில் மக்கள் உயிரிழந்தபோது இது மாதிரியான அணுகுமுறையை வெளிபடுத்தாத முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் எல்லாம் தற்போது ஓடோடி வந்து பார்வையிட்டு மீடியாவை சந்திக்கும்போது இதை நாங்கள் அரசியலாக்கவில்லை என்று கூறுகிறார்கள். இதுதான் ஆட்சியில் உள்ளவர்கள் மிக சாமர்த்தியமாக அரசியல் காய் நகர்த்தியுள்ளதை காட்டுகிறது.
அரசு 41 பேரை தனது சதியின் மூலம் கொலை செய்து நேற்று அரசியலுக்கு வந்த ஒரு கட்சியை எதிர்கொள்ள திமுக மாதிரியான பெரும் கட்சி அரசை பயன்படுத்தி முயற்சி செய்கிறது என்று கூறுவது எப்படி வேடிக்கையாக இருக்குமோ அதே போல தான் அதற்கு மேல் இந்த விசயத்தில் அரசிற்கு பொறுப்பில்லை என கூறுவதும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைத் மட்டும் அரசு தன் கடமையாக செய்தது.
ஆனால் மிகவும் மோசமான அசம்பாவிதம் ஒன்று தங்கள் கூட்டத்தில், அதுவும் தங்கள் கட்சி தொண்டர்கள் ரசிகர்களுக்கு நடந்துள்ளது. அப்போது விஜயோ அல்லது தவெக மாவட்ட மற்றும் மாநில தலைமையோ உடனடியாகவும் நேரிலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருக்க வேண்டாமா?
குறைந்தபட்சம் அக்கட்சியின் தலைமை ஊடகங்களையாவது நேரடியாக சந்தித்திருக்க வேண்டுமா இல்லையா? இதை எதையும் விஜயோ தவெக தலைவர்களோ செய்யவில்லை. மாறாக காலம் கடந்த நிவாரணம் அறிவிப்பு, வருத்தம் தெரிவிப்பு எல்லாம் அவர்கள் தரப்பில் வெளிவந்துள்ளது.
தொடர்ந்து பிரச்சார மையத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்படுத்தி கூட்டத்தை அதிகரிக்க செய்யும் செயல்பாடு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இப்போதாவது விஜய் உணரவேண்டும். இதற்கெல்லாம் தவெக மற்றும் விஜய் தான் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டும்.
பிம்பத்தை வைத்து பெயரளவில் கொள்கை தலைவர்களாக பெரியார் அம்பேத்கரை பயன்படுத்திக்கொண்டு கார்பரேட் அரசியல் வியூகங்களை மட்டும் பயன்படுத்தி கட்சி கட்டமைப்பில் மிகப்பெரிய கோட்டை விட்டதன் விழைவு தான் இன்று தவெக அனுபவிக்கிறது.
இதிலிருந்து மக்கள் பெறும் பாடம் என்பது மிக மோசமானதாகதான் உள்ளது. அதாவது கட்டமைப்பு இல்லாத கட்சியின் பின் அணிதிரளவேண்டாம் என்ற கருத்தை விட எந்த கட்சியின் பின்னாலும் அணிதிரளவேண்டாம் என்ற கருத்தே இதிலிருந்து வரும் அபாயம் உள்ளது.
ஒரு புதிய கட்சி வரும் போது பெரும்பாலும் நல்லது செய்யவேண்டும் என்ற பொதுநல எண்ணத்தோடு தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொள்வோர் தான் அதிகமாக இருப்பர். இதில் எந்த கட்சி பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பர். அவர்கள் எல்லாம் பெரும்பாலும் அக்கட்சி பொது நல எண்ணங்களை செயலில் பிரதிபலிக்காமல் இருக்கும் போது கட்சியில் இருந்து வெளியேறி அரசியலிலிருந்து தள்ளிநிற்பர்.
ஆனால் கரூரில் நடந்த அசம்பாவிதங்களிலிருந்து மக்கள் எந்தவொரு கட்சியின் பின்னாலும் அணிதிரள அஞ்சுவர்.
ஆனால் கரூரில் நடந்த அசம்பாவிதமானது மக்கள் எந்தவொரு கட்சியின் பின்னாலும் அணிதிரள அச்சத்தை உருவாக்கும் .
மேலும் இந்த நிகழ்வை பயன்படுத்தி அரசு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் பொதுவாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு கெடுபடியான விதிமுறைகளை விதிக்க துவங்கினால் அது ஆளும் கட்சியை தவிர்த்து அனைத்து கட்சிகளுக்குமே எதிராக அமையும்.
( தற்போதும் ஜனநாயகப் பூர்வமான போராட்டம் நடத்துவதற்கு இடதுசாரிகள் உட்பட எந்த கட்சியினரும் எளிமையாக அனுமதியோ இடமோ பெற முடியும் என்ற சூழல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது )
ஒரு அரசியல் கட்சியாக இதையெல்லாம் கருத்தில் கொண்டு விஜய் மற்றும் தவெக திறம்பட செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அக்கட்சியோ அரசியலை, அதிகமாக கூட்டம் காட்டுவது ஆளும் கட்சியை திட்டுவது என்றளவிலேயே சுருங்கியுள்ளது. ரசிகர்களை வலி நடத்த தெரியாத ஒரு நபர் மக்களை வழிநடத்தும் தலைவராக எப்படி இருக்க முடியும் என்ற விமர்சனம் இவ்விடத்தில் தவிர்க்கவியலாதாக உள்ளது.
அரசு, அரசியல் கட்சிகள் தவிர ஊடகங்களுக்கும் இந்த அசம்பாவிதத்திற்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.
எத்தனையோ அரசியல் கட்சிகள் தினம் தினம் எதாவது ஒரு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டும், போராட்டங்கள் நடத்திக்கொண்டும், கருத்து பரப்புரைகளை செய்துகொண்டும் உள்ளன அதையெல்லாம் மீடியாக்கள் இப்படி தான் நொடிக்கு நொடி ஒளிபரப்புகின்றனவா? குறைந்தபட்சம் தலைவர்களின் செய்தியாளர் சந்திப்பையாவது முழுமையாக அவை ஒளிபரப்புகின்றவா? இல்லையே.
ஆனால் புதிதாக கட்சி தொடங்கிய விஜயை சினிமா நட்சத்திர என்பதற்காக செய்தி ஊடகங்களின் சமீபத்திய செயல் தங்களது டிஆர்பி ஐ உயர்த்த உடனுக்குடன் செய்தி, அனைத்தும் செய்தி என மக்கள் மத்தியில் ஏற்கனவே பெரிதாக இருந்த பிம்பத்தை மேலும் ஊதி பெரிதாக்கவே செய்தது.
இது பெருந்திரளான மக்கள் மத்தியில் விஜயின் நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் ஆர்வத்தை அவர்களுக்கு தூண்டியது என்றால் மிகையாகாது.
ஆகவே நிர்வாக திறனற்ற அரசு, கட்டமைப்பு மற்றும் தலைமை பண்பு இல்லாத கட்சி, சமூக பொறுப்பற்ற வியாபார நோக்கம் மட்டுமே கொண்ட ஊடகங்கள் இவையனைத்தும் தான் நடந்த அசம்பாவிதத்திற்கு பொறுப்பு.
அப்படியானால் மக்களுக்கு பொறுப்பில்லையா என்றால், மேற்கூறிய எல்லாவற்றையும் (அரசு, அரசியல் கட்சி, ஊடகங்கள்) நம்பி வீதிக்கு வந்த மக்கள் பாதிக்கப்பட்ட விக்டிம் மட்டுமே!