Tamil Marx

ஆப்பிரிக்கா கட்டுரைகள்

சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை முடக்கியுள்ளது-விஜய் பிரசாத்

சர்வதேச நாணய நிதியம் எவ்வாறு ஆப்பிரிக்காவின் வளர்ச்சியை முடக்கியுள்ளது-விஜய் பிரசாத்
  • PublishedJuly 3, 2025

2025 இன் தொடக்கத்தில், சூடானின் கடன் முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (debt-to-GDP ratio) 252 சதவீதமாக உள்ளது. அதாவது அந்நாட்டின் மொத்தக் கடன் அந்நாட்டின் ஒரு ஆண்டு உற்பத்தியை விட 2.5 மடங்கு அதிகமாக உள்ளது. சூடான் ஏன் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என புரிந்துகொள்வது கடினமல்ல. அந்நாடு பல ஆண்டுகளாக போரில் சிக்கியுள்ளது. இந்த போர் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதி உறுதித்தன்மைக்கான எல்லா வகையான வாய்ப்பையும் கடுமையாக சீர்குலைத்துள்ளது.

ஒரு வகையில் இயற்கை வளங்களின் அடிப்படையில் பார்க்கும்போது சூடான் மிகவும் வளமான நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், குடும்ப வருமானம் மற்றும் செல்வத்தின் அடிப்படையில் மிகவும் ஏழ்மையான நாடாக உள்ளது.

வளர்ந்து வரும் கடன் நெருக்கடி

2022 ஆண்டின் படி, சகாரா பாலைவனத்திற்கு தெற்கே உள்ள நாடுகளின் சராசரி கடன்-ஜிடிபி விகிதம் 60 சதவீதமாக இருந்தது. இது 2013 இல் இருந்த 30 சதவீதத்திலிருந்து தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.ஆப்பிரிக்க நாடுகளின் மொத்தக் கடன் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும் கடனை திருப்பிச் செலுத்தும் செலவுகள் 163 பில்லியன் டாலர்களாக உள்ளது. வளரும் நாடுகளின் மொத்தக் கடன் 2023 இல் 11.4 டிரில்லியன் டாலர்களை எட்டியது. இது 2004 இல் இருந்த 2.6 டிரில்லியன் டாலர்களை விட நான்கு மடங்கு அதிகமாகும். இந்த அசாதாரண கடன் அதிகரிப்பு குறைந்த வருமானம் கொண்ட அறுபத்தெட்டு நாடுகளில் முப்பதுக்கும் அதிகமான நாடுகளில் கடன் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

கடன் சுமையின் இரட்டைப் பாதிப்பு

இந்த பெருகிவரும் கடன் அதிகரிப்பு இரண்டு முக்கிய வழிகளில் அந்நாடுகளைப் பாதிக்கிறது:

1. கடன் நெருக்கடியும் வணிகக் கடனின் அதிகரிப்பும்

கடன் திருப்பிச் செலுத்த முடியாமல் போகும் அபாயம் அதிகரித்து, மேற்கொண்டு கடன் பெறுவது மிகவும் கஷ்டமான சூழலாகிவிட்டது. இந்த கடனும் பெரும்பாலும் வணிகரீதியாக கடன் கொடுப்பவர்கள் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. ஆப்பிரிக்காவின் மொத்த வணிகக் கடன் இப்போது அதன் மொத்த வெளிநாட்டுக் கடனில் 43 சதவீதமாக உள்ளது. இது 2000 ஆம் ஆண்டில் இருந்ததை விட இரண்டு மடங்கு அதிகம்.

2. நிதி நெகிழ்வுத்தன்மையின் இழப்பு

அதிகமான பணத்தை கடனைக் கட்டுவதற்காக செலவு செய்வதன் காரணமாக ஆப்பிரிக்க நாடுகளின் நிதி நெகிழ்வுத்தன்மை கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் பல ஆப்பிரிக்க நாடுகள் கல்வி, சுகாதாரம், தொழில்துறை வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்புகள் ஆகியவற்றிற்கான செலவினங்களைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. பல ஆப்பிரிக்க நாடுகள் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் இவ்வாறு அத்தியாவசிய வளர்ச்சிக்கான நிதியிலிருந்து விலகும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

2022 இல் 22 நாடுகள் சுகாதாரத் துறைக்கு செலவிட்டதை விட அதிக அளவிலான பணத்தை கடனுக்கு வட்டி செலுத்த செலவிட்டுள்ளன; அதில் ஆறு நாடுகள் கல்விக்கு செலவிட்டதை விட வட்டியையும் கடனையும் செலுத்த அதிகம் செலவிட்டுள்ளன. அதிக கடன் சுமையின் விளைவாக இவ்வாறு அத்தியாவசிய வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய முதலீடுகளை வெட்டிவிடக் காரணமாகின்றன.

விதிவிலக்கான சில நாடுகள்

அதே நேரத்தில் ஒரு சில ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமே இது போன்ற நெருக்கடியிலிருந்து தனது நாட்டைப் பாதுகாத்துக் கொண்டுள்ளன. அத்தகைய நாடுகள் பெரும்பாலும் குறைந்த மக்கள்தொகை கொண்ட, அதிக மதிப்புடைய பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

அதில் ஒரு நாடு தான் கினியா. அந்நாட்டில் 18 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஆனால் அந்த நாடு ஆண்டுதோறும் 5.13 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. அதன் கடன்-உள்நாட்டு உற்பத்தி விகிதம் 31.3 சதவீதமாக உள்ளது. இதே போல மற்றொரு நாடு போட்ஸ்வானா; இந்த நாட்டில் 25 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இந்த நாடு வைரங்களை ஏற்றுமதி செய்வதன் மூலமாக ஆண்டுதோறும் 5.33 பில்லியன் டாலர்கள் வருமானம் பெறுகிறது. இந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தி-கடன் விகிதம் 27.4 சதவீதமாகும்.

காலனித்துவத்தின் தாக்கம்

1960 மற்றும் 1970களில் ஆப்பிரிக்க நாடுகள் சுதந்திரம் அடைந்தபோது அவர்களிடம் அந்நாட்டின் சொத்துக்களைப் பராமரிக்க எந்த உட்கட்டமைப்பும் இல்லை. அந்நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் தொழில்மயமாக்கலுக்கும் தேவையான அந்த நாட்டின் வளங்கள் அனைத்தும் தனியார் முதலாளிகள் கையில் மூலதனமாக குவிந்திருந்தது.உள்நாட்டு வளர்ச்சியை அதிகரிக்க விரும்பிய ஆப்பிரிக்க நாடுகள் தங்களுடைய காலனி ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே புறக்கணித்த தங்களுடைய வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பு திட்டங்களான அணைகள் கட்டுவது, மின்சார உற்பத்தி உள்ளிட்டவற்றிற்காக சோசலிச நாடுகளிடம் கடன் வாங்க முயன்றன. அதற்காக ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் காலனிய ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களது ஆட்சி கலைக்கப்பட்டது.

நவ காலனித்துவ பொருளாதார கட்டமைப்பு

இந்த நவ காலனித்துவ பொருளாதார கட்டமைப்பு ஆப்பிரிக்க நாடுகள் தங்களுடைய மூலப்பொருட்களான இயற்கை வளங்களை மிகக் குறைந்த விலைக்கு உலக சந்தையில் விற்பதற்கு கட்டாயப்படுத்தியது. இந்த விற்பனையில் மேற்குலக நாடுகளில் உள்ள பெருநிறுவனங்களிடமிருந்து குறைந்த பணத்தையே அவர்களால் பெற முடிகிறது. அதே நேரத்தில் ஆப்பிரிக்க நாடுகள் இறக்குமதி செய்யக்கூடிய முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு அதிக பணத்தைச் செலுத்துகின்றன. பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகள் ஏற்றுமதி செய்யும் மூலப்பொருட்களிலிருந்து முழுமையான பொருளாக வரக்கூடிய குறிப்பாக ஆற்றல் சார்ந்த பொருட்களை அதிக விலைக்கு வாங்குகின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் சூழச்சி

இவ்வாறு அதிக பணம் கொடுத்து இறக்குமதி செய்யும்போது நாட்டின் பட்ஜெட்டில் ஏற்படும் பற்றாக்குறையைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் மற்றும் மேற்குலக நாடுகளில் கடன் கொடுப்பவர்களிடமிருந்து கடன் பெற்றுச் சமாளிக்கின்றன. இந்தக் கடனுக்காக அதிக பணத்தை வட்டியாகச் செலுத்துகின்றன. கடன் வாங்கிய பாவத்திற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுப்படி சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் அத்தியாவசிய வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதியை வெட்டுகின்றன; பின் மேற்குலக நாடுகளின் கடன் வலையில் மாட்டிக் கொண்டு தொடர்ந்து வட்டிக் கட்டிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே துயரத்தில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளை சர்வதேச நாணய நிதியமும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகளும் மேலும் அதிக நெருக்கடிகளை ஏற்படுத்தி ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய திறனை மேலும் அரித்து நாட்டின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் துறைகளை வீழ்ச்சியடையச் செய்கிறது. மற்றும் அந்நாடுகளின் சொந்த போட்டித் திறனைக் குறைத்து கடன் கொடுக்கும் மேற்குலக நாடுகளின் நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அளவில் சுரங்கத் தொழில் நடத்திவரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடனான பேச்சுவார்த்தையில் பேரம் பேசும் திறனைக் குறைக்கின்றன. நேரடி காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு ஆப்பிரிக்க கண்டம் முழுவதுமே பேரம் பேசும் திறன் குறைவாகவே உள்ளது.

ஆப்பிரிக்காவின் முயற்சிகளும் சவால்களும்

ஆப்பிரிக்க கண்டத்தைச் சார்ந்த சர்வதேச நாணய நிதியத்தின் புதிய கொள்கையும் பழைய கொள்கையைப் போலவே உள்ளது. ஆப்பிரிக்க நாடுகள் தங்களுடைய சொந்த நிதி நிறுவனங்களை உருவாக்கத் தொடர்ந்து கடும் முயற்சிகளை எடுத்துவருகின்றன. உதாரணமாக ஆப்பிரிக்க மத்திய வங்கி, ஆப்பிரிக்க முதலீட்டு வங்கி, ஒருங்கிணைந்த ஆப்பிரிக்க பங்கு வர்த்தக மையம் (Pan African Stock Exchange), மற்றும் ஆப்பிரிக்க நாணய நிதியம். இந்த நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என திட்டமிடப்பட்ட தேதிகளில் அனைத்தும் ஏற்கனவே முடிந்துவிட்டது. ஆனால் அவற்றின் தேவை 2013 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஆப்பிரிக்க ஒற்றுமைத் திட்டம் – 2063 (African Union Agenda – 2063) இன்னும் உள்ளது.

சுதந்திர வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆப்பிரிக்க கண்டம் தழுவிய விவாதத்தை ஊக்குவிப்பதற்காக பிராந்திய வாதத்தை முன்வைக்கலாம் தான் ஆனால் அனைத்திற்கும் எளிதாகத் தீர்வு தரும் மருந்து இல்லை.

விஜய் பிரசாத்தின் எல்லையோர அனுபவம்

கொரோனா தொற்றுக்கு முந்தைய ஆண்டு நான் உகாண்டாவில் இருந்து எண்டெபே விமான நிலையத்திற்குச் சென்றேன். இது காங்கோவின் எல்லைக்கு அருகாமை நகரமான கிசோரோவில் உள்ளது. நான் கடெண்டே என்ற வழிகாட்டியுடன் புங்கானா நகரத்தின் வழியாக செல்லும் ஆறு வழியாக எல்லைக்குச் சென்றோம். அங்கு ருவாண்டா அரசின் ஆதரவுடன் செயல்படும் எம்-23 கிளர்ச்சிக் குழு காங்கோ பக்கத்தில் முகாம் அமைத்திருந்தது. நாங்கள் மிகப்பெரிய காய்ந்த பாலைவனம் வரும் வரை தென்மேற்கு உகாண்டாவின் அழகான பச்சைப் பசுமை நிறைந்த மலைகளைக் கடந்து பாழடைந்திருந்த எல்லைக் காவல் நிலையத்தை அடைந்தோம்.
ஒரு காலத்தில் அந்த காவல் நிலையத்தை மேம்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தை நடந்தது. ஏனெனில் அந்த எல்லைப்பாதை வழியாக இரு பக்கங்களிலும் அதிக அளவிலான சரக்கு பரிமாற்றம் நடைபெற்றது.

ஆனால் இப்போது அங்கு நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரின் விளைவாக சில இருசக்கர வாகனங்கள் மட்டுமே அப்பாதையில் தெரிகின்றன. அவையும் பெரும்பாலும் அலட்சியமான காவலர்கள் மற்றும் சுங்க அதிகாரிகளால் கையைக் காட்டி அனுப்பிவிடுகின்றன. வழிகாட்டியான கடெண்டே உதவியுடன் கடைகளில் நின்றுகொண்டிருந்த சிலரிடம் பேசினேன். ஒரு கடையில், காங்கோவிலிருந்து பொருட்களுடன் அடிக்கடி எல்லையைக் கடக்கும் ஒரு வயதான பெண் வர்த்தகரைச் சந்தித்தேன். என்ன வகையான பொருட்கள் கடக்கும்?, “எல்லா வகையான பொருட்களும் தான், சில நேரங்களில் வைரங்கள் கூட கொண்டுசெல்லப்படும்” என சொன்னார். அவர் லுகாண்டா மொழியில் பேசினார்; அதன் அர்த்தை கேட்டபோது எனது நோட்டை வாங்கி “அந்த சிறிய தடி போகும்போது உன்னைத் தடுக்காவிட்டால், திரும்பும் வழியில் தடுக்கும்” என ஒரு பழமொழியை எழுதினார்.

அதாவது அந்த எல்லைச் சாலை வழியாக நடக்கும் கடத்தல் மற்றும் அது தொடர்புடைய சுங்க அதிகாரிகளைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கலாம் என நினைக்கிறேன். அல்லது வைரங்களைக் கடத்தியும் ஏழ்மையில் சிக்கிய தனது வாழ்க்கையைப் பற்றிய எண்ணமாகக் கூட இருந்திருக்கலாம். இங்கே மலிவாகக் கிடைக்கும் இந்த வைரங்கள் மத்திய கிழக்கு, பெல்ஜியத்தின் வைர மையம் சென்று அதன் வழியாக உலகம் முழுவதும் பல பிரபல ஆபரணக் கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

வைரங்களின் பயணமும் சுரண்டலும்

அந்த வணிகர் ஒரு ஜூஸ் வாங்கிக் குடித்துக்கொண்டே பாக்கெட் உணவைச் சாப்பிட்டு, எல்லையைத் தாண்ட பாதுகாப்பான நேரத்திற்கு காத்திருக்கிறார். அவர் எம்-23 குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வைரங்களையும் பிற பொருட்களையும் விற்றுக்கொடுக்க ஒருவரைத் தேடி வருகிறார். கவனமாகச் செயல்பட்டு கடைசியாக, வைரங்களை கென்யாவின் மொம்பாசா துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு வியாபாரிக்கு அவற்றை விற்கிறார்.

வைரத்தைத் தோண்டி எடுத்தவர், அந்த வைரத்தைப் பெண் வணிகரிடம் விற்பவர், பெண் வணிகர், மொம்பாசா துறைமுகத்துக்கு வைரத்தை எடுத்துச் செல்பவர் என எவருமே அந்த வைரத்தால் கிடைக்கும் செல்வத்தை அடையவில்லை. அந்த வைரத்தைக் கொண்டுசென்ற கப்பல் மத்திய கிழக்கு நாடுகள் அல்லது பெல்ஜியத்தின் வைர மையத்திலுள்ள துறைமுகத்திற்குச் சென்ற பிறகு அதனைப் பட்டை தீட்டிய பிறகுதான் மூலதனம் குவியத் தொடங்குகிறது.

அதுவரை வைரங்கள் கைமாறிவருகின்ற ஒவ்வொரு கையும் ஏழ்மையையே சுமந்துசெல்கிறது. இதுதான் ஆப்பிரிக்காவின் செல்வம் மற்றும் அதனைக் கொள்ளையடிப்பவர்களின் கைக்கு வரும் பணம் வாய்க்கு மட்டுமே போதுமானதாக உள்ளது எனும் உண்மை நிலையும் நிலவுகிறது. இதுதான் கடன் சுமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிதிக் கொள்கைகளுக்கு அடியில் புதைந்து கிடக்கும் வரலாறு.

பேராசிரியர் விஜய் பிரசாத்தின் 21 ஆவது Tricontinental  செய்தி மடல், தமிழில்: சேது சிவன்

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *