ஐ.நா. சபையால் போர்களை நிறுத்த முடியுமா? – பேரா. விஜய் பிரசாத்
ஐ.நா சபையால் விளையாட்டுக்கு நடுவே நடுவர் விசில் ஊதுவதது போல தான் செயல்பட முடியும். அந்த அமைப்பால் எந்த போரையும் நிறுத்த முடியாது. வலிமையான நாடுகள் ஐ.நா.வின் கட்டுப்பாடுகளை உடைத்து விடும்.
இரண்டாம் உலகப்போரின் பேரழிவிற்குப் பிறகு உருவான ஐக்கிய நாடுகள் சபை (UN) இந்த வாரம் தனது 80 ஆவது ஆண்டை நிறைவு செய்கிறது. உலகின் வெவ்வேறு நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரே ஒப்பந்தமாக ஐ.நா. சாசனம் தான் உள்ளது.
1945 ஆம் ஆண்டு ஐம்பது நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த சாசனத்தை ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் பல நாடுகள் அதில் இணைந்தன. இன்று 193 நாடுகள் உறுப்பினராக உள்ளன. ஐ.நா சபை ஒரு புதிய உலகத்தை உருவாக்க வில்லை மாறாக உலக நாடுகள் சர்வதேச உறவுகளில் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை வகுத்தது. இதனைத் தொடர்ந்து, சாசனத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்வதற்காக 1948 இல் உலக மனித உரிமைகள் பிரகடனம் (Universal Declaration of Human Rights-UDHR) தேவைப்பட்டது.
ஆனால், அதுவும் கடுமையான சர்ச்சைக்குள்ளானது. அரசியல் மற்றும் குடியுரிமை உரிமைகள், சமூக மற்றும் பொருளாதார உரிமைகளில் இருந்து பிரிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த அடிப்படையான அரசியல் பார்வை வேறுபாடுகளே ஐ.நா. சபைக்குள் ஆழமான பிளவுகளை உருவாக்கியுள்ளது. இதுவே உலகின் பல பிரச்சனைகளுக்கு உறுதியான தீர்வுகளைக் கண்டறிவதைத் தடுக்கிறது.
ஐ.நாவுக்கு தற்போது 80 வயது. இது இவ்வளவு காலம் நீடித்திருப்பதே ஒரு அதிசயம். 1920 ஆம் ஆண்டில் உலகின் முதல் சர்வதேச அமைப்பான ‘நாடுகளின் சங்கம்’ (League of Nations) என்பது உருவாக்கப்பட்டது. இது 18 ஆண்டுகளே நீடித்தது. அதாவது இரண்டாம் உலக போர் மற்றும் சீனா மீது ஜப்பான் போர் தொடுப்பதற்கு முன்பு வரை இந்த அமைப்பு இருந்தது. இந்த அமைப்பின் கட்டமைப்பிலேயே குறைபாடுகள் இருந்தன. அதன் தோல்வியிலிருந்து கற்ற பாடங்களின் அடிப்படையில் தான் ஐ.நா சபை உருவாக்கப்பட்டது. ஐ.நா சபையின் பலம் என்பது பல நாடுகள் அதில் இணைந்து சமூகமாக இருப்பதில் தான் உள்ளது. அந்த வலுவிழந்தால் ஐ.நா அவையின் பலமும் குறையும்.
சுயாதீன அமைப்பாக உள்ள “ஐ.நா சபை ஒரு தேவதையைப் போல பறந்து வந்து, போர் புரியும் நாடுகளின் காதில் ரகசியம் சொல்லி அவர்களின் சண்டையை நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. ஐ.நா சபையால் விளையாட்டுக்கு நடுவே நடுவர் விசில் ஊதுவதது போல தான் செயல்பட முடியும். அந்த அமைப்பால் எந்த போரையும் நிறுத்த முடியாது. வலிமையான நாடுகள் ஐ.நா.வின் கட்டுப்பாடுகளை உடைத்து விடும்”. அரசியல் களத்தின் அனைத்து பக்கங்களுக்கும் ஐ.நா ஒரு வசதியான ‘பஞ்சிங்பேக்’ (குத்துச்சண்டைப் பை) ஆக உள்ளது. நெருக்கடிகள் தீர்க்கப்படாவிட்டாலும், நிவாரண முயற்சிகள் தோல்வியடைந்தாலும் அதற்கு ஐ.நா அவை தான் காரணம் என சொல்லப்படுகிறது.
காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை ஐ.நா. சபையால் நிறுத்த முடியுமா?
பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை ஐ.நா மிகக் கடுமையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐ.நா சபை பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் 2024 ஏப்ரல் 8 அன்று காசாவில் இனப்படுகொலை நடக்கும் போது ‘காசா ஒரு கொலைக்களம், பொதுமக்கள் முடிவில்லாத மரண சுழற்சியில் சிக்கியுள்ளனர்’ கூறினார். மேலும் 2024 ஆகஸ்ட் 22 அன்று காசாவில் நிலவும் பஞ்சம் ‘ஒரு மர்மமான விஷயம் அல்ல அது மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு பேரழிவு, தார்மீக ரீதியாக அது ஒரு குற்றம்’ இது மனிதகுலத்தின் தோல்வி என்றும் கண்டித்துள்ளார்.
இவை மிகவும் சக்திவாய்ந்த வார்த்தைகளாக இருந்தாலும் ஐ.நா.வின் செயல்திறனை கேள்விக்குள்ளாக்க துவங்கியது. சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகளைப் பற்றிவலிமை மிகுந்த சொற்கள் வாயிலாக பேசும் ஒரு அமைப்பு, அதே சட்டங்கள் மோசமாக மீறப்படும்போது நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு நிலையில் உள்ளது. ஏன் ஐ.நா. நடவடிக்கை எடுக்க முடியவில்லை?
ஐ.நா அவை ஒரு ஒற்றை அமைப்பல்ல வெவ்வேறு அதிகாரம் மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட இரண்டு தனித்துவமான அமைப்புகளின் கூட்டாக அது செயல்படுகிறது. ஐ.நா.வின் மிகப் பொதுவான முகமாக ஐ.நா. பாதுகாப்பு சபை (UNSC) விளங்குகிறது. இது தான் ஐ.நா அவையின் நிர்வாகக்கிளையாக நிற்கிறது. இன்னொரு அமைப்பு ஐ.நா பொதுச் சபை.
பாதுகாப்பு அவை
ஐ.நா பாதுகாப்பு அவையில் 15 நாடுகள் உள்ளன. இதில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உள்ளன. இவைகளிடம் வீட்டோ அதிகாரம் உள்ளது. மேலும் முடிவுகளை கட்டுப்படுத்தும் இடத்தில் இவை உள்ளன. பாதுகாப்பு அவையில் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் ஐந்தில் ஒரு நாட்டுக்கு மட்டும் விருப்பம் இல்லை என்றால் கூட அந்நாடு தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீமானத்தை தோற்கடிக்க முடியும். ஒவ்வொருமுறை போர் நிறுத்தத்திற்காக பாதுகாப்பு அவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தையும் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்த தீர்மானத்தை தோற்கடிகும். இந்த அதிகாரத்தின் மூலமாக பலவீனமான நாடுகளின் மீது கூட அமெரிக்கா தனது ஆதிக்கத்தை திணிக்கிறது. 1972 இல் இருந்து பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 45 க்கும் மேற்பட்ட தீர்மானங்களை அமெரிக்கா தோற்கடித்துள்ளது.
பொதுச்சபை
ஐ.நா பாதுகாப்பு அவையானது பொதுச்சபையின் சார்பாக செயல்படுகிறது. இதில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக இங்கு உலகின் கருத்தை தீர்மானிக்கும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்றலாம். ஆனால் இந்த தீர்மானங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன. உதாரணமாக 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலின் இனப்படுகொலைப் போர் துவங்கிய பிறகு 2025 ஜூன் வரை ஐ.நா பொதுச்சபை போர் நிறுத்தத்தைக்கோரும் ஐந்து முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் அவை அனைத்தும் புறக்கணிக்கபட்டன. ஐ.நா. அமைப்பில் பொதுச்சபைக்கு உண்மையான அதிகாரம் எதுவும் இல்லை.
ஐ.நா. ஒரு சுயாதீன இராணுவமோ அல்லது ஒரு உலக அரசாங்கமோ அல்ல. இது அதன் உறுப்பு நாடுகளின் கூட்டமைப்பாகும். அதன் அதிகாரம் பெரும்பாலும் அதன் உறுப்பினர்களின் அரசியல் விருப்பத்திற்கு உட்பட்டது. அது விதிமுறைகளை வகுக்க முடியும். ஆனால் அவற்றை பெரிய சக்திவாய்ந்த நாடுகள் எதிர்க்கும் போது ஐ.நா சபையால் அந்நாடுகளை கட்டாயப்படுத்த முடியாது.
ஐ.நா.வில் உள்ள பிற அமைப்புகள்
ஐ.நா.வின் மற்றொரு பாதி அதனுடன் இணைந்துள்ள எண்ணற்ற அமைப்புகளாகும், இவை ஒவ்வொன்றும் நவீன யுகத்தில் உருவாகும் ஒவ்வொரு நெருக்கடியையும் சமாளிக்க அமைக்கப்பட்டவை.
இதில் சில அமைப்புகள் ஐ.நா.விற்கும் முன்பே உருவாக்கப்பட்டவை. உதாரணமாக ஐ.நா வுடன் உள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation) 1919-இல் உருவாக்கப்பட்டது. பின்னர் 1946 ஆம் ஆண்டு ஐ.நா., வுடன் ஒரு சிறப்பு அமைப்பாக இணைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உலக உணவுத் திட்டம் (WFP) , அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையர் ( United Nations High Commissioner for Refugees). ஐ.நா. குழந்தைகள் நிதியம் (UNICEF) ,உலக சுகாதார நிறுவனம் (WHO), யுனெஸ்கோ (UNESCO) , ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) உள்ளிட்ட அமைப்புகள் ஐ.நா வுடன் இணைந்தன.
உதவி மட்டுமே செய்ய முடியும்
இந்த நிறுவனங்கள் இல்லையென்றால், உலகளவில் நடைபெறும் துன்பங்கள் நம் கண்களுக்கு தெரியாமல் போகலாம். தாராளமயமாக்கல் கொள்கைகளின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் போர்கள் பல நாடுகளின் சமூக பாதுகாப்பு வலையமைப்புகளை சீரழித்துவிட்டன. இது அந்நாடுகள் தங்கள் நாட்டில் நிலவும் நெருக்கடி மற்றும் துன்பங்களை போக்கும் வகையில் செயல்படுவதற்கான திறனையும் அழித்து விட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள மக்களுக்கு உதவும் வகையில் போதிய அளவில் என்ஜிஓ-க்கள் உலகம் முழுவதும் பரவி இருக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முழு பொறுப்போம் ஐ.நா. அமைப்புகளுக்கு வந்தது. இவ்வாறு தான் உலகம் முழுவதும் மனிதாபிமான உதவிகள் செய்யும் அமைப்பாக ஐ.நா உருவானது. அவற்றின் பொறுப்பு வியக்கதக்கதாக இருந்தாலும், முடிவுகள் மிகவும் மோசமாக உள்ளன.
இதற்கு அவ்வமைப்புகளுக்கு உலக நாடுகளின் தரும் குறைந்த நிதியுதவி ஒரு எடுத்துக்காட்டாகும். 2022-இல், ஐ.நா.வின்மொத்தச் செலவு 67.5 பில்லியன் டாலராக இருந்தது. அதே ஆண்டு ஆயுதங்களுக்காக சுமார் 2 டிரில்லியன் டாலர்கள் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த குறைந்த நிதியுதவியின் காரணமாக ஐ.நா. மற்றும் அதன் நிறுவனங்களின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது.
ஐ.நா. சபைக்குள் சீர்திருத்தம்
பனி போர் முடிவுக்கு வந்தப் பிறகு, சோவியத் ஒன்றியம் சிதறிய பிறகு, உலக அமைப்பின் முழு சமநிலையும் மாறியது. இதனைத்தொடர்ந்து ஐ.நா. சபை அதனுள் சீர்திருத்தம் செய்வதற்காக தொடர் முன் முயற்சிகள் எடுத்து வருகிறது.
பவுட்ரோஸ்பவுட்ரோஸ்-காலியின் அமைதிக்கான திட்டம் (An Agenda for Peace-1992) மற்றும் வளர்ச்சிக்கான திட்டம் (An Agenda for Development-1994) முதல் கோபி அன்னானின் ஐ.நா அவையை புதுப்பித்தல் (Renewing the United Nations-1997), அந்தோணியோ குட்டரெஸின் ஒரு பொதுத்திட்டம் (Our Common Agenda-2021), எதிர்கால உச்சி மாநாடு (Summit of the Future-2024), மற்றும் ‘ஐநா 80 சிறப்புப்பணிக்குழு (Task Force-2025) வரை.
ஐ.நா 80 சிறப்பு பணிக்குழு என்பது இதுவரை ஐ.நா. சபை முயற்சித்த சீர்திருத்தங்களிலேயே மிக தீவிரமானதாகும். எனினும், அதன் முக்கிய இலக்குகளான உள் செயல்திறன், ஆணைகளின் மறுபரிசீலனை, மற்றும் திட்டங்களின் ஒருங்கிணைப்பு ஆகியவை ஏற்கனவே பலமுறை முயற்சிக்கப்பட்டவையே. இதுகுறித்து ஐ.நா.வின் கொள்கைக்கான துணைச் செயலாளர் மற்றும் ஐ.நா 80 சிறப்பு பணிக்குழுவின் தலைவர் கய் ரைடர், “இந்த முயற்சியை நாங்கள் ஏற்கனவே பலமுறை செய்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
ஐ.நா.வின் இந்தத் திட்டங்கள் அதன் சொந்த அமைப்பு சார்ந்த பலவீனங்களையே மையமாகக் கொண்டுள்ளன. ஆனால் அவ்வமைபின் வேலைகளை தடுக்கும் மிகப் பெரிய அரசியல் ரீதியான கேள்விகளுக்கு இவை தீர்வு காணவில்லை. பரந்த நோக்கிலான ஓர் செயல்திட்டத்தில் பின்வரும் அம்சங்கள் இடம்பெற வேண்டும்:
- ஐ.நா. தலைமையகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்
ஐ.நா. தலைமையகம் அமெரிக்காவை விட்டு வெளியேறி தெற்குலக நாடுகளில் அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஏறக்குறைய ஐ.நா அவையின் அனைத்து அமைப்புகளும் ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் தான் அமைந்துள்ளன. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஆகிய நாடுகளை விமர்சிக்கிற கண்டிக்கிற ஐ.நா. அதிகாரிகளை தண்டிக்கிற வகையில் மேற்குலக மற்றும் ஐரோப்பிய நாடுகள் அவர்களுக்கு விசா மறுப்பது அல்லது தடைவிதிப்பது போன்ற உக்திகளை மேற்கொள்கின்றன. இதனால் அவர்கள் அந்த அலுவலகம் வரமுடியாமல் பணிகள் பாதிக்கப்படும் சோல் கூட உருவாகும். எனவே தலைமையகத்தை மாற்றுவது இவற்றை தடுப்பதற்கான குறைந்தபட்ச முயற்சியாக இருக்கும்.
- ஐ.நா.வுக்கான நிதியை தெற்குலக நாடுகள் அதிகரிக்க வேண்டும்.
தற்போது, ஐ.நா. அமைப்பிற்கு மிகப்பெரிய அளவில் நிதி தரும் நாடாக அமெரிக்கா (22%) மற்றும் சீனா (20%) ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே உள்ளன. சீனா தவிர்த்து பார்த்தால் பிற தெற்குலக நாடுகள் ஐ.நா. வரவு-செலவுத் திட்டத்தில் சுமார் 26% பங்களிக்கின்றன. சீனாவையும் சேர்த்துப்பார்த்தால் ஐ.நா அவைக்கு கொடுக்கப்படும் நிதியில் தெற்குலக நாடுகள் தரும் பங்களிப்பு 48 சதவீதமாகும். இது கிட்டத்தட்ட 50 சதவீதமாகும். ஐ.நா அவைக்கு தான் கொடுக்கும் நிதியை ஆயுதமாக வைத்து அமெரிக்கா அவ்வமைப்பின் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையில் அமெரிக்காவையும் தாண்டி ஐ.நா அவைக்கு அதிக நிதி உதவி செய்யும் நாடாக சீனா மிகப்பெரிய பங்களிப்பாளராக மாற வேண்டிய நேரம் இது.
- நாடுகளுக்குள் மனிதாபிமான உதவிகளுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும்
நாடுகள் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச்செலுத்துவதை விட மனிதாபிமான நெருக்கடிகளை குறைப்பதற்கே பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டும். ஐ.நா. சபையானது தேவைப்படுபவர்களுக்கு உதவுவதை மட்டுமே முக்கிய பணியாக கொண்டுள்ள நிறுவனமாக இருக்க கூடாது. ஆப்பிரிக்ககண்டத்தில் உள்ள பல நாடுகள் கல்வி மற்றும் சுகாதார பராமரிப்பு மேம்பாட்டை விட கடனைச் செலுத்துவதற்கே பணத்தை அதிகம் செலவழிக்கின்றன. இதனால் அத்தியாவசிய மேம்பாடு உள்ளிட்ட பணிகளை செய்ய முடியாமல், அவை UNICEF, UNESCO, மற்றும் WHO மூலம் உதவி செய்து வருகின்றன. இந்த அமைப்புகளின் உதவியை நம்பியிருப்பதை விட ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- ஆயுத வர்த்தகத்தை கட்டுபடுத்துதல்
ஆதிக்கத்திற்காக மட்டுமல்ல, ஆயுத வியாபாரிகளின் இலாபத்திற்காகவும் போர்கள் நடத்தப்படுகின்றன. வருடாந்திர சர்வதேச ஆயுத ஏற்றுமதியின் அளவு $150 பில்லியனை நெருங்குகின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் 2020 மற்றும் 2024-க்கு இடையேயான ஆயுத விற்பனையில் 73% பங்கைக்கொண்டுள்ளன. 2023 இல் மட்டும், முதல் நூறு ஆயுத உற்பத்தியாளர்கள் சுமார் $632 பில்லியன் சம்பாதித்தனர் (பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களின் அமெரிக்க இராணுவத்திற்கான விற்பனை மூலம்). இதற்கிடையில், மொத்த ஐ.நா. அமைதிப்படை வரவு-செலவுத் திட்டம் $5.6 பில்லியன் மட்டுமே, மற்றும் இந்த ஐ.நா அமைதிப்படைக்கான வீரர்கள் 92% தெற்குலக நாடுகளில் இருந்தே வருகிறார்கள். மேற்குலக நாடுகள் போர்கள் மூலமாக சம்பாதிக்கின்றன அதே நேரத்தில் தெற்குலக நாடுகளோ போர்களை தடுக்கும் பணியில் தங்கள் வீரர்களை இழக்கின்றன.
- பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சி கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
ஐ.நா பாதுகாப்பு அவையில் இருந்து அதிகம் மிகுந்த சில நாடுகளை சிதறடிப்பதற்காக, ஆப்பிரிக்க ஒன்றியம் நாடுகளின் பிராந்திய அமைதி மற்றும் வளர்ச்சி கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அவற்றின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆப்பிரிக்கா, அரபு உலகம், அல்லது லத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐ.நா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர்கள் இல்லையென்றால், இந்த பிராந்தியங்கள் ஏன் P5-என அழைக்கப்படுகிற வீட்டோ அதிகாரத்தால் கைதியாக வைக்கப்பட வேண்டும்? பிரச்சனைகளை தீர்க்கும் அதிகாரம் ஐ.நா சபையின் பாதுகாப்பு அவையிடம் மட்டுமே குவிந்திருக்காமல், பிராந்திய அமைப்புகளிடம் அதிகமாக ஒப்படைக்கப்பட்டால், ஐநா பாதுகாப்பு அவையின் முழுமையான அதிகாரம் ஓரளவுக்குக் குறையும்.
பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதிய 36 ஆவது செய்தி மடல்
தமிழில் தோழர் தீபக்